பேராசிரியர் வே.மாணிக்கம்
இந்தியாவில் இரண்டு சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று, அறிவு மரபு எனப்படும் திராவிட மரபு என்னும் தமிழ் மரபு. மற்றொன்று புராண, யாக மரபு என்னும் வேதசமற்கிருத மரபு. தமிழகத்தில் அறிவு மரபு பன்னெடுங்காலம் தொட்டே ஏடும் எழுத்தும் அறியா மக்களின் சிந்தனையில் தோன்றிச் சீர்மைபெற்றது. அவை பழமொழிகளிலும், விடுகதைகளிலும் ஊர்ப் பெயர்களிலும் பரவிக் கிடக்கின்றன.
மாறாக ஆரியர் காணிபுராண மரபு அறிவைக் கெடுத்து அழிவுக்கு வித்திடுவதாய் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தமிழின் அறிவுத் தலைமையிடமாக விளங்கிய பொதிகையைப் புராணக் கட்டுக் கதைகளில் வழி பாபநாசம் என்று பெயர் மாற்றம் செய்து சமற்கிருதச் சடங்குகளின் தலைமையிடமாக அதனை வைதிகர்கள் மாற்றிவிட்டனர். இங்கு நீராடியபின் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை ஆற்று நீரில் விட்டால் அவர்களது பாவமும் அதனோடு போய்விடும் என்கிற வைதிகப் பொய்யால் தண்பொருநை ஆறு பாழ்பட்டு வருகின்றது. சுற்றுப்புற ஆர்வலர்கள் மிகுந்த இன்னலுடன் ஆற்றினுள் இறங்கி பல ஆயிரம் டன் துணிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். புராணமரபு, மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதோடு சுற்றுப் புறத்தையும் சீரழித்துவிடுகின்றது.
தமிழகத்தின் அறிவு மரபு மக்களை நல்வழியில் ஆற்றுப்படுத்தும். தொல்காப்பியர் அறிவுப் பார்வையை ‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வு அறிவு” என்கிறார். கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் சிந்திக்கத் தூண்டுவது உணர்வு அறிவு. அவ்வாறு சிந்திக்கும்போது ஏன்? எதற்கு? எப்படி என்னும் வினாக்கள் எழுவது இயல்பு. இந்த வினாக்களுக்கான விடை தேடலில்தான் மனிதன் நாகரிக வளர்ச்சியை அடைந்தான். அவன் இயற்கை வளத்தைக் கண்டு, நுகர்ந்து அதனைப் பெருக்கினான்.
சமற்கிருத மரபில் மனுவின் சொல்லிற்கு மறுசொல் கிடையாது. அது வேதவாக்கு, வினா தொடுக்காமல் ஏற்றுச் செயல்பட வேண்டும். கேள்விகேட்டால் பதில் சொல்லாமல் நம்பிக்கை, ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம், வேதம், ஸ்மிருதி போன்ற சொற்களால் தடைபோட்டு விடுவார்கள், அல்லது மதத்துரோகி என்று பட்டம் சூட்டி ஒடுக்க முனைவார்கள். சரஸ்வதி ஆறு, ராமர் பாலம், புராணக் கதைகள் போன்றவற்றைக் கேள்வி கேட்க முடியாது.
ஆனால், தமிழர் அறிவுமரபு பகுத்தறிவின்பாற்பட்டது. எல்லாச் சொற்களும் காரண காரியத்துடன் பொருள் குறித்தல் வேண்டும் என்பது இலக்கண நூலார் வகுத்த வரையறை. தொல்காப்பியர், சங்கப்புலவர், திருவள்ளுவர் போன்ற தமிழ்ச் சான்றோர்களிடம் கேள்வி கேட்டால் அதற்குரிய விளக்கத்தைப் பெற முடியும். நம்முடைய அய்ய வினாக்கள் சிலவற்றிற்கு வள்ளுவர் சொல்லும் பதிலை இங்குக் காணலாம்.
வள்ளுவப்பெருமானே! அறம் என்றால் என்ன?
மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அனைத்து அறன்.
ஐயா! மனத்துக்கண் உள்ள மாசுகள் யாவை?
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்னும் நான்கு குற்றங்களாகும்.
இந்த மாசை எவ்வாறு நீக்க முடியும்?
புறந்தூய்மை நீரான் அமையும், அகத்தே தூய்மை வாய்மையால் ஏற்படுத்தலாம்.
சரி ஐயா, வாய்மை என்றால் என்ன?
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாதன சொல்லுதல் ஆகும்.
ஐயா, ஏன் தீமை இல்லாதன சொல்ல வேண்டும்? உண்மையைத்தானே சொல்கின்றோம்?
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். வாய்மை வேறு; உண்மை வேறு.
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’’
பெருமானே, அச்சம் என்பது மடமையல்லவா?
தம்பி, அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
இவ்வாறு தொடர்ந்து பேதமை என்றால் என்ன? அறிவார் எத்தன்மையினர் என வினாக்களைத் தொடுத்தால் பதில்கள் கிடைக்கும். தானும் சிந்தித்து, மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியவர் திருவள்ளுவர்.
சமற்கிருத வேதாந்திகளுக்குப் பொய் ஒன்றே மூலதனம். அவர்கள் நெஞ்சாரப் பொய்யைச் சொல்லத் தயங்கமாட்டார்கள். மனுநீதி குறித்து, ‘மனுநீதி கோப்பு முழுவதும் ஒட்டு மொத்தமான புனிதப் பொய்களால் கட்டுமானம் செய்யப்பட்டது. தங்களது இலாப நோக்கம், தங்களை மய்யமாகக் கொண்ட மனித உள்ளம், புனிதப் பொய்களின் பலம் இவையே மனுதரும விருப்பம். தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான ஆளுமைக் கருத்துகளை உறுதிப்பாடு செய்வதிலேயே மதாச்சாரங்களின் பலம் தங்கியுள்ளது. உடல் ரீதியாகவோ அன்றி இராணுவ ரீதியாகவோ இல்லாத பலத்தைப் பொய்யின் மூலமாக உருவாக்குவது என்பது இவர்களின் உண்மை சம்பந்தமான புதிய கோட்பாடு. மிகவும் நுணுக்கமான ஆய்வுக் கூறுகளைக் கொண்ட இத்திட்டம் முன்வைக்கும் அடக்குமுறைக் கோட்பாடு சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று’’ என்று செர்மனிய அறிஞர் நீட்சே குறிப்பிடுகின்றார் (உயிர் நிழல், மே 2001. ப.110).
நாசா அனுப்பிய விண்கலம் திருநள்ளாறுக்கு மேலே வரும்போது செயலிழந்து விடுகிறது என்று ஒரு பொய்யைத் திறமையாகச் சமற்கிருத மரபினர் பரப்பினார்கள். இது தவறான கருத்து என்று இந்திய வானியல் அறிஞர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விளக்கம் அளித்தார். ஆனால், வைதிகர்களின் பொய், மக்களைச் சென்று சேர்ந்து பதிந்த அளவு வானியல் அறிஞரின் கருத்துகள் மக்களை அடையவில்லை. ஊடகங்கள் பெரிதும் அவர்கள் கையிலுள்ளதால் அவர்கள் நினைத்ததை எளிதாகப் பரப்பி விடுவார்கள்.
சமற்கிருத மரபினர் எப்பொழுதும் அதிகாரம் தங்கள் கையிலிருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் நாட்டை மதம்சார்ந்த வடிவத்தில் பார்க்கும் மனப்போக்கை உருவாக்குவார்கள்.
உலகத்தோற்றம் குறித்து மனு, ‘வைகறையில் விழித்தெழுந்து பிரம்மா உலகைப் படைக்கத் தொடங்கினார். வேள்வியைச் செயல்படுத்தும் பொருட்டே நெருப்பு, காற்று, சூரியன் ஆகிய தேவர்களைப் படைத்தார். பரம்பொருளான பிரம்மாவே இவ்வுலகிற்கு முதன்மையானவர்’ என்கின்றார். ஆனால், இந்த உலகம் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் அய்ந்து பொருள்களின் கலவையால் உருவானது என்பது தொல்காப்பியரின் அய்ந்திர அறிவுமரபுக் கோட்பாடாகும். அவர் நிலத்தையும் காலத்தையும் முதற்பொருளாக அறிவித்தார். கருப்பொருள்களின் தோற்றக் கருப்பப்பையாக நிலமும் காலமும் விளங்குவதால் தொல்காப்பியர் அவற்றை முதற்பொருளாகக் கொண்டு, மனிதன், பறவை, விலங்கு, உணவு, நீர், இவற்றோடு தெய்வத்தையும் கருப்பொருளில் அடக்கினார். வைதிகமரபு உலகப் பொருள்கள் யாவும் மாயை என்றும் மண்ணைத் தீட்டு என்றும் குறிப்பிடும். ஆனால், தமிழக அறிவு மரபு உலகப்பொருள்கள் அனைத்தும் உண்மை, உலகப் பொருள்கள்தாம் உலகம் பற்றிய அறிவையும் அறிவு வளர்ச்சியையும் தரும் என்கிற அறிவியல் _ சிந்தனையின் பாற்பட்டது.
தமிழகத்தில் மட்டுமே இன்று மனிதன் என்கிற நோக்கில் உலக மக்களை ஒன்றுபடுத்தும் பொதுப்பண்பு, பொதுக்கொள்கை, பொதுநோக்கு என்னும் அறிவு மரபு நிலைத்து நிற்கின்றது. இவை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றில் பதிவாகியுள்ளன. தொல்காப்பியரின் அய்ந்திரம் என்னும் உலகியல் கோட்பாடே பிற்காலத்தில் சாங்கியம், சமணம், பௌத்தம், ஆசீவகம் எனக் கிளைத்தன. இவை அனைவரும் சமம் என்கிற கருத்தியலைக் கொண்டவை. கடவுளுக்கு முதன்மை கொடுக்காது மக்களை முதன்மைப்படுத்தியவை.
வேத யாக மரபிற்கு எதிரானவை. எனவே, இச்சமயங்களால் தமிழகத்தில் கால் ஊன்ற முடிந்தது. இவற்றை அடுத்துத் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்னும் அறிவு விடுதலை இயக்கம்தான் சமஸ்கிருத வேதமரபை அஞ்சாமல் எதிர்த்து நிற்கின்றது. மண்ணில் மக்கள் நல்லவண்ணம் வாழ, மனிதனை மாமனிதனாக உயர்த்த, சமயக் காழ்ப்பில்லாத சமுதாயம் மலர தமிழரின் அறிவு மரபைப் பரப்புவது நமது கடமையாகும். மனித குல ஒற்றுமையைச் சீர்குலைக்கும் இந்தக் காலகட்டத்தில் இது இன்றியமையாத பணியாகும்.