இயக்க வரலாறான தன் வரலாறு(233) : திருப்பந் தந்த திருச்சி மாநாடுகள்!

செப்டம்பர் 1-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்

கி.வீரமணி

4.10.1988  அன்று இந்தியாவில் பார்ப்பன நாயகம் குறித்து ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ ஏட்டுக்கு பேட்டியளித்தேன். அப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்தேன்.

கேள்வி: 1941ஆம் ஆண்டு முதல் பார்ப்பனர்களை எதிர்த்து திராவிடர் கழகம் போராடி வருகிறது. நீங்கள் ஏன் பார்ப்பனர்களை அந்த அளவுக்கு வெறுக்கிறீர்கள்?

பதில்: நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் நாங்கள் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. பார்ப்பனிய அமைப்பை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். பார்ப்பனியஅமைப்பு என்பது, இந்நாட்டின் பெரும்பாலான மக்களை மதத்தின் பெயரால் ஒடுக்கி வரும் ஒரு நாசகரமான அமைப்பாகும். நாங்கள் பெரியார் துவக்கிய போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். காரணம், பெரியார் ஏற்கெனவே எச்சரித்தபடி, பார்ப்பன நாயகம் இந்த நாட்டைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

பார்ப்பனர்களுக்காக, பார்ப்பனர்களால் நடத்தப்படும் பார்ப்பன அரசமைப்புக்கு  ‘பார்ப்பன நாயகம்’ என்ற சொல்லை உருவாக்கித் தந்தவர் தந்தை பெரியார்.

கேள்வி: பார்ப்பன நாயகம்தான் நடக்கிறது என்று எப்படிக் கூறுகிறீர்கள்?

பதில்: நான் உதாரணங்கள் மூலம் விளக்குகிறேன். உங்களுக்குத் தெரியும், ‘சதி’யை தடை செய்யும் சட்டங்கள் இருக்கின்றன; தீண்டாமையை தடுப்பதற்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், பூரிசங்கராச்சாரி, தீண்டாமையையும், ‘சதி’யையும் ஆதரித்து வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. ஏன்? காரணம், அவர் ஒரு பார்ப்பனர்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார்? ஆர்.வெங்கட்ராமன், ஒரு பார்ப்பனர். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவியிலிருப்பவரின் சமூகத்தைச் சாராத ஒருவர்தான் குடியரசுத் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சம்பிரதாயம். ஆனால், இப்போது குடியரசுத் துணைத் தலைவராக இருப்பது யார்? சங்கர் தயாள் சர்மா. அவரும் ஒரு பார்ப்பனர். நமது நாட்டின் பிரதமர் யார்? ராஜீவ் காந்தி. அவர் மதக் கலப்பு, ஜாதிக் கலப்பு பெற்றோர்களுக்குப் பிறந்தாலும், தனது தாயாரின் இறுதிச் சடங்கின்போது பார்ப்பனியத்தின் சின்னமான பூணூலை அணிந்து தன்னை ஒரு பார்ப்பனராகவே அடையாளம் காட்டிக்கொண்டார். இந்த நாடே அந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தது.

பிரதமரின் ஆலோசகர்கள் யார்? சதீஷ் சர்மா, மணிசங்கர அய்யர் இருவருமே பார்ப்பனர்கள். அமைச்சரவையில் இருப்பது யார்? ராவ்களும், திவாரிகளும், தென்னகம், காஷ்மீர், பீகார் பார்ப்பனர்களும்தான். சுப்ரீம் கோர்ட்டில் என்ன நிலைமை? 26 நீதிபதிகளில் 10 இடங்கள் காலியாக இருக்கின்றன. எஞ்சியுள்ள 16 பதவிகளில் 9 பேர் பார்ப்பனர்கள். தலைமை நீதிபதியும் ஒரு பார்ப்பனர்.

ராணுவ தளபதியாக சுந்தர்ஜி எனும் ஒரு தென்னாட்டுப் பார்ப்பனர் இருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்தப் பதவிக்கு விசுவநாத் சர்மா எனும் ஒரு வடநாட்டுப் பார்ப்பனர் வந்துவிட்டார். இந்தியாவில் உயர்ந்த பதவிகளை அலங்கரித்த ராதாகிருஷ்ணன், ராஜகோபாலாச்சாரி, நேரு, இந்திராகாந்தியிலிருந்து இப்போது பெரிசாஸ்திரி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் வரை அனைவரும் பார்ப்பனர்களே. இதை யாராலும் சகித்துக் கொள்ள முடியுமா? மைனாரிட்டியாக இருக்கும் ஒரு சமுதாயம் இப்படி முக்கிய பதவிகளை எல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி: இடஒதுக்கீடு வருமான அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ‘பிராமண’ சங்கம் வற்புறுத்துகிறது? இதை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்? ஏழை ‘பிராமணர்களும்’ வாழ வேண்டுமல்லவா?

பதில்: ‘ஏழை பிராமணன்’ என்ற கருத்து ஒரு மாயையானது. அதற்காக பார்ப்பனர்களில் ஏழையே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. உண்மையான வறுமை என்ற அளவுகோலை வைத்துப் பார்த்தால், அப்படி ஒரு பார்ப்பனர்கூட இல்லை. உண்மையிலேயே வறுமையில் வாடுகிறார்கள். பிளாட்பாரங்களில் வசிக்கிறார்கள். அப்படி பிளாட்பாரங்களில் வசிப்பவர்களில், எங்கேயாவது ஒரு பார்ப்பனரைப் பார்க்க முடியுமா? ஒருவரைக்கூட உங்களால் பார்க்க முடியாது. எனவே ‘ஏழ்மை’ என்பதில்கூட பார்ப்பனர்கள் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறார்கள். பார்ப்பன ஏழ்மைக்கும் ஏனையோர் ஏழ்மைக்கும் வேறுபாடு இருக்கிறது.

இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. ‘ஏழ்மை’ என்பது நிரந்தரமான அளவுகோல் அல்ல; அது மாறக்கூடியது; இன்று ஏழ்மையில் இருப்பவன், நாளை மாறக்கூடும். ஆனால், ஜாதி என்பது எப்போதுமே மாறாதது. பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால் முன்னேறிய சமூகப் பிரிவில் _ இன்று வசதியாக உள்ள ஒருவர், நாளை ஏழையானால், உடனே அவர் இடஒதுக்கீட்டு உரிமை கோர முடியும். அதே போல் இன்று ஏழையாக இருந்து, இடஒதுக்கீட்டு உரிமை பெற்ற ஒருவர், நாளைக்கு லாட்டரி சீட்டு விழுந்து வசதியானவராகி விடலாம். நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கும் ஒருவருக்கு, நல்ல வருமானமும் சம்பளமும் இருக்கிறது: ஆனால், அந்தப் பொருளாதார உயர்வு, சமுதாயத்திலும், கல்வியிலும் அவர்களை உயர்ந்தவர்களாக்கிடவில்லை. ஒரு பூசாரியைவிட பொருளாதாரத்தில், ஒரு துப்புரவுத் தொழிலாளி உயர்ந்த நிலையில் இருந்தாலும், சமுதாய ரீதியாக துப்புரவுத் தொழிலாளியை மேலே தூக்கி விடப்பட வேண்டியிருக்கிறது. எனவே, பொருளாதாரம் என்பது இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் சரியான அளவுகோல் அல்ல. 

கேள்வி: 40 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்ச்சிக்கு, இன்னமும் இடஒதுக்கீடு அவசியமாகிறது. எத்தனை காலத்துக்குத்தான் இந்த நிலை நீடிப்பது?

பதில்: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பனர்களால் பூட்டப்பட்ட விலங்கை உடைத்தெறிய வேண்டியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இடஒதுக்கீடு வந்த பிறகு இப்போதுதான் ஒடுக்கப்பட்ட சமுதாயம் தலைதூக்கத் துவங்கியிருக்கிறது.

இவ்வாறு அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன்.

விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதாகக் கூறி இந்திய ராணுவ முகாமில் காவல் வைத்தது குறித்து 11.10.1988 அன்று கடுமையாகக் கண்டித்து அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதனைத் தொடர்ந்து, 14.10.1988 அன்று நடைபெற்ற பொன்னேரி ஆதித்தனார் அரங்கில் “அன்றிலிருந்து இன்றுவரை ஈழப் பிரச்சினை’’ என்ற தலைப்பில் பேசினேன்.

‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தியும், தீண்டாமையை ஆதரித்தும், பூரி சங்கராச்சாரியார் பேட்டி அளித்து, ஒரு ஆண்டு காலத்துக்கும் மேலாகிவிட்ட பின், அவர் மீது பெயரளவுக்கு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து 3.11.1988 முதல் 7.11.1988 வரை நான் தமிழகம் முழுவதும் பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்புப் போராட்டம் அறிவித்து, ரயில்மூலம் கழகத் தோழர்களைச் சந்தித்து விளக்கி உரையாற்றி வந்தேன்.

கொட்டும் மழையில் ‘குளித்த’வண்ணம் ரயிலடியில் திரண்ட பொதுமக்களுடன் கழகத் தோழர்கள், போராட்ட வீரர்கள் பட்டியலுடன் குவிந்து நின்றார்கள்.

பூரி சங்கராச்சாரி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமுன் பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்பு போராட்டம், 8.11.1988 அன்று சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கண்டன ஊர்வலம் புறப்பட்டு ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக நேரு ஸ்டேடியம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்த பின்பு பூரி சங்கராச்சாரி கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்தினோம். என்னுடன் 15,000 தோழர்கள் கைதானார்கள்.

இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும்,  எதிரொலிக்கும் என்று விடுதலையானபோது செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினேன். இந்தப் போராட்டக் களம் தொடரும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தந்தை பெரியாரின் லட்சியம் ஈடேறும் வரை, இந்த இயக்கத்தின் பணி ஓயாது! ஓயாது! போராட்ட வீரர்களுக்கு நமது வீர வாழ்த்துகள் என்று கூறினேன்.

தந்தை பெரியார் அவர்களது சீரிய பெருந்தொண்டர்களில் ஒருவரும், ‘தென்பகுதி ரயில்வே மென் யூனியன்’ என்று தந்தை பெரியார் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு பொன்மலையில் தொடங்கப்பெற்ற ரயில்வே தொழிலாளர்களது அமைப்பின் நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும் ஓய்வு பெற்ற ஸ்டேஷன் மாஸ்டருமான மானமிகு அய்யா தருமராசன் அவர்கள் 7.11.1988 அன்று இரவு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், தாங்கொணாத் துயரமும் அடைந்தேன்.

தருமராசன்

நமது கழக வழக்குரைஞர் திரு.வீரசேகரன் அவரது செல்வங்களில் ஒருவராவார். அவரது இறப்பு _ இழப்பு ஈடுசெய்ய முடியாதது. என்னுடைய வேதனையும் கழகக் குடும்பங்களின் வேதனையும் விடுதலையில் அறிக்கை வாயிலாக பதிவு செய்திருக்கிறேன்.

திராவிடர் இயக்கங்களை கொச்சைப்படுத்தியும் பார்ப்பனர்களை உயர்வு செய்தும் _ வரலாற்றைத் திரித்தும் _ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “ஏழு தலைமுறை வளர்ச்சி’’ என்ற தொடருக்கு, தடை விதிக்க வேண்டும் என்று நான் 2.12.1988 அன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கு மனுவில், 1976ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றுவதற்கு ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், சர்வீஸ் கமிஷன் மூலமோ, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோ, பத்திரிகைகளில் விளம்பரம் செய்தோ _ இவை போன்ற முறையான வழிகளில் தேர்வு செய்யாமல் தகவல் தொடர்புத்துறை செயலாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்யப்பட்டனர். இதில் பெரும் பதவிகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்கள். எனவேதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்ப்பன வகுப்புவாத உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.

கிருஷ்ணசாமி தயாரித்துள்ள “ஏழு தலைமுறை எழுச்சி’’ என்ற தொடர் அப்போது ஒளிபரப்பாகி வந்தது. இவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர், இவர் அவசர நிலை பிரகடனத்தின்போது, சுப்பிரமணியத்தின் மகன் ‘சிந்துவெளியிலிருந்து இந்திராகாந்தி வரை’ என்னும் திரைப்படத்தை தயாரித்தார்.

அப்போது ஒளிபரப்பான ‘ஏழு தலைமுறை எழுச்சி’’ என்ற தொடர் 13 பாகங்களைக் கொண்டது.

சமுதாயத்திற்கு உழைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்றும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் அவர்கள் மட்டுமேதான் என்று இந்தத் தொடரில் விளக்கப்படுகிறது.

சுயமரியாதை இயக்கமும், பார்ப்பனரல்லாத மக்களும் ஆற்றிய தொண்டுகளை இருட்டடிப்பு செய்து, அவர்களைக் கொச்சைப்படுத்திக் காட்டுகிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறி அதனை தடை விதிக்க வேண்டும் கழகம் வழக்குத் தொடர்ந்து நடைபெற்றது.

ஜோதிராவ் ஃபுலே

13.12.1988 அன்று பெங்களூரில் (பி.ஏ.எம்.சி.இ.எப்) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மலைவாழ், பழங்குடியினர் அய்ந்தாவது மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது மகாராஷ்டிரத்திலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய ஜோதிராவ் ஃபுலே, தென்னகத்திலே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய தந்தை பெரியார், வடபுலத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கர் ஆகிய இம்மூன்று தலைவர்களுக்கும் முதலாவதாக நாம் நமது நன்றியினைச் செலுத்த வேண்டும் என்று கூறினேன்.

நாம் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை மேற்கோள்காட்டி எடுத்துக் கூறினேன்.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் மலைவாழ் மக்களுடைய அய்ந்தாவது தேசிய மாநாடு பெங்களூரில் 11, 12, 13.12.1988 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது.

மாநாட்டில் பீஜேந்தர்சிங் ஜாலி தலைமை வகித்தார். மாநாட்டில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் பசவலிங்கப்பா மற்றும் பலர் உரையாற்றினர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் திராவிடர் கழகத்தின் செயல் வீரர்களில் தலைசிறந்தவராகவும், திராவிடர் கழகத்தின் ஆற்றல்மிகு பேச்சாளராகவும் விளங்கிய பெரியார் பெருந்தொண்டர் நமது பாசத்திற்கும் பேரன்பிற்கும் உரிய மானமிகு சு.சாந்தன் அவர்கள் நேற்று மாலை சென்னை பொது மருத்துவமனையில் காலமானார் என்ற பேரிடி போன்ற செய்தி என்னை மிகவும் வாட்டியது. 15.12.1988 அன்று ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

‘திருப்பம் தந்த திருச்சி மாநாடுகள்’

7 மற்றும் 8.1.1989 ஆகிய இரண்டு நாள்கள் திருச்சி பெரியார் நகரில் திராவிடர் கழக மாநில மாநாடும், சமூகநீதி மாநாடும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கழகக் குடும்பத்தினர் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வாருங்கள் என்று விடுத்த வேண்டுகோளை மதித்து எளிய கருஞ்சட்டைத் தோழர்கள் உள்பட அனைவரும் வந்து லட்சக்கணக்கில் கூடியிருந்தனர்.

மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல், சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகமாம். கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் கூடியிருந்தனர். முதல் மாநாட்டில் மகளிர் அமைப்புச் சார்பில் ‘ஜாதி ஒழிப்பு’ என்னும் தலைப்பில் ராங்கியம் சரசுவதிராசன் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ‘அகில இந்திய நீதித்துறை’ முறைக்கு கடும் எதிர்ப்பு, அடிப்படை உரிமைகளில் வேலைவாய்ப்பிற்கு இடம், பார்ப்பன நிருவாகத்தால் நாடு நாசம், தமிழர்களின் விழிப்புணர்வுக்குக் கண்காணிப்பு, தமிழக பெட்ரோலுக்கு ‘ராயல்டி’, தென்னகத்திற்கு கனரகத் தொழிற்சாலை, காவிரி பிரச்சனை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, விவசாயிகளின் வரி தரா போராட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் கழக மாநில மாநாட்டில்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நான் சிறப்புரை ஆற்றினேன்.

இரண்டாவது நாள் சமூகநீதி மாநாட்டில் உரையாற்றும்போது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, ஆதிதிராவிடர் சமுதாயத்திற்காக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக பாரபட்சம் இல்லாமல் பாடுபடக்கூடிய எல்லோரையும் ஓர் நிலையிலே வைத்து ஒரு குடும்பமாகக் கருதக்கூடிய இயக்கம் என்று சொன்னால் அது இந்த இயக்கம்தான் என்பதை யாவரும் மறந்துவிடக் கூடாது என்றும், சமூகநீதிக்கு ஆபத்து எந்த ரூபத்திலே வந்தாலும் அதை சந்திக்கத் தயாராவீர் என்றும் எடுத்துரைத்தேன்.

சமூகநீதி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய 50 விழுக்காடு, ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துக! கலப்பு மணத் தம்பதியர் பிள்ளைகட்கு தனி ஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்காக பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது, மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற தாமதித்தால் மாபெரும் கிளர்ச்சி நடத்துதல் போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

 கே.கே.விசுவநாதன்

மாநாட்டில் பங்கேற்றவர்கள் அய்யா நீதிபதி வேணுகோபால், மேற்கு வங்க அமைச்சர் மாண்புமிகு மண்டல், முன்னாள் குஜராத் ஆளுநர் கே.கே.விசுவநாதன், கேரளாவைச் சார்ந்த பிரதாப் சிங், பெரியார் சிந்தனை பட்டயச் சான்றிதழ் அளிப்பு விழாவில் கலந்துகொண்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாரிமுத்து, அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர் ராஜரத்தினம் தம்பதிகள், பெரியார் முதுபெரும் சுயமரியாதை வீரர் (நீலாவதி) ராமசுப்பிரமணியன், மாவீரன் நெடுமாறன், அவரது பொதுச் செயலர் எம்.கே.டி.சுப்பிரமணியம், இனமான இயக்குநர் குகநாதன் மற்றும் ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகத்தினர் அனைவரும் நமது கழகத்தின் மாநாடுகளில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் _ மலேசிய நாடுகளுக்கு கொள்கைப் பிரச்சாரப் பயணமாக 21.2.1989 அன்று இரவு புறப்பட்டுச் சென்றேன். மலேசிய_சிங்கப்பூர் நாடுகளில் தமிழக குடும்பங்களின் திருமணங்கள், பொது நிகழ்ச்சிகள், சிறப்புக் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்ள என்னுடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொறியாளர் சோ.ஞானசுந்தரம், மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம் ஆகியோரும் உடன் வந்தனர்.

சிங்கப்பூர் சென்று அடைந்த எங்களை விமான நிலையத்தில் சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் தி.நாகரத்தினம் குடும்பத்தினர்,   சந்திரன், பிரேமா சந்திரன், எஸ்.டி.மூர்த்தி, அவரின் மகன் மதியரசன், நமச்சிவாயம் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு எங்களை அன்புடன் வரவேற்றார்கள்.

ராமாயண எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றும் ராம்விலாஸ் பஸ்வான் உடன் ஆசிரியர் கி.வீரமணி

28.2.1989 முதல் 12.3.1989 வரை தொடர்ச்சியாக கழக நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து பங்கேற்று உரையாற்றினேன்.

கழகக் கொள்கையைப் பரப்பவும், பிரச்சாரம் செய்யவும் இந்தப் பயணம் அமைந்தது. 22.3.1989 அன்று தமிழகம் திரும்பினோம்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கிற்கு ஒன்பதாம் ஆண்டு விழா 30.3.1989 அன்று சிங்கப்பூர் நாட்டின் பிரபல தமிழ் நாளேடான ‘தமிழ் முரசு’ ஏட்டின் நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் புதல்வர் பலராமன் ‘தமிழ்முரசு’ ஏட்டின் ஆசிரியர் வி.திருநாவுக்கரசு, சிங்கப்பூர் சேவியர் டேவிட் ஆகியோர் திருச்சி மற்றும் தஞ்சாவூரிலுள்ள கழகக் கல்வி நிறுவன செயல்பாடுகளைக் கண்டு பெருமிதமடைந்தனர்.

திருச்சி, தஞ்சை வளாகத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இரு கல்வி வளாகங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் விழாவில் அனைவரும் பங்கேற்று, வளாகத்தில் நடைபெற்றுவரும் கல்வி நிறுவனங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

15.4.1989 அன்று காரைக்குடியில் அனைத்திந்திய ராமாயண எதிர்ப்பு மாநாடு என்.ஆர்.சாமி அவர்கள் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. ராமராஜ்யம் என்பது பார்ப்பன (மனு) ஆட்சியே! என்னும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

மாநாடு இரவு 8 மணி அளவில் காந்தி திடலில் நடைபெற்றது. மாநாட்டில் சாமி.திராவிடமணி (மாவட்ட தி.க. செயலாளர்)  வரவேற்புரை ஆற்ற, மாநாட்டின் தலைவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களும், முன்னிலை வழக்கறிஞர் சிவகங்கை இரா.சண்முநாதன் பி.ஏ.பி.எல்., மாநாட்டு திறப்பாளர் ராம்விலாஸ் பஸ்வான் (எம்.பி., பீகார், அகில இந்திய ஜனதா தளம் பொதுச் செயலாளர்), பெங்களூர் ‘தலித் வாய்ஸ்’ வி.டிராஜசேகர் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள்.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில், வர்ணாசிரமத்தையும், ஒழுக்கக்கேட்டையும் துரோகத்தினையும் மக்களுக்கு வழிவழியாகப் பரப்பிடும் மூடநம்பிக்கையின் தொகுப்பான ஆரியப் பார்ப்பன நூலாகிய இராமாயணத்தை வானொலி, தொலைக்காட்சி இவற்றில் தொடர்ந்து பரப்புவது, இந்திய அரசியல் சட்ட விரோதமான நடைமுறை என்பதால் அதை நிறுத்த வேண்டும் என டெல்லி அரசினை இம்மாநாடு வலியுறுத்தியது. மேலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளைய தலைமுறைக்கு ஜாதி முறை, மூடநம்பிக்கைகளைப் பரப்பிடும் இராமாயண சம்பந்தமான பாடங்களை வைக்கக் கூடாது என்று அரசுகளையும், பல்கலைக்கழகங்களையும் இம்மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், அகில இந்திய ஜனதாதளம் பொதுச்செயலாளர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் பெங்களூர் ‘தலித் வாய்ஸ்’ ஆசிரியர் வி.டி.ராஜசேகர் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாட்டில் நான் நிறைவுரை ஆற்றினேன்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *