Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பூமி தட்டையா? உருண்டையா?

                பூமி தட்டையா? உருண்டையா?

கைலையை அடைந்த ஈசன் சப்த ரிஷிகளை நினைத்தார். அவர்கள் ஈசனின் எதிரில் வந்து தமக்குரிய ஆணை என்ன? என்று வினவ பரமேசுவரன், பர்வதராஜன் மகள் பார்வதியை மணக்க விரும்புகிறேன். ஆதிபராசக்தியான அவளே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாவாள். அவள் என்னையே கணவனாக அடைய தவம் செய்து வருகிறாள். நீங்கள் உங்கள் பத்தினிகளுடன் சென்று திருமணம் பேசி முடித்து வரவேண்டும். மற்றும் அவளுடைய தாய் மேனையையும் மனப்பூர்வமாக சம்மதிக்கச் செய்வீராக என்று கட்டளை இட்டார். சப்தரிஷிகளும் ஈசனை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு இமயத்தை அடைந்தனர். இமவான் இச்செய்தி அறிந்து வெளிப்போந்து அவர்களை வரவேற்று உபசரித்தான். அவர்கள் பர்வதராஜனிடம் உன் மகள் பார்வதியை எம்பெருமானுக்கு மணம் பேச வந்துள்ளோம். என்று தமது விசயத்தின் காரணத்தைக் கூறினார். உடனே இமவான் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்.

இமவானையும், மேனையையும் ஆசிர்வதித்து, திருமணத்திற்கான நன்னாளை நிச்சயித்து விடை பெற்றுச் சென்று, கயிலை அடைந்து, எம்பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறி தம் இருப்பிடம் சென்றனர். பர்வதராஜன் அம்பிகையின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானான். அப்போது இமவானின் மகன் மைனாகன் தன்னுடைய தந்தையாரிடம் தேவதச்சனான விசுவகர்மாவை வரவழைத்துச் சொன்னால் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார் என்று கூறினான். விசுவகர்மாவும் இது கேட்டு மனமகிழ்ந்து எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

பர்வதராஜன் அனைவர்க்கும் மணஓலை அனுப்பி வைத்தான். கைலைக்குச் சென்று, இறைவனைத் தரிசித்து வணங்கி, என் தவப் பெண்ணை தங்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். நாளையே சிறந்த நாள் என்று சப்தரிஷிகள் லக்னம் குறிப்பிட்டுள்ளனர். தேவரீர் தங்கள் பரிவாரங்களுடன் எழுந்தருளி எனது மகளை ஏற்று எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேண்டினான். ஈசனும் அவ்வாறே அருள்பாலித்தார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இசைந்த பரமேசுவரன் சர்வாபரணங்களையும் அணிந்தவாறு தோன்றினார். பூதகணங்கள் புடைசூழ, மங்கலவாத்தியங்கள் முழங்க, தேவாதி தேவர்களுடன் இமயமலையை வந்தடைந்தார் சிவபெருமான் அழகிய மணமகனாக. அவர் இமவானின் நகரமாகிய ஓஷதி பிரஸ்தத்தில் நகர்வலமாக வந்தபோது ஐயனின் திருமேனி அழகு கண்டு அனைவரும் மயங்கி நின்றனர். சிவபெருமான் மணமகனாக திருமண மண்டபத்தை அடைந்தபோது இமவானின் மனைவி மேனை மகளிர் பலர் சூழ அவரை வணங்கி திருவடிகளைப் பாலால் கழுவி பக்திப் பெருக்குடன் விளங்கினாள்.

பிரம்மனும், திருமாலும் இருபுரம் கரம் தந்திட ஈசன் மண்டபத்தில் பிரவேசித்து சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தார். எம்பெருமான், அம்பிகை திருமணம் காணப் பெரும்கூட்டம் கூடியதால் இமயம் உள்ள வடபால் கீழே அழுந்தி, தென்திசை உயர ஆரம்பித்தது. அப்போது ஈசன் அகத்தியரை அருகழைத்து தென்திசை சென்று பொதிகையில் தங்கி, அங்கிருந்தவாறே திருமணத்தைக் காணுமாறு அருள்பாலித்தோம் என்று கூறிட, அகத்தியரும் பொதியமலை சென்றடைய பூமி சமமாகியது.

பூமி ஒரு பக்கம் சுமை ஏறினால் இன்னொரு பக்கம் மேல் மேலே எழும் என்றால் பூமி தட்டையாக இருந்தால்தான் முடியும்! பூமி அறிவியல்படி உருண்டை. அப்படியிருக்க அதில் ஒரு பக்கம் ஏறி இறங்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஏறி இறங்கியதாகக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியல் மதமாகும்?

பசுவின் வயிற்றில் ஆடு பிறக்குமா?

நாரதா! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒரு கலகம் செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருந்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல்  தவித்தனர்.

ஆடு பசுவின் வயிற்றில் பிறந்தது என்றும், அது உலகையே ஆட்டிப்படைத்தது என்று கூறுவது அறிவியலுக்கு எதிரான மூடக் கருத்தல்லவா? இப்படிப்பட்ட மூடக் கருத்தைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

ஒரு தம்பதிக்கு பல கோடி பிள்ளைகளா?

முருகப் பெருமான் தேவர்களோடும் கணங்களோடும், திருப்பரங்குன்றம் சேர்ந்தார். அங்கு வசித்து வந்த மாலி, தப்தர் சக்ரபாணி, சதுர்முகன், அந்தர் நந்தி என்ற பராசரரின் புதல்வர்கள் ஆகியோர் கந்தனைக் கரங்கூப்பி எதிர்சென்று வரவேற்றனர்.

(இந்த முனிவர்கள் ஒரு சமயம் மீன்களைப் பிடித்து, துன்புறுத்தியது கண்டு பராசரன் அவர்களை மீனாகச் சபிக்க, அவர்கள் சரவணப் பொய்கையில் மீனாகி இருந்து வந்தனர். உமா தேவியார் அறுமுகனை ஏந்திப் பாலூட்டுகையில் சிந்திய பாலினால் முன்வடிவம் பெற்றனர்.)

ஒரு கணவன் மனைவிக்கு பல கோடிப் பிள்ளைகள் பிறந்தது என்பது மடமைக் கருத்தல்லவா?

ஒரு தம்பதியருக்கு 10 பிள்ளைகள் பிறக்கலாம். அல்லது 20 பிறக்கலாம். மாறாக, பல கோடி பிள்ளைகள் பிறந்ததாய் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?     

(சொடுக்குவோம்…)

– சிகரம்