திராவிடன் என்பதில் எத்தனை மகிழ்ச்சி!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!’
(‘குடிஅரசு’ – 09.01.1938)
என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், எப்படி வாழவேண்டும் எதை ஒழிக்க வேண்டும் என்பதை,
‘எல்லாரும் ஓர் குலம் எனப்படல் வேண்டும்
எல்லாரும் இந்தியர் எனப்படல் வேண்டும்
எல்லாரும் பொதுவாய் இன்புறல் வேண்டும்
உயர்வு தாழ்வுகள் ஒழித்திட வேண்டும்
பெண்கள் விடுதலை பெற்றிட வேண்டும்
கைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும்
காதல் மணமே காணுதல் வேண்டும்
பகுத்தறி வுச்செயல் பரவுதல் வேண்டும்
மூடச் செயல்கள் முறிபடல் வேண்டும்
யார்க்கும் கல்வி ஈந்திடல் வேண்டும்
தொழிற் கல்வி எங்கும் தோன்றிடல் வேண்டும்
ஒருவனை ஏய்த்து மற்றொருவன் உண்ணும்
இதயந் தன்னில் எரிமூட்ட வேண்டும்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்
இதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும்’
(‘குடிஅரசு’ _ -09.10.1932)
என்று பாடினார்.
தமிழ்த் தேசியம் பேசுவோர் பாவேந்தரை நிறைய படிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியம் பேசி ஆரியர்களை ஆதரிப்பதற்கு மாறாய், திராவிடம் பேசி ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழர்க்கு நன்மை தரும் செயல்.