எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (43)

செப்டம்பர் 1-15 2019

பெரியார் இந்தியருக்கு எதிரானவரா?

அம்பேத்கர் இந்திய கலாச்சார விரும்பியா?

நேயன்

அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர். ஈ.வெ.ரா. சமஸ்கிருதத்தை வெறுத்தவர்.

இது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் கண்டுபிடித்த அய்ந்தாவது முரண்பாடு!

ஆரியர்கள் உலகின் பல பாகங்களில் நாடோடிகளாய்த் திரிந்தவர்கள். ஆங்காங்கே பேசப்படும் பலப்பல மொழிகளை எடுத்துக் கொண்டவர்கள். இன்று தங்களின் மொழி என்று அவர்கள் கூறிக்கொள்ளும் சமஸ்கிருத மொழி உண்மையில் உலகின் பல பகுதிகளில், பல காலகட்டங்களில் பேசப்பட்ட, மொழிகளின், பேச்சு வழக்குகளின் ஒரு கலவையேயாகும். சமஸ்கிருத மொழியில் எந்தச் சிறப்புமே இல்லை. அது ஆதிமொழியும் அல்ல. தங்களை உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளவும், மற்ற மொழிகளை இழிவுபடுத்தவுமே சமஸ்கிருத மொழியைப் பற்றி பார்ப்பனர்கள் உயர்வாகப் பேசுகின்றனர் என்று பெரியாரின் கருத்தை 31.7.2014 ‘விடுதலை’ நாளேட்டின் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுகிறார் இந்த நபர்.

பெரியார் கூறிய அனைத்தும் மொழி அறிஞர்கள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்த உண்மைகள். பெரியார் இது மட்டுமல்ல மேலும் சொல்கிறார் அதே ‘விடுதலை’யில் வந்துள்ளது.

சமஸ்கிருத மொழி அநாதிகால மொழி என்றும், இம் மொழியிலிருந்துதான் இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற்றெனவும் சொல்வது ஆதாரமற்றது. ஏனெனில், சமஸ்கிருதம் கி.மு.1,500க்குப் பின் உருவானது என்று தெளிவாகியுள்ளது என்கிறார்.

உலகின் மொழிகள் பலவும் தமிழிலிருந்தே வந்தவை. தமிழே மூலமொழி. மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது சமஸ்கிருதம். அதற்கும் தமிழே மூலம். நீண்ட நெடுங்காலம் பேச்சு வழக்கில்லா மொழி சமஸ்கிருதம். அதற்கென எழுத்தில்லை. சமஸ்கிருத எழுத்து வடிவம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது மொழியியல் ஆய்வாளர்கள் உறுதி செய்த உண்மை.

அதன்படி பெரியார் சொல்வது மிகச் சரி. அம்பேத்கரும் பின்னாளில் இக் கருத்தையே ஏற்கிறார்.

இந்தியா முழுமையும் பேசப்பட்ட மொழி தமிழ். அதன்பின் ஆரியர் அயல்நாட்டிலிருந்து வந்து கலக்கவே, அவர்களின் பேச்சு மொழியான சமஸ்கிருதம் வட இந்தியாவில் பரவுகிறது. ஆனால், தென்இந்தியாவில் சமஸ்கிருதம் அதிகம் கலக்கவில்லை என்று அம்பேத்கர் சொல்கிறார்.

– பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-7, பக்கம்-300இல்.

தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று; ஆரியர்கள் வரும் முன் தமிழ்மொழி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. தமிழ் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி.

இது உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் (திராவிடர்களால்) பேசப்பட்ட மொழியாகும். நாகர்கள் மீது அவர்கள் மொழியின்மீதும் ஆரியர்கள் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியை விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலக்கக் காரணமாயிற்று.

தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் தமிழை தங்களின் தாய்மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. அதனால், தென்னிந்திய மக்களுக்கு மட்டும் திராவிடர் என்னும் பெயர் நின்றது.

நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. நாகர் என்பது இனம்; திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிப்பது. இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டுதான். ஒன்று, ஆரியர்கள்; மற்றொன்று, நாகர்கள் என்கிறார் அம்பேத்கர்.

அசோகருடைய கல்வெட்டுகளில் பிராகிருதமும், பிராமி எழுத்துகளுமே காணப்படுகின்றன. அப்போது ஆரிய மொழியான சமஸ்கிருதம் மக்களால் பேசப்படவேயில்லை.

வடமொழிப் பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள், வேதங்கள் சமஸ்கிருத நூல் அல்ல; வேதங்கள் பின்னாளில் பாணினியால் திருத்தம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவையே சமஸ்கிருத நூல்கள்.

இராமாயணமும் மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதமே உருவாகவில்லை” என்கிறார்.

கே.சி.கன்னா என்னும் வரலாற்றாய்வாளர், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை கி.பி. நான்கு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை என்றார். ஏ.பார்த் என்னும் அறிஞரும் இதையே கூறுகிறார்.

கணிட்ராக்டர் என்னும் அறிஞர், சமஸ்கிருதம் அந்தந்தப் பகுதியில் வழங்கிய மொழி எழுத்துகளாலே எழுதப்பட்டது. திராவிடர் எழுத்துகளில் மாற்றம் செய்தே சமஸ்கிருத எழுத்தை உருவாக்கினர் என்று பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

எச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞர், ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்துமுறை இல்லை என்று கூறுகிறார்.

பல்லவர்களின் கல்வெட்டுகள் பிராகிருதத்திலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அக் கல்வெட்டுகளில் சமஸ்கிருதம் வளர்ச்சி பெறாத மொழியாகவே உள்ளது. பிராகிருதமே சமஸ்கிருதமாக மாறிக் கொண்டிருந்ததை அது உணர்த்துகின்றது.

சமஸ்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத மொழியால் எழுதப்பட்டு, கி.பி. 350க்குப் பின், பிராகிருத இலக்கியத்தை மொழி பெயர்த்து வளர்ந்தது, இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான், இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3. பாரதீய வித்யாபவன் வெளியீடு _ ஜார்ஜ் எல். ஹார்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழிகளின் ஒப்பாய்வு நூல்.) சமஸ்கிருத நூல்கள் பலவும் மொழிபெயர்ப்பு நூல்களே. எனவே, சமஸ்கிருதம் சொந்த இலக்கிய வளம் கொண்டதல்ல.

கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களே பல நூல்களைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக கி.பி.4ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில், சிம்மசூரி முனிவரின் “உலோக வியாபகம்’’ என்னும் பிராகிருத மொழிநூல், கடலூர் திருப்பாதிரிபுலியூர் சர்வந்தி என்பவரால் ‘கதசப்தசாயி’ என்னும் பெயரில் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

மேலும் சமஸ்கிருதத்தின் தோற்றம் அமைப்பு பற்றி ஆய்வு செய்த கால்வின் கெபர்ட்  (Colvin Kephart) என்பவர், சமஸ்கிருதம் இந்திய மொழி எதற்கும் தாயல்ல; அது பழைய இந்திய மொழிகளின் கலப்பால் பிற்காலத்தில் உருவானது என்கிறார்.

இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் கிரியர்சன், சமஸ்கிருதம் இந்திய மொழியின் மாறுதலுக்கு உட்பட்ட மொழியே என்றும்; செம்மைப்படுத்தப்பட்டு, இலக்கணம் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதால் சமஸ்கிருதம் (செம்மைப்படுத்தப்பட்டது) என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

டாக்டர் மக்ளீன் என்னும் அறிஞர் திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழிகள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

டாக்டர் டைலர், சமஸ்கிருதம் உள்பட இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் இலக்கியத் தமிழால் வளர்ந்தவை என்கிறார்.

பஞ்சாப், சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த குறியீடுகளை ஆராய்ந்த பி.டி.சீனிவாச அய்யங்கார் அவையனைத்தும் மூலத் தமிழ் என்கிறார். இந்தோ_ஆரிய மொழிகள் அனைத்தும் தமிழ் மூலத்திலிருந்து கிளைத்தவையே என்கிறார்.

டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தை ஏற்கிறார்.

George Hart ‘Tamil Heroic Poems’ என்னும் நூலில் தமிழ் இலக்கியங்கள், பிராகிருத மொழி மூலம் சமஸ்கிருதத்திற்குச் சென்றதை ஆதாரங்களோடு விளக்குகிறார் அமெரிக்க தமிழறிஞரான எம்.பி.மெனோ என்பார், சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்கள் தமிழிலிருந்து கடனாகப் பெறப்பட்டவை என்கிறார். ஆக, இப்படிப்பட்ட ஓர் உயர்மொழி _ மூலமொழி தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தைப் பெருமையாய்ப் பேச அம்பேத்கர் ஒன்றுந் தெரியாதவர் அல்லர்.

இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எடுத்துக்காட்டும் தனஞ்செய்கீர் நூலின் வரிகள் அம்பேத்கர் ஆரம்ப நிலையில் சொன்னவை. அவர் சமஸ்கிருதம் படிக்க ஆர்வங் கொண்டு சுயமுயற்சியிலும், பின் பண்டிட் உதவியுடனும் படிக்கிறார். அப்போது சமஸ்கிருதம் பற்றி முழுமையாய் அறியாத நிலையில் சொன்னவை அவை. அதுவும் அவர் கருதியதாகச் சொல்லுகிறார்; உறுதியில்லை.

அவரும் அவர் சகோதரரும் பள்ளிப் பருவத்தில் சமஸ்கிருதம் படிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக  Parsian மொழியைப் படிக்கச் சொல்கிறார்கள்.

  “In after years Ambedkar studied Sanskrit partly by himself and sometimes with the help of some pandits and himself became pandit. In his opinion parsian stands no comparison with Sanskrit as the latter, observe he, is the golden treasure of epics, the cradle of Grammar, politics and philosophy and the home of logic, drama and criticism.”

தனஞ்செய்கீர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவையில் சில வரிகளை நீக்கியதன் மூலம், அம்பேத்கர் ஏதோ பின்னாளில் முதிர்ச்சி பெற்ற நிலையில் இவற்றைக் கூறியது போன்ற ஒரு பொய்யான கருத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார், இந்த ஆர்.எஸ்.எஸ். ஆசாமி.

(தொடரும் ..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *