‘காந்தி தேசம்’
‘உண்மை’ (அக்டோபர் 16_31, 2018) இதழில் காந்தியார் _ பெரியார் ஒளிப்படத்துடன்கூடிய அட்டைப் படம் இளைய தலைமுறையினருக்கு விருந்து படைப்பதாக இருந்தது. குறிப்பாக, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் ‘காந்தியார் கொலையும் இன்றைய நிலையும்!’ கட்டுரை, பல்வேறு எடுத்துக்-காட்டுகளுடனும், அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும் அமைந்த பாங்கு பாராட்டுக்குரியது.
இந்திய நாடு பன்முகத் தன்மை கொண்டது. இங்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற நோக்கில் ‘இந்து தேசத்தை’ உருவாக்கச் சொன்ன வி.டி.சாவர்க்கார், குருஜி கோல்வால்கர் ஆகியோரின் முகத்திரை கட்டுரையாளரால் கிழித்தெறியப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவால் காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டபோது (30.1.1948) நாடு முழுவதும் மதக் கலவரங்களும், வன்முறை வெறியாட்டங்களும் வெடித்துச் சிதறின. ஆனால், தமிழ்நாடு மட்டும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் தந்தை பெரியாரின் மகத்தான மனிதநேயப் பணி, பகுத்தறிவுப் பிரச்சாரம் மற்றும் தன்னலமற்றத் தொண்டு ஆகியவை என்று ஓர் ஆங்கில நாளேடு பெரியாரின் உழைப்பிற்குப் புகழாரம் சூட்டியது.
காந்தி மறைந்தவுடன், தந்தை பெரியாரை வானொலியில் உரையாற்றுமாறு அழைத்ததின் பேரில் பெரியார் பேசியபோது நாட்டில் வன்முறைக்கோ, மதக் கலவரங்களுக்கோ சிறிதும் இடம் அளிக்கக் கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்திய நாட்டிற்கு ‘காந்தி தேசம்’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு பி.ஜே.பி. கட்சியினர் விழா எடுப்பது வெட்கம் _ வேதனை!
– சீ.பத்ரா, வந்தவாசி
மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கடந்த ‘உண்மை’ (அக்டோபர், 16_31) இதழில் வெளியான தந்தை பெரியாரின் கட்டுரை (சரஸ்வதி பூஜை) அர்த்தமற்ற மூடப் பண்டிகைகளான சரஸ்வதி பூசை, ஆயுத பூஜை ஆகியவற்றின் பேரால் ஏற்படும் பொருளாதார சீழிவையும், சரஸ்வதி பற்றிய ஆபாசமான கதையையும் விளக்கும் வண்ணம் அமைந்திருந்தது.
‘வேதங்கள்’ பற்றிய சாரு.நிவேதாவின் கட்டுரை வேதங்கள் புனிதமானவை என்னும் குருட்டு நம்பிக்கைகளை உடைக்கும் வண்ணம் ஏராளமான தகவல்களை தந்தது.
இந்துத்துவார சக்திகளால் நவீன மூடநம்பிக்கையான ‘மகா புஷ்கர விழா’ குறித்த மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை மகா புஷ்கரம் குறித்த பித்தலாட்டங்களை தோலுரித்து சிந்திக்க தூண்டுவதாய் அமைந்துள்ளது. 144 ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு விழா நடந்ததாக எந்த பதிவும் இல்லாத நிலையில் 114 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது என்று விளம்பரம் செய்து கொண்டாடுவது எவ்வளவு பெரிய மோசடி.
– செ.பாக்யா, ‘உண்மை’ வாசகர் வட்டம்,
ஆவடி, சென்னை-71.