ஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்!

அக்டோபர் 01-15 2019

கே:       ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கட்சி என்கிறார்களே! சர்வாதிகார ஆட்சியா?

                – அகமது, மாதவரம்

ப:           ஆம். அதிலென்ன சந்தேகம். அரசியல் சட்ட மூலம் நாடாளுமன்றத்தைப் பிடித்த பிறகு அவரே அதிபராக அறிவித்துக்கொண்டார். அதுபோன்ற சர்வாதிகார பாசிசத்திற்கே அது வழிவகுக்கும்!

கிருபா மோகன்

கே:       பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்ந்த செயல்பாடுகளை செய்துவந்ததற்காக கிருபா மோகன் என்ற மாணவரை பொருந்தாக் காரணங்களைக் கூறி சென்னைப் பல்கலைக்கழகம் நீக்கம் செய்திருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – பெ.கூத்தன், சிங்கிபுரம்

ப:           அதுபற்றி எழுதினோம். கண்டன அறிக்கை விடுத்தோம் _ அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.

கே:       தேசிய மொழிகள் பல இருக்க, ஹிந்தியை மட்டும் எல்லோரிடமும் திணிப்பது சர்வாதிகாரமல்லவா? மக்களாட்சியில் இது நடக்குமா?

                – இளங்கோ, திருவொற்றியூர்

அமித்ஷா

ப:           ஆட்சிமொழி என்று ஒரே ஓட்டு கூடுதலாகப் பெற்றதால், முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தேவநாகரி தேவபாஷையான சமஸ்கிருதத்திலிருந்து பின்னாளில் உருவான ஹிந்தியே ஆட்சி மொழி என்று அரசியல் சட்டத்தில் நுழைத்துவிட்டனர்.

                (காந்தியார் விரும்பிய ஹிந்துஸ்தானி உருது கலந்த ஹிந்திகூட அல்ல) அதைப் பயன்படுத்தி இத்தனை ஆட்டம். தந்தை பெரியாரிடம் பிரதமர் நேரு, காமராசர் மூலம் தந்த உறுதிமொழிப்படி _ நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி ஆங்கிலம் தொடர வேண்டும்.

கே:       உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற வேறு கட்சியினர் வெற்றி பற்றிய வழக்கு சரியா? முன்னமே நடப்பில் உள்ளதுதானே?

                – மகிழ், சைதை

ப:           தீர்ப்பு வரட்டும்; பிறகு கருத்து சொல்வோம்.

கே:       ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் செயல்பாடுகளால் பெரியாரின் தேவையை இளைஞர்கள் அதிகம் உணர்ந்துள்ளது, கேட்டிலும் விளைந்த நன்மை! எதிர்காலத் தெளிவுக்கும் உதவும் அல்லவா?

                – திருவேங்கடம், மதுரை

இளைஞர்களின் கருஞ்சட்டைப் பேரணி

ப:           நிச்சயமாக! நம் பயிருக்கு கொள்கை எதிரிகள்தான் நல்ல உரமிட்டு வளர்ப்பவர்கள் என்பதுதானே உண்மை!

கே:       பெரும்பான்மை இருப்பதால் விரும்பியதை எல்லாம் முடித்துவிட முயல்வது, நாட்டிற்குக் கேடாக முடியாதா?

                – பகுத்தறிவு, ஈரோடு

ப:           ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முறை அது; நுனிக்கொம்பர் ஏறினார் அளவு மீறினால் அவர்கட்கே ஆபத்தாய் முடியும் என்பதே அரசியலில் கடந்தகால அனுபவப் பாடங்கள்!

கே:       இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.க்கு எதிரான _ வலுவான அணியை தாங்கள் உருவாக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

                – சங்கர், அம்பத்தூர்

ப:           காலம் கனிந்து வருகிறது. எல்லாம் கொக்கொக்க கூம்பும் பருவத்து.

 டெல்லி பெரியார் மய்யம்

கே:       டெல்லியில் உள்ளதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய மய்யங்களை அமைத்து அம்பேத்கர் பெரியார் பற்றாளர்களை ஒருங்கிணைத்து அந்தந்த மாநில மொழிகளில் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்வீர்களா?

                – சகாதேவன், புதுக்கோட்டை

ப:           அதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய பணிகளோ மிக அதிகம். வருங்காலத்தில் இயல்பாகவே அவை நடைபெறும் சூழல்கள், தானே உருவாக வாய்ப்புகள் அதிகம்.

பார்ப்பனர்

கே:       கடவுள், மதத்தை அதிகம் முன்னிறுத்தாது, பார்ப்பன ஆதிக்கம், சூழ்ச்சி இவற்றால் வரும் கேடுகளை இந்தியா முழுவதும் பரப்பினால், வெகுமக்களைத் திரட்டி, பார்ப்பனர் சதியை, ஆதிக்கத்தை முறியடித்தால் என்ன?

                – சுகுணா, சேலம்

ப:           நோய்க்கான கிருமிகளை விட்டுவிட்டு, மருத்துவம் செய்தால், நோயாளி பிழைக்க மாட்டாரே! பழைய ஜஸ்டிஸ் கட்சியே அதற்கு அரசியலில் முன்னுதாரணம். அது நிலைக்க முடியாததற்கு வேரில் சரியாக நீர் பாய்ச்சாததே காரணம்! எனவே, கடவுள் _ மதம் விடுபட்டால், நம் பிரச்சாரத்தால் அடிப்படையற்று அஸ்திவார பலமில்லாத கட்டடமாகத் திகழும்; அழகாகத் தோன்றும்; அதிக நாள் நிலைக்காது!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *