தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24

டிசம்பர் 16-31 2018

நான் ஒரு சமத்துவத் தொண்டன்

தந்தை பெரியார்

நான் சமுதாயச் சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். ஜாதி அமைப்பை ஒழிக்க, “கடவுள், மதம்’’ மற்றும் அவை சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும், ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளை சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா?

நானோ என் பிரச்சாரத்தில், கடவுளே இல்லை என்று சொல்வதற்காகவே சிறுமைப்-படுத்தி, இழிவுப்படுத்தி _ செய்கையாலும் காட்டிக் கொண்டே,- நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில், எனது 92ஆ-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை-யில் பட்டது என்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படிக் “கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி’’ நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.

இந்த நிலையில் எனது 92ஆ-வது வாழ்நாள் முடிந்து 93ஆ-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக் கொண்டு இருப்பானா? என்று, எந்த _ எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கைப் பக்தனும் நினைத்து _ அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்-தாலும் கடவுளாவது வெங்காயமாவது என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பதுதான் என் கருத்து. அதனாலேயே என் 93ஆ-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

மக்களிடையே மாறுதல்

சென்ற என் 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில், “என் 91ஆ-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச்சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம்’’ என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கிறேன்.

கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயங்களால் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கிறேன். இந்த நிலைதான் என் உற்சாகத்திற்கும் மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவிற்கும் காரணமாகும்.’’

சலிப்பை நீக்கிய ஆட்சி

இந்தப்படி எழுதிய நான் முந்திய ஓர் ஆண்டில் எனக்கு மனச்சலிப்பு ஏற்பட்டு, “நான் ஏன் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று’’ என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும், திரு. காமராஜர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகம் ஊட்டினர்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்கள் ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நன்னம்பிக்கையும், உற்சாகமும் அடைந்தேன்.

சாதி முறையின் மூலபலம்?

உண்மையில் என் தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நம் நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் ஜாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது. ஏன் எனில் ஜாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.

இப்போதும் சொல்லுவேன்: நாகரித்திற்காகச் சிலர் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும்.

மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்து ஜாதியை நிலைநிறுத்துவதுதான், ஜாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவையாகும்.

உண்மையில் ஜாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நம் மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் என் உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நம் தி.மு.க. தேர்தலையும் (பொதுத்தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்.

ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பு இல்லை

அதாவது, “கடவுளைச் செருப்பால் அடித்ததாக’’ 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம்-, சுதந்திரா இயக்கம்,- ஜனசங்க இயக்கம் முதலிய ஜாதி துவேஷமற்ற, தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு _230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றிபெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து _ அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி, நமது ஜாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகி விட்டது.

எனது திட்டம்

இந்த நிலையில் நான் நமது மக்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது எல்லாம் கோவில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல் மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமலும் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

மற்றும் நான் நினைக்கின்றேன், அண்மையில் ஒரு மாநாடு கூட்டி கோவில்களுக்குப் போகின்றவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதன் மூலம், போகாமல் இருக்கச் செய்யலாமா என்று யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்-கின்றேன்.

இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.

(தந்தை பெரியார் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு வழங்கிய செய்தி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *