சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புடைய தீர்ப்பின்படி, அய்யப்பபன் கோயிலுக்குள்
செல்ல முயன்ற பெண்களை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி அடியாட்கள் தடுத்த நிறுத்தியும், தாக்கியும் வருகின்றனர். அப்பெண்களின் வீட்டையும் தாக்கி, சூரையாடியுள்ளனர்.
மத்தியில் பி.«-ஜ.பி. பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். ஆட்களும், பி.ஜே.பி ஆட்களும் சட்டம், நீதிமன்ற ஆணை, மனித உரிமை என்று எதையும் பொருட்படுத்தாமல் தாங்கள் நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்ற பாசிச வெறியில் செயல்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட பாசிச வெறியாட்டந்தான் அண்மையில் கேரளாவில்அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லுவதிலும் நடந்து வருகிறது.
இரட்டை அளவுகோல்
‘நீட்’ தேர்வு கூடாது என்று தமிழகமே ஒட்டுமொத்தமாய் எதிர்த்து நின்று போராடிய நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று ஒரே பிடிவாதமாய் நின்று, 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை, போராட்டங்களை உயிர்த் தியாகங்களை புறந்தள்ளி, ‘நீட்’ தேர்வை அமல்படுத்திய பா.ஜ.க. பாசிச அரசு, அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு, அய்யப்பன் கோயிலுக்குள் செல்லும் பெண்களைத் தடுப்பது அடாவடிச் செயல் அல்லவா? அநியாயம், அராஜகம் அல்லவா? இரட்டை அணுகுமுறை அல்லவா? பேட்டை ரவுடி அணுகுமுறையில் சட்டப் பிரச்சினைகளை அணுகும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் வெறிச்செயல் மக்களாட்சியின் அடிப்படையையே தகர்த்து, பாசிச ஆட்சியை உருவாக்கும் முன் முயற்சியாகும்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் போது, இராமர் பாலம் மக்களின் நம்பிக்கை என்று சொல்லி அதைத் தடுத்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்கள், எட்டுவழிச் சாலையில் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக சாலை அமைக்க முயற்சிப்பதும் இந்த இரட்டை அணுகுமுறையின் விளைவேயாகும்.
இரட்டை வேடம்:
தனக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியென்று செயல்படும் இந்தப் பாசிசக் கூட்டம், அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதில் இரட்டை வேடம் போட்டு அரசியல் ஆதாயம் அடையும் அற்ப முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இப்போது அவர்களே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராடுகிறார்கள். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைக் குழப்புகின்றன.’’
மாநில அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு, எந்தவித மறுப்பும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து வெளிவர வில்லையே, ஏன்? அவர்களின் பித்தலாட்டம் வெட்டவெளிச்சமான காரணம்தானே?
பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிராக கேரளத்தில் போராட்டம் நடத்தி வரும் பாஜக, தெலுங்கானாவில் விருப்பமுள்ள பெண்கள் அனைவரையும் இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
அதிகாரத்துக்கு வந்தால் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக சபரிமலை பயணத்திற்கு ஏற்பாடு செய்வதாக தெலுங்கானா மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் என்.வி.எஸ்.எஸ். பிரபாகர் மூலம், இந்தத் தகவலை உறுதி செய்துள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு, பெண்கள் சபரிமலை செல்வதை அரசியல் ஆதாயத்துக்காக கேரளத்தில் பாஜக எதிர்த்து வருகிறது. ஆனால், அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை தெலுங்கானாவில் தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக மேற்கொண்டுள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளது.
அய்யப்பன் கோவில் – அய்யன் கோவில்
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் அய்யனார் சாமிகள் காவல் தெய்வமாக இருப்பதைப் போலவே, ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லை காவல் தெய்வமாக, சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்-களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர்ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, அக்கோவிலின் நிர்வாகத்தினை அவர்கள் ஏற்று நடத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் இருக்கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். அச்சன்கோவில், கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972-ஆம் ஆண்டு தான் தடையே விதித்தார்கள். அதற்கு முன்புவரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972 -இல் தடை விதிக்கப்பட்டாலும் பெரிதாக நடைமுறைப்படுத்தவில்லை.
1986ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்ப்படம் அந்தக் கோவில் சன்னிதானத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 7,500 ரூபாய் கட்டணத்தையும் பெற்றிருக்கிறது தேவசம் போர்டு. அப்போதெல்லாம் புனிதம் எங்கே போயிற்று?
பெண்கள் வழிபாடும் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பும்
1990ஆம் ஆண்டு போடப்பட்ட பொது நல வழக்கின் காரணமாக 10- முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் 1993-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகுதான் பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால், ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்த கோவிலிற்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.
1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி யிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
முன்னாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ.நாயரின் அனுபவம்
1991ஆம் வருடத்திற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ.நாயர் இதுகுறித்து கூறுகையில், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரிமலை சென்றபோது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது என்று கூறினார். அவர் காட்டிய அந்த நிழற்படத்தில் ஒரு இளம்பெண் கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக உள்ளது.
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், சமூக நல ஆர்வலர்கள், பெண்ணுரிமைப் போராளிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர். இருதரப்பு வாதங்கள் கேட்கப்பட்டு, அதன் பிறகுதான் அனைத்துப் பெண்களும் அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால், அத்தீர்ப்பை கொஞ்சங்கூட மதிக்காமல் அடியாட்களை அமர்த்தி பெண்களைத் தாக்கித் தடுத்து வருகிற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.
பிரம்மச்சரியம், மரபு என்பது பித்தலாட்டம்
அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது பெரிய பித்தலாட்டம். அய்யப்பனுக்கு ஒரு பெண்டாட்டி அல்ல. இரு பெண்டாட்டி. பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள். இதை மறுக்க முடியுமா?- அப்படியிருக்க அய்யப்பன் பிரம்மச்சாரி. அதனால் பெண்கள் செல்லக் கூடாது என்பது பித்தலாட்டமாகும்.
அதேபோல் பெண்கள் செல்லக்கூடாது என்பது மரபு என்பதும் பெரிய மோசடி.
மரபா? அரசமைப்புச் சட்டமா? உச்சநீதிமன்றம் கேள்வி!
சபரிமலை அய்யப்பன் கோயில் பொதுச் சொத்தாகும். அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அப்படியிருக்கும்போது, சபரிமலை அய்யப்பன் கோயில் வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது?
பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி இல்லையா? சபரிமலை அய்யப்பன் கோயிலில் கடந்த 1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
இந்தியாவில் தந்தையைவிட தாயே உயர்வானவராக கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில் தடை விதிக்கக் கூடாது.
சட்டத்தின்படியே முடிவு: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும். வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காது.’’ என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நாம் மேலே காட்டியுள்ளது போலவும், டி.கே.ஏ.நாயர் கூறியுள்ளது போலவும் பெண்கள் அக்காலந்தொட்டு அய்யப்பன் கோயிலுள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடித்தட்டு கிராம மக்களின் காவல் தெய்வமான அய்யப்பன் கோயிலை, உயர்ஜாதி இந்துக்கள் கைப்பற்றிய பின் உருவாக்கிய தடையே பெண்கள் செல்லக் கூடாது என்பது. அத்தடைதான் இப்போது உச்சநீதிமன்றத்தால் உடைக்கப்பட்டுள்ளது.
10 வயது முதல் 50 வயதுவரை ஏன் தடை?
அந்த வயதில் பெண்களுக்கு மாதவிடாய் உதிரம் வெளிப்படும். அதைத் தீட்டு என்று கருதிய மடைமையினாலே பெண்கள் தடுக்கப்பட்டனர்.
பெண்ணின் மாதவிடாய் தீட்டு என்றால், அதனால் கோயில் புனிதம் கெடும் என்றால் மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்-படுவது ஏன்? அங்கு புனிதம் கெடாதா? மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்படும்-போது, அய்யப்பன் கோயிலிலும் அனுமதிப்பது-தானே சரியாகும்?
அய்யப்பன் பிரம்மச்சாரி என்ற ஒரு பொய்யைச் சொல்லி அதனால் பெண்களைச் செல்லக் கூடாது என்பது வாதப்படியே தப்பாகும்.
பெண்களுக்கு மத்தியில், உள்ளக் கட்டுப்-பாட்டோடு உறுதியாய் இருப்பவனே பிரம்மச்சாரி, பெண்களே இல்லாத இடத்தில் கட்டுப்பாடு, உள்ள உறுதிக்கு என்ன வேலை?
எனவே, பிரம்மச்சாரி என்பது மோசடி வாதம்.
மும்பையில் நீதிமன்ற ஆணை முழுமையாய் நிறைவேற்றப்படுகிறது!
மகாராஷ்டிராவில் உள்ள சில கோவில்-களில் நூற்றாண்டு காலப் பரம்பரை வழக்கம் என்ற பெயரில் பெண்கள் நுழைவதை தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில்-களிலும் பெண்கள் சென்று வழிபடலாம் என்றும், அதை அரசே நேரடியாக கண்காணித்து தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
சிங்கனாப்பூர் சனிக் கோவிலில் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்-நீதிமன்றம் தடையை நீக்கியும், தடை செய்யும், நிர்வாகத்திற்கும் நிர்வாகிகளுக்கும் தனி நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கலாம் என்றும் இவ்விவகாரம் குறித்து மாநில அரசிடம் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் அறிக்கைக்கு மகாராஷ்டிர அரசு தரப்பில் தரப்பட்ட பதில் மனுவில் கூறியுள்ளதாவது, “சிங்கனாப்பூரில் உள்ள சனிக்கோவில் பெண்கள் நுழைவதற்கு யாரும் தடை செய்ய முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கோவில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இனி பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை யாரும் தடை செய்ய மாட்டார்கள் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் கோவிலின் வெளியே வைக்கப்படும் என்றும், கோவிலில் நுழைவதை தடுப்பவர்கள் மீது 6 மாத சிறை தண்டனை குறித்து சிறப்பு சட்டமியற்றவும் ஆலோசனை செய்து வருகிறோம். கோவில் மற்றும் பொது இடங்களில் பாலின பேதம் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று அந்தப் பதில் மனுவில் கூறியுள்ளது.
அரசின் இந்த முடிவை அடுத்து வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதி வகேலா கூறியதாவது, “ஒரு ஆண் கோவிலுக்குள் சென்ற கடவுளை பூசை செய்து வழிபட முடியும் என்றால் பெண்களால் ஏன் முடியாது, ஆகவே, பாலின பேதம் ஏற்க முடியாத ஒன்றாகும். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவிலிலும் பெண்கள் சென்று வழிபாடு நடத்தலாம். பெண்கள் நுழைய இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் இன்றிலிருந்து நீக்கப்பட வேண்டும். இதை மகாராஷ்டிர அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். கோலாப்பூர், கண்பதிபுலே, நகர், நாசிக், சனிசிங்னாப்பூர் உட்பட தடை இருந்த
27 கோவில்களிலும் இன்றிலிருந்து பெண்கள் சென்று வழிபடலாம்.
ஆர்.எஸ்.எஸ்., பி.«-ஜ.பி. காலிப் பட்டாளமும், கூலிப் பட்டாளமும் அங்கு ஏன் தடுக்கவில்லை?
அரசியல் ஆதாயத்திற்காகவே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் எதிர்ப்பு:
கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் மாறிமாறி ஆள்கின்றன. எப்படியாவது அங்கு தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் ஆதாயத்திற்காகவே, அங்கு பெண்கள் செல்வதற்கு எதிராய் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டத்தின் மூலம் இதை மதப் பிரச்சினையாக்கி, அதன் வழி மக்களின் ஆதரவை பி.ஜே.பி பெற முயற்சி செய்கிறது.
இதை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களும் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்
தெலுங்கானாவில் பெண்களை அய்யப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வோம் என்று வாக்குறுதியளித்து அரசியல் ஆதாயம் தேடும் பி.ஜே.பி., கேரளாவில் பெண்கள் கோயிலுக்கு வரக் கூடாது என்று அடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். ஆக அவர்களுக்கு பக்தியும் இல்லை, பாரம்பரிய மரபு பற்றிய கவலையும் இல்லை. எல்லாம் அரசியல் ஆதாயக்கணக்கின் அடிப்படையிலே செயல்கள் செய்கிறார்கள். எனவே, பக்தர்கள் இவர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்.
அடியாட்கள் அமர்த்தி ஆர்.எஸ்.எஸ். நடத்தும் தாக்குதல் அம்பலம்
சபரிமலையில் கலவரத்துக்காக ஆர்எஸ்எஸ் தலைமை தேர்வு செய்தவர்கள் கண்ணூர் உள்ளிட்ட கேரளத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்த கொடிய குற்றவாளிகள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்ப நாட்களில் தலச்சேரி, பானூர் பகுதிகளிலிருந்து கொடும் குற்றப் பின்னணி கொண்டவர்களை நியமனம் செய்திருந்தனர். இப்போது மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களை சன்னிதானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். கொலைக்குற்றம் சாட்டப்-பட்டவர்களும் இந்த கும்பலில் இடம் பெற்றுள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைமை ஏற்பாடு செய்த தனி வாகனங்களில் இவர்கள் சபரிமலைக்கு சென்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட அன்றே தலச்சேரி, பள்ளூர், பானூர் பகுதிகளிலிருந்து இவர்களை சபரிமலைக்கு தனி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ஏற்கனவே சபரிமலைக்கு சென்றவர்களையே இதற்காக தேர்வு செய்திருந்தனர். கறுப்பு ஆடை அணிந்து அவர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள். முதல்நாள் ஊடகவியலாளர்களை தாக்கியவர்களில் வட கேரளவாசிகளின் மொழியில் பேசியவர்கள் உள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் கூறினார்கள்.
இதற்கு முன்பாகவே தலச்சேரி பகுதியிலிருந்து சென்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், எருமேலியில் சென்றபோது எடுத்த ‘செல்பி’, முகநூல் பதிவுகளில் இடம்பெற்றிருந்தன. எருமேலி பகுதியிலிருந்து சுமார் நாற்பது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலநாட்களாக சபரிமலையில் உள்ளதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மாகியிலிருந்து வந்துள்ள ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான யுவமோர்ச்சா நிர்வாகி, போராட்டப் பந்தலுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். நிலய்கல்லில் நடந்த தாக்குதலில் இந்த நபர் பங்கேற்றுள்ளார். மாகி கடற்கரை காவல்நிலையத்தை தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகளில் இவர் குற்றவாளியாவார்.
புதனன்று இரவு தலச்சேரி இரண்டாம் கேட் தைவத்தார் மடம் பகுதியிலிருந்து பேருந்தில் கயவாளிகளை பக்தர்கள் வேடத்தில் சபரிமலைக்கு கொண்டு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மரபை மீற யாரும் வரமாட்டார்கள் என நாங்கள் கருதுகிறோம். வந்தால் விநாசகாலே விபரீத புத்தி என்கிற மிரட்டும் தொனியில், கல்யாச்சாரி எனும் இடத்தில் இருந்து சென்றுள்ள ஆர்.எஸ்.எஸ் கும்பல் முகநூலில் பதிவிட்டுள்ளது.
ஆக, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.ம், பி.ஜே.பி.யும் நடத்துவது பெண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல; அது அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கலவரம்!
பக்தர்கள் அவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பெண்ணுரிமையை ஏற்று செயல்படவேண்டும்!
இல்லையேல் பக்தி அரசியலாகி, அடியாட்கள் பக்தர்களாக ஊடுருவி அழிவை உருவாக்கும் அவலம் வரும்!
– மஞ்சை வசந்தன்