ஈரோடு அறிவுக்கன்பன்
திருவிழாக்களில் பல வகை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மதுரை சித்திரை திருவிழா’, அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘ஆயிரம் காளித் திருவிழா’, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாமகம்’ என்று பல விழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுது காஞ்சிபுரத்தில் நடைபெறுவது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘அத்திவரதர் திருவிழா’. அனந்தசரசு என்னும் குளத்தில் துயில் கொண்டிருந்த அத்திவரதர் எழுந்தருளி காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில் அடியார்களுக்குக் காட்சியளிக்கும் விழாதான் ‘அத்திவரதர் விழா’.
முகலாய முற்றுகையால் துன்பத்திற்கு உள்ளானது காஞ்சி. கி.பி.1687 முதல் 1711 வரை காஞ்சியில் பெருங்குழப்பங்கள் நிகழ்ந்தன. அவுரங்கசீப்பின் படையெடுப்பால் காஞ்சிபுரம் பெரும் தீங்குக்குள்ளானது. முகலாயர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பலரும் காஞ்சிக்கு உரிமை கொண்டாடினர். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில்தான் காஞ்சி சங்கராச்சாரியராக அப்போதிருந்த திருடோதேந்த்ர சங்கராச்சாரியார், ஏகாம்பரநாதர் _ பங்காரு காமாட்சி ஆகியோரின் சிலைகளுடன் அணைக்கரை வழியாக உடையார்பாளையம் சென்றார். அங்கு வந்த சிலைகள் மறைத்து வைக்கப்பட்டன. பின்னாளில் அந்தக் காமாட்சி சிலை தஞ்சையில் நிறுவப்பட்டது.
அதனை அடுத்து, காஞ்சி வரதராசப் பெருமாள் சிலையும் உடையார்பாளையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மறைத்து வைக்கப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்தே வரதராசப் பெருமாள் சிலை காஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து முகலாயர்களிடமிருந்து சிலையைக் காப்பாற்றும் பொருட்டு ஆதி அத்திவரதரைக் குளத்தினுள் போட்டு விட்டனர். சிலையை எங்கு போட்டோம் என்று சொல்லாமலேயே அவர்கள் மறைந்துவிட்டனர். சிலை கிடைக்காமல் போகவே மற்றொரு சிலையை பழையசீவரம் மலையிலிருந்து கொண்டு வந்தனர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கழிந்த பின்னர், வறட்சியால் தண்ணீர் வற்றிய குளத்திலிருந்து பழைய சிலையைக் கண்டெடுத்து நாற்பது நாள்கள் அவரை வெளியே வைத்து வழிபடும் வழக்கம் உண்டானது.
இக்கால கட்டத்தில்தான் சிதம்பரம் நடராசர் சிலை குடுமியான்மலையில் மறைத்து வைக்கப்பட்டது.
பார்ப்பனர்களின் புருடா என்னவென்றால், இந்த அத்திவரதரைக் கிருதா ஊழியில் பிரம்மா வழிபட்டாராம். திரேதா ஊழியில் கசேந்திரன் என்னும் யானை வழி பட்டதாம். துவாபர ஊழியில் தேவர்களின் ஆசிரியரான(குரு) பிரகசுபதி வழி பட்டாராம். தற்போது கலி ஊழியில் வரதராசப் பெருமாளை அனந்தாழ்வானாகிய ஆதிசேடன் வழிபடுகிறானாம். இது பார்ப்பனர்களின் ‘புருடா’.
நம் வினா என்னவென்றால், இத்தகைய ஆற்றல் மிக்க வரதராசப் பெருமாள் முகலாயர்கள் படையெடுப்பைக் கண்டு அஞ்சி ஏன் உடையார்பாளையத்தில் போய் ஒளிந்து கொண்டார்? முகலாயர்களை எதிர்த்து ஏன் போர் புரியவில்லை? அவர்களை ஏன் விரட்டியடிக்கவில்லை? அவர்களை ஏன் கொன்று குவிக்கவில்லை? காஞ்சி சங்கராச்சாரி என்று பார்ப்பனர் ஏகாம்பரநாதர் மற்றும் பங்காரு காமாட்சியம்மன் சிலைகளைக் கொண்டு போய் உடையார்பாளையத்தில் ஏன் ஒளித்து வைத்தார்? மற்ற பார்ப்பனர்கள் வரதராசப் பெருமாள் சிலையைக் கொண்டு போய் உடையார்பாளையத்திலேயே ஏன் ஒளித்து வைத்தனர். பார்ப்பனர்கள் அவர்களுடைய கடவுள்களை எல்லாம், ‘எல்லாம் வல்லவர்’ என்று ஏற்றமுடன் செப்புகின்றனர். அது முழுக்க முழுக்கப் பொய்தானே? எல்லாம் வல்ல கடவுளை ஏன் குளத்திற்குள் போட்டு மறைத்து வைத்தனர்? முகலாயப் படை மறவர்கள் வந்தால் கோயிலுக்குள் நுழைந்து சிலைகளையெல்லாம் அடித்து நொறுக்கி விடுவார்கள் என்கிற அச்சத்தால்தான் அவர்கள் சிலைகளை மறைத்து வைத்தனர் என்பது வெள்ளிடை மலையல்லவா? அத்தகைய ஆற்றலற்ற வெறும் கற்சிலைகளை வைத்துக்கொண்டு விழாக் கொண்டாடி மக்களை ஏமாற்றுகின்றனர் பார்ப்பனர்கள். மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றிப் பகல் கொள்ளையடிக்கின்றனர் பார்ப்பனர்கள். நம்முடைய செம்மறி ஆட்டுக் கூட்டமும் அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளியிருக்கிறார் என்று கூறிக்கொண்டு காஞ்சியில் போய் இலட்சக்கணக்கில் குவிகின்றனர்.
18.7.2019இல் நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்துவிட்டனர். இந்த வரதராசப் பெருமாள் அவர்களை ஏன் காப்பாற்றவில்லை?
சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் என்று பார்ப்பனர், கூலிப்படையினரை ஏவி சங்கராமன் என்கிற பார்ப்பனரைக் காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலுக்குள் வைத்தே கொலை செய்துவிட்டார். அந்தக் கொலையை வரதராசப் பெருமாள் ஏன் தடுக்கவில்லை? தன்னுடைய கோயிலுக்குள் நடந்த கொலையையே அவரால் தடுக்க முடியவில்லை என்றால் அவரை எப்படிக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வது? இதெல்லாம் பார்ப்பனர்கள் செய்யும் வஞ்சகச் செயல் (பித்தலாட்டம்). இதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.