பெண்ணால் முடியும்!

ஜனவரி 16-31 2019

ஏழ்மையிலும் சாதித்த இளவழகி! (கேரம்)

 தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 250 பதக்கங்கள் வென்றிருக்கிறார்.

இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும்.

சர்வதேச அளவில்125 பதக்கங்களை வென்றிருக்கிறார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இளவழகி பிறந்து வளர்ந்தது வியாசர்பாடியில்தான். பிராட்வேயில் தள்ளுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் ஏழை கூலித் தொழிலாளி இருதயராஜின் மகள் இளவழகி. மூன்று முறை உலக சுண்டாட்ட (கேரம்) வாகையராக வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கேரம் விளையாட்டு மீது இளவழகிக்குத் தனியாத தாகம். ஆறு வயது முதலே அக்கம் பக்கத்தில் கேரம் விளையாடத் தொடங்கிவிட்டார். அந்த நேரத்தில் பள்ளிகள் அளவிலான கேரம் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இளவழகி வெற்றி பெற்றார். பரிசாகக் கிடைத்தது ஒரு கேரம் போர்டு. அந்தப் பரிசு மேலும் ஊக்கப்படுத்தியது. பத்து வயதிலேயே மாநில அளவிலான போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். பின் தேசிய அளவிலும் முத்திரை பதிக்கத் தொடங்கினார்.

மாலத் தீவில் நடந்த கேரம் ஆசிய வாகையர்  போட்டியில் பங்கேற்று ‘கேரம் ஆசிய வாகையர்’ என்ற பெருமையோடு தமிழகம் திரும்பினார். 2006இல் டெல்லியில் நடந்த கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று முதன்முறையாக உலக சாம்பியன் ஆனார். வீட்டின் வறுமை வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க போதிய நிதி இல்லாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள நல்ல உள்ளங்களின் பண உதவியால் வெளிநாடுகளுக்குச் சென்றார்.

20008இல் பிரான்சில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 250 பதக்கங்கள் வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். சர்வதேச அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். தங்கப் பதக்கங்கள் மட்டும் 111. உலக கேரம் சாம்பியன் பட்டம் வென்றபோது தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்தது. அந்தப் பணத்தில் தந்தைக்கு மோட்டார் வண்டியை வாங்கிக் கொடுத்தார்.

இவரின் வெற்றியை அங்கீகரித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வேலையும் கொடுத்துள்ளது. ‘உலக கேரம் சாம்பியன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, ஏராளமான சிறுவர், சிறுமிகளுக்கு கேரம் விளையாட்டைக் கற்றுக் கொடுத்து வருகிறார். கேரம் என்பது செஸ் விளையாட்டைப் போலவே அறிவுபூர்வமான விளையாட்டு. வறுமை, புறக்கணிப்பு போன்றவற்றைத் தாண்டி தன்னிடம் இருந்த நேரம் திறமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்து, தமிழகத்திற்கு புக-ழும் சேர்த்துள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்து இவ்வளவு சாதனைகள் புரிந்த, இன்னும் ஏராளாய் சாதிக்க இருக்கும் இளவழகி எளிய குடும்பத்து இளைய தலைமுறையினர்க்கு ஓர் உந்துசக்தி!             

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *