சீம்பாலின் முக்கியத்துவம்
குழந்தை பிறந்த பின் 3 நாட்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை சீம்பால் [colostrum] என அழைப்பர். இது கிட்டத்தட்ட 2 வாரம் வரை சுரக்கும். இதனுள் அடங்கி இருக்கும் சத்துகள் மிக மிக அதிகம். ஆனால், பெரும்பாலான தாய்மார்களுக்கு, குழந்தை பிறந்த ஆரம்பத்தில் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். அதற்கு நீர்ச்சத்து உடலில் குறைந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே பாலூட்டுதல் அவசியம்.
சீம்பாலின் நன்மைகள்
கொழுப்புச்சத்து குறைவாகவும், அதிகமான மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடையது.
மிக எளிதாக செரிமானம் ஆகக்கூடியது.
குழந்தைக்கு, காட்டு மலம் என சொல்லப்படும் மெகோனியம் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளிப்பட வேண்டும். சீம்பால் மலமிளக்கியாக செயல்பட்டு காட்டு மலத்தை வெளித்தள்ள பெரும்துணை புரிகிறது.
அவ்வாறு மலத்தை இளக்கும் பண்பு உடையதால், அதிகப்படியான பித்தநீர் bilirubin மலத்துடன் வெளியேற்றி பிறந்த குழந்தைக்கு ஏற்படக்கூடிய காமாலையையும் தடுக்கின்றது.
சத்துகள் வழங்குவது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கு வழங்குகிறது.
முதல் 3 நாள்களுக்குப் பின் சுரக்கும் தாய்ப்பாலைக் காட்டிலும், சீம்பாலில் சத்துகளும், நோயெதிர்ப்பு சக்தியும் ஏராளம்.
தாய்ப்பால் எவ்வளவு நாள் வரை கொடுக்கலாம்?
தாய்ப்பாலை கண்டிப்பாக 6 மாதம் வரையில் வேறு எந்த வகை உணவும் சேர்க்காமல் ஊட்டுதல் வேண்டும். ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை தாய்ப்பால் ஊட்டலாம். அதை தாண்டி ஊட்டினாலும் அதிக நன்மையே குழந்தைக்கு கிடைக்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு, 2 வயது வரை இயற்கையான உணவு வகைகளையும் வழங்கி தாய்ப்பாலை ஊட்டிவர வேண்டும்.
தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
முதல் 6 மாதங்களில் கொடுக்கப்படும் தாய்ப்பாலானது. அந்த 6 மாதங்களுக்கான ஊட்டச்சத்தை வழங்குவது மட்டுமின்றி, அடுத்த 6 மாதங்களுக்கான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் குழந்தைக்கு வழங்குகிறது.
குழந்தையின் அறிவாற்றல் கூடுகின்றது.
நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது.
குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற SIDS எனும் Sudden Infantile Death Syndrome என்னும் நிலையை கிட்டத்தட்ட 50% குறைக்கிறது.
குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் பாலூட்டும் தாய் பின்பற்ற வேண்டியவை:
மிளகு ரசம் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி குளிர்ச்சி நிறைந்ததாதலால் ரசத்தில் சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளவும். ரசத்தில் தூதுவளை, துளசி சேர்த்தாலும் நலம்.
வெற்றிலையுடன், 3_5 குங்குமப்பூ சேர்த்து மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
பாலில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
தலை குளித்துவிட்டு வந்தவுடன் பாலூட்டுதல் கூடாது. நன்கு உடலை ஈரமில்லாமல் காயவைத்த பின்பு, சிறிது பாலை வெளியேற்றிவிட்டு கொடுக்கலாம். ஏனெனில், உடலில் குளிர்ச்சி நிறைந்து இருக்கும்.
இனிப்புச் சுவையுள்ள, குளிர்ச்சியான உணவு, தின்பண்டங்களை தாய் தவிர்க்க வேண்டும்.
பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்காது. ஆனால், சளி பிடித்திருக்கும் சமயம் தவிர்த்தல் நன்று.
குழந்தையின் செரிமானம் குறைவாக இருந்தால், பாலூட்டும் தாய் பின்பற்ற வேண்டியவை:
பெருங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், மஞ்சள் போன்றவை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய், நண்டு, இறால், கொத்தவரங்காய், முட்டைகோஸ், பட்டாணி, மொச்சைக்கொட்டை, அப்பளம் போன்ற வாய்வைப் பெருக்கும் உணவை பாலூட்டும் சமயம் தவிர்க்க வேண்டும்.
செரியாமை இருக்கும்போது, பருப்பு சாம்பாரின் தெளிவு மட்டுமே எடுத்துக் கொள்ளுதல் நன்று.
பிரண்டைத் துவையல் சேர்க்க அதிக நன்மை தரும்.
குழந்தைக்கு பாலாடையில் ஓமத்தீநீர் கொடுப்பது போலவே, தாயும் 20 மில்லி அருந்தலாம்.
குழந்தைக்குத் தோல் சார்ந்த பிரச்சினை இருந்தால், பாலூட்டும் தாய் பின்பற்ற வேண்டியவை:
சின்ன வெங்காயம், பூண்டு அதிகம் சேர்க்கவும். இவை இரத்தத்தைத் தூய்மை செய்யும் பண்புடையவை.
வல்லாரைத் துவையல், ரசம் சேர்க்கலாம்.
மீன், நண்டு, இறால், கருவாடு, கத்தரிக்காய், தக்காளி, சோளம், வரகு, கம்பு போன்றவற்றை தோல் பிரச்சனை இருப்பின் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவையெல்லாம் கரப்பான் பண்டங்களின் பட்டியலில் அடங்கும்.
குழந்தைக்கு மலக்கட்டுப் பிரச்சினை இருப்பின், பாலூட்டும் தாய் பின்பற்ற வேண்டியவை:
தினமும் கீரைகளை தாய்மார்கள் உணவில் சேர்க்கவும்.
இரவில் இரண்டு அல்லது மூன்று காய்ந்த அத்திப் பழங்களை சாப்பிடலாம்.
உலர் திராட்சையை தினமும் 10_15 எண்ணிக்கை மாலை வேளையில் சேர்த்துக்கொண்டு பாலூட்ட, குழந்தைக்கு மலக்கட்டு இருக்காது.
குழந்தைக்கு பேதி இருப்பின், தாய் பின்பற்ற வேண்டியவை:
இயல்பைக் காட்டிலும் அடிக்கடி தாய்ப்பால் ஊட்டுதல் வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு நீர்த்துவம் குறைவதை ஈடுசெய்ய இதுவே மிகச் சரியான தீர்வாக இருக்கும்.
மோர், தயிர் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
கறிவேப்பிலைத் துவையல் சேர்க்கலாம்.
இயல்பைவிட, காரம், புளிப்பு சுவை உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்துப் பிரச்சனையையும் குறைக்க வல்ல திரிதோட சமப் பொருள்
மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, ஏலம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை பாலூட்டும் தாய் சேர்த்துவர, சமையலில் மற்ற உணவுகளால் உடலுக்கு நன்மை கிடைப்பதில் இடையூறு இருக்குமாயின், அவற்றிலிருந்து காக்கும் பண்பு இவற்றிற்கு உண்டு.