“நான் வரலை, நீங்க போயிட்டு வாங்க, எனக்கு என்னமோ அந்த ஆளை நம்பமுடியல, புடிக்கலை நீங்க போவதைக்கூட நிறுத்திட்டா, நல்லதுன்னு நினைக்கறேன்.’’
அல்லியம்மா, தன் மனசை அப்படியே கணவன் வேலனிடம் திறந்தாள். வேலனுக்கோ கடுப்பு.
“அல்லி, என்னா ஒரு மாதிரியா பேசறே. அவர் யாருன்னு நெனச்சு. மத்தவங்க மாதிரி இல்ல, அவர் சொன்னா நடக்கும், கிளம்பு’’, ‘கிளம்பு’ என்று அவள் முடிவைப் பற்றி கவலைப்படாமல் வேகமாக சொன்னான் வேலன்.
“எப்படியோ போங்க, நான் வரலை அதான் முதல்லேயே சொன்னேல்ல எனக்கு புடிக்கலை’’ சொன்ன அல்லியை கோபமாக பார்த்த வேலன்,
“அதெல்லாம் எனக்கு தெரியாது நீ வந்துதான் ஆவணும். நம்ம பொன்னியைப் பற்றி சொல்றேன்னார் வா… வா… கிளம்பு’’ என்றான்.
பொன்னி என்றவுடன் அல்லியம்மா சற்று ஆடிப் போய்விட்டாள். பொன்னியைப் பற்றி அந்தச் சாமியாரிடம் ஏன் சொன்னாரு… அவ காணாம போய் ஆறு மாதமாயிடுச்சு என்று அவ நினைக்கறதுக்குள்ள, கண்கள் கலங்கி-விட்டது. அவள் கலங்கியதைப் பார்த்ததும், வேலனும் ஒரு மாதிரியா-யிட்டான்.
“அல்லி…. ஏன் கலங்கறே, கஷ்டப்படறே! எல்லாயிடத்திலும் புகார் செஞ்சாச்சு போலீசும் தேடிப் பாத்திட்டாங்க. ஆனா நம்ம பொன்னி’’ தொடரமுடியாமல் அழுதான். அல்லி தேம்பியபடி அவனைப் பிடித்துக் கொண்டு அவன் மேலேயே சாய்ந்தாள்.
“அல்லி, நாம் போவாத கோயில் இல்ல, வேண்டாத சாமியில்ல. எந்த சாமியும் கண்ணை திறக்கல. அதான் இந்தச் சாமியார்-கிட்ட சொன்னேன். அவர் காளியம்மனிடம் கேட்டு சொல்றேன்னார். வா போயி கேட்டுட்டு வருவோம், கிளம்பு’’ என்றான்.
மறுத்து சொன்னா, கோபமா கத்துவான். அல்லி வேண்டா வெறுப்புடன் கிளம்பினாள். அந்தச் சமயம் பார்த்து அவள் தம்பி மணிமொழி வந்தான். அவனைப் பார்த்ததும் வேலன் “இவன் எங்கு வந்து தொலைந்தான். நாத்திகம் பேசற பய… சே’’ என்று எண்ணியபடி,
“என்னா மணி, நானும் அல்லியும் வெளியில ஓர் இடத்துக்கு போறோம். அவசரம்’’ என்றான். மணிமொழி சிரித்தபடி ‘சரி போயிட்டு வாங்க நான் பிறகு வரேன்’ என்றபடி அல்லியை பார்க்க அல்லி தலையசைத்தாள். வேலனுக்கு தெரியாது. சாமியாரிடம் போவது பற்றி அல்லி சொல்லித்தான் மணிமொழி வந்திருக்கான் என்பது.
ஒரு நாள் முன்பு அல்லி “டேய், மணி, அவரு ரொம்ப நல்லவரு. ஆனா மூடநம்பிக்கையில் ஏதேதோ செய்யறார். என்ன பண்றது. சாமின்னு, சொல்லிட்டா போதும் ஆடறார். எனக்கு தெரியுது. நான் என்ன சொல்றது. நாமே பொம்மை செய்யறவங்க. நாம் செஞ்ச பொம்மைக்கிட்ட போய் அது வேணும் இது வேணும், செஞ்சுக்கொடுன்னு கேட்டா என்ன அர்த்தம். எவனோ சொல்றதை கேட்டு காசு பணம் செலவழிச்சு பூசை அது இதுன்னு படையல் போட்டு… சே… பல நேரம் சிரிப்பு வருது. சில நேரம் எரிச்சல் வருது. நாம் செஞ்ச பொம்மையை நாம தொடக்கூடாதாம். எப்படிடா இவரை திருத்தறது. ஏதாவது சொன்னா, “ஒன் குடும்பமே சாமி கும்புடாத குடும்பம். ஓங்க அப்பா கருப்புச் சட்டைக்காரரு. நீ எப்படியிருப்ப…’’ என்று கத்தரார்…. சரி… விடு. இப்ப சாமியார்கிட்ட வேற போறார். என்னையும் கூப்பிடறார். என்னடா செய்யறது. நீ வந்து ஏதாவது பேசி இந்த சாமியார்கிட்ட போறதையாவது நிறுத்த பாருடான்னு’’ அவள் சொல்லித்தான் அவன் இன்று வந்தான். ஆனா, வேலன் அல்லியை கூப்பிட்டுகிட்டு கிளம்-பிட்டான். மணிமொழியும் சாமியார் இருப்பிடத்துக்கு அவர்களுக்கு தெரியாமல் சென்றான்.
அங்கு வரிசையாய், கையில் தட்டு பழங்களுடன், வரிசையாய் பரிதாபத்துக்-குரியவர்கள். மணிமொழி வேதனையுடன் பார்த்தான். படித்த பக்தர்கள். விவரமாய் பேசிடும் அதிகாரிகள் குடும்பத்துடன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஆலகால ஆதிசிவனடிமையாம் அந்த சாமியார்.
“மணி, ஒங்கிட்ட முக்கியமான ஒண்ணு சொல்லணும்னு’’ செல்லப்பா பொறுமையா அவன்கிட்ட வந்து நின்றான்.
“சொல்லு செல்லப்பா, யாருந்தான் இல்லையே, சொல்லு’’ என மணிமொழி சொல்ல.
“மணி, நாளைக்கு நான் சொன்னேன்னு வந்துவிடக் கூடாது. அதான்பா… பயமாயிருக்குது.’’
“செல்லப்பா, நான் யாருகிட்டேயும் சொல்லமாட்டேன். ஓ… பேரை கண்டிப்பா சொல்லமாட்டேன். ஏன்னா விஷயம்’’
“இந்த ஆலகால சாமி யார் தெரியுமா? காவிக்கொடி கூட்டத்தில் ஒருத்தன். வடநாட்டில் இருந்து கொல கொள்ளைன்னு செஞ்சிட்டு தலைமறைவா இருபது வருஷத்துக்கு முந்தி இங்க வந்து தாடிமீசை வளர்த்து சாமியாராகிட்டான். இப்ப கோடீஸ்வரன். இவன்கிட்ட காவிக்கட்சியில் பெரிய பதவியில் இருக்கும் ஒரு பய அடிக்கடி வர்ரான் என்னான்னு தெரியல… என்னா செய்யறது நம்ம மக்கள் ஏறிவிழுது. நாம் சொல்லி என்னாவுது? எவன் கேக்றான்? ஓ… மச்சான் தினமும் வாரன்’’
“செல்லையா, சாமியார் ரகசியமா செய்யறது ஏதாவது தெரிஞ்சா சொல்லு, தெரியுமா?’’
செல்லையா மணிமொழிக்கு அருகில் வந்து, “மணி, சாமியார் பெண் குழந்தைகளை கடத்தறான்னு நினைக்கிறேன். ஞாயிற்றுக்-கிழமைகளில் ரகசியக் கூட்டம் நடக்கும். காவிப் பெரும்புள்ளிகள் வரானுங்கப்பா’’
“உனக்கு எப்படி தெரியும்?’’
“நானும் காவிச்சட்டையுடன் போவேன். பக்கத்தில் கடை வைச்சு பொழைக்கணும்னா வேஷம் போட்டுத்தான் ஆவணும். இவ்வளவு நாளா ஒங்கிட்ட சொல்லாதது தப்புதான். பயம் ஒரு காரணம்.’’
“செல்லப்பா, நீ சொல்வதைப் பாத்தா எங்க பொன்னியைகூட…’’ மணிமொழி கோபத்தின உச்சத்துக்கு போனான்.
அதே நேரம் அங்கே ஆலகாலசாமி கண்ணை மூடிக்கொண்டு,
“வேலய்யா, ஓ… பொண்ணு உயிருடன் இருக்கா… காளிமாதா சொன்னா சரியாயிருக்கும்’’ சொன்னான். வேலன் மகிழ்ந்தான். அல்லிகூட மனம் களித்தாள். வேலன் பெருமையாய் அவளைப் பாத்திட்டு “சாமி, எங்ககிட்ட எம் பொண்ணு எப்பவரும், எதுவானாலும் பரவாயில்ல சாமி. பொன்னி எங்க உயிர்’’ என்றான். ஆலகாலம் சத்தமாக சிரிச்சிட்டு “சபாஷ் வேலா… சிவமைந்தன் பேரை வெச்சிருக்கே. ஒரு 25 பவுன்ல காளிக்கு தங்கமாலை சாத்து. பின் கேட்டு சொல்றேன். காளிமாதா கோபத்துக்கு ஆளாயிடக் கூடாது’’ என்றான்.
அல்லிக்கு, சாமியார் அவன் புத்தியை, காட்டறான் என்பது புரிந்தது. வேலன் விக்கித்து நின்றான். அப்போது காவல்துறை அதிகாரி குடும்பத்தினர் சாமியாரைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தனர்.
மணி அதிகாரியைப் பார்த்து, “நீங்க… இங்க..’’ என்று தயங்கினான். காவல்துறை அதிகாரி, “இந்த சாமியார் பெண் கடத்தல்காரன். உளவறிய பக்தன்போல் வந்தேன். பொன்னியைக் கூட கண்டுபிடித்துவிட்டோம்’’ என்றார்.
“சார் எல்லாம் சரி சார். பொன்னி’’ என துடித்தான் மணிமொழி அறிவேந்தி பெருமிதத்துடன்.
‘மணி, அங்க பாரு’ எனக் காட்ட
அல்லிக்கும் வேலனுக்கும் நடுவில் இருவர் கையையும் பிடித்துக் கொண்டு சிரித்தபடி பொன்னி வந்து கொண்டிருந்தாள். மணிமொழி ஓடிப்போய் வேலன் அல்லி கரங்களை நெகிழ்வுடன் பிடித்தான். பொன்னியை பாசத்துடன் பார்த்து கலங்கினான்.
“பொன்னி, இன்னும் எங்க பாதுகாப்பில்தான் இருக்கு. சில சட்டப்பணிகள், நீதிமன்ற உத்தரவு எல்லாம் வாங்க வேண்டியிருக்கு. அதன் பின் பொன்னியை அழைச்சிகிட்டு போங்க.’’ என்றார் அதிகாரி!
வேலன் அதிகாரியை நன்றியுடன் பார்த்து! “அய்யா இனி இந்த சாமியார்களை நம்ப மாட்டேன்.
என் பிள்ளையை பெரியார் பேத்தியாக வளர்ப்பேன்! நானும் சாமியார்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்! என்றான்.
பெரியார் கொள்கையைப் பின்பற்றும் காவல்துறை அதிகாரி மென்மையாய் சிரித்தார்!
‘பெரியார் பேத்தியுடன் போய் வருகிறேன் என்றார்.
பொன்னி சிரித்தபடி அவருடன் செல்ல, இரட்டை மகிழ்ச்சியில் அல்லி ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
– கடலூர் இள. புகழேந்தி
Leave a Reply