ஆனாலும் அவர் என்றும் நம்மிடம் வாழ்வார்!

டிசம்பர் 16-31 2018

தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று இயற்கை வேளாண்மை பற்றி பிரசாரம் செய்ததோடு, பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்தார்.

சேகரித்த நெல்லை தன் வயலில் விதைத்துப் பெருக்கி ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுத்துப் பரவலாக்கினார். அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல்ரகங்கள் இவரால் மீட்கப்-பட்டன. இந்த ரகங்களுக்கு இருந்த சந்தை மதிப்பைப் பார்த்து, பல விவசாயிகள் முழுமையாக பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினார்கள்.

இந்தப் பாரம்பரிய விதைநெல் பரிமாற்றத்தை பெரும்திருவிழாவாக நடத்தத் தொடங்கினார். `நெல் திருவிழா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாக்களில் இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் பங்கேற்பார்கள். ஒரு விவசாயிக்கு 2 கிலோ வீதம் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும். அதைப் பயிர் செய்து பெருக்கி அடுத்தாண்டு திருவிழாவில் நான்கு கிலோவாகத் திருப்பித்தர வேண்டும். இப்படி ஒன்றரை லட்சம் விவசாயிகள் கைகோத்-திருக்கிறார்கள். 174 நெல் ரகங்கள் மீட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

2014-இல்  பிலிப்பைன்ஸில் உள்ள, ‘உலக நெல் ஆராய்ச்சி  நிறுவனம்’ நடத்திய கருத்தரங்கத்தில் பங்கேற்றார் ஜெயராமன். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய சில மாதங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டது.

“தமிழ்நாட்டுல பத்தாயிரம் நெல் ரகங்கள் இருந்துச்சு. எல்லா ரகங்களையும் அமெரிக்காவுல இருக்கிற சில தனியார் நிறுவனங்கள் கொண்டு போய் சேமிச்சு வச்சுட்டாங்க. எதிர்காலத்துல, பேடன்ட் வாங்கிட்டு நம்மகிட்டையே விப்பாங்க. அதையெல்லாம் மீட்கணுன்னா பெரிய பெரிய நிறுவனங்களோட போராடணும். நிறைய பேர் வரணும்’’ என்றார்.

“`வர்ற மே மாதம் நெல் திருவிழா வேலைகள் இருக்கு… உடம்பு இங்க கெடந்தாலும், மனசு வயக்காட்டுல கெடக்கு’’ என்ற வேளாண் தொண்டர் செயராமனை புற்றுநோய் பற்றிச் சென்றுவிட்டது. அன்னாருக்கு நமது வீரவணக்கம்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *