ஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்!

ஆகஸ்ட் 16-31 2019

கே:       கர்நாடகா ஆட்சி கலைப்பு, கவிழ்ப்பு, ஒரே நாடு, ஒரே கார்டு, தேசிய கல்வி இந்தத் திட்டத்திற்கு தென்னிந்தியாவில் பி.ஜே.பி.யின் முதல் ‘பலிகடா’ கர்நாடகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பற்றி தங்களின் கருத்து?

                – பெ.கூத்தன், சிங்கிபுரம்

ப:           மீண்டும் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் என்னவெல்லாம் நடைபெறும் என்று நாம் தேர்தலின்போது எச்சரித்தோமோ அவை ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுகிறது! திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அமலாகி அரங்கேறுகின்றன.

கே:       பயிற்சிப் பட்டறையில் தனிமனித ஒழுக்கம் என்கிற தனி வகுப்பினைச் சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையினைப் பரிசீலிப்பீர்களா?

                – இரண்யா, சென்னை

ப:           இயக்கத்தின் அடிப்படையே அதுதான். அதற்கென தனி வகுப்பு தேவையேயில்லை. இல்லாமலேயே எல்லா தோழரும் உணர்ந்து நடப்பவர்களே!

கே:       ஜாதியை ஒழிக்க, தற்போதைய திராவிட இளைஞர்களாகிய நாங்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

                – கு.அரவிந்த், காஞ்சிபுரம்

ப:           ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், அறப் போராட்டம் _ ஜாதி மறுப்புத் திருமணம் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபடலாம்!

கே:       தங்களைச் ஷத்திரியர் என்று கூறிக் கொள்பவர்கள், மனுதர்மம் _ இந்துச் சட்டப்படி சூத்திரர்களே என்பதற்கு சட்டபூர்வ ஆதாரம் கூறுவீர்களா?

                – விஜய், சோழங்குறிச்சி

ப:           லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளே _ பல ஜாதியினர் வழக்கில் _ ஷத்திரியர் தாங்கள் என்னும் வாதங்களை ஏற்காமல் சூத்திரர்களே என்று பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளனவே!

கே:       மத்திய பா.ஜ.க. அரசு, அவர்கள் இஷ்டம்போல அவர்களுக்குச் சாதகமான மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனரே? தடுக்க வழியில்லையா?

                – தேன்மொழி, திருவொற்றியூர்

ப:           பி.ஜ.பி. அணி புருட் மெஜாரிட்டி -_ ரோடு ரோலர் மெஜாரிட்டியாக வந்ததன் தவிர்க்க இயலாத விளைவுகள் இவைகள்!

கே:       திராவிடர் கழகத் தோழர்களின் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

                – சி.எ.பிரகாசு, காஞ்சிபுரம் மாவட்டம்

ப:           அறிவோடும், ஒழுக்கத்தோடும், சுயமரியாதை உணர்வோடும், அடக்கத்தோடும், எளிமையாக நடந்துகொள்ள வேண்டும்!

கே:       பசுமாடே தனக்கு வேண்டாத கழிவாக வெளியேற்றும் மூத்திரத்திற்கு மருத்துவ மகத்துவம் கூறுவது முட்டாள்தனம் அல்லவா? என்னும் மருத்துவர் ஷாலினியின் கேள்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

                – மகிழ், சென்னை-4

ப:           மருத்துவர் ஷாலினியின் கூர்மையான கருத்துகள் எப்போதும் மூடத்தனத்தைக் குத்திக் கிழித்து உருட்டி, கீழே தள்ளும். எனவே, பகுத்தறிவு பூர்வமானது ஆகும்!

கே:       காஷ்மீரின் தனித்தகுதி 370ஆவது பிரிவு விலக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

                – காசிராஜன், திருத்தணி

ப:           பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது _ அரசியல் சட்டத்தை இப்படி உடைத்ததன்மூலம்! இதன் பாரதூர விளைவுகள் உலக நாடுகள் அய்.நா. உள்பட பொறுத்திருந்து பார்க்க வேண்டியது. கலாச்சாரப் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *