முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!

டிசம்பர் 01-15 2019

ஆர்.எஸ்.எஸ்ஸின் அடித்தளத்தில், ஆரியப் பார்ப்பனர்கள் ஆதிக்க வெறியுடன் சனாதனத்தைச் சட்டமாக்கி, 95% மக்களைச் சூத்திரர்களாக்கி, அவர்களின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆளும் சூழலில், அதனை முறியடித்து இந்தியாவின் மதச்சார்பின்மையையும், அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காக்க இந்தியாவிற்கே வழிகாட்டும் திறன் பெற்றவராய் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திகழ்கிறார்கள். அதை நாம் மட்டும் சொல்லவில்லை. வடஇந்தியத் தலைவர்களே அதைப் பலமுறை கூறியுள்ளனர்.

மேனாள் பிரதமர் வி.பி.சிங்:

“இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் தலைவராக இருந்தாலும், இவரது அறிவுநுட்பம், ஆற்றல், வியூகம், எதிரிகளை வீழ்த்தும் திறமை, சட்ட அறிவு, போர்க்குணம் பெரியாரிடம் பெற்ற பயிற்சி இவற்றின் காரணமாக இந்தியாவிலுள்ள தலைவர்கள் பலரும் இவரைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்கள், சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார். அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூகநீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை.’’

(1-.10-.1994 சென்னை – திராவிடர் கழக சமூகநீதி மாநாட்டில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆற்றிய உரையின் பகுதி – “விடுதலை’’ 3-.10-.1994)

சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலைச் சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரப்பிரதேசத்தில் அவர்கள் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் கொறடா ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.’’

– முன்னாள் பிரதமர் வி.பி.சிங், (டில்லி பெரியார் விழா – 19.9.1995)

மண்டல்:

“நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்கிற முறையில் அல்ல; ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் உங்களிடம் பேசுகிறேன்.

நாங்கள் தரப்போகும் அறிக்கை, நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே அமையப் போவது உறுதி. ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள்தாம் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையைச் செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும்.

அதைச் செயல்படுத்தச் செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள்.

இது பெரியாரின் மண்! இந்த மண்ணில் நான் ஏராளமாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களை, சூத்திரர்கள் என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்தச் சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி, பிற்படுத்தப்பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.

எங்கள் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் அவர்கள் 62 சதவிகித பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு செய்தார். அதைக்கூட உயர்ஜாதிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த நாட்டில் அதிகார வர்க்கம்தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்.களாகவும் அய்.பி.எஸ்.களாகவும் இருக்கும் உயர்ஜாதி வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தச் சலுகையும் கிடைத்துவிடாதபடி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு இல்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்களையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் _ உங்களுக்குள்ளே ஜாதி வேற்றுமையில் பிளவுபட்டு நிற்காதீர்கள்; இமயம் முதல் குமரிவரை எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.

காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையைச் செயல்படச் செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.

– பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பி.மண்டல் – (மண்டல் குழு தலைவர்)

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:

“சமூகநீதிக்கான வீரமணி விருதை நான் மிகவும் கவுரவம்மிக்க ஒரு விருதாகக் கருதுகிறேன். பீகார் மக்களின் சார்பாக நான் இந்த விருதைப் பெற்றுக் கொள்கிறேன். குறிப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1925-ஆம் ஆண்டிலிருந்து நீங்களும் சமூகநீதிக்காகக் களம் கண்டு வந்திருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களை நான் மூன்று நாள்களாக உங்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். நீங்கள் இங்கே உரையாற்றிய போதும் உங்கள் சமூகநீதிக்கான பயணம் குறித்து அறிந்து கொண்டோம். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் இங்கே வரவேண்டும், வரவேண்டும், மீண்டும் மீண்டும் வரவேண்டும். பிகார் மக்களின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் பிகாரையும் உங்களது மற்றோர் ஊராக நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களின் சிந்தனையை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். பீகார் அரசின் முக்கியக் கொள்கையே சமூகநீதியோடு கலந்த வளர்ச்சிதான்,  நாங்கள் வெறும் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசமாட்டோம். எங்கள் வளர்ச்சி சமூகநீதியை ஒன்று சேர்த்துக் கொண்டுசெல்லும் வளர்ச்சியாகும். அதாவது வளர்ச்சியின் லாபம் சமூகத்தில் மிகவும் ஏழ்மைப்பட்ட குடிமகனுக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதே ஆகும்.’’

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் வடஇந்தியத் தலைவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழிகாட்டும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது அவர்தம் வியப்பிற்குரிய அரசியல் அறிவு, நுட்பம், வியூகம், ஆற்றல் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றது.

எல்லாவற்றையும் கூர்ந்தறியும் இணையிலா ஆற்றலாளர் ஆசிரியர்!

அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கமுடைய இவர், அப்போதே படிக்கத் தொடங்கிவிடுவார். ஏடுகள், நூல்கள் என்று எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குவார்.

சமூக நலத்திற்குக் கேடுதருவது ஏதாவது உள்ளதா? ஒடுக்கப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் நலத்திற்கு எதிராய் ஏதாவது உள்ளதா? என்று கூர்ந்து நோக்கி அறிவார். இருப்பின் அன்றே அதற்கான எதிர் செயல்களில் இறங்கிவிடுவார். விடுதலையில் அறிக்கையாக, பேட்டியாக, சொற்பொழிவாக எதிர்ப்பைக் காட்டி, எல்லோரிடமும் எழுச்சியை ஊட்டி, அத்தகைய கேடு அகற்றப்படும் வரை அயராது பாடுபடுவார்.

அவரின் எதிர்வினை காலம்தாழ்த்தாது உடனுக்குடன் ஒவ்வொரு நாளும் இருக்கும். காலையில் நடைப்பயிற்சி செல்லும்போதே பலவற்றை நோக்குவார். அதிலிருந்து சமுதாயத்திற்குத் தேவையான பலவற்றைச் சொல்வார்.

காலையில் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வரும்போதே, யார் யாருக்கு என்னென்ன பணிகளைப் பிரித்துத் தரவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே வருவார். அலுவலகம் வந்தவுடன் தொடர்புடையவர்களை அழைத்து அனைவருக்கும் கூறுவார். பணிகளை முடுக்கி விடுவார். கடிதங்களைப் படிப்பார் _ பதில் அளிப்பார். வாகனங்கள் சரியாக நிறுத்தப்பட்டுள்ளதா? திடல் தூய்மை பராமரிக்கப்படுகிறதா? போன்றவற்றை உன்னிப்பாய்க் கவனிப்பார். குறை காணின் உடனே உரியவர்கள் மூலம் சரிசெய்வார். தனது இருக்கையில் அமர்ந்ததும், “விடுதலை’’ நாளேட்டில் வரவிருக்கும் செய்திகளைச் சரிபார்ப்பார். அச்சிடப்படவிருக்கும் நூல்களின் மெய்ப்புகள் பார்ப்பார். “உண்மை’’, “மாடர்ன் ரேஷனஸ்ட்’’ இதழ்களில் என்ன வரவேண்டும்? எப்படி வரவேண்டும்? என்று கூறுவார். அச்சிடப்பட உள்ளவற்றை ஒருமுறை பார்ப்பார். சற்றேறக்குறைய 15 பேர்களுக்கு மேல் பார்த்து முடித்தவற்றை இவர் பார்க்கும்போது, பட்டென்று எங்கெங்கு தவறு இருக்கிறது, பிழை இருக்கிறதென்று துல்லியமாய்ச் சொல்லிவிடுவார்!

தலைப்பை இப்படிப் போடலாம், செய்தியை இப்படித் தரவேண்டும் என்று சடுதியில் சரிசெய்வார்.

பல நூல்களிலிருந்து பயனுள்ளவற்றை எடுத்துத் தருவார். செய்தித் தாள்கள், வார, மாத இதழ்களில் வரும் அரிய தகவல்களைத் திரட்டித் தருவார். இதற்கிடையே பார்வையாளர்கள் ஒவ்வொருவராகச் சந்திக்க, அவரவர் தேவையை மனம் மகிழ நிறைவு செய்வார். நடுநடுவே பேட்டி காண்போருக்குப் பேட்டி அளிப்பார். துறைசார் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அறிவுரை வழங்குவார்.

‘விடுதலை’, ‘உண்மை’ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். அறிக்கை, தலையங்கம் எழுதுவார். இதற்கே பகல் 2:00 மணி ஆகிவிடும். மருத்துவரின் ஆலோசனை -_ குடும்பத்தாரின் வற்புறுத்தல் இவற்றைப் புறந்தள்ளி பல நாள்களில் பிற்பகல் 3:00 மணிக்குக்கூட மதிய உணவு உண்பார். அதன்பின் மாலை பொதுக்கூட்டம், கருத்தரங்கு என்று பலப்பல.

இப்படி எத்தனையோ பணிகளை இடைவிடாது மேற்கொண்டாலும் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கிச் சரிசெய்வார்.

ஒருமுறை ‘நக்கீரன்’ இதழைப் படித்தவர். அதில் வந்துள்ள ஒரு செய்தியில் தவறாக இருந்ததைக் கண்டறிந்து உடனே ‘நக்கீரன்’ அலுவலகத்திற்கே கடிதம் எழுதினார்.

“‘நக்கீரன்’ இதழில், மாவலி பதில்கள் பகுதியில் தில்லை வில்லாளன் அவர்களின் இயற்பெயர் அர்ச்சுனன் என இடம் பெற்றிருந்தது. அவர் பெயர் கோதண்டபாணி. கோதண்டம் என்பது வில். அதனால்தான் வில்லாளன் ஆனார்’’ என்று விளக்கம் அளித்தார். இது அடுத்த “நக்கீரன்’’ இதழில் வெளியிப்பட்டது.

இயக்கத்தோடு இரண்டறக் கலந்தவர்!

இயக்க வரலாறே தன்வரலாறானது உலகில் இவருக்கு மட்டுமே! அதை அவரே தன் வரலாற்று நூலான ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’ என்று பதிவு செய்துள்ளார். அது 100%  உண்மை! உலகில் இப்பெருமை எவருக்கும் இல்லை.

பதினொரு வயதில் பெரியார் சிந்தனைகளால் கவரப்பட்டு, பொதுவாழ்வில் ஈடுபட்டு பணியாற்றத் தொடங்கியவர். 87ஆம் வயதிலும் ஓயாது பொதுத் தொண்டு ஆற்றிவருகிறார். அவர் விழித்திருக்கும் நேரமெல்லாம் இயக்கம் சார்ந்த சிந்தனைகளும், செயல்களுமே! இப்படியொரு அர்ப்பணிப்பு வாழ்வை உலகில் வேறு எவரிடமும் காணமுடியாது!

10 வயதுவரை பிள்ளைப் பருவம். அதைத் தவிர 77 ஆண்டுகள் அவர் வாழ்வு இயக்கத்துடன் இரண்டறக் கலந்த வாழ்வாகவே அமைந்துள்ளது.

பதவி, அதிகாரம், மரியாதை, பாராட்டு விழா என்று அரசியல் வாழ்வில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கலாம். ஆனால், எந்தவித பதவியும் அதிகாரமும் இல்லாத, போராட்ட இயக்கமான திராவிடர் கழகத்தோடு, பெரும்பாலான மக்களின் நம்பிக்கைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எதிரான இயக்கத்தில் வாழ்நாள் முழுவதும் இரண்டறக் கலந்து தொடர் தொண்டாற்றுவது என்பது வியப்பினும் வியப்பாகும்! படிப்பு, தொழில் என்று ஈடுபட்டிருந்த காலத்தில்கூட, இயக்கப் பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தார் என்பதுதான் விந்தையிலும் விந்தை.

திருமணமானவுடன் மனைவியுடன் மகிழ்வாக விருப்பமான இடங்களுக்குச் செல்லுதல் என்கிற வழக்கமான நடைமுறைகூட அவர் வாழ்வில் இல்லை. திருமணம் முடிந்தவுடனே இயக்கப் பணிக்குப் புறப்பட்டுவிட்டார். எந்தவொருவருக்கும் வரலாறு எழுதும்போது பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளை வகுத்துக் கூறுவர். ஆனால், இவரைப் பொறுத்தவரை இவரது வாழ்வே இயக்க வாழ்வுதான். இயக்க வரலாறு இவரது வாழ்க்கை வரலாறு என்று பிரித்துப் பார்க்க இயலாதபடி, இரண்டும் இணைந்தே செல்வதை எவரும் அறியலாம். அது மட்டுமல்ல; இயக்க வாழ்வு தவிர இவரது சொந்த வாழ்வு என்று எதுவும் இல்லை. இயக்கப் பணியே வாழ்வெனக் கொண்டவர். பெரியாரையே உயிர் மூச்சாக உள்வாங்கி வாழ்பவர். எனவே, அவர்தம் பேச்சு, மூச்சு எல்லாமும் இயக்கம், பெரியார் என இரண்டையும் பற்றியே செயல்படக் கூடியவை!

இவர் இயக்கம், இயக்கத்தின் இயக்கம் என்பது போலவே, இவர் இயக்கம் தமிழினத்தின் இயக்கம் என்பதாகவும் விரிந்துள்ளது. காரணம், திராவிட இயக்கங்களின் தாய்க் கழகத் தலைவர் என்பதால், இவர் இயக்கம் எல்லோராலும் எதிர்நோக்கி, ஏற்று, செயலாக்கம் பெறுகிறது. இன்றைக்கு ஊடகங்களின் விவாதப் பொருள்களை இவரே வழங்கிவருகிறார் என்றால் அது மிகையாகாது.

பாராட்டைக்கூட கடனாகக் கருதுபவர்!

கி.வீரமணி அவர்கள் தனக்கு அளிக்கப்படும் பாராட்டுகளையும், பரிசுகளையும், விருதுகளையுங்கூட கடனாகக் கருதி, அதை வட்டியுடன் மக்களுக்கே திருப்பிச் செலுத்தத் துடிக்கும் அதிசய மனிதர்.

பாரே வியக்கும் பல்துறை ஆற்றலாளர்!

சிலருக்கு எழுத்தாற்றல் இருக்கும், சிலருக்கு பேச்சாற்றல் இருக்கும், சிலருக்கு இசையாற்றல் இருக்கும், இன்னும் சிலருக்கு கலையாற்றல் இருக்கும்; சிலர் பத்திரிகையாளராய் சிறப்பர்; ஒருசிலர் நிருவாகியாய் சாதிப்பர்; சிலர் நடிகர்களாய் மிளிர்வர்; சிலர் கவிஞராய்த் திகழ்வர். சிலர் சிந்தனையாளராய் ஒளிவீசுவர். சிலர் ஏதாவது ஒன்றிரண்டில் திறன் பெற்றிருப்பர்.

ஆனால், பேச்சு, எழுத்து, கவிதை, இசை, நிருவாகம், பத்திரிகை, அரசியல், இயக்கம், போராட்டம், சிந்தனை, தலைமை, வழிகாட்டல், விரிவுரை, தொண்டறம், கல்வி, சட்டம், ஆய்வு, படிப்பு, தொலைநோக்கு, வியூகம், நகைச்சுவை, குடும்பம், நட்பு, உறவு என்று அனைத்திலும் உயர்ந்து நின்று சாதிப்பவர் உலகில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பது உறுதியான உண்மை!

பேச்சு என்று கொண்டால், கலந்துரையாடலில் எப்படிப் பேச வேண்டும், கருத்தரங்கில் எப்படிப் பேச வேண்டும், பொதுவெளியில் எப்படிப் பேச வேண்டும், போராட்டத்தில் எப்படிப் பேச வேண்டும், திருமணத்தில் எப்படிப் பேச வேண்டும், பள்ளியில் எப்படிப் பேச வேண்டும், கல்லூரியில் எப்படிப் பேசவேண்டும், பாராட்டுக் கூட்டத்தில் எப்படிப் பேச வேண்டும், கண்டனக் கூட்டத்தில் எப்படிப் பேச வேண்டும், பண்பாட்டு விழாக்களில் எப்படிப் பேச வேண்டும், கலை விழாக்களில் எப்படிப் பேச வேண்டும் என்பவற்றின் நுட்பமும், முறையும் அறிந்து பேசுவதில் வல்லவர்.

ஓர் இயக்கத்தின் தலைவராய் இருந்துகொண்டு, தெருமுனையில் தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்து கொள்கை பரப்பியவர். மூடநம்பிக்கை ஒழிப்புக்கு தீச்சட்டி ஏந்தி ஊர்வலத்தில் விழிப்பினை ஊட்டியவர்.

எழுத்து என்று எடுத்துக்கொண்டால், பகுத்தறிவு நூல்கள் எழுதுதல், வரலாற்று நூல் எழுதுதல், தலையங்கம் எழுதுதல், அறிக்கை எழுதுதல், ஆய்வு நூல் எழுதுதல், மறுப்பு நூல் எழுதுதல் என்று பலவற்றையும் சிறப்புறச் செய்யும் திறனாளர்.

நிருவாகம் என்று கொண்டால், நாம் முன்னமே பட்டியலிட்ட நிறுவனங்களை திறன்பட, மேம்பட, நலம் தர நிருவாகிப்பதோடு நில்லாமல், அவற்றை உருவாக்கி நிருவாகம் செய்தல் என்னும் ஒப்பற்ற சாதனையைச் செய்து வருபவர்.

பத்திரிகையாளர் என்கிற நிலையில், நாளிதழ், மாத இதழ், திங்கள் இருமுறை இதழ் என நான்கு இதழ்களை ஆசிரியராய் இருந்து நடத்துபவர். பலரும் செய்வதுபோல பெயரளவு பத்திரிகையாசிரியர் என்பதில்லாமல், ஒவ்வொன்றையும் தானே கூர்ந்து நோக்கி, கொள்ளுவன, தள்ளுவன, முதன்மைப்படுத்தப்பட வேண்டியன, காலச் சூழலுக்குரியன என்று கண்டு, தேர்ந்து, தொகுத்துத் தரும் சாதனையாளர்! அதுவும், நீரோட்டத்தில் படகு செலுத்துவதுபோல் மக்கள் ருசிக்கேற்ப நடத்தும் பத்திரிகைகளுக்கு மத்தியில், மக்கள் நம்பிக்கைகளுக்கு எதிராக, அறிவுக்கு உகந்ததை, வளர்ச்சிக்கு ஏற்றதை, நலம் பயப்பதை எதிர்திசையில் படகு செலுத்தி மக்களை மீட்டுக் கொண்டுவரும் மகத்தான பணியைச் செய்யும் ஆற்றலாளர்! அரசியலை நாடாத தந்தை பெரியார் தொண்டன் என்கிற நிலையில், நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானித்து திசைகாட்டக்கூடிய திசை காட்டியாய், வழிகாட்டியாய், இடித்துரைக்கவும், பாராட்டவும் செய்யும் நெறியாளராய் நின்று அரசியல் கடலின் கலங்கரை விளக்கமாய் விளங்கக் கூடியவர்!

ஆய்வு, மறுப்பு என்று இரண்டையும் கொண்ட நூல் படைக்கும் இவரது ஆற்றலுக்கு கீதையின் மறுபக்கம் சான்று!

வளமான சிந்தனைகளை அள்ளித்தரும் ஆற்றலுக்கு வாழ்வியல் சிந்தனைகள் நூல்! சட்ட வல்லுநர் என்பதை, அவர் வாதாடிய வழக்குகளும், இடஒதுக்கீட்டைக் காப்பதில் அவர் கையாண்ட உத்திகளும், இயக்கத்திற்கு எதிராய் வந்த வழக்குகளை வென்றமையும் எடுத்துக்கூறும்! சிறந்த படிப்பாளி என்பதை அவர் பெற்ற விருதுகளும், பரிசுகளும் சொல்லும். ஒப்பற்ற வாசகர் என்பதை அவர் படித்த ஆயிரக்கணக்கான நூல்கள் அறிவிக்கும்! தலைசிறந்த விரிவுரையாளர் என்பதை அவர் பங்குபெற்ற அரங்குகள் பறை சாற்றும்!

சிறந்த குடும்பத் தலைவர் என்பதற்கு அவர் குடும்பமே உலக மக்களுக்கு உதாரணமாகும். ஆதிக்கமற்ற, வேற்றுமையற்ற, உரிமை பெற்ற பாதுகாப்பும், பாசமும் கொண்ட குடும்பம் எப்படி இருக்க வேண்டும்; இனம், மொழி, மதம், ஜாதி கடந்து குடும்ப உறவு எப்படிக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு அவரது குடும்பமே வழிகாட்டி!

அவர் சிறந்த தொலைநோக்காளர் என்பதற்கு புதிய கல்விக் கொள்கை மற்றும் நுழைவுத் தேர்வு எதிர்ப்பும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கான போராட்டமும், தமிழர் தொன்மைகளைக் காக்க மேற்கொள்ளும் பல்வேறு செயல்திட்டங்களும், கலை, பண்பாட்டு விழாக்களும், பெரியாரை உலகமயமாக்கலும், அறிவியல் சிந்தனைகளை வளர்த்தலும், இணையத்தின்வழி கொள்கைப் பிரச்சாரமும், பெரியார் மய்யங்களும், கல்வி நிறுவனங்களும், பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை காப்பு முயற்சிகளும் சிறந்த சான்றுகளாகும். இப்படி ஒரே மனிதர் இவ்வளவு ஆற்றலும் பெற்று விளங்குவதை இவரையன்றி உலகில் வேறு யாரையும் காட்ட முடியாது என்பதை எவ்வித அய்யமும் இன்றிக் கூறமுடியும்! இத்தகு ஆற்றலாளரைப் போற்றிக் காக்க வேண்டியதும், அவர் காட்டும் வழியில் சாதிக்க வேண்டியதும், வாழவேண்டியதும், அவர்தம் அரிய முயற்சிகளுக்குத் துணைநிற்க வேண்டியதும், தோள் கொடுக்க வேண்டியதும் இச்சமுதாயத்தின் கடமையாகும்!

உலகச் சாதனைப் பதிவுக்குரிய இவரின் சாதனைகள்!

மி.         சிறுவனாய் உலக சாதனைகள்!

11 வயதில் (29-.7.-1944)இல் மாநாட்டில் பேசிய சிறுவன்!

11 வயதில் திருமணத்தில் (11.-6.-1944) வாழ்த்துரை வழங்கிய சிறுவன்!

12 வயதில் பொதுக்கூட்டத்திற்கு (14.-4.-1945) தலைமை வகித்த சிறுவன்.

13 வயதில் (6-.1-.1946) மாநாட்டுக் கொடியேற்றிய சிறுவன்!

14 வயதில் (1947) அண்ணாவிடம் தூது சென்ற சிறுவன்!

14 வயதில் (21-.9-.1947) படத் திறப்பாளர்!

15 வயதில் (1-.5-.1948) மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய சிறுவன்!

II.  உலகிலேயே அதிக நேரம் பேசியவர்!

III. உலகிலேயே அதிக நேரம் பிரச்சாரப் பயணம் செய்தவர்!

IV.  உலகிலேயே அதிகம் எழுதியவர்!

V.   மூன்று முறை இதய அறுவை சிகிச்சைக்குப் பின், அதிக நேரம் பயணம், பேச்சு, நிருவாகம், இயக்கச் செயல்பாடு என்று பலவற்றையும் செய்பவர் உலகில் இவர் ஒருவரே!

VI. உலகில் அதிக சுயமரியாதைத்  திருமணங்களை நடத்தி வைத்தவர்!

இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!

ஆம். இவ்வளவு தகுதியும், திறமையும், தன்னடக்கமும், தன்னலமின்மையும், தன்மான மிடுக்கும், இனமான வேட்கையும், ஆதிக்க எதிர்ப்பும், ஆரிய பார்ப்பன சனாதன பாசிசத்தை வீழ்த்தும் வல்லமையும் வியூகமும் கொண்டவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதை அறிந்துதான் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழர் தலைவர் ஆணையை ஏற்று நடப்போம்’’ என்றார். இதை இந்தியாவின் மற்ற மாநிலத்தின் சனாதன எதிர்ப்பாளர்களும்; சமூகநீதி காப்பாளர்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.

எனவே, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அரிய வழிகாட்டலில் இந்தியா எங்கும் காவிகளுக்கு எதிரான ஜனநாயக மீட்பு அணி உருவாகும். அது ஆரிய பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை வீழ்த்தும்; வெற்றி பெறும்.

– மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *