மூங்கில் ஒரு நாளைக்கு சுமார் 20 செ.மீ.க்கு மேல் ஓங்கி வளரும். மூங்கில் வளரும் ஓசையை நாம் கேட்கலாம்.
கண் இமைக்கும் செயலால் மட்டுமே மனிதன் ஒரு நாளைக்கு சுமார் அரை மணி நேரம் கண்களை மூடுகிறான்.
******
ஆப்பிள் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்… அர்த்தம் என்ன?
ஆப்பிள் வாங்கும்போது அதன் மீது ஒட்டப்பட்டிருக்கும் ‘ஸ்டிக்கரை’ (ஒட்டுத்தாளை) நாம் யாரும் பெரிதாக கவனிப்பதில்லை. அந்த ‘ஸ்டிக்கரில்’தான் அந்த ஆப்பிள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன! அதாவது, அந்த ஸ்டிக்கரில் இருக்கும் எண்ணை வைத்து, நாம் சாப்பிடும் அந்த ஆப்பிள் இயற்கையாக விளைவிக்கப்பட்டதா? இல்லை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆப்பிளா? அல்லது ‘கெமிக்கல்’ உரங்களினால் விளைந்த ஆப்பிளா? என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்!
சரி, அதை எப்படி தெரிந்துகொள்வது? அந்த ஸ்டிக்கரில் இருப்பது 4 இலக்க எண்ணாக இருந்தால், அந்த ஆப்பிளானது முழுக்க முழுக்க வேதி உரம் கலந்தது என்று அர்த்தம். அதுவே 5 இலக்க எண்ணாக இருந்து, அது 8 என ஆரம்பித்தால், மரபணு மாற்றம் செய்யப்பட்டது. ஒருவேளை, 5 இலக்க எண்ணாக இருந்து, அது 9 என ஆரம்பித்தால் அந்த ஆப்பிள்தான் முழுக்க முழுக்க இயற்கையாக விளைவிக்கப்பட்டது என்று அர்த்தம்! இனிமேல் கடையில் ஆப்பிள் வாங்கும்போது இந்த விஷயங்களை நன்றாக பரிசோதித்த பிறகே வாங்குங்கள்.
******
மாவீரர் அலெக்சாண்டர் போரிலோ அல்லது எதிரிகளால் கொல்லப்பட்டோ இறக்கவில்லை. கொசுக்கடியால் ஏற்படும் ‘வெஸ்ட் நைல், வைரஸால், தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார் என்கிறது வரலாறு. அவர் மரணம் குறித்து 2003இல் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே வெளியாகி, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக, அலெக்சாண்டரின் உயிரே ஒரு கொசுவின் கையில்தான் இருந்திருக்கிறது!
******
ஒரு சாதாரண கொசு அய்ந்திலிருந்து ஆறு மாதம் வரை உயிர் வாழும். சில வாசனைகள் கொசுக்களைக் குழப்பி நம்மிடம் வராமல் தடுத்துவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். புதினா, சாக்லெட் ஆகிய வாசனைகள் கொசுவை நம்மை நெருங்க விடாமல் தடுத்துவிடுமாம்.
******
ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பின உயிர் கோவேறு கழுதை மிகவும் பிடிவாத குணம் கொண்டது.
விஷம் குறித்த படிப்புக்கு டாக்ஸிகாலஜி என்று பெயர். விஷத்தை அளக்கும் கருவி பிக்கோகிராம்.
******
ஒரு கட்டத்தில் இதயத்திலுள்ள செல்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வதில்லை. இதயப் புற்றுநோய் என்பது மிக மிக அரிதாக இருக்க இதுதான் காரணம்.
கரு உருவான நான்கு வாரங்களிலேயே இதயம் துடிக்கத் தொடங்கி விடுகிறது.
இசையைக் கேட்கும்போது அதற்கேற்ப இதயத் துடிப்பு ஓரளவு மாறுபடுகிறது.
இதயம் இடப்பகுதியில் இல்லை. நடுப்பகுதியில்தான் இருக்கிறது. கொஞ்சம் இடப்புறம் சாய்ந்திருக்கிறது.
******
பேட்டரிகளுக்கு மாற்றாகிறது சோப்புத் தண்ணீர்
தற்போது மிகக் குறைந்த நேரத்தில் சக்தி ஏற்றிக் கொள்ளக்கூடிய எளிய மூலப்பொருள்களை கண்டுபிடித்துள்ளது வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கிளீன் எனர்ஜி இன்ஸ்ட்டியூட் மய்ய ஆய்வாளர்கள் குழு.
உப்பு, சோப், டிடர்ஜென்ட் போன்ற சாதாரண ரசாயன பொருள்கள் சூப்பர் சக்தி கலன்களாக செயல்படுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவற்றில் உள்ள அயனிகள் சக்தியை எளிதில் பெற்று தன்வசப்படுத்திக் கொள்வது உறுதி செய்யப்பட்டது. பிசுபிசுப்புத்தன்மை கொண்ட இந்த ரசாயனப் பொருள்களை 130 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெப்பப்படுத்தியபோது அவை சக்திமிக்க சேமிப்பு கலன்களாக மாறியதை ஆய்வுக்குழு கண்டுபிடித்தது.
மிகக் குறைந்த திரவத்தில் அதிகப்படியான ஆற்றலை சேமிக்க முடிவதால் இவற்றை மாற்று பேட்டரிகளாகப் பயன்படுத்தலாம் என்னும் முடிவுக்கு வந்துள்ளது ஆய்வுக்குழு. அதுபற்றிய ஆராய்ச்சியை தொடர உள்ளனர். விரைவில் திரவ பேட்டரிகள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.