அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (36)

ஜனவரி 16-31 2019

பெண்கள் நதியாக மாற முடியுமா?

சிகரம்

விஷ்ணுவுக்கு முதலில் கங்கை, சரஸ்வதி, லக்ஷ்மி என மூன்று பத்தினிகள் இருந்தனர். மூவரும் வைகுந்தத்திலேயே வசித்து வந்தனர். அம்மூவர் மீதும் சம அளவில் அன்பும் காதலும் கொண்டிருந்தார் மகாவிஷ்ணு. ஒரு சமயம் அம்மூன்று தேவிகளும் தம்மைச் சூழ்ந்திருக்க, பரமாத்மா படுத்திருந்தார். அப்போது விஷ்ணுவின் திருமுக அழகில் ஆழ்ந்திருந்த கங்கை அவர்மீது அதிகக் காதல் கொண்டு அவரைப் பார்த்துச் சிரித்தாள். அதைப் பார்த்து பரமாத்மாவும் புன்னகை புரிந்தார். அவர்கள் இருவரும் ஏதோ ஒரு பொருளுடன் சிரிக்கின்றனர் என்று எண்ணி சரசுவதி பொறாமைப்பட்டாள். ஆனால், லக்ஷ்மி தேவியோ, அவ்வாறு எண்ணாது அவர்களைப் பார்த்துத் தானும் சிரித்தாள். உடனே சரசுவதிக்கு ஆத்திரம் எழுந்தது. “மூன்று பத்தினிகளை உடையவரான நீர் ஒருத்தியின்மீது மட்டும் அதிகமாகக் காதல் கொண்டிருக்கக் காரணம் யாது? எங்களைவிடக் கங்கையிடம் அப்படி என்னதான் கண்டுவிட்டீர்? ஏன் இப்படி எங்களை அவமதிக்கிறீர்?’’ என்று சரமாரியாகக் கேட்கத் தொடங்கினாள். அதைக் கேட்ட விஷ்ணு சட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.

அதைக் கண்டு சரசுவதிக்குக் கோபம் அதிகரித்தது. அவள் கங்கையைப் பார்த்து, “அடிக்கள்ளி! நம் கணவருடன் இணையாகக் காதல் புரியாமல் அவருடன் ஏன் கள்ளக் காதல் புரிகிறாய்? அவர் என்ன உனக்கு மட்டுந்தான் கணவரா?’’ என்று ஆவேசத்துடன் அவளது தலைமுடியைப் பிடித்து இழுத்தாள். அப்போது லக்ஷ்மி நடுவில் புகுந்து தடுக்கவே, “நீயும் இவள் கருத்திற்கு இணங்குகிறாயா? என்னைத் தடுத்த நீ நதியாகவும் செடியாகவும் வடிவம் பெறுவாயாக!’’ என்று சபித்தாள்.

“சாதாரண விஷயத்துக்கெல்லாம் இவ்வாறு ஆத்திரமடையும் இவளா கலைமகள்? நமது பிராணநாதரை மோசக்காரர் என்று நிந்தித்த இவள்தான் மோசக்காரி. சாந்த வடிவினளான லக்ஷ்மியை நதியாக மாறும்படி சபித்த இவளை நதியாக மாறும்படி நானும் சபிக்கிறேன்!’’

அப்போது லக்ஷ்மி அமைதி வடிவு கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள். உடனே கங்கைக்கு ஆத்திரம் பொங்கியது. “சாதாரண விஷயத்துக்கெல்லாம் இவ்வாறு ஆத்திரமடையும் இவளா கலைமகள்? நமது பிராணநாதரை மோசக்காரர் என்று நிந்தித்த இவள்தான் மோசக்காரி. சாந்த வடிவினளான லக்ஷ்மியை நதியாக மாறும்படி சபித்த இவளை நதியாக மாறும்படி நானும் சபிக்கிறேன்!’’ என்று சபித்துவிட்டாள். அதைக் கேட்ட சரசுவதி, “நீயும் நதியாகப் பூலோகத்தில் அலையக் கடவாய்!’’ என்று சபித்துவிட்டாள்.

அப்போது நாராயணர் திரும்பி வந்தார். அவர் கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் கண்கள் சிவப்புற விம்மிக் கொண்டிருந்த சரசுவதி தேவியைத் தம் மார்பில் சேர்த்து அணைத்தபடி புத்திமதிகளைக் கூறினார். பிறகு, “உங்களுக்கிடையே நீங்கள் சபித்துக்கொண்டபடி நதிகளாகப் பூலோகத்தில் சிலகாலம் இருப்பீர்கள். லக்ஷ்மி, பத்மாவதி எனும் நதியாகவும், சரசுவதி, கங்கை ஆகிய இருவரும் தங்களது இயற்பெயர்களுடனும் நதிகளாக வடிவம் பெறுவீர்கள். அனைவரும் எனது அமிசமான சமுத்திரராஜனுடன் கலந்து உறவாடுவீர்கள். லக்ஷ்மி, நீ துளசி எனும் செடியாகவும் மாறி பூலோகத்தில் அனைவராலும் போற்றப்படுவாய். இதைத் தவிர என் சக பத்தினிகளான உங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுக்குப் பயனை அடைவீர்கள். சரஸ்வதி பிரம்மதேவனுக்குப் பத்தினியாகவும், கங்கை, சிவபெருமானுக்குப் பத்தினியாகவும் மாறுவீர்கள்!’’ என்று கூறினார்.

அதைக் கேட்ட மூன்று தேவிகளும் கண்ணீர் விட்டு அழலாயினர். லக்ஷ்மி தேவி நாராயணரைப் பார்த்து, “பிராணநாதா! சாபம் முடிந்து நாங்கள் மூவருமே உங்களிடம் திரும்பி வந்துவிடுகிறோமே. எதற்கு அவ்விருவரைப் பிறர் மனைவிகள் ஆகச் சொல்கிறீர்கள்?’’ என்று வேண்டினாள். அதற்கு விஷ்ணு, “சாந்தகுணமுள்ளவளான நீ மட்டுந்தான் என்னுடன் இருக்கலாம். உன் வேண்டுகோளின்படி கங்கை சிவனது தலையில் சிறிது காலம் இருந்துவிட்டு என் பாதத்தை அடைவாள். சரஸ்வதி பிரம்மதேவனுடன் சிலகாலம் இருந்துவிட்டுப் பின்னர் என்னை அடைவாள்’’ என்று கூறினார் என்கிறது இந்து மதம். நதியென்பது மலையில் உற்பத்தி ஆகி ஓடிவருவது. அதுதான் நடைமுறை; அறிவியல் உண்மை. ஆனால், பெண் நதியாக மாறினாள் என்கிற இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

கங்கை பகீரதன் தவத்தினால் வந்ததா?

சூரிய வமிசத்தில் பிறந்தவன் சகரன் என்னும் அரசன். அவனுக்கு வைதர்ப்பி, சைப்பியை என்னும் இரு மனைவியர் இருந்தனர். சைப்பியைக்கு அஸமஞ்சன் என்னும் மகன் பிறந்தான். தனக்கும் பிள்ளை வேண்டும் என வைதர்ப்பி சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தாள். அதன் பயனாக அவள் கர்ப்பம் தரித்து, ஒரு மாமிசப் பிண்டத்தைப் பெற்றெடுத்தாள். அதைக் கண்டு அழுதவாறு அவள் மீண்டும் சிவபெருமானைப் பிரார்த்தித்தாள். அவரும் ஒரு பிராமணர் வேடந்தரித்து வந்து அம்மாமிசப் பிண்டத்தை அறுபதாயிரம் துண்டுகளாக்கினார். அவையனைத்தும் உயிர் பெற்று அவளுக்கு மைந்தர்களாயினர். ஆனால், கபில முனிவரின் சாபத்தினால் அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அதனைக் கண்ணுற்ற அஸமஞ்சன், தன் வமிசத்தைப் பரிசுத்தமாக்க எண்ணி வானிலிருந்து ஆகாச கங்கையைக் கொண்டு வருவதற்காகக் கடுந்தவம் புரிந்தான். அவனுக்குப் பிறகு அவன் மகனான அம்சுமான் என்பவனும், அவனுக்குப் பின்னர் அவன் மகனான பகீரதன் என்பவனும் அந்தத் தவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். கடைசியில் பகீரதனின் தவத்தின் பயனாகக் கங்கை, நதி உருவெடுத்து சரஸ்வதியின் சாபத்திற்கேற்பப் பூமியில் வந்து இறங்கினாள். பகீரதனின் அருந்தவத்தால் அவள் நதியாக உருவெடுத்ததால் அவளுக்கு பாகீரதி என்னும் பெயரும் உண்டாயிற்று. கங்கை நதிக் காற்றுப் பட்டாலே மனிதர் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். அந்நதியில் மூழ்கிக் குளித்தால் முற்பிறவியில் உண்டான பிரம்மஹத்தி முதலான குற்றங்களும், பாபங்களும் தீர்ந்துவிடும் என வேதங்களில் கூறப்பட்டுள்ளன. விஷ்ணு அளித்த வரத்தின்படி பாரத நாட்டு மக்களெல்லாம் அவளை வணங்குவார்கள். அவளை வணங்குபவனுக்கு அசுவமேத யாகம் செய்த புண்ணியம் உண்டாகும். அதனால் வைகுண்ட பதவியையும் அடைவான்’’ என்றும், சரஸ்வதி சாபத்தால் கங்கை வந்தது என்றும், பின் பகிரதன் தவத்தால் கங்கை வந்தது என்றும் உளறுகிறது இந்து மதம். ஆக சாபத்தால் பெண் நதியானாள், தவத்தால் நதி வந்தது என்று மூடத்தனமான, அறிவியலுக்கு எதிரான கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *