வஞ்சகம் வாழ்கிறது

நவம்பர் 01-15

குறுந்தொடர்

வஞ்சகம் வாழ்கிறது

(புரட்சிக் கவிஞர் பாரதிதாச்னின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்)

காட்சி 1. அரசவை

உறுப்பினர்கள்:- இரணியன், அமைச்சர், கட்டியங்கூறும் இரு வீரர்கள் மற்றும் அரசவை அலுவலர்கள்

சூழ்நிலை: அவையோர் அமர்ந்துள்ளனர். கட்டியங்கூறுவோர் முன்வர இரணியன் வருதல்.

கட்டியங் கூறும் வீரர்: தமிழர்களின் தனிப்பெரும் வேந்தர் தென்னாட்டு மன்னர்கள் போற்றும் வீர தீர ஆற்றல்மிகு பேரரசர் – தரணி புகழ் இரண்ய மாமன்னர் – வருகிறார் – வருகிறார்.

(அனைவரும் எழுந்திருந்து தலைவணங்குதல் – இரண்யன் அரியணையில்

அமர்தல் – அனைவரும் தங்கள் தங்கள் இருக்கையில் அமரச்செய்தல்)

இரண்: அமைச்சரே! ஏதேனும் புதுமைச் செய்தி

அமை: உள்ளது மன்னா!

இரண்: என்ன அது?

அமை: வடபுல மன்னர்களில் பலர் வஞ்சக ஆரியரின் வலையில் வீழ்ந்துவிட்டதாகச் செய்தி.

இரண்: (கோபத்துடன்) என்ன? நாடோடிகளா நாடாளும் மன்னர்களை வீழ்த்திவிட்டனர்?

அமை: வேள்விகள் என்ற பெயரில் விலங்குகளைச் சுட்டுப் பொசுக்கியுண்பதும் சோமரசம் என்ற கள்ளைக் குடித்து மங்கையர்களின் மடியிலே வீழ்ந்து கிடப்பது மட்டும் அவர்கள் செயல் அல்ல மன்னா!

இரண்: அப்படித்தானே நாம் எண்ணியிருந்தோம்.

அமை: மந்திரமென்றும் மாயமென்றும் ஏதோ சொல்கிறார்கள். தங்களைப் பூதேவர்கள் என்றும் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றும், ஆரியக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்களைச் சூத்திரர்களென்றும் சொல்லி, தங்களை உயர்ந்தவர்களாகச் சொல்லித் திரிகிறார்கள்.

இரண்: மிருகங்களைச் சுட்டுப் பொசுக்கியுண்ணும் நாகரிகமற்ற கூட்டம் உயர்ந்தவர்களா? வேடிக்கை!

அமை: முப்பத்துமுக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிஸ்வரர்கள் – கின்னரர் கிம்புருடர் _ சித்தவித்யாதரர் _ அஷ்டதிக்குப் பாலகர்கள்.

இரண்: என்ன இதெல்லாம்?

அமை: இவர்கள் எல்லாம் வானுலகிலே வாழ்கிறார்களாம். அவர்கள் வழி வந்தவர்களாம் ஆரியர்கள்.

இரண்: நம் மூதாதையர்களையும், மறைந்த நம் வீரத்தியாகிகளின் நடுகல்லையும் நினைந்து நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அவர்களோ – சுரா என்னும் கள்ளையும், சோமரசம் என்ற மதுவையும் அருந்தி மது மயக்கத்திலே வானிலே ஒரு உலகைப் படைத்து அதிலே தேவர்களை உண்டாக்கி அவர்கள் வழி வந்ததாகச் சொல்லித் திரியும் நயவஞ்சகக் கூட்டம் – நமது பண்பாடு கலாச்சாரம் – இவற்றை நாசமாக்கும் குள்ள நரிக் கூட்டம்.

அமை: வானுலகைப் படைத்ததோடு விட்டுவிட்டால் பரவாயில்லையே.

இரண்: அப்படியென்றால்?

அமை: இந்த உலகையும், உலகில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மக்கள், ஏன் உங்களையும் என்னையும் நம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் பெற்றெடுத்தவன் பிரம்மதேவனாம்.

இரண்: என்ன! நம் பெற்றோருக்கு நாம் பிறந்திருக்க நம்மைப் பெற்றெடுத்தவன் பிரம்மதேவனா? அவன் எங்கே இருக்கிறான்?

அமை: வானுலகத்திலே.

இரண்: வெட்டிப்பேச்சு! வீணான கற்பனை. இதை மக்கள் நம்புகிறார்களா?

அமை: நம்பும்படி பல கதைகளைக் கட்டி விடுகிறார்கள். அது மட்டுமல்ல மன்னா, சுரா என்னும் கள்ளைக் குடிப்பதால் அவர்கள் சுரர்களாம். கள் அருந்தாத நாம் அசுரர்களாம்.

இரண்: தமிழர்கள் என்ற அழகான சொல் அவர்கள் நாவில் தவழாதோ – அவர்கள் மன்னர்களை எப்படி வீழ்த்துகிறார்கள்? வாள் ஏந்திப் போர்புரிய முடியாத பேடிகளாயிற்றே!

அமை: ஆடல் பாடல்களில் வல்லவர்கள் ஆரியப் பெண்கள். அம்மங்கைகளைக் கொண்டு மன்னர்களை மயக்கி விடுகிறார்கள். அவர்களது சிவந்த தோலையுடைய உடல் கவர்ச்சியில் மயங்கிவிடுகிறார்கள் மன்னரே.

இரண்: வேசையரிடம் மயங்கும் வேந்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் ஆட்சிக்கு ஏற்படும் இன்னல் என்ன?

அமை: ஆரிய மங்கையர் அரசர்களை மயக்குவதோடு மட்டும் விட்டுவிடுவதில்லை மன்னா! தங்கள் ஆரிய குருக்களை அரசவையின் ஆஸ்தான குருவாக அங்கீகரிக்கச் செய்துவிடுகிறார்கள். அவர்கள் சொற்படித்தான் ஆட்சியை நடத்த வேண்டுமாம்.

இரண்: என்ன அநியாயம்? வில்லேந்தும் வேந்தர்கள் வேசையர்களின் விழியசைவில் வீழ்ந்துவிடுகிறார்களா?  அமை: என்ன அநியாயம்! வில்லேந்தும் வேந்தர்கள் _ புல்லேந்தும் புரட்டர்களுக்குப் பணிந்துவிடுகிறார்கள் அரசே!
இரண்: புல்லேந்தும் புரட்டர்களா? அப்படியென்றால்…

அமை: ஆம் அரசே! புல் – ஒருவகைக் கோரைப்புல்-_தர்ப்பைப்புல். தர்ப்பைப்புல்லைக் கிள்ளிப் போட்டுப் பிள்ளைகளையே உற்பத்தி செய்வார்களாம்.

இரண்: கண்டவன் யார்?

அமை: அவர்கள் கதைகளில் சொல்லுகிறார்கள்.

இரண்: (கோபத்துடன்) கதைகள் _ கட்டுக் கதைகள். கோழைகள், நமது நாட்டில் அவர்களை நுழையவே விடக்கூடாது.

அமை: ஆணை மன்னா!

இரண்: அது கிடக்கட்டும் _ என் மகன் பிரகலாதன் யானையேற்றம், குதிரையேற்றம், போர்ப்பயிற்சி அனைத்தையும் கற்றுத் தேர்ந்துவிட்டான். அவனுக்கு இளவரசு பட்டம் சூட்ட விழைகிறேன்.

அமை: ஆம்! மன்னா! பட்டம் சூட்டுவதற்கு முன் பல நாடுகளையும் சுற்றிப் பார்த்து அந்நாட்டு மக்களின் வாழ்க்கைமுறை அம்மன்னர்களின் ஆட்சிமுறை ஆகியவற்றை நேரில் கண்டு அனுபவ அறிவு பெற அனுப்பிவைப்பது நமது வழக்கமல்லவா?

இரண்: ஆமாம்! பிரகலாதனிடம் அனைத்தும் கூறியிருக்கிறேன். அவன் புறப்பட ஆவன செய்யுங்கள். அமை: ஆணை மன்னா!

காட்சி – 2. காட்டுப்பாதை

உறுப்பினர்கள்: காங்கேயன், வீரப்பன்

சூழ்நிலை: காங்கேயனும் வீரப்பனும் சந்திக்கின்றனர்.

வீரப்பன்: சோமரசமே! அடச்சே! காங்கேயரே! நமஸ்காரம்! நமஸ்காரம்.

காங்: (இடதுகையால்) மங்களமுண்டாகட்டும்

வீரப்: சோமரசமே! அடச்சே! காங்கேயரே! அது என்ன இடதுகையால் ஆசிர்வாதம்?

காங்: நம்மவாள் பூசுரர்கள். கடவுளின் பிரதிநிதிகள். எங்கள் வலது கையில் எப்பொழுதும் அக்னிதேவன் வாசம் செய்துண்டிருக்கிறான். வலது கையால் ஆசிர்வதித்தால் நீங்கள் சாம்பலாய்ப் போய்விடுவீர்கள். அதனால்தான் இடது கை.

வீரப்: அப்படியா சாமி! சோமரசம் சாமி!

காங்: நானும் வந்த நேரமா கவனிச்சுண்டு வர்றேன். வார்த்தைக்கு வார்த்தை சோமரச புராணம் பாடிண்டு வர்றே!

வீரப்: சோமரசம் கொடுப்பீங்கன்னு தானே உங்களைத் தேடிக்கிட்டு வர்றேன்.

காங்: ஓ! அப்படியா! நிறையவே தர்றேன். அதுக்குள்ள நேக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்.

வீரப்: சொல்லுங்கோ சோமரசம்! அடச்சே சாமி!

காங்: அது என்ன அடச்சே சுவாமி!

வீரப்: சோமரசம் கவனத்துல அதே அடிக்கடி வருது. மன்னிச்சுக்க சோம அடச்சே சாமி!

காங்: இளவரசர் பிரகலாதனோட எத்தனை பேர் வந்திருக்கீங்க?

வீரப்: நானும் என்னோட எட்டுப் பேரும் ஆக மொத்தம் ஒம்பது பேர் வந்து இருக்கோம். சோமரசம்!

காங்: அவாள் எல்லாம் எங்கே தங்கி இருக்கா?

வீரப்: இங்கே இருந்து அரை காத தூரம் இருக்கும். அங்கே கூடாரமடிச்சி தங்கி இருக்கிறோம். நான் மட்டும் உங்களைத் தேடி வந்தேன் _ சோமரசத்துக்கு.

காங்: சோமரசம் தானே! நிறைய தர்றேன். நான் உங்க இளவரசரைச் சந்திக்கணுமே!

வீரப்: சந்திச்சி?

காங்: அவரோட சினேகம் செஞ்சுடணும்.

வீரப்: செஞ்சுண்டுடுங்கோ! _ உங்க பேச்சு என்னைப் புடிச்சிக்கிடுச்சி பார்த்தீங்களா!

காங்: புடிச்சிண்டுதானே ஆகணும். நான் ஒன்னு சொல்றேன். கவனமா கேட்டுண்டுடு.

வீரப்: சொல்லுங்கோ!

காங்: நீ நேரா கூடாரத்துக்குப் போறே!

வீரப்: சோமரசம்!

காங்: குடிச்சிட்டுத்தான்! நிறைய தர்றேன். குடிச்சிட்டுப் போய் கொஞ்ச நேரம் பொறுத்து வயித்துவலியால துடிக்கிற மாதிரி நடிக்கணும்.

வீரப்: இப்பவே நடிச்சிக் காட்டட்டுமா? ஆ! அய்யோ! வயித்தை வலிக்குதே.(துடிக்கிறான்)

காங்: போதும்! போதும்! இதை அங்கே போய் செய்துண்டு இரு. உங்களோட வைத்தியர் யாராவது வந்து இருக்காளா?

வீரப்: ஓ! வந்து இருக்காரே! தத்தன் கைப்பட்டா தங்காது நோய்னு பழமொழியே சொல்வாங்க. இளவரசர் பாதுகாப்புக்காக அரண்மனை மருத்துவர் தத்தனாரும் வந்து இருக்காரு.

காங்: அப்படியா! அவரு மருந்து கொடுத்தாகூட நீ அதிகமா துடிச்சி நடிக்கணும். அப்போ தற்செயலா வர்ற மாதிரி நான் வர்றேன். என்னைத் தெரிஞ்வனா நீ காட்டிண்டிடக் கூடாது (சுற்றும் முற்றும் பார்த்தல்)

வீரப்: வந்து. சொல்லுங்க யாருமில்லே!

காங்: கிட்டவா. (காதருகில் கிசுகிசுத்தல்)

வீரப்: இவ்வளவுதானே! சோமரசத்துக்காக எதையும் செய்வேன்.

காங்: வா. போகலாம்.

– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *