காவி
கறை படிந்த
தேசத்தில்
கருப்பாய் ஒளிரும் மண்!
பிற்போக்கின் பிறப்பிடமாய்
வடக்கு தேயும் போது
முற்போக்கின் முன்னோடியாய்
முந்தி நிற்கும் மண்!
பசுவுக்கு பாதுகாவலர்கள்
இருக்கும் நாட்டில்
மாட்டுக்கறி விருந்து தந்து
மனித உரிமை காத்த மண்!
பிணம் எரிப்பவரின் பிள்ளையை
இட ஒதுக்கீட்டால்
இஞ்சினியர்களாக்கி
ஏற்றம் காணச் செய்த மண்!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அடிமை வட்டத்திற்குள்
அடைக்கப்பட்ட பெண்களை
ஆணுக்கு நிகராய் ஆக்கி
அழகு பார்க்கும் மண்!
சுயமரியாதைத் திருமணச்
சட்டம் தந்து
ஜாதி வெறியை
மோதித் தகர்த்து
வேதியர் திருமணத்தை
விலக்கிய மண்!
கடவுள் மறுப்பாளரின்
சிலை உடைக்கப்பட்டால்
கடவுள் நம்பிக்கையாளர்கள்
கொதித்தெழுகிற மண்!
உரக்கச் சொல்லுவோம்
பெருமையோடு சொல்லுவோம்
மகிழ்வோடு சொல்லுவோம்
மார் நிமிர்த்திச் சொல்லுவோம்
இது பெரியார் மண்!
– மகிழ்