திராவிட மக்கள் ஆரியர்களால் பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆளாகியதன் விளைவு _ சமஸ்கிருதம் என்ற ஆரிய வடமொழிக்கு அடிமையாகி, தங்களின் தனி அடையாளத்தையே இழந்து நிற்கின்றனர்!
வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதமும் கடவுள்களும், அவைகளைக் கொண்டாட பண்டிகைகளும் (திருவிழா என்ற தமிழ்ச் சொல்லைக்கூட பயன்படுத்தக் கூடாத அளவுக்கு எல்லாம் முழுக்க முழுக்க) ஆரியமயம் ஆக்கப்பட்டுவிட்டது!
நம் நாட்டின் பழைய ஊர்களின் பெயர்கள் எல்லாம்கூட பெரிதும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கத்தால் திட்டமிட்டே மாற்றப்பட்டன!
மயிலாடுதுறை _ மாயூரம் _ மாயவரம்
குடமூக்கு _ கும்பகோணம்
மறைக்காடு _ வேதாரண்யம்
முதுகுன்றம் _ விருத்தாசலம்
இப்படி எண்ணற்ற ஊர்கள்.
புதிய ஊர்கள் _ கிராமங்கள், ராமாபுரம், நரசிங்கபுரம், நாராயணக்குப்பம், _ வடநாட்டு இறக்குமதி கடவுளர், கடவுளச்சிகள் பெயர்.
நமது வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் கிடையாது. வடமொழி _ சமஸ்கிருத _ எளிதில் வாயில் புகாதப் பெயர்கள்.
‘விழா’ என்ற தகுதி உடையது அறுவடைத் திருவிழாவான ‘பொங்கல் விழா’ மட்டுமே! மற்றவையெல்லாம் வடக்கே இருந்த வந்த இறக்குமதிச் சரக்குகள்தான்!
தீபாவளி, ஸ்ரீராம நவமி, விநாயகர் சதுர்த்தி, ஸ்கந்தர் சஷ்டி, கோகுல அஷ்டமி, மகாமஹம். இவை போதாது என்று, புதிதுபுதிதாக “புஷ்கரணி’, ‘அட்சய திருதியை’, ‘வாஸ்து சாஸ்திரம்’. மேலும் பட்டியல் நீளும். எடுத்துக்காட்டாக இவை!
முற்பட்ட சங்க இலக்கியங்களில் இன்று ‘ஹிந்து’ என்ற மதமோ, சொல்லோ, ஹிந்து கடவுளர்களின் பெயர்களோ கிடையாது.
கிரேக்கக் கடவுள்களைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டு வடக்கே இருந்த வந்த கடவுள்களின் பெயர்களைப் பார்த்தாலே புரியுமே!
ஆரியப் பண்டிகைகளில் ஆபாசமும், அறிவுக்குப் பொருந்தாத கதையை அடிப்படையாக வைத்து, திராவிடர்களை ஆரியர்கள் எப்படி, பெண்களைப் பயன்படுத்தி வீழ்த்தினார்கள் என்ற தத்துவத்தை அடிநீரோட்டமாகக் கொண்டதே தீபாவளி போன்ற மதப் பண்டிகைகள்!
மூடநம்பிக்கை, ஆபாசம், அறுவறுப்பு, அதேநேரத்தில் சுரர்கள் என்ற பார்ப்பனர்கள் (சுரா பானம் குடிப்பவர்கள்) அதைக் குடிக்காதவர்களாகவும், யாகங்களை எதிர்த்தவர்களையும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த திராவிடர்களை ‘அசுரர்கள்’ என்று அழைத்ததோடு, அசுரர்களை அழிப்பதற்கென்றே விஷ்ணு என்ற தங்கள் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தார் என்ற கட்டுக்கதை _ புரட்டின் காரணமாகவே விளைந்ததுதான் இந்த தீபாவளிப் பண்டிகைக் கதை.
தேவர்களுக்கு எதிரான இரண்யாட்சதன் என்ற அசுரன் _ அரக்கன் _ பூமியைப் பாயாகச் சுரு’ட்டி, கடலுக்குள் ஒளித்து விட்டானாம்!
அதனை மீட்க, விஷ்ணு பன்றி (வராக) அவதாரம் எடுத்து, மீட்டுத் தந்த பிறகு பூமாதேவியிடம் பன்றி உருவெடுத்த விஷ்ணு காமத்தில் ஈடுபட்டதனால், நரகாசுரன் என்ற பிள்ளை பிறந்து, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தானாம். அவனைத் தனது மனைவி மூலம் அழித்தான் விஷ்ணு என்பது புராணக் கதை.
இது அறிவுக்குப் பொருந்துமா? இந்த 21ஆம் நூற்றாண்டில்.
இதனை விழாவாகக் கொண்டாடிட நரகாசுரனே கேட்டுக் கொண்டதாகவும், அதனால் இவ்விழாவாம்.
முந்தைய தமிழ் இலக்கியங்களில் இத்தகைய விழா _ பண்டிகை உண்டா? எனவே, தீபாவளி என்ற ஆரியக் கற்பனைப் பண்டிகைளைக் கொண்டாடி அழிவைத் தேடி _ அவமானத்தைப் பரிசாகப் பெறாதீர்!
– கி.வீரமணி
ஆசிரியர்,
‘உண்மை’