ஆசிரியர் பதில்கள்

நவம்பர் 01-15

பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதில் எதிர்தரப்பு ஒரணியில் சேரவேண்டும்!

கே:       உத்தரப்பிரதேச மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்-படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் மனுதாக்கல் செய்திருப்பது சரியா?

                – ல.ஏ.மீனாட்சி, மதுராந்தகம்

ப:           முழு விவரங்களும் வெளியே வரட்டும். பதில் தருகிறோம். குறிப்பிட்ட பள்ளி-களில் என்று கட்டாயப்படுத்துவது விரும்பத்தக்கதல்ல.

கே:       உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய்க்குச் சொந்தமாக வீடு, கார் ஏதும் இல்லை என்பது வியப்பாக உள்ளதே! இவராவது சுயமாக, நேர்மையாகச் செயல்படுவாரா?

                – மா.வேள்பாரி, கோவை

ப:           நல்ல மனிதர். நிச்சயம் நேர்மையாக செயல்படுபவார் என்று நம்ப நிறைய நம்பிக்கை உள்ளது!

கே:       மக்களைவைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நட்புக்கரம் நீட்டியிருப்பது மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய சரியான முடிவுதானே?

                – காசி.மாதவன், பெரம்பூர்

ப:           வரவேற்கத்தக்க, எடுத்துக்காட்டான முடிவு. ஒரே ஒரு அம்சம்தான்! ‘One Point Power’ மத்திய பா.ஜ.க._ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுத்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே அது! தீயணைப்பதில் அனைவரும் ஒன்று சேரத்தானே வேண்டும்?

கே:       ‘மீ டு’வைத் தொடர்ந்து, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டு’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

– அ.தாமோதரன், கூடுவாஞ்சேரி

ப:           மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. கொச்சைப்படுத்திடவோ, ஏட்டிக்குப் போட்டி இயக்கமாகவோ ஆகக் கூடாது.

கே:       முதுமை என்பது வயதைப் பொறுத்ததா?

– கி.சாரதா, கடவம்பாக்கம்

ப:           நிச்சயமாக இல்லை. பெரிதும் மனதையேப் பொறுத்தது. ஆங்கிலத்தில் Biological age – பிறப்பு வரலாற்றை ஒட்டிய வயது; Physiological age – உடல் உறுப்புகளின் நிலையைப் பொறுத்த வயது; Phychological age – மனதை _உள்ளத்தைப் பொறுத்த வயது. 95 வயது தந்தை பெரியார், வயது உள்ளத்தில் 25. இளைஞர்களுடன் போராட்டக் களத்தில் நின்றார்! 

கே:       ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுவது பி.ஜே.பி.யின் மீதான மக்கள் வெறுப்பு வளர்ந்த விளைவு என்று கொள்ளலாமா?

                – சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:           பொதுவாக மோடி 2014 பெற்ற வாக்கு சதவிகிதமும் வெற்றிகளும் இறங்கு-முகத்தில்தான் இருக்கிறது. காரணம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமல்ல; மக்கள் பல துறைகளிலும் அவதிப்படுகிறார்கள். மக்களில் எந்தப் பிரிவினரும் (கார்ப்பரேட் முதலாளி-களான கனவான்கள் தவிர) இவ்வாட்சி மீதும் மோடி மீதும் வைத்திருந்த நம்பிக்கை நாளும் ‘தேய்பிறை’யாகியே வருகிறது. எனவே, தோல்வி ஏற்படுமோ என்ற அச்சம் அவர்களையே உலுக்கிக் கொண்டுள்ளது!

கே:       கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பகத்சிங் பிறந்த நாள் கொண்டாடிய மாணவி ஏ.மாலதி இடைநீக்கம் செய்த கல்லூரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாணவிக்கு நீதி வழங்க என்ன செய்ய வேண்டும்?

– மா.முருகவேல், மதுரை

ப:           முற்போக்கு சிந்தனை உள்ள தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் அம்மாணவிக்கு _ ஆதரவாகப் போராட முன்வர வேண்டும். அவசரம் _ அவசியம்.

கே:       பி.ஜே.பி. பெருந்தலைகளே, மோடியின் ஆட்சியை _ பொருளாதார சீரழிவை _ சாமியார்களின் அக்கிரமங்களை _ நிர்வாகச் சீர்கேட்டை கடுமையாக விமர்சித்து ஜஸ்வந்த் சிங், சத்ருகன் சின்கா போன்றோர் வெளியேறுவது அதன் வீழ்ச்சிக்கான அடையாளமாகக் கொள்ளலாமா?

– கல.சங்கத்தமிழன், செங்கை

ப:           ‘ஆம்_என்!’

கே:       ஈரோடு மாவட்டம், நிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.ஜே.தமிழரசு என்பவர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தான், புத்தமதத்தை தழுவியதாகவும், தனக்கு பட்டியல் இனத்தவருக்கான ஜாதிச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது சரியா ?

– உ.விஜய், சோழங்குறிச்சி

ப:           சட்டத்தில், இந்து மதத்திலிருந்து தாழ்த்தப்பட்டவர் சென்றால்தான் அச்சலுகை பெற வாய்ப்புண்டு என்று இருப்பதால், சட்டம் மாற்றப்பட்டால் ஒழிய இவருக்கு நீதி _ இப்படிதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *