சாதனை

ஜனவரி 16-31 2019

இரு பெண்களின் இணையிலாப் புரட்சி!

சபரிமலையில் சனாதனம் தகர்ப்பு

சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி மதவெறிக் கூட்டம் சபரி மலைக்குச் செல்லும் பெண்களைத் தடுப்பதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தொடர்ந்து கேரளாவில் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் செல்ல பெண்கள் முயற்சிக்கும்போதெல்லாம் அவர்களைத் தடுத்தும் தாக்கியும் விரட்டியும் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.

ஆனால், மதவெறிக் கூட்டத்தின் எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சாத இரு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட்டு சனாதன தடையைத் தகர்த்து எறிந்து சாதனை படைத்துள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இருவருமே அப்புரட்சியை செய்துள்ளனர்.

தீட்டுக்கழிப்பு நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது!

இரண்டு பெண்கள் கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட்டதால் கோயில், கருவறை களங்கப்பட்டுவிட்டதால் அதை புனிதப்படுத்த சுத்திகரிப்பு செயல்பாடுகளும் பரிகார நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர். இச்செயல் பெண்களைக் கேவலப்படுத்தும், மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இது  நீதிமன்ற அவமதிப்புக்கும் உரியதாகும். எனவே, சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதைத் தடுக்கும் மதவெறியர்கள் செயலைக் கண்டித்தும் பெண்களுக்குள்ள உரிமையை வலியுறுத்தியும் 620 கி.மீ தூரத்துக்கு அய்ம்பது இலட்சம் பெண்கள் திரண்டு மனித சுவர் போராட்டம் நடத்தி மகத்தான சாதனை புரிந்துள்ளனர்.

அய்ம்பது இலட்சம் பெண்கள் அணிதிரண்ட மகத்தான சுவர் போராட்டம்

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதைத் தடுக்கும் மதவெறியர்கள் செயலைக் கண்டித்தும் பெண்களுக்குள்ள உரிமையை வலியுறுத்தியும் 620 கி.மீ தூரத்துக்கு அய்ம்பது இலட்சம் பெண்கள் திரண்டு மனித சுவர் போராட்டம் நடத்தி மகத்தான சாதனை புரிந்துள்ளனர். கேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி_-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாயன்று அணி திரண்ட பெண்கள், “கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம்’’ என உறுதிமொழி ஏற்றனர். ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி ஒற்றை வரிசையிலும், பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண்சுவரை பெரும் மதிலாக மாற்றினர். செவ்வாய் மாலை 3:45 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவர் தொட்டு ஒருவராக இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர். சரியாக 4 மணிக்கு கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர்.

4:15 மணி வரை சுவரும், உறுதிமொழி ஏற்பும் நடந்தது. திருவனந்தபுரம் வெள்ளியம்பலத்தில் உள்ள அய்யன்காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து பெண்கள் மதிலுக்கு துவக்கம் குறித்தார். அதைத் தொடர்ந்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், தேசிய மாதர் சம்மேளன தலைவர் ஆனிராஜா மற்றும் மகளிர் அமைப்பினர் அய்யன்காளி சிலைக்கு மரியாதை செலுத்தினர். காசர்கோடில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்த்தனர். கொச்சியில் சுவாமி அக்னிவேஷ் பார்வை யாளராகப் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் பெண் சுவர் நிறைவு பெற்றதும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தாகாரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சு தானந்தன், மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக ‘மகளிர் மதில்’ அமைந்தது. இந்த பிரம்மாண்ட மதிலின் பகுதியாக பல்வேறு இடங்களில் முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இடம் பெற்றிருந்தனர். திரைக்கலைஞர் ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் இணைந்து நின்றனர். பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *