மாட்சிகள் காட்சிகள்
மின்சாரம்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சுயமரியாதை நாளாக பெரும் எழுச்சியுடன் கழகத் தோழர்களால் கொண்டாடப்பட்டது.
கஜா புயலால் தங்களின் உடைமைகளை, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விழா மேடையில் கஜா புயல் நிவாரண நிதி உண்டியல் வைக்கப்பட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா ஆகியோர் ரூ.15 ஆயிரத்தை முதலில் உண்டியலில் செலுத்தி தொடங்கி வைத்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வரிசையில் வந்த மனிதநேய செம்மல்கள் கழகத் தோழர்கள் உண்டியலில் நிவாரண நிதியை அளித்தனர்.
விடுதலை சந்தா வழங்கும் விழா
ஆசிரியரின் பிறந்த நாள் விழா, விடுதலைச் சந்தா வழங்கும் நிகழ்வாகவும் கொள்கை பரப்பும் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. விடுதலை சந்தா மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகைகளை பலரும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் பிறந்த நாள் விழாவில்,
திமுக பொருளாளர் க.துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்ற, பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி அவர்கள் அறிமுக உரையாற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு தந்தைக்கு ஒரு தனயன் கூறும் வாழ்த்தாக, மரியாதையாக இதனை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆசிரியர் அவர்களின் துணைவியார் அவர்கள் ஆசிரியரின் தொண்டுக்குப் பெரும் துணையாக இருப்பதால், அவர்களையும் வாழ்த்தக் கடமைப்-பட்டுள்ளோம்.
இன்றைய தினம் நாட்டில் ஒரு பாசிச ஆட்சி நடை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில், நமது ஆசிரியர் அவர்களின் தலைமை மிகவும் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு பிரச்சினையின்போதும் அது தொடர்பான அறிக்கைகள், கூட்டங்கள், போராட்டங்கள் என்பன ஆசிரியர் அவர்களின் அன்றாடப் பணியாகவே இருந்து வருகின்றன. இவர் நடத்துபவை வெறும் அடையாளத்திற்-கானவை அல்ல. உணர்வு பூர்வமானவை. மதவாதமும், ஆணவக் கொலைகளும் தலைதூக்கி நிற்கும் நிலையில், ஒத்தக் கொள்கையாளர்களை ஒருங்கிணைத்து களத்தில் போராடி வருகிறார்’’ என்றார்.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
“திராவிடர் கழகத்தின் இருப்பையும், அதன் தலைமையின் அவசியத்தையும் சரியாக உணர்ந்துள்ள இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தந்தை பெரியார்முன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு உரையாற்ற கிடைத்த வாய்ப்புப்போல எனக்குக் கிடைக்க-வில்லை. ஆனால், தமிழர் தலைவர் தலைமையில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தற்காக நான் பெருமைப்படுகிறேன். ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கில் தோழர் அருள்மொழியோடு நான் மாணவனாக இருந்தபோது கலந்துகொண்டு உரையாற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது என்பதைப் பெருமையோடு நினைவு கூர்கிறேன். இடதுசாரி இயக்கங்களான கம்யூனிஸ்டுகளும், நாமும் இணைந்து போராடவேண்டிய காலகட்டம் இது.
நாடு சனாதனத்திடம் சிக்கித் தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொட்டம் அதிகரித்துவிட்டது. பா.ஜ.க.வை இயக்குவது ஆர்.எஸ்.எஸே! பசுவின் பெயரால் படுகொலைகள் தாழ்த்தப்பட்-டோரும், சிறுபான்மையினரும் தாக்கப்படும் கொடுமை – இவற்றை முறியடிக்க வேண்டும். தமிழர் தலைவர் ஏன் நீண்ட நாள் வாழ-வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்; இந்தத் தீயப் பிற்போக்குச் சக்திகளை முறியடிப்-பதற்குத்தான்.ஜாதி ஒழிப்பு சமத்துவக் கொள்கையை அடைகாக்கும், பாதுகாக்கும் அரணாக நமது ஆசிரியர் அவர்கள் திகழ்கிறார்கள் – அதற்காக அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
திராவிடர் கழகத்தை ஆசிரியர் அவர்கள், என்னைவிட அதிக அளவில் மூத்தவர் அவர். அவர் சதா சுற்றிக் கொண்டே இருக்கிறார். இளையவனாகிய என்னால்கூட அவருடன் ஈடுகொடுக்க முடியவில்லை.
உலகம் முழுவதிலும் உள்ள பகுத்தறிவாளர்-களை ஒருங்கிணைக்கும் தந்தை பெரியார் குறித்த பன்னாட்டு மாநாடுகளை நடத்துகிறார். தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தால், தமிழர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் சாதாரண மானவையல்ல – ஆச்சரியமானவை’’ என்று வியந்தார்.
திராவிடர் கழகம் ஒரு பவர்- ஜெனரேட்டர் – தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தமிழர் தலைவர் இல்லத்திற்குச் சென்று மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
“இது பிறந்த நாள் விழா அல்ல – இனத்தைக் குறித்த விழாவே இது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்களைப் பார்த்தேன் – பார்க்கிறேன். எனக்கொரு ஆச்சரியம், திராவிடர் கழகத்தில் இருந்தால், ஒரு பஞ்சாயத்து உறுப்பினராகக்கூட ஆக முடியாது பதவி கிடையாது, அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு இளைஞர்கள்?
இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லுவதில் நமது ஆசிரியர் வீரமணி வெற்றி பெற்றுவிட்டார்.
பெரியார் ஒரு தனி மனிதராக இருந்து பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, புராணங்களை எதிர்த்து இருண்டு கிடந்த சமுதாயத்தில் ஒரே ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ஒரு தனி மனிதராக என்றால், சாதாரணமா?
மிருகமாக, அடிமையாக இருந்த ஒரு இனத்திற்கு சுயமரியாதை உணர்வினைவூட்டி மனிதனாக மாற்றிய பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால், நான் இல்லை, நீங்கள் இல்லை. ஏன் – இந்த இனமே இல்லை.
அய்யா இல்லை, அண்ணா இல்லை, கலைஞரும் இல்லை. நம்மோடு இருக்கும் தலைவர் நமது ஆசிரியர்தான். தி.மு.க. தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் இருக்கிறார் – அவரிடம் நான் சொன்னேன், நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; இனத்தின் தலைவராக இருக்கவேண்டும்; வெறும் கட்சியின் தலைவராக இருந்தால் பயனில்லை. இலட்சியம் இல்லையென்றால் எந்தக் கட்சியும் நிலைக்காது.
தி.மு.க. என்பதும் ஒரு கட்சியல்ல. ஓர் இயக்கம் (Movement). பார்ப்பனர்களுக்குள்ள இனவுணர்வு நமக்கு வேண்டும்.
“பெண்கள் விஷயத்தில் சங்கராச்சாரியார் இப்படி நடந்துகொண்டுள்ளாரே’’ என்றால், “அதில் ஒன்றும் தோஷமில்லை. கடவுள் கிருஷ்ண பரமாத்மா எப்படியெல்லாம் இந்த விஷயத்தில் நடந்து கொண்டுள்ளார் தெரியுமா?’’ என்றும்,
“கொலை வழக்கு இருக்கிறதே – உங்கள் ஜெகத்குரு மீது’’ என்றால், “கடவுளே துஷ்டமர்களை கொலை செய்திருக்கிறாரே’’ என்றும் சாமர்த்தியமாகப் பேசித் தங்கள் இனவுணர்வைக் காட்டுகிறார்கள்.
நமக்கும் அந்த இன உணர்வு தேவை. இந்தத் தலைமுறையினருக்கு நமது பழைய வரலாறு தெரியாது. எனக்கு ஏற்பட்ட வலி என் மகனுக்குத் தெரிவதில்லை.
திராவிடர் கழகம் என்பது ஒரு பவர் ஜெனரேட்டர். அது அனைவருக்கும் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கும்.
அய்யாவிற்குப் பிறகு, அண்ணாவிற்குப் பிறகு, கலைஞருக்குப் பிறகு, நமக்குக் கிடைத்த தலைவர் வீரமணி” என்று பெருமிதங்கொண்டார் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
எனக்கென்று பிறந்த நாள் விழா தேவையில்லை. பெரியார் பிறந்த நாள் ஒன்றே போதும். இங்கே நாம் கூடியிருப்பது கொள்கைக் கூட்டணி. அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தையும், தி.மு.க.வையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார். நான் முன்பு சொன்னதுபோல விடுதலை சிறுத்தைகளையும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கியாகும்.
விடுதலை’ என்ற போர் வாள் நம் இனத்தின் பாதுகாப்பு அரணாகும். 84 ஆண்டுகளாக நடக்கும் மூத்த பத்திரிகை விடுதலை’. அதனால், ஆட்சிகள் மாற்றப்பட்டதுண்டு. ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெற்ற வரலாறு விடுதலை’க்கு உண்டு.
வாழும் பெரியார் என்று என்னை மட்டுமல்ல, யாரையும் சொல்லாதீர்கள். பெரியார் மறையவில்லை – தத்துவத்தால் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் உள்ளார். பெரியார் ஒரு தனி மனிதரல்ல – ஒரு சகாப்தம் என்றார் அறிஞர் அண்ணா.
பெரியாரின் கொள்கை முக்கியமாகத் தேவைப்படும் கால கட்டம் இது. மத்தியிலே இருக்கக் கூடிய ஆட்சி சூழ்ச்சியும், தந்திரமும், வன்மமும் கொண்டது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்பார்கள். அதேநேரத்தில், ‘நீட்’டைக் கொண்டு வந்து திணிப்பார்கள்.
மதவாதமும், ஜாதிய வாதமும் தலைதூக்கி நிற்கிறது. இந்த நேரத்தில் நம் கொள்கைக் கூட்டணி இணைந்து போராடித் தகர்க்கவேண்டும்.
அரசியல் கூட்டணிக்கு நிரந்தரப் பகைவர்களோ, நிரந்தர நண்பர்களோ கிடையாது. கொள்கைக் கூட்டணிக்கு நிரந்தர நண்பர்களும், நிரந்தர பகைவர்களும் உண்டு.
ஆணவக் கொலைகளை அனுமதிக்கக் கூடாது. ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக படை அமைக்கப்படும். ஒரு பாசறை உருவாக்கப்படும் விரைவில். கூலிப்படைகள் வந்தாலும், அதையும் இந்தப் படை சந்திக்கும்.
முதற்கட்டமாக ஓசூரில் வரும் 30 ஆம் தேதி மாலை ஜாதி – தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும். இந்தக் கொள்கைக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் என்று உணர்ச்சி பொங்க அறிவித்தார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி கூறிட, நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கழக வெளியுறவு செயலாளர் வீ. குமரேசன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினர்.