நூல் : புலவர் நன்னனின் அகமும் புறமும்
வெளியீடு : ‘நன்னன் குடி’, ‘சிறுகுடி’,
22, முதல் தெரு, அரங்கராசபுரம்,
சைதாப்பேட்டை, சென்னை_600 015
தொலைபேசி: 044_2235 0193
கைபேசி: 98845 50166, 98406 59157
நன்கொடை: ரூ.400.
இணையம்: www.maanannan.in
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே…
அண்ணாவும் பெரியாரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பேசினார்கள். அப்பேச்சு என்னைத் தெளிவுள்ளவனாக ஆக்கியது. பெரியாரின் பேச்சும், அண்ணாவின் ‘ஆற்றோரம்‘ என்ற பேச்சும் எனக்குப் பளிச்சென்று ஓர் ஒளியைக் கொடுத்தன போலிருந்தது. அதைத் தொடர்ந்து கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணன் அங்கே வந்தார். கிந்தனார் காலட்சேபம் அடடா! தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. பட்டமளிப்பு விழா மண்டபம் என்று ஒன்று இருந்தது. சாத்திரி கூடம் என்று சிலர் அதைச் சொல்லுவார்கள். சீனிவாச சாத்திரி என்பவர் பெயரால் கட்டப்பட்டது.
ஆனால், நாங்கள் அதைப் பட்டமளிப்பு விழா மண்டபம் என்றுதான் அழைப்போம். அதில்கூடக் கொள்கையை விட்டுப் போவது கிடையாது. அதில்தான் நடந்தது. மாடியிலே கடைசி வரிசையிலே மொட்டைப் பெஞ்சு என்று சொல்வார்களே முதுகு சாய்மானம் இல்லாத இருக்கைகள் அந்த மாதிரி பெஞ்சு போட்டிருப்பார்கள். அதிலே உட்கார்ந்தால் தெரியவில்லை என்பதால் ஒவ்வொரு பெஞ்சுலேயும் 10 பேர் நின்று கொண்டு இருந்தனர். இவர் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பு இசைக்கருவிகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஓசை கேட்டது. சிறிது சலசலப்பு இருந்தது. பிறகு அடங்கிவிட்டது.
கலைவாணர் தொடங்கும்போதே கதா ஆரம்பத்திலே படார் இப்போ நீங்க போட்டீங்களே அந்தப் படார் இல்லை. இது விடப்படார், கைவிடப்படார். கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார் இப்படிதான் கலைவாணர் தொடங்கினார். எனக்கு இப்போது கேட்பது போல் உள்ளது. நந்தனார் கதையில் ஒரு அய்யர் வந்த மாதிரி இந்தக் கதையில் ஒரு அய்யர் வந்து உனக்கு எதுக்குடா படிப்புன்னு சொல்லுவார். அதைப் பார்க்க பார்க்க எனக்கு ஒரு வெறியே வந்தது. கொள்கை உரம் பாய்ந்த என் உள்ளத்தில் ஒரு வெறியே வந்தது. நாடு முழுவதும் அதைப் பரப்பினார்கள்.
எனக்கு எழுதுகிற ஆசை எல்லாம் வந்துவிட்டது. நீங்கள் பழைய ‘‘திராவிட நாடு’’ இதழ்களை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் அட்டையிலே நான் எழுதியிருப்பேன், பா. அது இலக்கணப்படி இருக்கும். கலிப்பா எல்லாம் எழுதுவேன், நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எழுதியிருக்கிறேன்.
பாலில் நீர் காண்பாய்; பகுத்தறிவுக் கண்
கொண்டு பைந்தமிழில் ஆரியம் காண்
என்பது ஒரு தொடர்.
நன்னன் நூலினை வெளியிடும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெற்று கொள்ளும் தளபதி மு.க.ஸ்டாலின், நன்னனின் துணைவியார் பார்வதி, மகள் வேண்மாள், துரை.சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர்.
30.7.2019 அன்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வு.
பால்மானியைப் போட்டுப் பாலில் நீர் உள்ளதா என்று பார்க்கிறாயே…. உன் பகுத்தறிவு கொண்டு பைந்தமிழில் கலந்துள்ள ஆரியத்தைப் பிரித்தெடுப்பாய் என்பது பொருள்.
இதைக் கட்டம் கட்டி அட்டைப் பக்கத்திலே போட்டிருப்பார்கள். அதற்கு கீழே கா.மா.நன்னன் அண்ணாமலை நகர் என்று எழுதி இருக்கும். அண்ணாமலை நகர் என்று போட்டுக் கொள்வதிலே ஒரு பெருமை. எங்கள் ஊர்ப் பெயரைப் போட்டால் எவனுக்குத் தெரியும். அண்ணாமலை நகர் என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும். அப்படி அதிலே எழுதத் தொடங்கினேன். அடுத்த மூன்று ஆண்டுகளிலே அந்த ஆர்வம் நல்ல முதிர்ச்சி பெற்றுவிட்டது. நான் படித்துவிட்டுத் தமிழாசிரியராக வந்தபோது கொள்கையிலே எனக்கு ஒரு பக்குவம் பதம் ஏற்பட்டுவிட்டது.
நல்ல பயிற்சி முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன். தலைப்பிலே எல்லாம் முதல் மாணவனாக இருந்தேன். அதனால்தான் எனக்கு அண்ணாமலை அரசர் கொடுத்த உதவித்தொகை மாதாமாதம் கிடைத்தது.
ஒருமுறை உ.வே.சாமிநாத அய்யர் பரிசு கொடுத்தார். முதலாண்டு படித்தபோது முதல் மாணவனுக்கு அய்ம்பது ரூபாய் பரிசு கொடுப்பதாகச் சொன்னார். புத்தகமாகக் கொடுப்பதாகவும் சொன்னார். நான் தான் முதல் மாணவனாக வந்தேன். நான் முதலாண்டு மாணவன். நான்கு ஆண்டுகளுக்கும் தேவையான புத்தகங்களை எழுதிக் கொடுத்தேன். அத்தனைப் புத்தகங்களையும் சாமிநாத அய்யர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். விலை கொஞ்சம் கூடுதலாகக் கூட ஆயிற்று. ஒரு பட்டமளிப்பு விழாவிலே எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அவை அனைத்தையும் என்னால் தூக்க இயலவில்லை. அவ்வளவு புத்தகங்கள். பல்கலைக் கழகப் பதிவாளர் விசுவநாத அய்யர், “நீ இதை தொட்டு வைத்துவிட்டுப் போடா! நான் உன் அறைக்கு அனுப்புகிறேன்’’ என்றார்.
அதே மாதிரி அதை வாங்குவதுபோல் நடித்தேன் அவ்வளவுதான். தூக்கவெல்லாம் முடியாது. அவ்வளவு நூல்கள் பரிசாக வாங்கினேன். அப்படி இருந்த மாணவன் இறுதி ஆண்டில் எல்லாம் தேர்ச்சி பெற்றால் போதும், 35 மதிப்பெண்களுக்கு முன்னே பின்னே தான் இருக்கும். விரும்பி இருந்தால் என்னை மேலேற விடாமல் எளிதாக தடுத்திருக்கலாம். அப்போது இருந்த பேராசிரியர் இறுதி ஆண்டிலே, முதலில் இருந்தவர் கா.சு.பிள்ளை, என்னுடைய இறுதி ஆண்டுக்கு வந்தவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், பன்மொழிப்புலவர். அவருக்கு நம்முடைய கொள்கைகள் பிடிக்காது. ஆனாலும் நல்ல அறிஞர். நான் அவரையே எதிர்த்துப் பேசுவேன். வகுப்பிலே அணுஅணுவாக எதிர்த்துக் கேள்வி கேட்பேன். இலக்கிய மன்றக் கூட்டத்திலே அவர் தலைமையில் அவர் கொள்கையையே எதிர்த்துப் பேசுவேன்.
அதை எல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டு என்னை ஒழித்துக்கட்டுவது என்றால் எளிது. ஏனென்றால் அங்கு விளிம்பு நிலை மாணவர்கள்(Border Case) என்று சொல்வார்கள். ஒரு 4 அல்லது 5 மதிப்பெண்கள் குறைத்தால் போதும் தீர்ந்து போய்விடும். ஒரு 4 மதிப்பெண்கள் கூட்டிப்போட்டால் மேலே வந்துவிடமுடியும். இந்த நிலையிலேதான் நான் வந்தேன். இதற்குக் காரணம் முழுக்க முழுக்க இயக்கப் பணிகள்தான். வெள்ளிக்கிழமை கிளம்பினோம் என்றால், திங்கள்கிழமை காலையில்தான் கல்லூரி நேரத்துக்கு அவசர அவசரமாக வந்து சேருவோம். அப்படிக் கொள்கையிலே வெறிபிடித்து அதைப் பரப்புவதிலே ஈடுபாடு காட்டியிருக்கிறேன். பிறகு நானும் பெரியாருடைய தொண்டனாகச் சிறிது காலம் இருந்திருக்கிறேன்.
பெரியார் பின் சென்றோம்
கி.பி.1944ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களின் பிற்பகுதியில் முன்னிரவு நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியிலிருந்த எம் அறைக்குப் பேராசிரியர் அன்பழகனாரின் தந்தை கல்யாணசுந்தரனார் (மணவழகனார்) வந்தார்.
அடுத்த நாள் மயிலாடுதுறையை அடுத்துள்ள வடகரை என்னும் ஊரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா நடைபெறவிருப்பதாகவும், தந்தை பெரியார் அவ்விழாவில் பேருரையாற்ற வருவதாகவும், அதில் பேச மாணவப் பேச்சாளர் ஒருவர் வேண்டுமென்றும், தமக்குத் தகவல் வந்ததாகவும் கூறிய மணவழகர், அப்போது தமிழகத்திலேயே முதன்மைப் பேச்சாளர்களாகத் திகழ்ந்த நாவலருக்கும், பேராசிரியருக்கும் தேர்வுகள் முடிவடையாததாலும், எமக்குத் தேர்வு முடிந்துவிட்டதாலும் எம்மை அழைத்தார். கற்றுக்குட்டிப் பேச்சாளராக இருந்த யாம் அதைப் பெறலரும் வாய்ப்பாகக் கருதி ஏற்று வடகரை சென்று அவ்விழாவிற் பேசினோம்.
பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேசிய அது எமது இரண்டாம் பேச்சாக இருக்கக்கூடும். பெரியாரின் கொள்கைகளை ஓரளவு மட்டுமே புரிந்துகொண்டு அதில் ஈடுபட்டு ஓரிரண்டு ஆண்டுகளே ஆகி முரட்டுப் பேச்சாளராக இருந்த எமது முரட்டுப் பேச்சை விழா முடிந்த பின் பெரியார் பாராட்டியதோடு, அதில் இருந்த சில குறைகளையும் கூறிய முறையையும் சுட்டி எம்மைத் திருத்தினார்.
புலவர் தேர்வு முடிந்த நிலையிலிருந்த எம்மை இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் என்று அய்யா கேட்டார். ஒன்றுமில்லை; ஊருக்குச் சென்று சும்மாதான் இருக்கப் போகிறேன் என்ற எம்மையும் தம்மோடு வருமாறு அழைத்தார். அப்போது அய்யாவின் அசைக்க முடியாத தொண்டராக இருந்தவரும் அண்ணாமலையின் பழைய மாணவரும் எமது இனிய நண்பருமாகிய திரு.சா.கசேந்திரனும் எம்மை உசுப்பிவிட்டார். சிவனடியானைச் சிவபெருமானே நேரில் வந்து அழைத்தால் எப்படி அவன் அவர் பின் செல்வானோ அப்படி யாமும் பெரியார் பின் சென்றோம். அன்று குடந்தையிலே நெடும்பலம் சாமியப்பா தலைமையிலே பொதுக்கூட்டம். குடந்தை பூங்காவிலே நடந்தது. கொட்டாச்சிச் செட்டியார் வீட்டிலே சாப்பாடு. இப்படிப் பல இடங்களுக்கும் சென்றுவிட்டு ஈரோடு சென்றடைந்தோம். அங்குப் போனவுடன் அய்யா, “நீ பிரச்சாரத்துக்குப் போகிறாயா? இங்கே ‘குடிஅரசு’ அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறாயா?’’ என்று கேட்டார். எனக்குக் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் இருந்து பணிபுரியப் பிடிக்கவில்லை. ஏனென்றால் அங்கு கரிவரதசாமி என்று ஒருத்தர் இருந்தார்.
«««
கரிவரதசாமி தண்ணீர்த் தொட்டியிலே உள்ள தண்ணீரை எல்லாம் அளந்து பார்ப்பார். நாங்கள் எல்லாம் சிறுவர்கள்தானே, யாராவது இரண்டு சொம்பு அதிகமாக ஊற்றிக் குளித்திருப்போம். ஏன் தண்ணீர் குறைந்திருக்கிறது என்று கேட்பார். அவரிடத்தில் இருந்து நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிப் பிரச்சாரத்துக்கு போகிறேன் என்று சொல்லி அய்யா கூடவே சென்றேன். அய்யாவோடு சென்றபோது இரண்டு மூன்று தப்பு செய்ய நேர்ந்துவிட்டது. அப்போது திரு.கசேந்திரன் இருந்தார். யார் கசேந்திரன்? திரு.ஈ.வெ.கி.சம்பத்தினுடைய மைத்துனர். சம்பத்தினுடைய தமக்கை மிராண்டாவை இவர் மணந்துகொண்டார். இவருடைய தங்கையை (சுலோச்சனா சம்பத்து), சம்பத்து மணந்து கொண்டார்.
சுலோச்சனா சம்பத்தினுடைய அண்ணன்தான் கசேந்திரன். அவர் படிக்கிற போதே எனக்கு நெருக்கமான நண்பர். நான் அய்யாவிடம் சென்றபோது அவர்தான் அங்குச் செயலாளர் போல, நான் அவருக்குக் கீழே ஒரு எடுபிடி போலப் போய்க்கொண்டிருப்பேன். அப்படிப் போய் கொண்டிருந்தபோது ஒரு சிறிய தப்பு செய்துவிட்டேன். திருச்செங்கோட்டிலே ஒரு கூட்டம். பொதுக்கூட்டம். அந்தக் கூட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் செய்தித்தாள்களுக்கு எழுதி அனுப்ப வேண்டும். நன்கொடை கொடுத்தவர்கள் பற்றி எழுத வேண்டும். 3 காலணா 4 காலணா நன்கொடை கொடுத்திருப்பார்கள். அவர்கள் பெயரெல்லாம் செய்தித்தாளிலே வரவேண்டும். சோடா வாங்கிக் கொடுத்திருப்பார்கள். வேர்க்கடலை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். பிரியாணி வாங்கி வந்து அய்யாவுக்குக் கொடுத்திருப்பார்கள். இதுபோல நிறைய இருக்கும் எல்லாம் எழுதி அனுப்பினேன்.
ஆனால், ஒன்றே ஒன்று விடுபட்டுப் போய்விட்டது. அது என்ன தெரியுமா? டாக்டர் சுப்பராயன் வீட்டிலிருந்து இலவசமாக மின்சாரம் கொடுத்தார்கள். அது விடுபட்டுப் போய்விட்டது. எனக்குச் சுப்பராயன் வேண்டாதவரா என்ன? அவர் சமீன்தார், அமைச்சராக வெல்லாம் இருந்தார், பெரிய மனிதர். பேராயக் கட்சியில் எல்லாம் இருந்தார். அவர் பிள்ளைகள்தான் மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள். குமாரமங்கலம் சமீன் அவர்களுடையது. அவர் நம்முடைய இயக்கத்திலே தொடர்புடையவராகவும் இருந்தார், அது தனி வரலாறு; வேறுபட்டுப் போனார். எல்லாம் உண்டு. அவர் வீட்டிலிருந்து இலவச மின்சாரம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து நான் அதில் எழுதவில்லை.
மறுநாள் செய்தித்தாளிலே அய்யா அந்தச் செய்தியை பார்த்துவிட்டு யார் இதை எழுதியது? என்று கேட்டு என்னை அழைத்தார். என்ன போக்கிரித்தனம்? யோக்கிய பொறுப்பில்லை. அவர் வீட்டு மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். அதைப் போடுவதற்கு உங்களுக்கு என்ன போச்சு. விளையாட்டுப் புத்தி. ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறீர்கள் மைனர்கள். புடிச்சார் பாருங்கள் என்னை. இன்னும் ஏழு சன்மங்கள் என்று கதையிலே சொல்வார்கள் இல்லையா? தாங்கும். தப்புச் செய்வதை விடவே மாட்டார். ஒரு முறை நானும் சனார்த்தனமும் தூங்கிவிட்டோம். நாங்கள் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் தூங்கினோம். காலையில் எழுந்திருப்பதற்கு நேரம் ஆகிவிட்டது. அய்யா வீட்டிலிருந்து குதிரை வண்டி வைத்துக்கொண்டு இரயிலடிக்கு வந்துவிட்டார். எங்களை நேராக இரயிலடிக்கு வரச்சொல்லி இருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்திருப்பார்; எங்களைத் தேடியிருப்பார்கள். நாங்கள் இரயிலடிக்கு நேரத்துக்குச் செல்லவில்லை. அவர் இரயில் ஏறிச் சென்றுவிட்டார். நாங்கள் வரவில்லை என்பதற்காக அய்யா காத்திருப்பாரா? அய்யா போய்விட்டார். நாங்கள் இருவரும் தூங்கி எழுந்து போவதற்குள் இரயில் போய்விட்டது. சனார்த்தனம்தான் மூத்தவர்; நான் பொடியன். அவரைத்தான் திட்டுவார். நமக்கு ஒன்றும் வராது என்று எனக்குத் துணிவு. அவர் நடுங்கிப் போனார். பிறகு, ஏதோ பேருந்து பிடித்து ஏதோ ஒரு சிற்றூர். அங்குப் போய்ச் சேர்ந்தோம். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது திருமணம் எல்லாம் முடிந்து அய்யா திண்ணையிலே அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்து அய்யா, “பசங்க பரவாயில்லையே சரியான நேரத்துக்கு தான் வருகிறார்கள்’’ என்று கூறினார். சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று பொருள். வேறு ஒன்றும் திட்டவில்லை. அவருக்குத் தெரியும் நாங்கள் சிறுவர்கள் என்று; இது ஒரு சிறு குறை.
இதேபோல் மற்றொரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் பாருங்கள். மாணவர் சுற்றுப் பயணம் பற்றிக் கூறினேன் அல்லவா? அதிலே ஏற்காட்டுப் பயணமும் ஒன்று. நாங்கள் சேலத்திலிருந்து மாலையில்தான் கிளம்பி ஏற்காடு சென்றடைந்தோம். இரவு ஒரு கோடவுனில் தங்கினோம். அய்யா அங்குக் குடியிருந்தார். அங்குத் திராவிடர் கழகத்துக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உண்டு. முன்னால் ஒரு பலகை போல் உயரமாக இருக்கும். அதிலே அய்யா அமர்ந்திருப்பார். தெருவிலே போவோர் வருவோரை எல்லாம் பார்க்கலாம். அப்படி ஒரு இடம். பெரிய வசதியான கட்டடம் எல்லாம் கிடையாது. யாரோ ஒரு கவுண்டர் இருந்தார் சமையலுக்கு.
காலையில் இட்லி சாப்பிடச் சொல்லி, எங்களைச் சேலத்துக்குப் புறப்படச் சொன்னார். எங்களிடம் கொஞ்சம் காசு கொடுத்து உங்களுக்கு நண்பகல் உணவு சேலத்தில் அதனால் உடனே புறப்படுங்கள் என்று கூறினார். அங்குச் சமையல் செய்து வைத்திருப்பார்கள். சாப்பாடு வீணாய்ப் போகும். அதனால் உடனே புறப்படுங்கள். மாலையில் அரிசிப்பாளையத்தில் கூட்டம் அதனால் போங்கள் என்று கூறினார். நாங்கள் எதுவும் பேசமுடியாது. எனக்கு மேல் தவமணிராசன் இருந்தார், ஏ.பி.சனார்த்தனம் இருந்தார், கசேந்திரன் இருந்தார். ஆசிரியர் வீரமணி இருந்தாரா? என்று நினைவு இல்லை. எல்லாம் ஏழு, எட்டு பேர்கள் இருக்கும். நான் அதிலே சிறுவன் கடைசியிலேதான் நிற்பேன். கொஞ்ச தூரம் சென்றவுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. சிறுவர்கள்தானே! அவரவர் எவ்வளவோ செலவு செய்து கொண்டு ஏற்காட்டுக்கு வருகிறார்கள்.
ஏழைகளின் உதகமண்டலம் (Poorman’s Ooty) என்று அதற்குப் பெயர். பார்க்க வேண்டும் என்று ஆசை. அய்யா போகச் சொல்லிவிட்டார். மதிய உணவு இங்கே இருக்காது. என்ன செய்வது என்று சிந்தித்தோம். பேருந்திலே இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி விடுவோம் என்று ஒருவன் யோசனை தெரிவித்தான். அந்தப் பிள்ளைகளிலேயே ஏமாற்றுகிற வேலையிலே கொஞ்சம் விவரமான சிறுவன் சொன்னான். உடனே அனைவரும் அதை ஏற்றுக் கொண்டோம். திரும்பிப் போனோம் அய்யா முன்னாடி அமர்ந்திருக்கிறார். போகும் போது நான் எல்லாம் பின்வாங்கிக் கொண்டேன். முன்னணித் தலைவர், பெரிய ஆள்கள் எல்லாம் முன்னால் போனார்கள். என்ன? என்று அய்யா கேட்டார். அய்யா பேருந்திலே இடம் கிடைக்கவில்லை என்று கூறினோம்.
போக்கிரிப் பசங்க! ஊர் சுத்திப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். கவுண்டரே இவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போடாதீர்கள், பசங்களே! உங்களுக்கு சாப்பாடு சேலத்திலே இருக்கிறது. சமையல் செய்து வைத்திருப்பார்கள். இங்கே இருந்தீர்கள் என்றால் அவ்வளவும் வீணாய்ப் போகும்; போய்விடுங்கள் என்று கூறினார். அப்போது எல்லாம் பேருந்து இப்போதுபோல் 5 நிமிடத்திற்கு ஒன்று அல்லது அரை மணிநேரத்திற்கு ஒன்று என்றெல்லாம் கிடையாது.
காலையில் ஒரு பேருந்து போனால் பிறகு மாலையில்தான். நடுவிலே எல்லாம் பேருந்து கிடையாது. அது அய்யாவுக்குத் தெரியும். அதனால்தான் நாங்கள் பேருந்திலே இடம் கிடைக்கவில்லை என்று கூறினால் அடுத்த பேருந்திலே போங்கள் என்று சொல்லுவார் என்று எண்ணித் திரும்பிப் போனோம். ஆனால், அவர் பெரியார் இல்லையா! புரிந்துகொண்டார். ஊர் சுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல் பித்தலாட்டம் செய்கிறீர்கள் என்று கூறினார். அங்க சாப்பாடு உங்களுக்குத் தயாராகுது போய் விடுங்கள். பேருந்து எல்லாம் தேவை இல்லை. இப்படியே குறுக்கே இறங்கிச் சென்றால், ஏறுவதுதான் கடினம். இறங்குவது எளிது; கிடுகிடு என்று போய்விடலாம். எட்டு மைல்தான் தூரம். பேருந்திலே சென்றால்தான் அதிக மைல் ஆகும். அது வளைந்து வளைந்து செல்ல வேண்டும். நிறைய கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும். இது அப்படி இல்லை. நேராகப் போகுது. இறங்கு முகம் நல்ல பாதை இருக்கிறது. மக்கள் அது வழியாக ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். எட்டு மைல் தூரம், அவ்வளவுதான். இறங்கும்போது ஏதும் வலி தெரியாது! என்று கூறிவிட்டார். அய்யா கொஞ்சங்கூட இரக்கம் இல்லாமல் பேசுகிறாரே என்று மனசுக்குள்ளே ஓர் எண்ணம். ஒருத்தரும் நகரவில்லை எல்லாரும் தலையைத் தொங்கப் போட்டபடி நின்றிருந்தோம். நானும் அவர்கள் மறைவிலே பின்னாடி நின்றிருந்தேன்.
பெரியார் கண்ணிலேயே நான் பட்டிருக்க மாட்டேன். அப்படி நின்றிருந்தேன். பெரியார் பார்த்தார். பிறகு சரி சரி நாசமாய்ப் போங்க. கவுண்டரே ஆகட்டும் என்று கூறினார். அய்யா நாசமாய்ப் போங்க என்று கூறினால் சரி என்று பொருள். நாம் ஏதாவது சொன்னோம் என்றால் அது சரியில்லை இதனால் அதற்கு விரோதம் வரும். அது தப்பானது இப்படியெல்லாம் சொல்லுவார். மறுபடியும் நாம் அதை வற்புறுத்துகிறோம் என்று தெரிந்தால் நாம் என்றால் நான் இல்லை. ஆசிரியர் வீரமணி, ‘விடுதலை’ சம்பந்தம் போன்ற பெரியவர்கள். அவர்கள் ஏதாவது சொல்வார்கள் அய்யா மறுப்பார். இவர்கள் விடாது வலியுறுத்துவார்கள். இறுதியில் நாசமாய்ப் போங்கள் என்று கூறுவார். அதற்குச் சரி என்று பொருள் _ அய்யா மொழியிலே. அப்படிக் கூறியவுடன் நாங்கள் ஏற்காட்டைச் சுற்றிப் பார்த்தோம். வந்து நண்பகல் உணவை உண்டோம். பிறகு பேருந்து நிலையம் வந்தோம். அய்யாவும் பேருந்து நிலையம் வந்துவிட்டார். எங்களை ஏற்றி விடுவதற்காக; இந்தப் பயலுக திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது என்று ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு இப்போது பேராசிரியர் அன்பழகன் வைத்திருக்கிறாரே, அது போன்ற கைத்தடி வைத்துக்கொண்டு, ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டு நிற்கிறார். எனக்கு இப்போதும் கண் முன்னே அந்தக் காட்சி தெரிகிறது. அய்யாவினுடைய புருவங்களிலே அடர்த்தியாக முடி இருக்கும். சிங்கம் மாதிரிதான் இருக்கும்; இந்தத் தலைமுடியும் தாடியும் அவர் பார்வையும் சிங்கம் போலவே இருக்கும். வேட்டி மேலே ஒரு சால்வை; கால்களிலே செருப்பு; அந்தக் கைத்தடியை ஊன்றி நின்றிருந்தார். வண்டி புறப்பட்டுப் போகும் வரை அய்யா நின்றிருந்தார்.
எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அதாவது தப்புச் செய்தபோது கடுமையாகக் கண்டித்த அய்யா, எங்கள் ஆசையை அப்படியே விட்டுவிட்டால், பிள்ளைகள் கெட்டு விடுவார்கள் என்பதனால் சாப்பாடு கிடையாது என்று எங்களைக் கண்டித்தார். இது எங்களை மிரட்டுவதற்காகத்தான். அது எம் தலைவர்கள் கசேந்திரன், சனார்த்தனம், தவமணிராசன் போன்றவர்களுக்குத் தெரியும். அய்யா இப்படித்தான் சொல்வார்; பிறகு சோறு போடுவார் என்பது தெரியும். எனக்கு வேண்டுமானால் தெரியாது இருந்திருக்கலாம். பயந்து கொண்டு இருந்திருப்பேன். ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, சாப்பிட்டு விட்ட பிறகு அய்யா வந்து வண்டி ஏற்றிவிட்டார். சேலம் போய்ச் சேர்ந்தோம். தவறு செய்யக்கூடாது. ஒழுக்கம் குன்றக் கூடாது. மற்றவற்றை எல்லாம் அய்யா பொறுத்துக் கொள்வார். கண்டிப்பார், யோக்கியப் பொறுப்பு இல்லை; என்ன யோக்கியம், என்ன நியாயம், அப்படின்னு சொல்லுவார்.