இயக்க வரலாறான தன் வரலாறு(218)
”வீரமணி கலைஞருக்குத் தந்த அபூர்வப் பரிசு!”
கி. வீரமணி
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மா.நன்னன் அவர்களது செல்வன் ந.அண்ணல், க.பாரதி ஆகியோர்களது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் விழா நிகழ்ச்சி 14.09.1985 அன்று சென்னை பிராட்வே எம்.சி.சி. வங்கி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் தலைமை எற்று திருமணத்தை நடத்தி வைத்தேன்.
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செம்பியம் சே-.ஏழுமலை அவர்கள் செல்வன் பன்னீர்செல்வம்-மாலா ஆகியோர் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா நிகழ்ச்சி என் தலைமையில் 15.09.1985 அன்று செம்பியம் காந்தி நினைவக மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன்.
கவிஞர் எஸ்.கருணானந்தம் அவர்களின் மணிவிழா மற்றும் கவிஞர் கருணானந்தம் _திருமதி கே.நாகரத்தினம் முப்பத்தேழாம் திருமண நிறைவு விழா 15.09.1985 அன்று பெசன்ட் நகரிலுள்ள கவிஞர் இல்லத்தில் சிறப்பாகவும் எளிமையாகவும் நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து பரிசு வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டேன். என்னுடன் விடுதலை மேலாளர் என்.எஸ்.சம்பந்தம், பெரியார் திறந்த நிலை பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.பண்டரிநாதன் அய்-.ஏ.எஸ்.(ஓய்வு), திருச்சி சி.ஆளவந்தார், கவிஞர் கலி.பூங்குன்றன், பூவிருந்தவல்லி வழக்கறிஞர் பழனியப்பன், புலவர் மாணிக்கம், வில்லிவாக்கம் அ.தியாகராசன்_பாப்பம்மாள் தம்பதி மற்றும் எராளமான கழகத் தோழர்கள், தி.மு.க. தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். விழாவில் கவிஞருக்கு மணி விழா மலர் வெளியிடப்பட்டது.
கவிஞர் கருணானந்தம் மணிவிழா
‘டெசோ’ கூட்டங்கள் 05.10.1985 அன்று தூத்துக்குடியிலும், 06.10.1985 அன்று திருச்சியிலும், 07.10.1985 அன்று சேலத்திலும், 13.10.1985 அன்று மாலையில் வேலூரிலும் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்ற ‘டெசோ’ பேரணியில் அதில் 10 லட்சம் பேர் அணிவகுத்து வந்தனர். ஏற்கனவே, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. ராஜாஜி பூங்காவிலிருந்து புறப்பட்ட பேரணியை அன்றைய தி.மு.க. தேர்தல் பணிச் செயலாளரும், இன்றைய ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ எம்.பி. துவக்கி வைத்தார். ‘டெசோ’ இயக்கத் தொண்டர்களின் பேரணி, தொழிற்சங்கப் பேரவை தலைவர் பெரியசாமி, மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் பெரியார், அண்ணா, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்டோர் கட்அவுட்டுகள் வைத்திருந்தனர்.
திராவிடர் கழகத்தை தனக்குப் பிறகு நடத்திச் செல்ல – தன்னையும் – தனது கொள்கைகளையும், தன்அடிநிழலிலேயே வளர்ந்து, துல்லியமாகப் புரிந்துகொண்ட – செரிமானித்து குருதியுடன் சேர்த்துக் கொண்டுவிட்ட வீரமணியை வளர்த்து தன்னுடைய வாரிசாக விட்டுச் சென்றார்!
திருச்சியில் கொட்டும் மழையிலும் இலட்சக்கணக்கானோர் அணிவகுத்து வந்தனர். 9 மைல் நீளம் ஒரு இடத்தைக் கடந்து செல்ல 6 மணி நேரம் ஆனது. மேடையிலிருந்து ஊர்வலத்தை கலைஞர், பேராசிரியர், நான், நெடுமாறன், கோ.சி.மணி, மன்னை எஸ்.கே.வடிவேலு, அ.பெரியண்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டோம்.
கோவையில் நடைபெற்ற ஈழ விடுதலை ஆதரவுக் கூட்டத்தில், எங்களுக்கு ஆட்சி, பதவி பெரிது இல்லை. சிறைச்சாலைகளுக்குச் செல்லவும் தயார். போராளிகளை மத்திய அரசு நிர்ப்பந்தித்திருக்கிறது. தமிழ் ஈழம் அமைந்தால் எங்கே தமிழ்நாடு பிரிந்துவிடுமோ என்று மத்திய அரசு அஞ்சுகிறது. ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்லுள்ள 5 கோடி மக்கள் ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
சேலம், ‘டெசோ’ கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, ‘சேலம் _ செயலாற்றும் களம்’’ என்ற அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு பத்திரிகையில் குறிப்பிட்டாரே, இன்றைக்-குக் கூடப் பொருந்தும் என்கிற வகையிலே சேலம் செயலாற்றும் களம்தான் என்பதை எழுச்சிப் பேரணியும், மூன்று பக்கமும் மக்கள் கடலாக கூடியிருக்கின்ற இந்தப் பொதுக்கூட்டமும் எடுத்துக்காட்டுகின்றன.
‘டெசோ’ சார்பில் ரயில் நிறுத்தம் போராட்டத்திற்கு பிறகு சந்திரகாசன் மீதான உத்தரவை ரத்து செய்யப்படுகிறது. ‘டெசோ’வின் பேரணிகளுக்கு பிறகு பாலசிங்கம் அழைக்கப்படுகிறார். சந்திரகாசனை திரும்ப அழைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கலைஞர் அவர்களே, திட்டம் வகுங்கள்.
பேரணியில் மக்களுக்கு விளக்குவதற்காக கொடுமைக்காரன் ஜெயவர்த்தனே வேடத்தைக் கூட தோழர்கள் ஏற்று வந்தார்கள்.
ஆனால், அந்த உணர்வைப் பார்க்கும்போது, எங்கள் தமிழ்ச் சகோதரிகளை சிங்கள நாய்கள் “கற்பழிக்கின்ற’’ அந்தக் காட்சியை நீங்கள் காட்டியபோது நம்முடைய உள்ளத்திலேயே வடித்த ரத்தக் கண்ணீரைப் எப்படி வர்ணிப்பது? நமக்கெல்லாம் உணர்ச்சி பொங்குகின்றது. ஆனால், உணர்ச்சி _ பிறக்க வேண்டிய ஒரு அரசுக்கு உணர்ச்சி பிறக்கவில்லை என்று கண்ணிர் மல்க ஈழத் தமிழர்கள் துயரத்தை எடுத்துரைத்தேன்.
இதுபோன்று திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் ‘டெசோ’ கூட்டத்தில் உரையாற்றினேன். தி.மு.க. தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் நம்முடைய எதிர்ப்பு உணர்வை இதுபோன்ற பேரணிகள் மூலம் எடுத்துக்காட்டியது.
திராவிட இயக்க எழுத்தாளர் ஏ.எஸ்.வேணு அவர்களின் மணிவிழா 12.10.1985இல் சென்னை பெரியார் திடலில் சிறப்புற நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்க தலைவர்கள் _ முன்னோடிகள் ஆகியோரின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது. மயிலை க.திருநாவுக்கரசு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். நான் தலைமையுரை ஆற்றினேன்.
இரா.அரங்கண்ணல் தனது சார்பாக ரூபாய் ஆயிரம் வழங்கினார்கள். நூலக வாசகர் வட்டத்தின் சார்பிலும் ஏ.எஸ்.வேணு அவர்களுக்கு ரூபாய் 610 நிதியுதவி அளித்தனர்.
சென்னை திருமழிசையில் 14.10.1985 இரவு 7 மணிக்கு பகுத்தறிவாளர் கழக துவக்க விழா, இந்தி அழிப்பு வீரர்களுக்கும், டி.கே.போரூராருக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அ.ராசசேகரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் நான் சிறப்புரை ஆற்றினேன். “1954இல் இந்த ஊரிலே தந்தை பெரியார் அவர்கள் பேசியிருக்கின்றார்கள். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடக்கிறது. 30 ஆண்டகளாக இந்தப் பகுதியில் இருள் சூழ்ந்திருக்கிறது என்பது அதற்குப் பொருள். ஆகவே, திராவிடர் கழகம் என்பது பொதுப் பள்ளிக்கூடம் போல். திராவிடர் கழகம் என்பது ஒரு காவல் நிலையம்போல். கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்று சொல்லுவார்கள். அதுபோல திராவிடர் கழக _ பகுத்தறிவாளர் கழகம் இந்தப் பகுதியில் ஆரம்பிக்கப்படுகிறது என்று சொன்னால் இந்த ஊருக்-கு ஒரு காவல்நிலையம் வந்ததுபோல.
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இது மூன்றும் முப்படைதான். எப்படையாக இருந்தாலும் தமிழன் தன்மானம் பெற இனி ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன்.
17.10.1985இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். மதங்களால்தான் உலகம் முழுக்க மகளிரின் அடிமை நீடிக்கிறது. தடைகள் எங்கே இருக்கிறதோ அது உடைத்தெறிய வேண்டும் என்பதுதான் கழகத்தின் நோக்கமாகவும், தந்தை பெரியார் அவர்கள் அதற்காகத்தான் தன் வாழ்நாள் முழுவதும் பெண்களைப் பற்றியும், பெண் உரிமையைப் பெற்றுக் கொடுக்கவும் பாடுபட்டடார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று எடுத்துக் கூறினேன்.
வழக்கறிஞர் த.வீரசேகரன் டாக்டர் பெ.வசந்தி ஆகியோருக்கு வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைக்கும் ஆசிரியர் அவர்கள்.
பெரியார் பெருந்தொண்டர் தர்மராஜ்_மணியம்மாள் ஆகியோர்களுடைய செல்வனும், சென்னை மாவட்ட மேனாள் கழக இளைஞரணி தலைவருமான வழக்கறிஞர் த.வீரசேகரன்_டாக்டர் பெ.வசந்தி ஆகியோர் 18.11.1985 வாழ்க்கை ஒப்பந்த விழா என் தலைமையிலும், திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் சாதிக்பாட்சா அவர்கள் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்தேன். ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். சுயமரியாதைத் திருமணச் சட்டம் அண்ணாவால் நிறைவேற்றப்பட்ட வரலாற்றை விளக்கிப் பேசினேன்.
வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூகநீதிக் கொள்கை
அப்பொழுதே பளிங்குச் சமாதிக்குப் போயிருக்கும்! அதிலிருந்து
வீரமணியின் செல்வாக்குப் பல மடங்கு உயர்ந்தது!
தமிழகப் பொது வாழ்வில் அவருக்குப் பெரிய வடிவமும் அமைந்துவிட்டது!
23.10.1985 அன்று சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தமிழ் முரசு’ நாளேடு “வீரமணிக்கு கருணாநிதி தந்த அபூர்வ பரிசு’’ என்ற தலைப்பில் தீட்டியுள்ள கட்டுரையை 03.11.1985 அன்று ‘விடுதலை’யின் மூன்றாம் பக்கத்தில் வெளியிட்டது. அதிலிருந்து முதன்மையான பகுதிகள்:
“பெரியார் உயிரோடு இருந்தது வரையில் விவரம் தெரிந்த தமிழர்கள் அவரை தமிழினத்தின் உயிராகவே கருதினார்கள்! அவருடைய உயிரோ _ அவர் பெற்று வளர்த்த திராவிடர் கழகமே! அவருடைய பிறந்த நாளை அவருடைய தொண்டர்களும் _ ஆதரவாளர்களும் _ அனுதாபிகளும் கொண்டாடிய போதெல்லாம் _ அந்த விழாவில் பெரியாருக்குப் பரவசம் ஊட்டிவந்த நிகழ்ச்சி எது தெரியுமா? அந்த விழாவில், அளிக்கப்படும் பணமுடிப்பை ஆசையோடு அவர் வாங்கிக் கொள்வதுதான்! சில சமயங்களில், அவர் வேடிக்கையாகக்கூட சொன்னதுண்டு. என்னுடைய உயிர் பணம்தான்! எனக்கு அதை நீங்கள் கொடுக்கக் கொடுக்க என் ஆயுள் நீண்டுகொண்டே போகும் என்று! ஆனால், அவருடைய உயிர் நிஜமாகவே சுயமரியாதைக் கொள்கைகளே. இக்கொள்கைகளையும் நீதிக்கட்சியின் சமூக நீதியையும் சேர்த்துப் பின்னப்பட்டதே _ திராவிடர் கழகம் அவர் மீதிருந்த பிடிப்பாலும் _ நம்பிக்கையாலும் குவிந்த நன்கொடைகளையும் அவருடைய சொந்தச் சொத்துக்களிலிருந்து வந்த வருமானத்தையும் _ எல்லாவற்றையும் திராவிடர் கழகத்துக்கு எருவாக இட்டார். பணம் – கழகத்துக்காகத்தான் – பணத்துக்காகக் கழகம் எப்பொழுதுமே இருந்ததில்லை. ஒரு காலகட்டத்தில் அவருக்கு வரித் தொல்லை வந்தபோது கொள்கை அடிப்படையில் ஆதாரமின்றி போடப்பட்ட வருமானவரி பாக்கி என்று பெரியார், இப்படிச் செலுத்தாததற்காக _ எல்லாச் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு போனாலும் போகட்டும் என்று அழுத்தமாகக் கூறியவர்! கழகத்தையும் _ அதன் உயிரான _ இனமானக் கொள்கைகளையும் கட்டிக் காப்பதற்காக _ அவர் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்!
வீரமணிக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு
எனவே, அவருடைய உயிரான திராவிடர் கழகத்தை தனக்குப் பிறகு நடத்திச் செல்ல _ தன்னையும் _ தனது கொள்கைகளையும், தன்அடிநிழலிலேயே வளர்ந்து, துல்லியமாகப் புரிந்துகொண்ட _ செரிமானித்து குருதியுடன் சேர்த்துக் கொண்டுவிட்ட வீரமணியை வளர்த்து தன்னுடைய வாரிசாக விட்டுச் சென்றார்! பெரியார் தலைமையின் கீழ் தவழ்ந்து _ எழுந்து நடந்து பிறகு தலைவராகியவர்கள் எத்தனையோ பேர். அவர்களில், எவருக்கும் இல்லாத தனிச் சிறப்பு _ வீரமணிக்கு மட்டுமே உண்டு! பாலப் பருவத்தில் பெரியாரைக் கைபிடித்து _ பொது வாழ்வில் நடை பயின்ற வீரமணி _ பெரியாரின் இறுதி மூச்சு அடங்கியது வரையில் அந்தக் கொள்கையை விட்டதே இல்லை! பெரியாரால் ஆளாக்கப்பட்ட மற்ற தலைவர்களெல்லாம் அரசியலில் பிரவேசித்த பிறகு திக்குதிசை தெரியாத இடங்களுக்கெல்லாம் போய்விட்டார்கள். ஆனால், வீரமணி ஒருவர்தான் எந்தச் சபலமும் இல்லாமல், பெரியாரிஸத்தின் பிரச்சார பீரங்கியாக _ அவரைப் போலவே அலுப்போ சலிப்போ இல்லாமல் _ பெரியாருடைய ஆதாரக் கொள்கைகளை சுருதி பேதமோ, தாள பேதமோ இல்லாமல், பிசிறு தட்டாமல் இன்றுவரையில் பிரச்சாரம் செய்து வருகிறார்! சுமார் முப்பதாண்டுக் காலத்துக்கு மேல் அவருடன் உருவமும் _ நிழலும் போல பழகியதால், அவருடைய சுபாவங்களில் சில இவரிடமும் படிந்துவிட்டிருக்கிறது. டம்பம் இல்லாத எளிமை _ செலவில் சிக்கனம் _ எதையும் அறிவுபூர்வமாகப் பார்ப்பது _ மற்றவர்களிடம் மிகுந்த மரியாதை காட்டி, இங்கிதத்துடன் நடந்துகொள்வது போன்ற குணங்களை எல்லாம் இவர் அப்படியே சுவீகரித்துக் கொண்டிக்கிறார்.
ஜீவத் துடிப்புள்ள பேச்சாளர்
இப்போதைய தமிழ் மேடைப் பேச்சாளர்களில் பலர் மெல்லிசைக் கச்சேரி செய்து வருகிறார்கள். மெல்லிசைப் பாடல்களில் பக்க வாத்தியங்களில் கலாட்டாவைத் தவிர வேறு எதுவுமே இருப்பதில்லை. ஆனால், இவர் ஒருவர் மட்டுமே அறிவைச் சிலிர்க்க வைக்கக்கூடிய -_ விரசம் தட்டாத வாதப் பிரதிவாதங்களை அடுக்கிய _ ஜீவத் துடிப்புள்ள பேச்சாளராக இப்பொழுது விளங்கி வருகிறார்! திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளிலும் _ அவற்றின் பிறப்பு மூலங்களிலும் _ இவருக்குள்ள பரிச்சயமும் _ தெளிவும் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த வேறு எவருக்குமே இல்லை எனலாம்! பெரியாருடன் பழகிய _ அவர் தலைமையில் இருந்த மூத்த தலைவர்கள் எத்தனையோ பேர் இன்றும் இல்லாமல் போகவில்லை. அவர்களெல்லாம் _ அரசியலில் நுழைந்த பிறகு காலப் போக்கில் இயக்கத்தின் மூலாதாரக் கொள்கைகள் _ அவர்கள் மனத்தைப் பொறுத்த அளவில் நீர்த்து ஆவியாகிப் போயிருக்கிறது. மோழையில்லாத மனம் _ வைராக்கிய சித்தம் _ பத்தியமான வாழ்க்கை _ நேரான பார்வை _ அறிவுபூர்வமான துணிச்சல் ஆகிய அனைத்தும் கைகோர்த்துக் கொண்டுள்ள உள்ளத்தில் தான் பெரியாரின் மனித உரிமைக் கொள்கைகள் நிரந்தரமாகத் தங்கியிருக்க முடியும்!
இதை ஓர் உவமையில் கூறுவதென்றால், குடும்பப் பெண்ணின் மனோபாவம் கொண்ட உள்ளத்தில்தான் இந்தக் கொள்கைகள் நிலைத்து வாழ முடியும். ஒரு குடும்பப் பெண்ணுக்கு அவளுடைய வீடுதான் _ அவளுக்கு உலகம்! வெளி உலகத்தைப் பற்றி கவலையேப்படுவதில்லை; அதை லட்சியம் செய்வதுமில்லை. ஆனால், திரைப்பட நடிகைக்கு அவளுடைய நினைவெல்லாம் ஒப்பனையும் விளம்பரமும் செறிந்த திரையுலகத்துக்குள்தான். சொந்தக் குடும்பம் பிறகுதான். அரசியல்வாதிகள் எவராக இருப்பினும் _ மனத்தால் ஒவ்வோர் அளவில் திரையுலக நடிகைகளைப் போன்றவர்கள்தான். வீரமணிக்கோ பொழுது விடிந்து பொழுது போனால் கழகமே அவருடைய வீடு. கழகத்துக்காரர்களே அவருடைய உறவினர்கள். கழகப் பிரச்சாரமே அவருடைய பொது வாழ்வு! 1979இல் தமிழினத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வந்தது. பல ஆண்டுகளாகப் பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு தொழிற் கல்லூரிகளிலும், அரசுப் பதவிகளிலும் ஒதுக்கப்பட்டு வந்த நடைமுறையை எம்.ஜி.ஆர். அரசு திடீரென மாற்றியது. ஒருவரை பிற்பட்ட வகுப்பார் என்று நிர்ணயிப்பதற்கு அவருடைய குடும்பத்தின் சமூதாய _ கல்வி நிலவரத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்ற நியதி காமராஜர் காலத்திலிருந்து கருணாநிதி ஆட்சி வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அ.தி.மு.க. அரசோ இந்த ஜீவாதாரப் பிரச்சினையில் முன்பின் யோசியாமல் ஒரு மாற்றத்தைச் செய்தது. ஒரு மாணவன் அல்லது ஒரு நபரின் குடும்ப வருவாய் அண்டுக்கு ஒன்பது ஆயிரத்துக்கு மிகைப்பட்டுவிட்டால் அவரைப் பிற்பட்ட வகுப்பாகக் கருதமுடியாது என்பதே அந்த மாற்றம்! விவரம் தெரியாத அப்பாவித் தமிழர்கள் இதில் என்ன தவறு? பிற்பட்டோரில் ஏழைகளுக்கே அந்தச் சலுகைகள் சேரவேண்டும் என்ற எண்ணத்தில்தானே இந்த மாற்றம் செய்யப்படுகிறது? என்று பேசி வந்தபோது வீரமணி ஒருவர்தான் இந்த வக்கரிப்பான கொள்கையின் பின்னாலுள்ள கோர சொரூபத்தை வெளிப்படுத்தி தமிழ்நாடு தழுவிய பெரிய கிளர்ச்சியை முன்னின்று நடத்தினார்.
நிலைத்துடிப்புள்ள பேச்சாளர்
சமுதாய _ கல்வி நிலவர அளவுகோலுக்குப் பதிலாக அல்லது அதனோடும் சேர்த்து பொருளாதார அளவுகோல் நிர்ணயிப்பது விஷமத்தனமானது. வக்கரிப்பானது. கல்வித் துறையில் இப்பொழுதுதான் தலைதூக்கி வருகின்ற தமிழினத்தை இடறிவிழச் செய்வது _ சமூகநீதிக் கொள்கையையே திசைமாற்றி _ தடம் மாற்றி விடுகின்ற குயுக்தி இது என்று போர்முழக்கம் செய்து தமிழ்நாடு முழுதும் வலம் வந்தார்.
அந்தப் போராட்டத்தில் பிற்பட்ட வகுப்புகளை எல்லாம் ஒரு முகாமுக்குள் கொண்டு வந்தார். அது மட்டுமல்ல _ பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிற்பட்ட வகுப்புத் தலைவர்களையெல்லாம் ஒரே மேடைக்குக் கொண்டு வந்தார்.
இதன் மூலம் இந்தக் கொள்கைக்கு எதிராக பிரம்மாண்டமான மக்கள் சக்தியையே எழுப்பிவிட்டார்! இந்தச் சூழ்நிலையில் 1980 ஜனவரியில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைய நேரிட்டது! அந்தத் தோல்வியை ஏற்படுத்தியதில் வீரமணிக்கு முக்கிய பங்குண்டு.
இதைக் கண்டு அஞ்சிய அ.தி.மு.க. அரசு அடுத்த சில நாள்களுக்குள்ளேயே இடஒதுக்கீடு கொள்கையில் செய்த மாற்றத்தைக் கைகழுவியதோடு, இடஒதுக்கீட்டு அளவையும் உயர்த்திவிட்டது.
வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூகநீதிக் கொள்கை அப்பொழுதே பளிங்குச் சமாதிக்குப் போயிருக்கும்! அதிலிருந்து வீரமணியின் செல்வாக்குப் பல மடங்கு உயர்ந்தது! தமிழகப் பொது வாழ்வில் அவருக்குப் பெரிய வடிவமும் அமைந்துவிட்டது!
அவருடைய தலைமயில் திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டம் எதுவாக இருப்பினும் ஒழுங்காகவும், கட்டுப்பாடுடனும் நடப்பது வழக்கமாதலால் தி.க. கிளர்ச்சிகள் தனி மரியாதையைப் பெறுவது சகஜமாகிவிட்டது!
கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் அவர் மூன்று விதமான கிளர்ச்சிகளை நடத்தி இருக்கிறார்! ஒன்று _ இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்க _ தி.மு.க.வுடனும், காமராஜர் காங்கிரசுடனும் ஒன்றுசேர்ந்து தமழ்நாடு முழுவதும் நடத்திய ரயில் மறியல் கிளர்ச்சி.
இந்தச் கிளர்ச்சி நடக்காமலேயே வெற்றிபெற்ற விவரம் ஏற்கெனவே தமிழ் முரசில் வெளியாகியிருக்கின்றது. அதையும் அடுத்து, உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களில் _ சமூகநீதிக் கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தின் முன் அவர் நடத்திய ஆர்ப்பாட்டம் _ இரண்டாவது கிளர்ச்சி!
அதையும் அடுத்து செப்டம்பர் இறுதியில் அவரும் _ அவருடைய தோழர்களும் மூன்றாவது கிளர்ச்சியொன்றை நடத்திக் காட்டினார்கள். அது ரயில்வே நிலையங்களிலுள்ள இந்தி எழுத்துக்களைத் தார் கொண்டு அழிக்கும் கிளர்ச்சி.
இந்திக்காரர்கள் _ இந்தி பேசாத மக்கள் ஆகிய இரு சாராரையுமே திருப்திபடுத்தக்கூடிய விதத்தில் சாகசமான கொள்கையொன்றை கடைப்பிடிக்க முயல்கிறது.
ராஜீவ் அரசு மத்திய ஆட்சி பணிகளில், இந்தியன் உபயோகத்தை விரிவுபடுத்திக் கொண்டே போவதும், பதவி உயர்வு பெற இந்தி தெரிந்திருப்பது அவசியம் என்ற நிபந்தனை விதிப்பதும் _ தமிழினத்தைப் பாதிக்கக் கூடியது என்ற காரணத்தை முன்வைத்து, இந்திப் பெயர்களை ரயில் நிலையங்களில் அழிக்கும் கிளர்ச்சியை திராவிடர் கழகம் நடத்தியது.
உணர்ச்சிமயமான காட்சி
வீரமணி சென்னையில் இக்கிளர்ச்சியை நடத்தினார். இவரை வழியனுப்பி வைக்க நடந்த கூட்டத்தில் கருணாநிதி, ஆவேச உரையாற்றிவிட்டு, தார்ச் சட்டியையும் – பிரஷையும் வீரமணியின் கையில் கொடுத்து, அவருக்குப் பொன்னாடையும் போர்த்தி வழியனுப்பி வைத்தபோது இந்த வழியனுப்பு விழாவுக்கு வந்திருந்த கூட்டம் முழுவதும் உணர்ச்சிமயமாக மாறியது.
அடுத்து வீரமணி இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். இது பதினான்காவது தடவை இவர் சிறைபுகுவது _ அதுவும் அய்ம்பதே வயதுக்குள்! இரண்டு மூன்று நாள்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட பிறகு, விடுதலையும் செய்யப்பட்டுவிட்டார். திராவிடர் கழகம் _ தி.மு.க. _ அண்ணா தி.மு.க. _ மூன்றுக்கும் ஒரு பொதுக் கொள்கை உண்டென்றால், அது இந்தி எதிர்ப்புதான்.
இந்த மூன்று கழகங்களில் ஒன்று இந்தி பெயரழிப்பு இயக்கத்தை முன் நின்று நடத்துகிறது. இன்னொரு கழகம் _ இதற்குத் தார்சட்டியைக் கொடுத்து ஆதரவு தருகிறது. மற்றொரு கழகத்தின் ஆட்சியோ (எம்.ஜி.ஆர்_அ.தி.மு.க.) _ இந்தக் கிளர்ச்சிக்காக வீரமணியைக் கைது செய்து _ விடுதலையும் செய்கிறது! இதுதான் சுவையானது!’’ என்று ‘தமிழ் முரசு’ எழுதியிருந்தது.
(நினைவுகள் நீளும்…)