காந்தியார் கொலையும் இன்றைய நிலையும்!
“இந்துக்களுக்கென்று ஒரு நாடு வேண்டும். இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அந்த இந்துக்களான நாட்டை உருவாக்க ஒரே வழி வன்முறையும், பழிக்குப் பழி வாங்குதலும் ரத்த அபிஷேகமும்’’ என்று சொன்னவர், ‘இந்துத்துவா’ என்ற ஒன்றை முதன்முதலில் ஒரு ‘கருத்துருவாக்கத்தை’ வெளிப்படுத்திய வி.டி.சாவர்க்கார் (1923).
‘இந்துத்துவா’ என்பது இந்துத் தேசத்தை உருவாக்கவே உருவாக்கப்பட்ட ஒன்று! இதனை அடைந்திட, “இராணுவத்தை இந்து மயமாக்கு; இந்தத் தேசத்தை இராணுவ மயமாக்கு’’ என்று சொன்னவர் அவரேதான்!
அந்த இந்துத் தேசம் எப்படிப்பட்டது என்பதை ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று ஏற்றிப் போற்றப்படும் குருஜி கோல்வால்கர் பின்வருமாறு கூறுகிறார்:
“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்-நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும்; எதையும் கேட்காமல் எந்த சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்.’’
– (We or Our Nationhood Defined)
காந்தியார் அவர்கள் தன்னைப் பொருத்த வரையில் ‘இந்து’ என்று கூறிக் கொண்டாலும், அதற்கு விளக்கம் சொல்லும்பொழுது, “நான் கருதும் ‘இந்து’ சகிப்புத் தன்மை கொண்டது’’ என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டார் காந்தியார் என்று தம்பட்டம் அடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், அதைப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் செய்தார் என்பத அவர்களுக்கே உரித்தான ‘சாமர்த்தியமான’ முறையில் இருட்டடிப்புச் செய்துவிட்டனர்.
காந்தியாரின் உதவியாளராக இருந்த பியாரிலால் அதனை வெளிப்படுத்திவிட்டார்.
ஹிட்லரின் நாஜிக்களும், முசோலினியின் பாசிஸ்டுகளும் இப்படித்தான் இருந்தார்கள் என்றாரே பார்க்கலாம்.
இன்னொரு கருத்தும் முக்கியமானது. “நான் 125 ஆண்டு வாழ்ந்தால் இந்து சமுதாயம் முழுமையுமே என் விருப்பத்துக்கு மாற்றுவேன்’’ என்றும் எழுதியுள்ளார். (‘ஹரிஜன்’, 28.7.1946)
இந்து மதத்தில் இருந்துகொண்டே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துப் பார்த்தார். அதற்காக கேரள மாநிலம், பாலக்கோட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரைக்கூட நேரில் சந்தித்து எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தோல்வியைக் கண்டார். (‘தமிழ்நாட்டில் காந்தி’ – பக்கம் 575-576)
21.6.2017 நாளிட்ட ‘ஆனந்தவிகடன்’ வார இதழில் திரு.ப.திருமாவேலன், ‘காந்தியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று எழுதியுள்ள கட்டுரையில் சில முக்கிய தகவல்கள் வெளிவந்தன. அது இதோ:-
“மகாத்மா காந்திக்கு எதிர்காலம் குறித்த நல்ல அறிவு இருந்தது. அவர் ஒரு சிறந்த புத்திசாலித்தனமான பனியா ஆவார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், நாடு சுதந்திரம் அடைந்ததும், காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச் சொன்னார்’’ என்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் காந்திக்கு சாதிச் சாயம் பூசியுள்ளது அமித் ஷாவின் கெட்டுப்போன இதயம். `இதை காந்தி கேட்டிருந்தால், சிரித்திருப்பார். சுவையில்லாத தன்மையும், தீய எண்ணமும் கொண்ட விமர்சனம் இது என்று காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி சொல்லி-யிருக்கிறார். காந்திக்குப் பிறகு இந்தியா என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ராமச்சந்திர குஹா, அமித் ஷாவின் இந்தக் கருத்து கொடூரமானது. தீய எண்ணம் கொண்டது. மத்தியில் ஆளும் கட்சியின் தலைவருடைய கருத்தைப்போல் இல்லை என்று சொல்லியிருக்கிறார். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸும் கோரிக்கை வைத்துள்ளன. மன்னிப்புக் கேட்க மாட்டார் அமித் ஷா. ஏனென்றால், அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று அவருக்காக வக்காலத்து வாங்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
‘பனியா’ என்றால் வர்த்தகத் தொழில் புரியும் சமூகம். அந்த சாதியைச் சார்ந்த காந்தி, காங்கிரஸைக் கலைக்க வேண்டும் என்று வியாபார மூளையோடு கணித்துச் சொன்னார் என்பதுதான் அமித் ஷா சொன்னது. கொஞ்சம் கஞ்சத்தனமாக இருப்பவனை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சொல்லியும், அதிகக் கோபக்காரனைக் குறிப்பிட்ட சாதியைச் சொல்லியும் கிண்டல் அடிப்பது எல்லாம் நாம் சமூகத்தில் பார்க்காததா? அதையே ஓர் அகில இந்தியக் கட்சித் தலைவர் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?
இந்து, இந்து, இந்து என்று சொன்னாலும், உள்ளே ஊடாடுவது எல்லாம் என்ன சாதி, என்ன குலம், என்ன இனம் என்பதுதான். அதுவும் மகாத்மாவுக்கும் அந்தச் சாதி பெயின்ட் அடிப்பதன் அர்த்தம், எல்லா இந்தியர்களும் கொண்டாடும் மனிதராக இந்த காந்தி இருக்கிறாரே? என்ற வயிற்றெரிச்சல்-தான். காந்தி ஜயந்தி நாளை, குப்பைக் கூட்டும் நாளாக ‘ஸ்வெச் பாரத்’ ஆக்கிய நாற்றம் இன்னும் நிற்கவில்லை. அதற்குள், அமித் ஷாக்களின் வன்ம வார்த்தைகள்.
காங்கிரஸைக் கலைக்கச் சொன்ன காந்தியைத்தான் உங்களுக்குத் தெரியுமா அமித் ஷா? அது, அவர் கடைசிக் காலத்தில் சொன்னது. ஆனால், தன் கடைசி 28 ஆண்டுகளாக காந்தி சொன்னது மதச்சார்-பின்மை… மதச்சார்பின்மை… மதச்சார்பின்மை. காந்தி, இந்தியாவுக்கு போதித்துவிட்டுச் சென்ற, இன்றுவரை நாம் பொன்போல் போற்றியாக வேண்டிய தத்துவம் அதுதான். அதைக் கடைப்பிடிக்காவிட்டால், இந்தியா இருக்காது. இந்தியா, இந்தியாவாக இருக்காது.
1920இ-ல் கிலாபத் இயக்கக் கலந்துரை-யாடல்கள் முதல், அவர் கொலை செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டு வரைக்கும், திரும்பத் திரும்ப இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்துத்தான் காந்தி பேசினார்; எழுதினார்; அறிவுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கூட்டிய கூட்டத்தில் பேசியபோதும் அதைச் சொல்லும் துணிச்சல் காந்திக்கு மட்டும்தான் இருந்தது.
வார்தா ஆர்.எஸ்.எஸ் முகாமுக்குக் காந்தி வந்தார். 1,500-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவக்குகள் கலந்துகொண்ட முகாம் அது. அவர்களைப் பார்த்தபோது காந்தி மகிழ்ச்சியடைந்தார். எதற்காகத் தெரியுமா? அவர்களிடம் தீண்டாமை இல்லை; ஒருவர் சாதி இன்னது என்று அறியவில்லை; கண்டிப்பான எளிமை அவர்களிடம் இருந்தது என்பதற்காக மகிழ்ந்தார் காந்தி. அந்த அமைப்பில் உருவான அமித் ஷாதான், காந்தியின் ஜாதியைக் கண்டுபிடிக்கிறார்.
1947ஆ-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லி பங்கி காலனியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் காந்தி பேசியபோது, “நீங்கள் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது’’ என்று சொல்லிவிட்டு, “ஆர்.எஸ்.எஸ் உண்மையில் பயனுள்ளதாக இருப்பதற்கு, தன்னலத் தியாக நோக்கத்தில் தூய்மையும் உண்மையான அறிவும் கலந்திருக்க வேண்டியது அவசியம். இந்த இரண்டும் இல்லாத தியாகம், சமூகத்தின் நாசமாகவே முடியும். தீண்டாமை உயிருடன் இருக்குமானால், இந்து சமயம் செத்துத்தான் ஆகவேண்டும். அதேபோல, இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று இந்துக்கள் நினைப்பதாக இருந்தால், தங்களின் அடிமைகளா-கத்தான் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்று இந்துக்கள் நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுவார்கள் என்று காந்தி செய்த பிரகடனமும் இருக்கிறது. இதை நீங்கள் கேட்பீர்களா அமித் ஷா?
அந்தக் கூட்டத்தில்தான், காந்தி பேசி முடித்தபிறகு, “தீமை செய்பவரைக் கொன்றுவிட இந்து தர்மம் அனுமதிக்கிறதா?’’ என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காந்தி, “அனுமதிக்கவில்லை. தீமை செய்யும் ஒருவர், இன்னொருவரைத் தண்டிக்க முடியாது. தண்டிப்பது என்பது அரசாங்கத்தின் வேலையேயன்றி, மக்களின் வேலை அல்ல’’ என்று பதில் சொன்னார். இதற்கு நான்கு மாதங்கள் கழித்துத்தான் காந்தி கொலை செய்யப்பட்டார்.
“நானும் ஒரு ஸனாதன இந்து. வேதகாலத்தில் இருந்த பண்டைய வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு மதமும் ராஜ்ஜியமும் ஒன்றுதான். மதமில்லாத ராஜ்ஜியத்தை நான் வெறுத்துத் தள்ளுகிறேன். மதத்தைக் கைவிட்ட ராஜ்ஜியம் மரணக் கூண்டுக்குச் சமமானதாகும். ஏனெனில், அது ஆன்மாவையே கொன்றுவிடுகிறது’’ என்று சொன்னவர் காந்தி. அரசியலில் அதிகமாக மதச் சிந்தனைகளைக் கலந்தவரும் அவர்தான். அது, அவருடைய கையை மீறிப் போகும் அளவுக்கு அதிகமானபோது, “அந்தப் பாவத்தைச் செய்தவன் நான்தான்’’ என்று மன்னிப்புக் கேட்டவரும் காந்திதான். இதை நீங்கள் பின்பற்றுவீர்களா அமித் ஷா?
காந்தி ஆன்மிகவாதிதான். அவரது ஆன்மிகம், மதம் கடந்ததாக இருந்தது. தன் தாயின் வழியில் விஷ்ணு கோயிலுக்குச் சென்றார். வேலைக்காரப் பெண் சொன்னதால், ராமரட்சை கற்றுக் கொண்டார். அவருடைய குடும்பம் சிவன் கோயிலுக்கும் சென்றது. பள்ளிக்குச் செல்லும் வழியில் கிறிஸ்தவ பிரசாரகர் பேச்சையும் கேட்டார் காந்தி. இங்கிலாந்து சென்றபோது மது, மாது, மாமிசம் தொடுவதில்லை என்று ஜைன சாமியார் பேச்சார்ஜி சுவாமியிடம்தான் சத்தியம் செய்தார். இங்கிலாந்தில் பிரம்மஞான சங்கத்துடன் தொடர்பில் இருந்தார். பாரீஸில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்றுவந்தார். தென்னாப்பிரிக்காவில் அப்துல்லா சேத் மூலமாக இஸ்லாம் பற்றி முழுமையாக அறிந்தார். `விஷயங்களின் உண்மையை அறிய விரும்புவோர் குரானைப் படிக்கலாம். அதில் இந்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நூற்றுக் கணக்கான வாக்கியங்களைக் காணலாம். அதுபோலவே, பகவத்கீதையிலும் ஒரு முகமதியனும் மறுக்கலாகாத வாக்கியங்கள் உண்டு என்றார். அவரது இறுதிக்கால பிரார்த்தனைக் கூட்டங்களில், பகவத்கீதையைப் போலவே குரானும் வாசிக்கப்பட்டது. அவருடைய கொலைக்கு அதுவும் அடித்தளமாக அமைந்தது.
‘பிரார்த்தனையின்போது குரான் ஓதக் கூடாது’ என்று காந்திக்கு மிரட்டல் கடிதம் வந்தது. “நான் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதை எதிர்ப்பவர்கள், கூட்டத்துக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்கள் விரும்பினால், என்னைக் கொன்றுவிடட்டும். நான் கொல்லப்பட்டாலும்கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை உச்சரிப்பதை விடமாட்டேன். எனக்கு அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்தாம். இந்தப் பெயர்களை உச்சரித்துக் கொண்டே நான் சந்தோஷமாக இறப்பேன்’’ என்றார் காந்தி.
அதே கூட்டத்தில்தான் காந்தி சொன்னார், “இந்தியா இந்துக்களுக்கு மட்டும், பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று சொன்னால், இரண்டும் விஷம் வழிந்தோடும் தேசங்களாகிவிடும். ஆனால், நான் கனவு காணும் நாடு அன்பு நதிகள் வழிந்தோடும் நாடாகும்’’ என்றார். விஷம் வழிந்தோடுவதற்கான சூழ்நிலைகளைத்தான் அண்மைக்காலமாகப் பார்த்து வருகிறோம். காந்தியின் பிம்பத்தைச் சிதைப்பதன் மூலமாக, ‘எல்லோரும் இந்தியர்’ என்ற சித்தாந்தம் சிதைக்கப்படுகிறது.
நடக்கவிருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. அதை எதிர்கொள்வதற்கு காந்தியைக் கொச்சைப்படுத்தக் கிளம்பியிருக்கிறார்கள். “நாங்கள் காப்பாற்றி வைத்திருந்த காந்தியை, இரண்டு ஆண்டுகள்கூட இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை’’ என்று பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் சொன்னதாகச் சொல்லப் படுவதுண்டு. இந்தியாவுக்கு இருக்கும் ஒரே ஒரு கையிருப்பான காந்தியையே திரும்பத்திரும்பச் சுட்டுக்கொண்டு இருக்கிறோம்.
மளிகை வியாபாரம் ஆபத்தில்லை. மரண வியாபாரம் ஆபத்தானது.
– ‘ஆனந்த விகடன்’
– 21.6.2017 (பக்கம் 102-105)
“மதம் சம்பந்தமாக காந்தியார் கொண்டிருந்த முந்தைய கருத்தும், பிற்காலத்தில் அந்தத் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்ற நிலையும் கவனிக்கப்பட வேண்டும்.’’
இதுகுறித்து தந்தை பெரியார் சொன்ன கணிப்பும் கருத்தும் முக்கியமானதாகும்.
“இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல். காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165ஆம் நாளில் கொல்லப்பட்டார்.
காந்தி, ‘நம் நாடு மதச்சார்பற்றது’ என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக் காரராகிவிட்டார். அவர் கொல்லப்படா விட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்’’ என்றாரே தந்தை பெரியார்.
(‘விடுதலை’ 13.1.1965)
நாதுராம் கோட்சே ‘இந்து ராஷ்டிரா’ என்ற ஓர் ஏட்டை நடத்தி வந்தான். அதன் பங்குதாரர்களின் கூட்டத்தில், “தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி சொன்னார். இந்தியாவோ பிளக்கப்பட்டு விட்டது. ஆனால், காந்தி இன்னும் உயிரோடு இருக்கிறாரே’’ என்றான்.
இந்தப் பேச்சில் கோட்சேயின் கொலை நோக்கம் தொனிக்கிறது. மற்றொரு முக்கிய கோபமும் உண்டு.
இந்தியா_பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் இருந்த பணம் ரூ.400 கோடி. இதில் ரூபாய் 75 கோடி பாகிஸ்தானுக்கும், மீதி இந்தியாவுக்கும் என்று ஒப்பந்தமானது. இதன் அடிப்படையில் உடனடியாக முகம்மது ஜின்னா அவர்களுக்கு 20 கோடி ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய தொகை ரூ.55 கோடி குறிப்பிட்ட கால கட்டங்களில் அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனாலும், இந்தத் தொகை அளிப்பதில் இழுபறி ஏற்பட்டது. கொடுக்கக் கூடாது என்று கோல்வால்கர், வி.டி.சாவார்க்கர் போன்றோரின் பிடிவாதம்.
காந்தியார் உண்ணாவிரதமே இருக்க நேர்ந்தது. அப்பொழுது கோட்டை மைதானத்தில் பேசிய ஜவகர்லால் நேரு, “மகாத்மா காந்தி இந்தியாவின் ஆத்மா. அவரை இழந்தால் இந்தியாவின் ஆன்மாவை இழந்து விடுவோம். எனவே, அவரின் விருப்பப்படியே 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்கு அளிப்போம்’’ என்று பேசினார்.
கோட்சே நடத்தி வந்த ‘இந்து ராஷ்டிரா’ ஏட்டின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய கோட்சே ‘தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும்’ என்று காந்தி சொன்னார்.
இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது. ஆனால், காந்தி இன்னும் உயிரோடு இருக்கிறாரே எனும் சீற்றம் கோட்சேயின் ஆழ்மனதில் பதுங்கி இருந்தது.
“பசு பாதுகாப்பு என்பது குறித்து காந்தி வாயளவில்தான் பேசினாரே தவிர, அதற்காக எந்த உருப்படியான காரியத்தையும் காந்தியார் செய்யவில்லை என்பது சங்பரிவார்க் கும்பலின் குற்றச்சாட்டு. சுதந்திரப் போராட்டத்தில் முசுலிம்களை இணைத்துக் கொண்டதில் காந்தியார் மீது இந்துத்துவா கும்பலுக்குக் குமுறிடும் கோபமே, காந்தியாரைக் கொன்றே தீரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வகையறா வக்கிர உணர்வோடு துரத்திக்கொண்டு இருந்தது. காந்தியாரின் கொள்ளுப் பேரனான துஷார் ஏ.காந்தி அவர்களால் எழுதப்பட்ட, Let’s Kill Gandhi: A Chronicle of his last days, the Conspiracy, Murder, Investigation and Trial (Tushar A. Gandhi) எனும் நூலில் தெரிவித்துள்ள கருத்தும், இருட்டுப் பகுதியில் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாகும். இதோ சில:
தொல்லை தரக்கூடிய அந்த கிழ மனிதனின் (காந்தியாரின்) தலையீடுகளைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் அரசும், அதன் அமைச்சர்களில் சிலரும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகாத்மாவுடன் வாழ்வது எளிதாக இருக்குமா?
உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்குக் கிடைத்த ஒரு ரகசிய அறிக்கையின்படி, காவல்துறையில் இருந்த பலரும் பல உயர் அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து மகா சபையின் ரகசிய உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் இந்து தீவிரவாத இயக்கங்களின் கருத்துகளையும் கொள்கைகளையும் ஆதரித்துக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும் பணியாற்றினர். அந்தக் குழு உறுப்பினர்கள் தீவிரவாத இயக்கங்களின் முன்னணிப் போர் வீரர்களாகவும் இருந்தார்கள் (ஷிtஷீக்ஷீனீ-ஜிக்ஷீஷீஷீஜீமீக்ஷீ) என்பது ஹிட்லரின் நாஜி கட்சி மெம்பர்கள். எதிரி கட்சி ஊர்வலங்களில், மற்றும் ஹிட்லர் விரும்பாத இடங்களில் சென்று அடாவடிப் போராட்டக்காரர்களாக இருந்தனர்.
நாஜிகளுடன் தொடர்பு இருந்திருக்குமோ!
இந்த இருவர்க்கிடையில் ஏதேனும் ரகசிய ஒப்பந்தங்கள் இருந்திருக்கக் கூடுமா? விசாரணை மேற்கொள்ளப்பட்ட விதமும், காந்தியாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையின் மெத்தனப் போக்கும், விசாரணை, உண்மையை வெளிக் கொண்டு வருவதற்குப் பதில், அதை மறைப்பதற்கே முயற்சிப்பதாக நம்பப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 20 முதல் 30ஆம் தேதி வரை, காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காந்தியாரின் உயிரைப் பாதுகாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக கொலைகாரர்கள் அவர்கள் முயற்சிகளில் எளிதாக வெற்றிகாண வழி வகுத்துள்ளது.
தொல்லையானவர் ஆனாரா காந்தியார்?
வெள்ளையர்களை வெளியேற்றுவதில் காந்தியார் வெற்றி கண்டுள்ளார். ஆனால் கெட்ட வாய்ப்பாக அவரது அரசியல் வாரிசுகளுக்கு அவரது நல்ல கொள்கைகள் பின் பற்றப்படுவதற்கு கடினமாயிற்று. அவர்களுக்கு, அவர் தேசத்தின் பிதா; அவர் உதவிகரமாக இருப்பதற்கு மேலாகவே உயிர் வாழ்ந்துள்ளார். இப்பொழுது அவர் ஒரு தொல்லையாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைக் கலைக்க வேண்டுமென்று அவர் ஆலோசனை சொல்லி இருக்கிறார். நாட்டுப் பிரிவினையை நீக்குவதற்குத்தான் பாகிஸ்தான் போவதாக அவர் பயமுறுத்தினர். தன்னுடைய லட்சிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, அரசியல் காரணமாக ஆக்கப்பட்ட சில குறுகிய கால ஏற்பாடுகளை அவர் நிராகரிக்கச் செய்தார்.
அவர் ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக அச்சுறுத்தினார்.
கிராமங்களின் மறுமலர்ச்சிக்காக அவர் கொண்டிருந்த திட்டங்களுக்குப் பதிலாக வேக வேகமாக இந்தியாவை தொழில் மயமாக்கப் போவதை அவர் எதிர்த்தார். அவர் அமைச்சர்கள் மக்களின் வேலைக்காரர்களாகச் செயல்பட விரும்பினார்; அவர்களது பெரிய, ஆடம்பரமான பங்களாக்களை வீடில்லாத ஏதிலிகளின் உறைவிடமாக்க விரும்பினார். வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டனை அவருடைய மிகப் பெரிய மாளிகையை, ஏதுமில்லா மக்களுக்கான மருத்துவமனையாக மாற்றுவதற்காக காலி செய்யச் சொன்னார்.
“இந்தக் கிழவனுடன் ஒத்துப் போக முடியாது!’
அவரது அரசியல் வாரிசுகளால், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்தக் கிழ மனிதனுடன் எப்படி ஒத்துப் போக முடியும்? அவர், இந்த சூழ் நிலையிலிருந்து எப்படியாவது நீக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன இழப்பு? சில இடங்களில் அவர்மீது மிகுந்த கோபம் இருந்தது. அதை ஏன் விசிறிவிட்டு, தங்களுக்கு வசதியாக, அந்த அமைதியின் தூதுவத்தைப் பலியாக்கக் கூடாது?
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை அவர்மீது கோபம் கொண்டிருந்தது. ஏனென்றால் அவர்கள், முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவாகப் பிரிவினை செய்ய வைத்திருந்த திட்டத்தை அவர் முறியடித்தார். பிரிவினை விளைவால் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போது, அவர்களால் முடிந்த அளவு, இந்தியாவின் வட பகுதியிலிருந்தாவது எத்தனை இந்துக்கள் இந்தியாவுக்குள் வருகிறார்களோ, அத்தனை முஸ்லிம்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள விரும்பினர். இது செயல்பட்டிருந்தால், மற்ற பகுதிகளிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடிப்பதற்கு அது ஏதுவாக இருக்கும். முடிவில் உண்மையான இந்து தேசம் உருவாகும். இந்த முறையே ஏற்கெனவே ‘முஸ்லீம் லீக்’ கட்சியானது சாமர்த்தியமாக மேற்கு பஞ்சாப், சிந்து, வட மேற்கு எல்லைப்புற மாநிலங்கள் மற்றும் கிழக்கு வங்களாம் ஆகிய பகுதிகளில் இருந்த இந்து மக்களை “வெளியேறு அல்லது கொல்லப்படுவாய்” என மிரட்டி அச்சுறுத்தி ஆரவாரம் செய்துள்ளனர். ஆனால் காந்தியார் தனது வன்செயலற்ற தத்துவத்தால் அது நடைபெறாமல் தடுத்துவிட்டார். ஓடுவதற்கு தயாராக இருந்த முஸ்லிம்களும், அவரது முயற்சியால், இங்கு தங்கி இருப்பதற்கான உறுதி பெற்றனர்.
கோபமடைந்த இந்து தீவிரவாதிகள், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டுவிட்டதால், இந்தியாவில் இருப்பதற்கான உரிமை முஸ்லீம்களுக்கு இல்லை என, காந்தியார்மீது, அவர்கள் குறிக்கோள் நிறைவேறாததற்கு குற்றம் சாட்டினர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகா சபா வெறியர்கள் மிகத் தந்திரமாக தங்கள் கோபத்தை மறைத்துக் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் தங்களது சகோதரர்கள், நாடு பிளவுபட்ட காரணத்தால், வெட்டிக் கொல்லப்படுவதைப் பொறுக்காமல், கிளர்ச்சி செய்து அதற்கான காரணம் காந்தியார்தான் என அவர்மீது பழி சொன்னார்கள். தாங்கள் செய்த தவறுகளுக்காக வேறு யாரோ சிலுவையில் அறையப்படுவதற்காக காங்கிரஸ்காரர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
பார்ப்பனர்களுக்கு வெறுப்பு – ஏன்?
ஆர்.எஸ்.எஸ். இந்துமகா சபாக்கள், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து இந்திய மக்களிடையே சாதியற்ற, வகுப்புகளற்ற ஒரு சமுதாயத்தைக் காண காந்தியார் ஓர் இயக்கத்தை உருவாக்கியிருந்தார். இது அவர்களுக்கு அவர் மேல் மிகுந்த கோபத்தை உண்டாக்கியிருந்தது. உயிர்த்து எழுந்து “கீழ் ஜாதியினர்”, புதிதாக தங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள ஜனநாயக உரிமைகளின்படி உயர் சாதியினரின் ஆதிக்கத்தை, குறிப்பாக, பிரிட்டிஷார் காலத்தில் அதிகார வர்க்கத்தையும், நீதித் துறையையும் தங்களது ஆளுகைக்குள் கொண்டிருந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அச்சுறுத்தலாயினர்.
1947-க்கு முன்பு பார்ப்பனர் அரசாங்கம்தான் இந்தியாவில் இருந்தது. மராட்டியத்தில் பூனே பேஷ்வாக்களின் சாம்ராஜ்யம் இருந்தது. பூனே பார்ப்பனர்கள் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் பிறகு ஆட்சிக்கட்டில் திரும்பவும் தங்களது கைக்கு வரும் என்றும் நம்பினர். பேஷ்வாக்களின் வழிவந்தோரின் இந்தக் கனவு காந்தியாரால் தூள் தூளாக்கப்பட்டது. காந்தியாரின் உயரைக் குடித்தே தீர வேண்டும் என்ற உணர்ச்சி வெறியானது ‘இந்துத்துவா’ கூட்டத்திற்கு.
காந்தியாருக்குப் பார்ப்பனர்கள் மீது ஏன் கோபம்?
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) இருந்தார். பொது வாழ்க்கையில் மிகவும் தூய்மையானவர்; பக்த சிரோன்மணிதான்; மாதம் தவறாமல் திருவண்ணாமலை ரமண ரிஷியைத் தரிசிப்பவர்தான். அவரிடம் சமூக நீதிப் பார்வை இருந்தது. முழுக்க முழுக்கப் பார்ப்பனர்கள் – கல்வி, உத்தியோகங்களைத் தாங்களே அனுபவித்துக் கொண்டு இருந்தனர். இதனால் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம்; விளைவு காந்தியாரிடம் காவடி எடுத்தார்கள். “ஓமந்தூர் ராமசாமி தாடியில்லாத ராமசாமி நாயக்கர் என்று புகார் சொன்னார்கள்; எல்லா உத்தியோ கங்களையும் பார்ப்பனர் அல்லாதாருக்குத்தான் கொடுக்கிறார். பார்ப்பனர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள்’’ என்று குற்றப்பத்திரிகை படித்தார்கள். காந்தியார் அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அதற்குப்பின் முதலமைச்சர் ஓமந்தூரார் காந்தியாரைச் சந்தித்து உண்மை விவரங்களைக் கூறினார். பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் எத்தனைப் பங்கு அனுபவிக்கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார். காந்தியாருக்கு உண்மை நிலவரம் புரிந்துவிட்டது.
அதற்குப்பின் தங்களைச் சந்திக்க வந்த பார்ப்பனர்களிடம் சொன்னார், “உங்கள் பங்குக்குமேல் அதிகம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்’’ என்று சொல்லிவிட்டுக் கடைசியாக ஒரு கேள்வி கேட்டார்
பார்ப்பனர்களைப் பார்த்து, “பிராமணர்-களுக்குத் தர்மம் வேதம் ஓதுவதுதானே? உங்களுக்கு ஏன் பிணம் அறுக்கும் டாக்டர் வேலை? உங்களுக்கு ஏன் ‘டி ஸ்கொயர்?’ போய் உங்கள் வருணத் தொழிலைச் செய்யுங்கள்!’’ என்று காந்தியார் கூறியதுதான் தாமதம், பார்ப்பனர்கள் ஒரு புள்ளி வைத்துவிட்டனர் அப்பொழுதே!
சரி, இனிமேல் காந்தி நமக்குச் சரிவர மாட்டார். அவர் செல்வாக்குப் பார்ப்பனர்-களுக்கு இனிப் பயன்படப் போவதில்லை என்று தீர்க்கமாக முடிவு செய்து, காந்தியாரை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டிவிட்டனர்.
காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட காந்தியார் மீதான ஆத்திரம் அடங்கிப் போய்விடவில்லை ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பொறுத்தவரை.
வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்¢¤ல் இந்த இந்துத்துவாவாதிகள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். அதற்குப் பெயர் “மை நாதுராம் கோட்சே போர்தா’’ என்பதாகும்.
காந்தி என்ற மகானைக் கொல்லவில்லை _ அரக்கனைக் கொன்ற கோட்சே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சித்தரித்தனர். டில்லி, மும்பை போன்ற நகரங்களில் அரங்கேற்றப்பட்டது.
பசு பாதுகாப்பு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு என்ற அடிப்படைமயில் காந்தியார் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டார் என்றால், அந்த இரண்டையும் முன்வைத்தே சங் பரிவார்களும் அவற்றின் அரசியல் வடிவமான பா.ஜ.க.வும் இன்றுவரை கோரக் கூத்தாடுகின்றன.
பசு பாதுகாப்பு என்ற பெயரால் படுகொலைகள் கொஞ்சமா, நஞ்சுமா? பசு பாதுகாப்பு என்ற பெயரால் எத்தனை எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல முசுலிம்கள் மீதான காட்டுவிலங்காண்டித்தனமாக வெறுப்பு _ எதிர்ப்பு நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் என்னவெல்லாம் நடந்தது?
இந்திய மத்திய அரசின் தகவலின்படி குஜராத் வன்முறையில் 790 முசுலிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டும், 2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போனதோடு, 919 பெண்கள் விதவைகளாகவும், 606 சிறார்கள் அனாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார்பற்ற மனித உரிமை கண்காணிப்பாளர்களின் புள்ளிவிவரங்களின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 2000க்கும் அதிகமென கூறப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் Congress Research Service (CRS) தகவலின்படி இவ்வெண்ணிக்கை 3000க்கும் அதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் இஸ்லாமியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இசுலாமியர்களின் வணிகத் தலங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டன. அகமதாபாத், கோத்ரா போன்ற பகுதிகளில் இசுலாமியர்கள் வாழ்ந்த பகுதிகள் கடுமையாக சேதமடைந்ததுடன், மீண்டும் செப்பனிடாதவகையில் சேதமடைந்தன.
400க்கும் மேற்பட்ட பெண்கள் சமூக விரோதிகளால் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இதில் 200க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். இதில் சிறுமிகளும் அடக்கம்.
சேதமானவைகள் விவரம் 273 மசூதிகள், 241 தர்காக்கள், 5 தேவாலயங்கள், 8 கோவில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இஸ்லாமியர்களின் பத்தாயிரம் வீடுகள், 2000 உணவகங்கள், பதினைந்தாயிரம் வணிகத் தளங்கள், 7000 வாகனங்கள் மற்றும் 12 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அரசப் பயங்கரவாதியாக இந்தக் கொடூரம் நடந்தது என்றால், அவரே பிரதமராகிவிட்ட நிலையில் இந்தியாவே இரணகளப்படுகிறது.
450 ஆண்டு வரலாறு படைத்த சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதி பி.ஜே.பி. பெருந்தலைவர்களின் வழிகாட்டுதலோடு அடித்து நொறுக்கப்-படவில்லையா?
முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து நரேந்திர மோடி என்ன சொன்னார்? காரில் பயணிக்கும்போது நாய்கள் அடிபட்டுச் சாவதில்லையா? என்றாரே! எனவே, கோட்சேக்கள் சாகவில்லை.
1927ஆம் ஆண்டில் பெங்களூருவில் காந்தியார்_பெரியார் சந்திப்பின்போது _ “நாடு சுதந்திரம் அடைந்த பின் இந்து மதத்தைச் சீர்திருத்திக் கொள்ளலாம்’’ என்று காந்தியார் சொன்னபொழுது, தந்தை பெரியார் குறுக்கிட்டு, “இந்து மதத்தில் கை வைத்தவர்களை விட்டு வைக்க மாட்டார்கள்’’ என்று தந்தை பெரியார் கூறியதையும் _ காந்தியார் படுகொலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்!