மாதுளம் பழத்தோல்
மாதுளம் பழ ஓடுகளை நன்கு காயவைத்து இடித்து மிக்சியில் அரைத்து சலித்து வைத்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்போது 1 தேக்கரண்டி (Teaspoon) பொடியை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் உடனே சரியாகும்.
வாழைப் பழத்தோல்
வாழைப்பழத்தை உரித்த பின் கடினமான தோலுக்கு அடியில் பழத்தை ஒட்டி தோல் இருக்கும். இதில் உள்ள மெக்னீசியம் சத்து உடல் நலத்திற்கு உகந்தது. எனவே, வாழைப்பழத் தோலில் உட்பகுதியை பற்களால் சுரண்டி மென்று விழுங்க வேண்டும்.
ஆப்பிள் பழத்தோல்
சில பேர் ஆப்பிள் பழத் தோலை சீவி கீழே போட்டு விட்டுச் சாப்பிடுவார்கள். அப்படிச் சீவிய தோலை, ‘மிக்சியில்’ அரைத்து தயிர் பச்சடி, ரசம் போன்றவற்றில் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஆப்பிள் மீது மெழுகு பூசப்பட்டிருப்பின் கொதிநீரில் கழுவி அதைப் போக்கிய பின்பே பயன்படுத்த வேண்டும்.
வாழைக்காய்த் தோல்
வாழைக்காய் பஜ்ஜி செய்யும்போது கூடுமானவரை தோலுடன் சேர்த்தே போட வேண்டும். இதன் தோலையும் பொடியாக அரிந்து பருப்புடன் கூட்டு செய்து உண்டால் நல்ல நார்ச்சத்து கிடைக்கும்.
எலுமிச்சை பழத்தோல்
எலுமிச்சை பழங்களைப் பிழிந்த பின்பு அதன் தோலை தூக்கியெறிய வேண்டாம். உள்ளே உள்ள வெள்ளை நிறத் தோலை நீக்கிவிட்டு கடினமான, மஞ்சள் நிறத் தோலை நன்கு காயவைத்து ‘மிக்சியில்’ பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதை சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக அலமாரியில் போட்டு வைத்தால் ‘சில்வர் ஃபிஷ்’ எனப்படும் பூச்சிகள் வந்து புத்தகங்களைக் கடிக்காது. இந்தப் பொடியை பச்சைப்பயறு மாவுடன் கலந்து முகம், கைகால்களில் தடவ பளிச்சென்று இருக்கும். பருக்கள், கரும்புள்ளிகள் வராது. மேலை நாடுகளில் இதன் பொடியை ‘சாலட்’ போன்றவற்றில் தூவுவர்.
தர்பூசணித் தோல்
தர்பூசணிப் (சிவப்புப் பூசணி) பழம் கோடையில் நிறைய கிடைக்கும். அதை உள்ளே உள்ள பழத்தைத் தின்ற பின்பு மேலே உள்ள கடினமான ஓடு போன்ற தோலை பொடியாக அரிந்து பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து உண்டால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும். இதன் தோலையும் வற்றல் போட்டு வறுத்து உண்ணலாம்.
மாம்பழத் தோல்
மாங்காய்த் தோல் – மாம்பழத் தோல் ஆகியவற்றை நன்றாகக் கழுவிய பின் சாப்பிட்டால் வைட்டமின் ‘ஏ’ சத்து கிடைக்கும்.
பலாப் பழத் தோல்
பலாப்பழம் பிரித்து எடுத்த பிறகு அதில் சடைசடையாக இருக்கும் உள்தோல் பகுதியை, எடுத்து உப்பிட்டு அவித்து; காயவைத்து வறுத்துண்ண நல்ல மணமுள்ள நார்ச்சத்து அதிகமுள்ள சத்தான உணவாகும்.
மரவள்ளிக் கிழங்குத் தோல்
மரவள்ளிக் கிழங்கை மண் நீங்க உரித்தால் கிழங்கு ஒட்டிய பகுதியில் இளஞ்சிவப்பு நிற வழவழப்பான தோல் இருக்கும். அந்தத் தோலை அப்படியே பொரித்துச் சாப்பிடலாம். நல்ல சத்தான எளிமையான உணவு.
பீர்க்கங்காய்த் தோல்
பீர்க்கங்காய்த் தோலில் சட்னி, கூட்டு செய்து சாப்பிட பித்தம் குறையும்.
கமலா ஆரஞ்சுப் பழத்தோல்
இப்பழத் தோலை, சிறிய சிறிய துண்டுகளாக்கி, தொக்கு செய்து சாப்பிட்டால் வாந்தி, பித்த மயக்கம் நாவில் எச்சில் ஊறுதல் சுவையின்மை போகும்.
விளாம்பழ ஓடு
விளாம்பழ ஓட்டை நசுக்கி தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீருடன் புளிக்கரைசல் சேர்த்து ரசம் செய்து சாப்பிட பித்தம், வாத சுரம் நீங்கும். நாவில் சுவையின்மை நீங்கும்.