முகப்புக் கட்டுரை : இந்தியா எங்கும் எழுச்சிக்கு வித்திட்ட திராவிடர் கழக பவள விழா மாநாடு!

செப்டம்பர் 1-15 2019

முழக்கங்கள் – முடிவுகள் – விடிவுகள்!

 மஞ்சை வசந்தன்

 சேலத்தில் 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சி, திராவிடர் கழகமாகப்  பெயர் மாற்றம் செய்யப்பெற்றது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அம்மாநாட்டில் பங்குபெற்ற சுயமரியாதை வீரர்கள் சிலர், பவள விழா மாநாட்டிலும் கலந்து கொண்டதும், 1944இல் சேலம் மாநாட்டில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தலைவராக, 86 வயது நிறைந்த முதுபெரும் தலைவராக _ தமிழகத்தின் மூத்த தலைவராக இம்மாநாட்டில் இந்தியாவுக்கே எழுச்சியை ஏற்படுத்தும் முழக்கம் இட்டதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

சேலம் மாநகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் புடைசூழ்ந்து, “தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க’’ என முழக்கமிட, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

திராவிடர் கழக பவளவிழா  மாநாடு  27.8.2019 அன்று சேலம் அம்மாப்பேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில், எடப்பாடி இராமன் நினைவு முகப்பில், அன்னை மணியம்மையார்  நினைவரங்கத்தில் காலை 8:30 மணிக்கு, கலைமாமணி டாக்டர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின்  பகுத்தறிவு இசை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிடன் தொடங்கியது.

இசை நிகழ்ச்சியில், பா.மணியம்மை, புதுவை குமார் பாடிய பகுத்தறிவுப் பாடல்கள் அந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பழநி.புள்ளையண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தோழர்கள் முழங்க, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கழகக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டினை  திறந்து வைத்து உரையாற்றினார். 1944ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு உள்ளிட்ட பல்வேறு கழகச் செயல்பாடுகளில் தம் பங்களிப்பு குறித்தும், கழகத்தின் மாநில மாநாடுகள், மாநாட்டுப் பேரணிகள் பற்றியும்  பெருமிதத்துடன் கூறினார். தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு திறந்து வைத்து உரையாற்றினார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல்  திறந்துவைத்தார்.

தமிழர் தலைவர் வருகை

கழகக் குடும்பத்தலைவர்  தமிழர் தலைவர்  முகத்தில் புன்னகை தவழ, கழகக் கொடியேந்தியபடி கழகக் குடும்பத்தினரிடம்  நலம் விசாரித்து அனைவரையும் வரவேற்றார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் காலத்தின் கட்டாயமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி ஏற்றனர்.

மாநாட்டின் துவக்கமாக ஆசிரியர் கொடியுடன் வந்தார். நூற்றண்டு விழா காணும் அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்தார் உடன் கே.எஸ்.அழகிரி, இரா.முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா, சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் 

 மாநாட்டுத் தலைவர் – கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று திராவிடர் கழகத்துடன் சேலம் மாநகர் கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார்.

சமூக நீதித் தடத்தில் கழகம் கண்ட களங்களை விளக்கிப் பேசினார்.

திராவிடர் கழக வரலாறு நூல் வெளியீடு

“திராவிடர் கழக வரலாறு’’ நூலை வெளியிட்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அரிய உரையாற்றினார்.

தலைவர்கள் உரை

தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தரங்கில் உரையாற்றினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் – தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

கருத்தரங்கம்

‘பவள விழாக் காணும் திராவிடர் கழகம்’ எனும் கருத்தரங்கிற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். 1925ஆம் ஆண்டு இந்திய அரசியலில் முக்கியமான ஆண்டு என்று தொடங்கி திராவிடர் கழகம் தொடக்கம், கறுப்புச் சட்டைப் படை உருவாக்கம், கழகக்கொடி உருவாக்கம், சமூக நீதிப் போராட்டம், ராமன் பட எரிப்பு, இராவண லீலா என்று பல்வேறு தகவல்களை விரைவாகப் பதிவு செய்தார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து ‘வெள்ளி விழா 1944_1969’ எனும் தலைப்பில்  கருப்புச்சட்டை மாநாடு, இந்திய விடுதலை நாள், காந்தியார் மறைவு, கருப்புக்கொடி காட்டும் போராட்டம், குடியரசு தினம் குறித்து பெரியாரின் கருத்து, இட ஒதுக்கீட்டுக்காக பெரியார் நடத்திய போராட்டம், அரசியலமைப்பு முதல் சட்டத்திருத்தம், குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு பற்றி மிகச் சிறப்பாகக் கருத்துரை வழங்கினார்.

திராவிடர் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் ‘பொன்விழா 1969 _- 1994’ எனும் தலைப்பில் வரலாற்றுச் செய்திகளை ‘கணீர்’ என்று முழங்கினார். தந்தை பெரியார் _  மணியம்மையார் _- ஆசிரியர் வீரமணி முப்பெரும் தலைமை கண்ட காலம் தான் 1969 _ 1994 என்று குறிப்பிட்டார். கழகம் நிகழ்த்திய சமூகநீதிச் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘பவள விழா 1994 _-2019’ எனும் தலைப்பில் செய்திகளை _- கருத்துகளை வாரி வழங்கினார். தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் உயிருக்குக் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களைப் பட்டியலிட்டார். 

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுரை ஆற்றினார். வரலாறு படைக்கும் நிகழ்வு என்று நெகிழ்ந்த தலைவர் அவர்கள் 1944ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டை நினைவு கூர்ந்தார். பெரியார் இல்லை, மணியம்மையார் இல்லை; ஆனால் இயக்கம் இருக்கிறது. காரணம் நானில்லை; கொள்கைக் குடும்பங்கள் நீங்களே என்று தோழர்களைப் பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் சந்தித்த அவமானங்களை எடுத்துரைத்தார். பெரியாருக்கு வாய்த்த எதிரிகள் நாணயமானவர்கள், நமக்கு வாய்த்த எதிரிகள் சூழ்ச்சிக்காரர்கள் என்பதைப் புலப்படுத்தினார். கொள்கைக்காக சர்வபரித்தி யாகம் செய்ய தயாராக வேண்டும். பல தளங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

தோழர்களை தோள்மீது தூக்கி உலகிற்குக் காட்டிய தலைவர் பெரியார். தமிழர் என்பது மொழிப் பெயர்; திராவிடர் என்பது இனப்பெயர் என்று விளக்கம் அளித்தார் பெரியார். திராவிடர் என்பது பண்பாட்டு அடையாளம். திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக் காரணத்தை அழகுற விளக்கினார். பெரியாரின் கூற்றுகளையே மேற்கோள் காட்டினார். அரசியல் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தாது. பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் பணியைச் செய்யும். ஆரியம்தான் எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறது. ஆரியத்தையே ஏமாற்றியவர் அண்ணா. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியினை சேலத்தில் நடைபெற்ற ராமன் பிரச்சினையை, வரலாற்றை நினைவு கூர்ந்தார். லட்சியப் பயணம் தொடரும், எதிர்நீச்சல் தொடரும் ஜாதியை ஒழிப்போம்; புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார் முத்தாய்ப்பாக.

மாநாட்டுப் பேரணி

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் அ.சுரேசு,  திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திராவிடர் தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர் நா.இராமகிருஷ்ணன், சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக செயலாளர் கவிஞர் பா.திவ்யபாரதி முன்னிலையில் பேரணி தொடங்கியது.

மாநாட்டில் கலந்து கொண்டு ஆசிரியரின் உரையை கேட்கும் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள்.

 ஊர்வலப் பாதை

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம், தந்தை பெரியார் சிலை, திருவள்ளுவர் சாலை, குண்டுபோடும் சாலை வழியே மாநாடு நடைபெற்ற கோட்டை மைதானத்தை பேரணி அடைந்தது.

எழுச்சிப் பேரணியைப் பார்வையிட்டார்  தமிழர் தலைவர்

பேரணியில் திண்டுக்கல் எம்.சி.பட்டி க.பெருமாள் தப்பாட்டக் குழுவினரின் பறையொலி முழக்கம் முதலிலும், ‘திராவிடர் கழக பவள விழா மாநாடு எழுச்சிப் பேரணி‘ பதாகையைத் தாங்கி, எழுச்சி முழக்கமிட்டபடி திராவிடர் கழக மகளிர் தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர். பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர். கழக மாவட்டங்களின் பெயர் தாங்கிய பதாகைகளுடன் கட்டுப்பாட்டுடன் தோழர்கள் முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர்.

திருவள்ளுவர் சிலை அருகில் மாநாட்டின் எழுச்சிப் பேரணியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார்.

தஞ்சை, தாம்பரம், பட்டுக்கோட்டை, ஆவடி, தென்சென்னை, வடசென்னை, தாராபுரம், சிதம்பரம், கடலூர், திண்டிவனம், காரைக்குடி, கிருட்டினகிரி, கோவை, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, குடந்தை, திருச்சி, கோபி, ஈரோடு கழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அணி அணியாக பேரணியில் பங்கேற்றனர். திராவிடர் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் பதாகை ஏந்தி முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் பவளவிழாவைத் தங்கள் குடும்ப விழாவாக எண்ணி, நம் இனத்தின் உரிமைகளைக் காக்கும் போர்ப்பரணி பாடும் பேரணி தங்களுக்கானது, எதிர்காலத் தலைமுறைக்குரியது என்பதை சேலம்வாழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதை அவர்களின் ஆர்வமிக்க செயல்கள் எடுத்துக் காட்டின.

ஊர்வலத்தில் எழுச்சி முழக்கமிட்ட மகளிர், பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள், தோழர்களைக் கண்ட பொதுமக்கள் குண்டு போடும் சாலை உள்ளிட்ட ஊர்வலப் பாதைகளிலிருந்த வீடுகளிலிருந்து தாமாகவே குடிநீர் குவளைகளுடன் முன்வந்து குடிநீரை தோழர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள்.

பேரணி கோட்டை மைதானத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை அடைந்தது.  சேலம் கோட்டை மைதானத்தில் மாநாட்டு நிறைவு விழா. கண்கவர் பந்தல், வெண்பட்டு  விதானம், வெள்ளை ஒளி உமிழ்ந்த ஹாலோஜன் விளக்குகள், மைதானம் முழுவதும் இருக்கைகள். இருக்கைகளில் தோழர்கள் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து நிற்க, விழா களைகட்டியது.

தந்தை பெரியார் சமூக காப்பணியின் அணிவகுப்பு

மரியாதையை ஏற்கும் தமிழர் தலைவர்.

 வீதி நாடகம்

மாலை 5:30 மணியளவில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்குநத்தம் சித்தார்த்தன் -_ வீதி நாடக அமைப்பாளர் பெரியார் நேசன் _செய்துரை மதியழகன் குழுவினரின் ‘ஈரோட்டு பூகம்பம்’ வீதி நாடகம் சிறப்புடன் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாகப் பெற்ற பெயர் மாற்றத்தினையும், பெரியார், மணியம்மையார், ஆசிரியர் தலைமையில் இயக்கம் போட்ட எதிர் நீச் சல்களையும், திராவிடர் கழகத்தின் சாதனைகளையும், 1929ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதலாவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டங்களாக வடிவம் பெற்றதையும் தொகுத்துரைத்தார். திராவிடர் கழகத்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது முதலாவது சட்ட திருத்தம், 76ஆவது சட்டத்திருத்தம், 93ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டதை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.

தலைவர்கள் உரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றும் போது, தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழகத்தின் முகத்தோற்றம் மாறி இருக்கும் என்றார். பெரியாருக்குப் பின்னால் பகுத்தறிவுச் சுடரை அணையாமல் காத்த பெருமை தமிழர் தலைவரைச் சாரும் என்றார். இட ஒதுக்கீடு உரிமையை முழங்கினார். பெரியார் -_ ஜீவா _- சிங்காரவேலர் இணைந்து பணியாற்றிய காலத்தைக் கண்முன்னே கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட் கொள்கைப் பிரகடனத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தந்தை பெரியாரின் அருஞ்சாதனையைக் கொண்டாடி மகிழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தம், ஆண் – பெண் சம உரிமை, வர்ணாசிரம தர்ம எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு. எழுத்துச் சீர்திருத்தம் என்று பெரியாரின் பெருஞ்சாதனைகளைப் பட்டியலிட்டார். மார்க்சிஸ்ட்டும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பூரிப்புடன் வெளிப்படுத்தினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கேரள மாநிலம் நிறைவேற்றி இருப்பதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

மதிமுக அவை தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் துரைசாமி அவர்கள் உரை நிகழ்த்தும் போது 75 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய ஜாதிக் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டினார். அண்ணாவின் சாதனைகளை அடுக்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் தம் உரையில், தமிழ்நாடு தனித்துவமாக விளங்க பெரியாரே அடிப்படை என்றும், ஜாதி ஒழிப்புக் குரல், சமஸ்கிருத எதிர்ப்புக் குரல், இந்துத்துவ எதிர்ப்புக்குரல், நீட் வேண்டாம் எதிர்ப்புக்குரல் எல்லாவற்றிற்கும் வேர் பெரியாரே என்றார். ஜாதிக் கொடுமையை 75 ஆண்டுகளில் துடைத்தெறிந்து விட முடியாது. திராவிடர் கழகம் இல்லாமலிருந்தால் மான உணர்ச்சிமிக்க திருமாவளவன் இல்லை என்று முழங்கினார். ஆதிக்கத்தை ஒழிக்க வந்தவர் பெரியார். ஜாதி வெறுப்பு அரசியலை அவர் வளர்க்கவில்லை. சமுகநீதிதான் கோட்பாடு. அதை நடைமுறைப்படுத்த கையாண்ட போர்த் தந்திரம் _ கடவுள் மறுப்பு.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் உரையாற்றும் போது, பெரியார் இறைமறுப்பாளர். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் பெரியாரை மறுப்பதில்லை என்றார். இட ஒதுக்கீட்டிற்கு முன்னோடி முஸ்லிம்லீக் என்றார்.

தமிழர் தலைவர் தலைமையுரை

தளபதி மு.க.ஸ்டாலினை நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழாரம் சூட்டினார். இயக்கத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. தொண்டறச் செம்மல்களுக்கு வீரவணக்கம் என்று தமிழர் தலைவர் உரையைத் தொடங்கினார். திராவிடர் கழகமும், திமுகழகமும் அண்ணா சொன்னதைப் போல இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார். மாநாட்டுக் கூட்டத்தை கருங்கடல் என்று வருணித்தார். சுயமரியாதை இயக்கம் தொடங்கக் காரணம் சமூகநீதிதான். பெரியார் இல்லாதபோதும் சமூகநீதி தத்துவம் வென்றிருக்கிறது. 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டம் முதல் திருத்தம் நடைபெறுவதற்கும், 76ஆவது திருத்தம் செய்யப்படுவதற்கும், 93ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும் திராவிடர் கழகமே காரணம் என்பதை தெளிவுபடுத்தினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீடு பற்றி விவாதம் செய்ய வேண்டுமென்று கூறியது சூழ்ச்சி என்று உணர்த்தினார்.

அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து மனுதருமச் சட்டத்தைக் கொண்டுவர இந்த ஆட்சி துடிக்கிறது. மனு தர்மத்திற்கும் – சம தர்மத்திற்கும் போராட்டம். கோல்வாக்கரின் சிந்தனையை ஞானகங்கை நூல் கொண்டு நிறுவினார். தந்தை பெரியாரின் உரையினை எழுச்சியாக எடுத்துரைத்து லட்சிய வாழ்வு வாழ்வோம் என்று முத்தாய்ப்பாக தலைமையுரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

 

 

மகளிரணியின் எழுச்சிப் பேரணி மற்றும் தப்பாட்டக் குழுவினரின் நிகழ்ச்சி

இனமான பேராசிரியர் வாழ்த்துச் செய்தி

 

 

திராவிடர் கழகப் பவளவிழா மாநாடு – 75 ஆண்டுகளுக்கு முன் எந்த மாங்கனி நாட்டில் – சேலம் மண்ணில் கூடினோமோ அங்கேயே நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிகிறது.

75 ஆண்டுகள் என்பது ஒரு இயக்க வரலாற்றில் சாதாரணமல்ல. தலைமைகள் மாறியும் தத்துவங்கள் மாறாத, கொள்கைகள் குறைவுபடாத இயக்கம் பவளவிழா கொண்டாடுவது பாராட்டிப் போற்றி மகிழ  வேண்டிய ஒன்று.

நினைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் கல்லூரிக் காளை என்னை வரலாற்றுப் புகழ் மிக்க, திராவிடர் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய மாநாட்டில் ஆங்கில மொழி வித்தகர் ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்பிரமணியம் அவர்களின்  உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மேடையிலேயே மொழி பெயர்க்கும் பேறு பெற்றதை, இன்றும் அதைக் குறித்து பேசுவதை குறித்துக் கேட்கையில் பெருமிதமும், பேருவுவகையும் அடைகிறேன்.

மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கம் உரு வாக்கிய சாதனை மகுடங்கள் எண்ணிலடங்கா.

இந்த மாநாட்டில் பங்குபெறும் வாய்ப்பில் லையே என்று ஏங்குகிறேன்.

உடல் நலிவு என்னை இங்கே கட்டிப் போட்டாலும் என் மனம், சிந்தை நினைவு எல்லாம் இப்பவள விழா மாநாட்டின்பால் இருக்கும்.

மாநாட்டை சீரும் சிறப்புமாக ஏற்பாடு செய்த அன்பு இளவல் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகிய இவர்களுடன் உடனிருந்து தொண்டாற்றும் அன்பு இதயங்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த இயக்கம் சாதித்துள்ள சாதனைக் குவியல்களை எந்தக் கொம்பனாலும் அழிக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ இயலாது என்பது கல்லில் வடித்த உண்மை. மாநாடு வெற்றி பெற நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்!

இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

மாநாட்டில் நிறைவுரையாற்றும் தி.மு.க கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்,

தமிழர் தலைவர் மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் காட்சி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்தினார்கள். தாய்க்கழகத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்றார். தமிழர் தலைவரின் உழைப்பை, செயல்பாட்டை வியந்து உரைத்தார். 90 வயதில் தந்தை பெரியார் எழுதிய உடல் நலம் குறித்து வடித்த சொல்லோவியத்தைப் படித்தார். அதன் பின் பெரியார் நடத்திய பிரச்சாரம் வேகத்தை புள்ளிவிவரம் மூலம் வெளிப்படுத்தினார். நியுயார்க் நகரிலிருந்து தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய அற்புதக் கடிதத்தை கூட்டத்திற்குத் தெரியப்படுத்தினார். திராவிட இயக்கம் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டார். கூட்டம் ஆரவாரித்தது. பெரியாரும், அண்ணாவும் பிரிந்தாலும் ஒரே கொள்கையைப் பேசினார்கள். ஒரு மரத்துக்கனிகள், ஒரு தாய் மக்கள். எல்லா இயக்கத்திற்கும் பொதுவானவர் பெரியார். ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தால் தட்டிக் கேட்போம். அதனை தேசவிரோதம் என்பதா? என்று வினா எழுப்பினார். தந்தை பெரியாரின் பயணத்தைத் தொடர்வோம் என்றார்.

அவர் எழுதுகிறார்,

“எனக்கு வயது 90.

உடல் நிலை மிகவும் மோசம்.

கைகால் நடுக்கம் அதிகம்.

சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது அவ்வளவு வலி.

தூக்கம் சரியாய் வருவது இல்லை.

நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டு, சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது.

உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவ தில்லை.

முன் போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை.

எந்தக் காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும், ஏப்பம் வந்தபிறகு குறைவதுமாக இருக்கிறது.

என்று 1968ஆ-ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் இதை எழுதியிருக்கிறார்.

மாநாட்டுக்கு வருகை தந்த கழகத்தினர் மற்றும் மக்கள் திரளில் ஒரு பகுதி

இதற்குப் பிறகுதான், தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள். கூட்டம் பேசினார்கள்; மாநாடு நடத்தினார்கள்; போராட்டங்கள், மறியல்கள் என பலவற்றை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

இன்னொரு குறிப்பைச் சொல்லுகின்றேன், 90 வயதில், 141 நாள்கள் அலைந்து 180 இடங்களில் பேசினார்கள். 91 வயதில், 131 நாள்கள் அலைந்து 150 இடங்களில் பேசினார்கள்; 92 வயதில் 175 நாள்கள் அலைந்து 244 இடங்களில் பேசினார்கள்; 93 வயதில் 183 நாள்கள் அலைந்து 249 இடங்களில் பேசினார்கள்; 94 வயதில் 177 நாள்கள் அலைந்து 277 இடங்களில் பேசினார்கள்; 95 வயதில் அவர் வாழ்ந்த நாள்கள் 98; அதில் பயணம் செய்த நாள்கள் 35 அவர் பேசிய கூட்டங்கள் 42.

உலகில் இப்படி ஒரு தலைவன் எந்த இனத்திற்கும் எந்த நாட்டிற்கும் கிடைத்தது கிடையாது!

இடஒதுக்கீடு என்னும் சமூகநீதியை -_ உரிமையை நாம் பெற்றோம்.

தமிழகத்தில் மட்டுமா? இந்திய அளவிலும் நாம் நிலைநிறுத்திக் காட்டி இருக்கின்றோமா இல்லையா? அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டை நிலை நாட்டினோம். மண்டல் ஆணையத்தை அமல்படுத்த வைத்தோம். சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறோம்.

ஏன், நம்முடைய தாய்நாடு தமிழ்நாட்டிற்கு, ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்து இருக்கின்றோமே!

இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கினோம். இந்தித் திணிப்பிற்கு தடை எழுப்பினோம். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தந்தோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கொண்டு வந்தோம்.

மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வீரவாள் கொடுத்து மகிழும் காட்சி

அருந்ததியின மக்கள், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் போன்றவர்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தோம். மாநில சுயாட்சிக் கொள்கையை வார்த்தெடுத்தோம். தமிழுக்காக வாதாடினோம்; தமிழர்களுக்காக வாதாடினோம், தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றோம் என்றால், இதற்கெல்லாம் காரணம், தந்தை பெரியார்- _அறிஞர் அண்ணா _- தலைவர் கலைஞர் அவர்களால் உருவானது, இதை மறந்து விடக் கூடாது.

தலை நிமிர்ந்து சொல்கின்றேன், திராவிடர் கழகத்தின் சாதனைகள்தாம் இவை!

எனவே, அப்படிப்பட்ட சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொல்வதற்காக பெருவிழா நடத்திய இடம் தானே இந்த சேலம்!

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். எனவே, பொதுவுடைமை இயக்கத்திற்கும் அவர்தான் வழிகாட்டி!

அண்ணல் அம்பேத்கரின் புத்தகத்தை (‘‘ஜாதியை ஒழிக்கும் வழி’’) வெளியிட்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள். தலித் இயக்கத்திற்கும் தூணாக இருந்திருக்கின்றார் தந்தை பெரியார் அவர்கள்!

எனவே, எல்லா இயக்கத்திற்கும் பொதுவானவர் தந்தை பெரியார் அவர்கள்! அதனால்தான் யாராலும் அவரை வீழ்த்த முடியவில்லை; வீழ்த்தவும் முடியாது!!

திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள் எல்லோரும் வீழ்ந்து போயிருக்கின்றார்களே தவிர, இந்த இயக்கம் அழிந்ததாக வரலாறு உண்டா?

திராவிட இயக்கம் என்பது முன்பைவிட இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட இயக்கம் எப்போது உருவானதோ, அப்போது திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று சொல்லக் கூடியவர்கள் உருவாகி விட்டார்கள். அதனால்தான் இன்றும்கூட திராவிட இயக்கத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியை நம்முடைய எதிரிகள் இன்னும் விடவில்லை.

நம்மைப் பார்த்து தேச விரோதிகள் என்று சிலர் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள்தான் நாட்டைப் பிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாவட்டத்தையும் பிரித்துக் கொண்டிருக் கின்றார்கள். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

சர்வாதிகாரத்தை எதிர்த்தாலே, தேசவிரோதிகளா?

நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் ஏஜென்டுகள்! மக்களுடைய ஏஜென்டுகள்!

ஒட்டுமொத்தமாகச் சொல்கின்றேன், தமிழ்நாட்டினுடைய – தமிழ் மக்களுடைய ஏஜென்டுகள் நாங்கள்!! தமிழ்நாட்டிற்கு எங்கு ஆபத்து அச்சுறுத்தல் வந்தாலும் அதை முதலில் தட்டிக் கேட்போம். எப்படிப்பட்ட அடக்குமுறைகள் – என்ன கொடுமைகள் – எது வந்தாலும் அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு தாங்கிக் கொண்டு, அதை முறியடிப்பதுதான் நம்முடைய முதல் வேலை என்கிற உறுதியோடு நாம் நம்முடைய கடமையை ஆற்றுவோம்.

காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி சொன்னார்களே, காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற 14 கட்சிகளோடு இணைந்து டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதை வைத்துக் கொண்டு மத்தியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி தமிழகத்தைப் பழி வாங்குவதா?

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை கொடுக்காமல் தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கு நீட் தேர்வை கொண்டு வந்து மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. விவசாயத்தை அழிக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டு வந்து பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கெல்லாம் இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சி அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தின் குரல்வளை எங்கு நெரிக்கப்பட்டாலும், குரல் கொடுப்பதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள் இந்தத் திராவிடர் கழகத்தை துவங்கி வைத்திருக்கிறார்கள்!

இந்தியாவின் பொருளாதாரம் இன்றைக்கு அதல பாதாளத்தில் போய்க் கொண்டிருப்பதை, இந்தியாவில் இருக்கும் சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்; உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியப் பொருளாதாரம் இன்றைக்கு சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது என்று, ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் அவர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

தொழில் நெருக்கடி காரணமாக பின்னலாடை நிறுவனங்களில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பிஸ்கட் தொழிலில் கடந்த 90 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு நிறுவனம் தன்னுடைய 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பப் போவதாக சொல்லி இருக்கிறது.

இவை அனைத்தையும் மறைப்பதற் காகத்தான் இன்றைக்கு காஷ்மீர் என்ற ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர் தலைவர் ஆணைகளை ஏற்று – இணைந்து செயல்படுவோம்

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, தலைவர் கலைஞர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார், “தந்தை பெரியார் மறைந்தார் _- இறந்தார் என்று சொல்லாமல், தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார் என்றுதான் எழுத வேண்டும்’’ என்றார்.

இதோடு தலைவர் கலைஞர் அவர்கள் அந்த அறிக்கையை முடிக்கவில்லை, மறுபடியும் சொல்கின்றார், என்ன சொல்கின்றார் என்றால், ‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். அதை நாம் தொடர்வோம்’,  என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்வோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளக்கூடிய மாநாடாக இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

எனவே, திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் சொன்னார், ‘‘நாங்கள் துவங்கி இருக்கிறோம்; நீங்கள் முடித்து வைக்க வேண்டும்’’ என்று. முடித்து வைப்பதற்காக மட்டுமல்ல; உங்களுடன் இணைந்து _- பிணைந்து உங்களுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் பக்கபலமாக இருந்து ஒன்றுசேர்ந்து போராட, உரிமையை நிலைநாட்ட உறுதி எடுப்போம், உறுதி எடுப்போம் என்கிற உறுதிமொழியோடு, நான் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!!” என்று முழங்கினார்.

இறுதியில் சிந்தாமணியூர் கவிஞர் சி.சுப்பிரமணியன் நன்றிகூற, மாநாடு 10 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் நிறைவுற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *