செய்தியும் பார்வையும்

செப்டம்பர் 16-30

குளக்கரை புத்தர்

தமிழ்நாட்டில் எந்த ஊரில் அகழாய்வு நடந்தாலும் அங்கு ஒரு புத்தர் சிலை கிடைப்பது வழக்கம். அண்மையில் சென்னைக்கு அருகில் கேளம்பாக்கம் அருகேயுள்ள படூர் கிராமத்தில் உள்ள குளத்தைச் சுற்றியுள்ள பகுதியைத் தோண்டும் போது ஒரு புத்தர் சிலை கிடைத்துள்ளது. 4 அடி உயரமுள்ள இந்தப் புத்தர் சிலை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அகழ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.குளக்கரையில் புத்தர் சிலை கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. குளக்கரையில் அரச மரத்தடியில் இருந்த புத்தர் சிலைகள்தான் ஆரிய மத ஆதிக்கக் காலத்தில் விநாயகன் சிலைகளாக மாற்றப்பட்டன.

குப்பை விநாயகன்

சில பத்தாண்டுகளாக நடத்தப்படும் விநாயகன் ஊர்வலத்தை இந்த ஆண்டும் இந்துத்துவ சக்திகள் நடத்தின. வேலூர் உள்ளிட்ட சில ஊர்களில் வழக்கம் போல இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்தின் அருகில் வம்பும் செய்தன. சென்னையில் சுமார் 500 சிலைகள்  வைக்கப்பட்டு எடுத்துச் சென்று கடலை நாசப்படுத்தினார்கள். ஆனால், 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட்டதாக பத்திரிகைகள் வழக்கம்போலப் புளுகி பக்தியை வளர்த்தார்கள். அப்பாவித் தமிழ் இளைஞர்களும் ஒரு நாள் கூத்து, கொஞ்சம் பணம் என்பதற்காக இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பல தெருக்களில் வீட்டில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளை பக்தர்கள் தெருவில் வைக்கப்பட்ட பெரிய சிலைகளோடு கொண்டு செல்வதற்காக தெருவில் போட்டுவிட்டுச் சென்றார்கள். அது குப்பைபோல குவிந்துகிடந்தது.

அவசரத்தில் அந்தக் குவியலில் இருந்து எடுத்துச் செல்லப்படாத விநாயகன்கள் சில அங்கேயே கிடந்து மறுநாள் மாநகராட்சிக் குப்பை அள்ளுவோர் எடுத்துச் செல்வதையும் பார்க்க முடிந்தது. இவ்வளவு கூத்துக்கும் அடிப்படையான விநாயகன் யார்? எப்படி இங்கே வந்தான்? ஆய்வாளர் மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார் கேளுங்கள்: புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம்.  தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோவில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோவிலாக மாற்றிவிட்டனர்.

அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோவில்களை விநாயகர் (பிள்ளையார்) கோவிலாகவும் மாற்றிவிட்டார்கள். பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோவில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ சமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி.6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு. மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. (மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பவுத்தமும் – தமிழும் பக்கம் 77) விநாயகனை வழிபட்டு, பின் கடலில் தூக்கி வீசும் பக்தர்கள் இதனை அறிந்துகொள்ளட்டும். கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சிக்காகத் திட்டங்களைக் கொண்டுவரும் போதெல்லாம் அதனைக் குறை சொல்லி அறிக்கைவிடும் தமிழறிஞர்கள், திராவிட இயக்கத்தைவிட எங்களுக்குத்தான் தமிழ் மீது அதிக அக்கறை உள்ளதாக்கும் என்று கூச்சலிடும் சில அரசியல் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளை சில நாட்களாகக் காணவில்லை. சமஸ்கிருதப் பெயர் கொண்ட ஆரியப் புத்தாண்டு முறையை மீண்டும் கொண்டுவந்த ஜெயலலி தாவுக்கு சிறு கண்டனத்தைக்கூடத் தெரிவிக்காத இவர்களில் சிலர் போயஸ்கார்டன் பக்கம் உலவுவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்… தமிழ்… என்று பேசுவோரின் வீரம் தமிழுக்கு ஆபத்து வரும் நேரத்தில் வாய்மூடி இருப்பதுதானோ?

எம்.ஜி.ஆர்.கோவில்

அண்மையில் எம்.ஜி.ஆருக்குச் சிலை அமைத்து கோவில் கட்டி வழிபடும் செய்திகள் வந்தன. எம்.ஜி.ஆர்.தமிழ்நாட்டில் எந்தக் கோவிலுக்கும் செல்லாதவர். தனது கடைசிக் காலத்தில் கட்டாயத்தின் பேரில் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும், சிறீரங்கம் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது திரைப்படங்களில்கூட கோவிலில் வழிபடும் காட்சி இருக்காது. திருமணக் காட்சிகூட வைதிக முறைப்படி காட்டப்படாது. மாறாக, திருவள்ளுவரை முன் வைத்து மாலை மாற்றுவார். ஒரே கடவுள் என்று பொருள்படும்படியாகப் பாடல்கள் பாடுவார். ஒருமுறை எம்.ஜி.ஆர். கும்பகோணத்தில் படப்பிடிப்பில் இருந்தாராம். அப்போது அங்கு மகாமகம் விழா நடக்க இருந்ததைக் கேள்விப்பட்டு, அந்த நாளில் அங்கு இருக்காமல் தஞ்சாவூர் சென்று தங்கிவிட்டாராம்.

இதையெல்லாம் அவரது ரசிகர்கள் அறிந்திருந்தால் இப்படிக் கோவில் கட்டுவார்களா? இதனையொட்டிய இன்னொரு தகவலையும் படிக்க நேர்ந்தது. எம்.ஜி.ஆரின் பேட்டிகளைத் தொகுத்து எஸ்.கிருபாகரன் என்பவர் நூல் ஒன்றை ஆழி பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கேள்வி, உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்? இதற்கு எம்.ஜி.ஆர். சொல்லிய பதில்:

என் பூஜை அறையில் என் தாய்-தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் – தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.

அங்கேயும் இப்படித்தான்…

ஈழத்தில் போர்ச் சூழல் மறைந்து நிவாரணம் தேடி மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் கோவில் திருவிழாக்களுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லையாம். அங்குள்ள எல்லாக் கோவில்களிலும் (போர் நடக்கும்போதும் நடந்தது) வழக்கமான திருவிழாக்கள் நடந்துவருவது ஒருபுறம் இருக்க, நம்மூர் சினிமாக்கள் மீண்டும் அங்கு திரையிடப்படுகிறதாம். அதற்கு ஈழத்தமிழ் இளைஞர்கள் குவிகிறார்களாம். வருத்தப்பட்டு ஈழ இணையதளமான www.tamilcnn.com செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியாகியுள்ள நடிகர் அஜித்  நடித்த மங்காத்தா என்ற திரைப்படம் மட்டக்களப்பு நகரில் ஒரு திரையரங்கில் ஓடுகிறதாம். அந்தப் படம் வெளியான அன்று அஜித்தின் கட் அவுட்டிற்கு அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். எவ்வளவோ பேர் ஒருவேளை உணவுக்குக்கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தல் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு முட்டாள்தனம் என்று அந்த இணையதளம் கண்டித்திருக்கிறது.

குறிப்பு: (நடிகர் அஜித் தமிழர் அல்ல. அண்மையில்  தனது ரசிகர் மன்றத்தை  இவர் கலைத்துவிட்டார். அதற்காக இவரைப் பாராட்ட வேண்டும்)

– அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *