Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண்ணால் முடியும்!

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கிராமத்து ஏழைப் பெண்!

கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுநிலைச் சமூகப் பணி முதலாமாண்டு படிக்கும் அந்தோணியம்மாள், தமிழர்களின்  மரபார்ந்த விளையாட்டுகளில் ஒன்றாகக்  கருதப்படும் கபடிமீது ஆர்வம்கொண்டவர். தேசிய மற்றும் ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அந்தோணியம்மாள், புரோ கபடியில் இடம்பெறும் உத்வேகத்துடன்  கடலூர் சில்வர் கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்தோணியம்மாளின் சொந்த  ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டிபுரம் என்ற சிறு கிராமம். அப்பா சவரிமுத்து, பால் வியாபாரி. அம்மா ரீட்டாமேரி, கூலித் தொழிலாளி.  அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது அந்தோணியம்மாளுக்குக் கபடி   மீது ஆர்வம் உண்டானது.

“பள்ளி முடிந்து வீடு திரும்பறதுக்குள்ள ஆத்து மணல்ல, தெருவுல என ரெண்டு இடத்துல கபடி விளையாடிடுவோம். விளையாடும்போது கால் முட்டி பெயர்ந்துடும். கை, கால்களில் சிராய்ப்பு ஏற்படும். சில நேரம் மண்டைகூட உடையும். அடுத்த நாள் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துத்-தான் எங்கெல்லாம் அடிபட்டிருக்குன்னு தெரியும்.

ஆனா, இப்படி அடிபடுதேன்னு நாங்க கவலைப்பட்டதே இல்லை.  புழுதி படிய விளையாட ஆரம்பிச்சா, சுத்தியிருக்க எல்லாமே மறந்துபோகும். அரைக் கால் சட்டையும் அழுக்கு பனியனும் இருந்தாலே போதும் எங்களுக்கு. புல்தரையும் போர்க்களமாகும், வயல்வெளியும் மைதானமாகும்’’ என்கிறார் சிரித்தபடி.

சர்வதேச வெற்றி

“மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் மட்டுமே பங்கெடுத்த அந்தோணியம்மாளுக்கு அவர் பிளஸ் 1 படித்தபோது சங்கராபுரத்தில் நடந்த, மாநில “சாம்பியன்ஷிப்’’ போட்டி தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது. அப்போ அங்கே வந்திருந்த மதுரை யாதவா கல்லூரி பயிற்சியாளர் தேவா, ஜனார்த்தனன் ரெண்டு பேரும் என்னோட திறமைக்காக ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல நான் யாதவா கல்லூரியில் இளங்கலை படிக்க உதவினாங்க. அப்படியே பீச் கபடி எப்படி விளையாடணும்னு பயிற்சியும் கொடுத்தாங்க.

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி, பல்கலைக்கழகப் போட்டி எனப் பல போட்டிகளில் பங்கெடுத்தேன். அவங்க ரெண்டு பேரும் எதிர்பார்த்த மாதிரி நான் நிறையப் போட்டிகளில் வெற்றிபெற்று கல்லூரிக்குப் பெருமைசேர்த்தேன். அப்பதான் எனக்குத் தேசிய அளவிலான குழுவில் இடம் கிடைச்சது. நான் தங்கம் வென்றதுக்கு அப்புறம்தான் பீச் கபடி பத்தி நிறைய பேருக்குத் தெரிஞ்சுது. கபடியின் இன்னொரு வடிவம்தான் இந்த பீச் கபடி’’ என்கிறார் அந்தச் சாதனைப் பெண்.

2016-இல் வியட்நாமில் நடந்த ஆசிய பீச் கபடியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. அந்த அணியில் அந்தோணியம்மாளும் இடம்பெற்றிருந்தார். வெளிநாட்டில் விளையாடி அவர் பெற்ற முதல் தங்கமும் அதுதான். 2017-இல் மொரிஷியஸ் தீவில் நடந்த சர்வதேச அளவிலான முதல் பீச் கபடி போட்டியிலும் இவர் பங்கேற்றார்.

இதிலும் இந்திய அணி தங்கம் வென்றது. இதுவரை  100-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்திருக்கும் அந்தோணியம்மாளின் கனவு, சர்வதேச அளவிலான பெண்களுக்கான கபடிப் போட்டியில் தங்கம் வெல்வது.

அந்தோணியம்மாளின் நிலையை அறிந்த கடலூர் புனித ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், அவரைத் தத்தெடுத்து, அவருக்குத் தேவையான உதவியைச் செய்துவருகின்றனர்.

இந்த மாதிரி உதவிகளும் நடராஜன்  மாதிரிப் பயிற்சியாளரும் கிடைச்சா, என்னைப் போல் பலர் உருவாகி வருவர். வருங்காலத்துல நானும் ஒரு பயிற்சியாளராகி, வீராங்கனைகளை உருவாக்கும் உறுதியோடு இருக்கிறேன்’’ என்றார். உறுதியான குரலில் சொல்கிறார் அந்தோணியம்மாள்.

கிராமத்தில் பிறந்து வறுமையிலும், சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.