‘கனா’

திரைப்பார்வை ஜனவரி 16-31 2019

திரைப்பார்வை

இளைய மகன்

கல்வி, வேலை, தொழில், விளையாட்டு என்று கிட்டத்தட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலிருந்தும் பெண்கள் காலம்காலமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். (தங்கள் கண்களுக்கு விருந்தாக அமைய பெண்கள் வேண்டும் என்று கருதிய ஆணாதிக்க சமூகம் கலைத் துறையில் மட்டும் பெண்களுக்கு பெரும் இடத்தைத் தந்து வந்திருப்பது விதிவிலக்கு). கடந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க ஏற்பட்ட மாற்றமும், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சமூகப் புரட்சி இயக்கங்களும், தலைவர்களும் ஆற்றிய அரும்பணியின் காரணமாக கல்வித் துறையில் பெண்கள் மெல்ல மெல்ல மேலெழுந்து, இன்று மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். அதன் நீட்சி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகளில் அவர்களின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

ஆனால், விளையாட்டுத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகளும், விளம்பரமும், முக்கியத்துவமும் மிக மிகக் குறைவே! ஏறத்தாழ அனைத்து விளையாட்டுகளிலுமே பெண்கள் அணி என்று ஒன்று இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பெயரளவிலேயே பராமரிக்கப்படுகின்றன. இயல்பாகவே இந்திய விளையாட்டுத் துறையில் ஜாதிப் பாகுபாடு, வட இந்திய – தென்னிந்தியப் பாகுபாடு, ஊழல், அதிகாரத் தலையீடுகள் எல்லாம் நிறைந்திருக்கும். அதிலும் பெண்கள் விளையாட்டு என்றால் அதில் கூடுதலாக அலட்சியமும் நிறைந்திருக்கும். இந்தியாவெங்கும் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டே ஆயினும், அது ஆண்களுக்கானதாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் கிரிக்கெட் பெரிதும் கண்டுகொள்ளப்படாத ஒன்றே. அத் துறையில் ஒரு பெண்ணுக்கு ஆசை வந்தால்? அதுவே கனவாக மாறினால்? அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தால்? அவர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை நம்பிக்கையோடு சித்தரிக்கும் படம்தான் கனா.

”ஆனால், விளையாட்டுத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகளும், விளம்பரமும், முக்கியத்துவமும் மிக மிகக் குறைவே! ஏறத்தாழ அனைத்து விளையாட்டுகளிலுமே பெண்கள் அணி என்று ஒன்று இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பெயரளவிலேயே பராமரிக்கப்படுகின்றன.”

தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் பெரும் புகழ் ஈட்டியுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் பாடலாசிரியராகவும், பாடகராகவும் கடந்த சில ஆண்டுகளில் புகழ்பெற்றிருந்த அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கனா. இனமுரசு சத்யராஜ், சிவகார்த்திகேயன், ரமா, இளவரசு ஆகியோரோடு கௌசல்யா முருகேசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அய்ஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமா வெள்ளாவி வச்சு வெளுத்த நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கும்போது, தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நடிகையாக வெளுத்து வாங்கும் அய்ஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தின் மூலமும் தன் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறார்.

”பெண்ணுரிமை போற்றும் படத்தில் தந்தை பெரியார் என்னும் பேராற்றல் எப்படி இந்த மண்ணில் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் காட்சிகளின் பின்னணியில் ஆங்காங்கே மிளிர்கிறது தந்தை பெரியாரின் ஒளிப்படம்.”

திருச்சி மாவட்டம் குளித்தலை நகரில் வாழும் முருகேசன் (சத்யராஜ்) மற்றும் நண்பர்களின் கிரிக்கெட் ஆர்வம் சிறுமி கௌசல்யாவைத் தொற்றிக் கொண்டு, அதில் வெற்றி பெற்று தன் தந்தையை மகிழ்விக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார். சிறுமிகள் கிரிக்கெட் விளையாட முன்வராத போது, வயது கூடிய ஆண்களுடன் விளையாடத் தொடங்கி, தனியொரு பெண்ணாக அணியில் இயங்குகிறாள். ஊரிலும், வீட்டிலும் அது ஏற்படுத்தும் சலசலப்புகளுக்குப் பிறகு, வளர்ந்துவிட்ட அவளை முறைப்படி பெண்கள் அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அளவில் புகழ்பெற்று, உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெறுகிறார் கௌசல்யா. அங்கு நிலவும் அலட்சியம், மொழி பேதம், வர்க்க, -வர்ண பேதங்கள் கௌசல்யாவை புறக்கணிக்கத் தொடங்க, அவரது திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் பயிற்சியாளர் நெல்சன் திலீப்குமார் (சிவகார்த்திகேயன்) தேர்வுக் குழுவிலும், பின்னர் மூத்த விளையாட்டு வீராங்களிடமும் போராடி கௌசல்யாவுக்கு உரிய வாய்ப்பை வழங்கி, கிரிக்கெட்டில் இந்தியாவை வெல்ல வைத்து தன் தந்தையை மகிழ்விக்கும் அவளது கனவை நனவாக்க உதவுகிறார். விவசாயத்தில் பெரும் ஈடுபாடும், பற்றும் கொண்ட முருகேசன், காவிரி பொய்த்துப் போனதால், வங்கியில் கடனாளியாகி, வீடும் ஜப்தி செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். விவசாயிகளின் துயர், கடன் கொடுத்த வங்கிகள் தரும் உளவியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, உணவு உற்பத்தி செய்யும் விவசாயத்திற்கு மதிப்புத் தராமல், அதைக் கிண்டலடித்தபடியே தயிர்சாதம் விழுங்கும் மேலாளர், மல்லையாக்களின் கடன்களுக்காக ஜப்தியில் ஈடுபடாத வங்கிகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது, விளைநிலங்கள் விலைநிலங்களாக பேரம் பேசப்படுவது, விவசாயிகள் தற்கொலை என மய்யக் கதைக்கு இணையாக விவசாயப் பிரச்சினைகளை முன்னிறுத்திப் பேசுகிறது படம்.

பெண்களின் ஆடை, வளர்ச்சி, அவர்கள் மீதான வன்மங்கள், விவசாயம் என படம் முழுக்க தெறிக்க விடும் வசனங்கள், அழுத்தமான காட்சியமைப்புகள், கதையின் அழுத்தத்தை நம் மீதும் இறக்கி வைக்கும் திரைக்கதை, தேர்ந்த ஒளிப்பதிவு, பொருத்தமான பாத்திரத் தேர்வு என வெற்றித் திரைப்படத்திற்கான தரத்தோடும், சொல்ல வந்த கருத்தில் அக்கறையோடும் படமாக்கப்பட்டிருக்கிறது கனா.

பெண்ணுரிமை போற்றும் படத்தில் தந்தை பெரியார் என்னும் பேராற்றல் எப்படி இந்த மண்ணில் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் காட்சிகளின் பின்னணியில் ஆங்காங்கே மிளிர்கிறது தந்தை பெரியாரின் ஒளிப்படம். அதை விளம்பரத்தின் போதே வெளிப்படுத்தியதில் படக் குழுவினரின் துணிச்சல் வெளிப்படுகிறது. திரைத்துறையில் தனது போராட்டத்தை கனா மூலம் வென்றிருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டுக்குரியவர். இந்தியில் சக்தே இந்தியா, டங்கல் போன்ற படங்கள் வெளிவந்திருந்தாலும், விளையாட்டுத் துறையில் பெண்களைக் குறித்து தமிழ்நாட்டின் பார்வையோடு வந்திருக்கும் கனாவின் வெற்றி நம் வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *