நேயன்
“சப்தரிஷிகளின் மனைவியரைக் கண்டு மோகித்த அக்கினி தேவன் விரகதாபத்தால் வருந்தினான். அவன் நிலையைக் கண்ட கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அவனை அடைந்து அவன் விரகத்தைப் போக்கினர்.’’ என்கிறது இந்துமதம். நெருப்பு என்பது ஓர் ஆற்றல். அது தன்னைச் சேர்வோரை எரிக்கும். அப்படியிருக்க நெருப்புக்கு காமம் வந்தது, அது பெண்களுடன் உடலுறவு கொண்டது என்கிற இந்து மதக் கருத்து அசல் மடமையல்லவா?
“பிரம்மாவின் புத்திரன் குசன். அவன் மகன் குசநாபன். அவனுக்கு -நூ-று பெண்கள். அதி அற்புதமாக இருப்பார்கள். வாயுதேவன் அவர்களைக் கண்டு மோகித்தான். அவர்கள் தனியாக இருக்கும்போது அவர்கள் முன்னிலையில் சென்று தன்னை மணக்குமாறு கேட்டான். அவர்களோ ரூபமற்ற அவனை மணக்க மறுத்து விட்டனர். வாயுவுக்குப் பெரும் கோபம் வந்துவிட்டது. ரோகிகளாகப் போகும்படி அவர்களைச் சபித்தான். அவ்வாறே குசநாபனின் நூறு பெண்களும் ரோகிகளாகி விட்டார்கள்.
இந்த விஷயத்தை அறிந்த அவர்களது பாட்டனார் குசன் தன் தபோவலிமையால் அவர்கள் இழந்த ரூபலாவண்யத்தைத் திரும்பவும் அடையச் செய்தான். அத்துடன் அவர்கள் அனைவரையும் வாயுதேவனுக்கே மணம் செய்து கொடுக்கச் செய்தான்.’’ என்கிறது இந்து மதம். வாயு என்பது காற்று. காற்றுக்கு காம உணர்வு வருமா? அதற்கு உடலுறவுகொள்ள உறுப்பு உள்ளதா? அப்படியிருக்க காற்றுக்கு கல்யாணம் என்று கூறும் இந்து மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையானதா?
“துவஷ்டாவின் மகள் சமிஞ்ஞா. அவளை மணக்க விருப்பம் கொண்டான் சூரியன். அவளோ சூரியனின் வெப்பத்தைத் தன்னால் தாங்கமுடியாதென்று மறுத்துவிட்டாள். அவளிடம் கொண்ட ஆவலைக் கட்டுப்படுத்த முடியாது, அவளைத் திரும்பவும் வற்புறுத்தினான் சூரியன்.
“இந்த நிலையில் மணம் செய்து கொள்ள முடியாது. உன் பிரகாசத்தைக் குறைத்துக்கொள்ளச் சம்மதமானால் உடன்படுகிறேன்’’ என்றாள் சமிஞ்ஞா.
அவள் என்ன சொன்னாலும் அதற்குக் கட்டுப்படத் தயாராக இருந்தான் சூரியன். துவஷ்டா முதலானோர் சூரியனைச் சாணைக் கல்லில் உரைத்தனர். அவன் உக்கிரம் குறைந்தது. அப்போது உதிர்ந்தவற்றிலிருந்து தேவர்கள் பற்பல ஆயுதங்களைச் செய்து கொண்டனர்.
சாணைக்கல்லில் உரைக்கப்பட்ட சூரியனை சமிஞ்ஞா மணந்துகொண்டாள். அப்போதும் அவளால் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஆகவே, அவனைப் பிரிந்து பெண் குதிரையாகி கானகம் சென்றாள். சூரியன் அவளை விடவில்லை. ஆண் குதிரையாகத் தானும் உருவெடுத்து அவளைத் தொடர்ந்தான்.’’ என்கிறது இந்து மதம்.
இந்து மதம் கூறும் மேற்கண்டவற்றில் எத்தனை அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாதக் கருத்துகள்!
சூரியன் ஒரு நெருப்புக் கோளம். அது பூமியைப் போல பல மடங்கு பெரியது. அதற்கு உருவமோ உறுப்போ கிடையாது. உணர்ச்சியும் இல்லை. அப்படியிருக்க அது பெண்ணைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொள்ளத் துடித்தது என்பதைப் போன்ற ஒரு மடமைத்தனமான கருத்து உலகில் வேறு உண்டா?
சூரியனின் வெப்பத்தைத் தணிக்க சாணைக் கல்லில் உரசினர் என்பது நகைச்சுவையான கற்பனை. சாணைக் கல் கூர்தீட்டப் பயன்படுவது. அது வெப்பத்தைத் தணிக்காது; வெப்பத்தைக் கூட்டும்.
பூமியைப் போன்று பல மடங்கு பெரிய சூரியனை சாணைக் கல்லில் உரச முடியுமா? சாணைக்கல்லில் உரசியதாகக் கூறுவது எவ்வளவு பெரிய அறியாமை!
சூரியன் ஆண் குதிரையாக உருவெடுத்தது என்கிறது இந்துமதம். இதைவிட அறிவுக்குப் பொருந்தாத கருத்து வேறு உண்டா?
“மித்திரா, வருணர் என்னும் முனிவர்கள் இருவரும் ஊர்வசியைக் கண்டு அவளை அடைய விரும்பினர். மோகம் காரணமாக இருவருடைய விந்து வெளிப்பட்டது. ஒருவர் கும்பத்திலும் மற்றொருவர் ஜலத்திலுமாக அவற்றை விட்டனர். கும்பத்திலிருந்து அகஸ்தியரும், ஜலத்திலிருந்து வசிஷ்டரும் உண்டானார்கள்’’ என்கிறது இந்துமதம்.
ஆணிடமிருந்து வெளிப்பட்ட விந்து பெண்ணின் கருப்பைக்குள் சென்றால் மட்டுமே குழந்தை பிறக்கும். இதுவே அறிவியல் உண்மை. ஆனால், விந்து கலசத்திலும், நீரிலும் விடப்பட்டால் குழந்தை பிறக்கும் என்கிறது இந்துமதம். நீரில் விந்து விடப்பட்டால், அது நீரில் கரைந்து போகும். கலசநீரில் விட்டாலும் கரைந்து போகும். குழந்தை எப்படி பிறக்கும்?
ஆணின் விந்து மட்டும் குழந்தையை பிறக்கச் செய்யாது. அது பெண்ணின் சினை அணுவுடன் சேர்ந்துதான் கரு உருவாகும். அறிவியல் உண்மை இப்படியிருக்க ஆணின் விந்து மட்டும் குழந்தையைப் பிறக்கச் செய்யுமென்று கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
“கருடன் ஒரு சமயம் சாண்டிலீ என்பவளைக் கண்டு மோகித்தான். அவளை அடைந்து இன்புற வேண்டுமென்று அவளை நெருங்கினான். அவளோ மகாதபஸ்வி. தன் உள்ளத்தில் அவனுக்கு இடமில்லை எனத் தெரிவித்தாள். கருடன் அதைக் கேட்காது அவளை வற்புறுத்தினான். கோபம் கொண்ட சாண்டிலீ கருடனின் இரு சிறகுகளும் அறுந்து விழட்டும் எனச் சாபமிட்டாள். அப்போதே அவனுடைய இரு சிறகுகளும் அறுந்து விழுந்தன. கருடன் தன் தவறை உணர்ந்து அவள் பாதங்களில் பணிந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். அவளும் அவன் கோரிக்கையை ஏற்று அவனை மன்னித்ததோடு தனது சக்தியினால் அறுந்த இரு சிறகுகளும் மீண்டும் அவனுக்கு உண்டாக அருளினாள்’’ என்று இந்துமதம் கூறுகிறது.
கருடன் என்பது பறவை. அது மனிதப் பெண்ணைப் புணர விரும்பியது என்பது மூடக்கருத்தல்லவா? சாபம் விட்டால் பறவையின் சிறகு விழுமா? மீண்டும் வீழ்ந்த சிறகு உடலில் சேருமா? இப்படிக் கூறுவது அறிவியலுக்கு ஏற்றதா? அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா? அப்படியிருக்க இப்படி அறிவுக்குப் பொருந்தாக் கருத்தைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
“விபாண்டர் என்றொரு முனிவர் இருந்தார். அவர் ஒரு சமயம் நீராடத் தடாகத்துக்குச் சென்றிருந்தார். அங்கே யௌவன மங்கை ஒருத்தியைக் கண்டார். அவர் மனம் பேதலிக்கவே, அவரது விந்து வெளிப்பட்டு நீரில் விழுந்தது. அதைப் பெண் மான் ஒன்று நீரோடு பருகிவிடவே அதன் வயிற்றிலிருந்து ரிஷியசிருங்கர் உண்டானார்’’ என்கிறது இந்துமதம்.
மான் மனிதனின் விந்தைப் பருகினால் எப்படி கருத்தரிக்கும்? வாயால் விழுங்கப்படுவது இரைப்பைக்குப் போகும். கருப்பைக்குப் போகாது. கருப்பைக்குப் போகாமல் குழந்தை எப்படி பிறக்கும்? இப்படிப்பட்ட மூடக்கருத்தைக் கூறும் இந்துமதம் அறிவியலுக்கு அடிப்படையா?
“கவுதமர் ஒரு சமயம் கடுமையான தவம் செய்தார். அவர் தவத்துக்கு இடையூறு விளைவிக்க இந்திரன் அப்சரசுகளில் ஒருத்தியை அனுப்பினான். அவள் சுந்தரவடிவிலே மனம் பேதலித்த முனிவரின் விந்து வெளிப்பட்டு விடவே அவர் அதைத் துரோணத்தில் விடவே அதிலிருந்து துரோணர் தோன்றினார்’’ என்கிறது இந்துமதம்.
ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்து கலயத்திலோ, தொன்னையிலோ, நீரிலோ விடப்பட்டால் அது எப்படி குழந்தையாக மாறும்? ஒவ்வொரு ஆணும் தன் வாழ்வில் சுயஇன்பத்தின் மூலம் பலமுறை விந்து வெளியேற்றுகிறார்கள். அவை மண்ணில், துணியில் சிந்துகிறது. அவையெல்லாம் குழந்தையாகிறதா?
நாம் முன்னமே சொன்னது போல், பெண்ணின் கருப்பைக்குச் சென்று சினை அணுவுடன் சேராமல் குழந்தை பிறக்காது. மேலும், குழந்தை உடனே பிறக்காது. அது 10 மாதம் வளர்ந்தே குழந்தையாக உருவாகும். ஆனால், கலயத்தில், தொன்னையில், பானையில் விந்து விடப்பட்டவுடன் குழந்தை உருவானது என்பது அறிவியலுக்கு உகந்ததா? இப்படி அறிவியலுக்கு எதிரான கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?