மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். செப்டம்பர் 16-30, 2019 ‘உண்மை’யில் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரைகள், கவிதைகள் படித்தேன். ஆசிரியர் அவர்களின் தலையங்கம் மிகச் சிறப்பான – கொள்கை விளக்க, கடவுள் மறுப்பு வாசகங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் அளித்த ஆணித்தரமான தீர்ப்பைச் சுட்டியது. தீர்ப்புக்குப் பொருத்தமாக 14.3.1970 ‘உண்மை’யில் பெரியாரின் விளக்கம் அமைந்தது.
மஞ்சை வசந்தன் அவர்களின் ‘புதுவுலகு காண்போம்’ பகுதி, 2017_18_19 உலக நாடுகளில் பகுத்தறிவாளர்கள் கொண்டாடிய பெரியாரின் கொள்கை பரப்பு நிகழ்வுகள் பற்றிய சிறப்பான தொகுப்பு ஆகும்.
பேராசிரியர் திரு.அருணாசுந்தரம் அவர்கள் தனது பாணியில் தந்தை பெரியாரின் கொள்கை முழக்கங்களை – வடமொழி பற்றிய கருத்துகளை ஆய்வு செய்து விவரித்துள்ளனர். தங்கம் வென்ற சிந்துவின் உழைப்பும் முயற்சியும் பாராட்டத்தக்கது.
இன்றைய இளைஞர்களின், கல்லூரி, பல்கலை மாணவர்களின் சிந்தனையில் பெரியாரின் கருத்துகள் எந்த அளவுக்கு ஊடுருவி வருகிறது என்பதை தகுந்த விளக்கங்களுடன் தொகுத்துள்ளார் திரு.கோவி.லெனின் அவர்கள். பாராட்டுகள்!
திரு.சாரோன் செந்தில் அவர்கள், திருச்சி தேவர் மன்றத்தில் 1954இல் ராமனைப் பற்றி நடிகவேள் எம்.ஆர்.ராதா செய்திருந்த விளம்பரத்தை படித்தபோது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தேன். இப்போது சிரிக்கிறோம். அந்தக் காலகட்டங்களில் எவ்வளவு நெருக்கடிகள், சோதனைகளை ராதா சந்தித்து சமாளித்து முன்னேறியிருப்பார். அடேங்கப்பா! நடிகவேளின் சிந்தனைக்கும் அயராத உழைப்பிற்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த வீரவணக்கம்!
சிறுகதை ‘உறவினர் எதற்கு?’ படித்தேன். விந்தன் அவர்களின் கற்பனையில் எவ்வளவு பெரிய இயல்பான நிலைமை துல்லியமாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. விந்தனின் நினைவைப் போற்றுவோம்!
“அய்யாவின் அடிச்சுவட்டில்’, ‘திராவிடர் கழக வரலாறு’ புத்தகங்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள் மிகவும் ஆச்சரியப்படத்தக்க கடந்தகால நிகழ்வுகளை கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.பேராசிரியர் திரு.பி.இரத்தினசபாபதி அவர்களின் பார்வையில் தந்தை பெரியார் முன்னெடுத்த சமூகநீதி, இடஒதுக்கீடு போராட்டங்கள், மொழிப்போர் ஆகியவற்றால் இப்போது வாழும் இளைஞர்களின் கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு இவற்றைக் கணக்கிடுகிறபோது, பெரியாரின் தொலைநோக்குப் பார்வையும் சிந்தனையும் எவ்வளவு வலிமையானது என்பதை உணர முடிகிறது.
செப்டம்பர் 1-15, 2019 ‘உண்மை’ இதழ் பவள விழா மாநாட்டுச் சிறப்பிதழாக வந்த செய்திகளும், மாநாட்டு நிகழ்வுகள், தலைவர்களின் உரைகள் தொகுப்பும் சிறப்பாக அமைந்திருந்தன.
அன்பன்,
– ஆ.வேல்சாமி,
மேற்பனைக்காடு கிழக்கு.
மதிப்பிற்குரிய ‘உண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
செப்டம்பர் (1-15) இதழ் படித்தேன். பவள விழா காணும் திராவிடர் கழகம் மேன்மேலும் தமிழர்களுக்காக உழைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. அய்யாவின் அடிச்சுவட்டில்… என்னும் பகுதியில் ஆசிரியர், பார்ப்பனியம் பற்றி சிறப்பாக விளக்கி உள்ளார். அறிஞர் அண்ணா பற்றிய கவிதை அருமை! ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதியில் இந்தித் திணிப்புக்கு முதன்முதலில் குரல் எழுப்பியவர் தந்தை பெரியார் எனும் உண்மை வெளிவந்துள்ளது சிறப்பு.
மனிதர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ‘உணவே மருந்து’ பகுதி உதவும். அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவருடைய சிறுகதையை வெளியிட்டிருப்பதற்குப் பாராட்டுகள்! பல்சுவை இதழாக ‘உண்மை’ விளங்குகின்றது.
வாழ்க பெரியார்!
– அ.உதயபாரதி,
கெருகம்பாக்கம், சென்னை – 128.