பா.ஜ.க. அரசியல் போர்வையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆணைப்படி மோடி தலைமையிலான (மத்திய) பாசிச ஆட்சியை பதவியிலிருந்து விரட்டிட, ஓர் அம்சத் திட்டமாக (One Point Program) எதிர்க்கட்சிகள் அனைவரும் காங்கிரசு கட்சித் தலைமையில் தி.மு.க., இடதுசாரிகள், மம்தாவின் திரிணாமுல் உள்பட 21 எதிர்க்கட்சிகள் ஓர் அணியாக நேற்று (10.12.2018) டில்லியில் அ.இ. காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் தலைமையில் இணைந்திருப்பது மிகவும் தெம்பூட்டுவதாகவும், பா.ஜ.க. ஆட்சி என்னும் பாசிசத்திலிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் அரிய பொது-நோக்கத்துடன் இணைந்து ஒரே மேடையைக் கட்டியுள்ளது, ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க. ஆட்சி, கட்சியினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு
ஏற்கெனவே பா.ஜ.க. தலைமையில் 2014 இல் அமைந்த (என்.டி.ஏ.) தேசிய ஜனநாயக கூட்டணி என்ற கூட்டணியிலிருந்த பல கட்சிகள், முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியதும், அது காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து கைகொடுத்ததானது _ அரசியலில் நோக்கர்களுக்குப் புதிய கவனத்தைச் செலுத்தவேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டது.
21 கட்சிகள் சரியான ஒருங்கிணைப்பு
தி.மு.க. தலைவர் கலைஞர் காலத்தில், கூட்டணியில் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கலந்த மரியாதையை தி.மு.க.வின் புதிய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க.வுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், அகில இந்திய அரசியலிலும் தி.மு.க. ஒரு இன்றியமையாத கட்சி என்பதற்கான அங்கீகார முத்திரையே ஆகும்!
பிரதமர் மோடி _ அமித்ஷா ‘‘கம்பெனி’’ எதிர்க்-கட்சியினரின் ஒற்றுமையைக் குலைக்க எல்லாவித ‘சாம _ பேத _ தான _ தண்ட’ முயற்சிகளையும், வித்தைகளையும் செய்து பார்த்தது. ஆனால், இந்த ஒருங்கிணைந்த 21 கட்சிகள் அணி _ பா.ஜ.க.வை, ஆர்.எஸ்.எஸ்.சை மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற பொது நோக்கில், டில்லியில் கூடி அருமையான ஓர் ஆக்கபூர்வ தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது; ஜனநாயகத்தினைப் புதைக்க ஆளும் வர்க்கம் தோண்டும் குழியில், குழிதோண்டியவர்-களையே விழ வைக்கும் என்பதற்கான முதல்வெற்றி மணியோசையே இந்த ஒருங்கிணைப்பாகும்.
தி.மு.க. தலைவரின் செறிவான கருத்துரை
அக்கூட்டத்தில் தி.மு.க. சார்பாக அருமையான மய்யக் கருத்தை தி.மு.க.வின் தலைவர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்திருக்கிறார்.
‘‘…ஒட்டுமொத்தமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக்கூடிய சிறு சிறு பிரச்சினைகள், மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும், அவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி, மதவெறி பிடித்திருக்கக் கூடிய ஓர் ஆட்சி; மோடி தலைமையில் நடந்துகொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு ‘மெகா’ கூட்டணி அமைத்து நாம் போராடவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கருத்துகளை இந்த அறிவார்ந்த அவை முன்பு வைக்கிறேன்’’ என்று ரத்தினச் சுருக்கமாகப் பேசியுள்ளார்.
மானமிகு சுயமரியாதைக்காரரான நமது இனமானத் தலைவர் கலைஞர் மறையவில்லை; அவரால் செதுக்கப்பட்டு அரசியல் களத்தில் போராட்ட தளபதியாக உள்ள நமது சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின்மூலம் தொடர்கிறார்; திராவிடம் அனைத்திந்தியாவிற்கும் _ மதவெறித் தீயை மூட்டிவரும் பாசிச நெருப்பை அணைக்க வழிகாட்டியாக இருக்கிறது என்பதை எண்ணி தாய்க் கழகம் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது _ வாழ்த்துகிறது!
மூன்று முக்கிய முழக்கங்கள்!
முக்கிய சமூகநீதிக் கட்சிகளான மாயாவதி-யின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி, பா.ஜ.க.வை விட்டு வெளியேறியுள்ள குஷ்வாகாவின் கட்சியும் இந்த அணியில் இணையவேண்டும். பா.ஜ.க.வின் கீழிறக்கம் (Count Down) தொடங்கிவிட்டது.
இந்த அணியின் மூன்று முக்கிய ஒலி முழக்கங்கள் வருமாறு:
1. பாசிச மதவெறி ஆட்சியை அகற்றுவோம்!
2. ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்!
3. அனைவரும் இதற்காக ஓரணியில் நிற்போம் _ திரளுவோம்!
‘‘வெற்றி நமதே!’’
1. Send out Fascist Saffron- Misrule
2. Safeguard our Democracy!
3. Stay as one front!
‘Victory is Ours ‘’
என்பதே தொடரட்டும்!
திராவிடர் கழகத்தின் வாழ்த்துகள்!!
– கி.வீரமணி
ஆசிரியர்,
‘உண்மை’