பெண்களுக்கு
விலங்குகளும், பறவைகளும் பிள்ளையாகப் பிறக்குமா?
“காசியபரின் மனைவியர் பதின் மூவருள் ‘அதிதி’, ‘தி-தி’ பற்றி கூறப்பட்டது. அடுத்து ‘தனு’ என்பவளுக்கு த்விமூர்த்தி, சம்பரன் முதலிய நூறு புதல்வர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் தானவ சிரேஷ்டராக விளங்கி தமது வமிசத்தை விருத்தி செய்தனர். இவர்கள் குலத்தில்தான் ‘நிவாத கவசர்கள்’ என்ற தைத்யர்கள் தோன்றினர்.
காசியபரின் மற்றொரு மனைவியாகிய ‘தாமரை’ என்பவளுக்குப் பிறந்தவர் ஆறு பெண்கள். அவர்களில் சுகீ கோட்டான்களையும், காக்கைகளையும்; ச்யேனி என்பவள் பருந்துகளையும்; பாஸீ என்பவள் செம்போத்துக்களையும், க்ருதிரகா என்பவள் கழுகுகளையும், சுசீ என்பவள் நீர்ப்பறவைகளையும், ஸுக்ரீவி என்பவள் குதிரை, ஒட்டகம், கழுதை ஆகியவற்றையும் பெற்றனர்.
தற்போது உலகில் காணப்படும் பிறவிகள் அனைத்தும் முற்காலத்தில் காசியபரிடமிருந்தே தோன்றியவையாகும்.
அடுத்து மற்றொரு மனைவியாகிய ‘வினதைக்குக்’ கருடன், அருணன் என்ற இரண்டு பிள்ளைகள் தோன்றினர். இவர்களுள் கருடன் புள்ளரசு ஆவான். சர்ப்பங்களே இவனது உணவு.
அடுத்த மனைவி ஸுரஸை என்பவளும் கத்ரு என்பவளும் ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைப் பெற்றனர்.
‘குரோதவசை’ என்பவளுக்கு அரக்கர்களும், சர்ப்பங்களும், நிலம், நீர் இரண்டிலும் வாழ்பவையும் பலவகைப் பறவைகளும் பிறந்தன.
‘சுரபி’ என்பவள் பசுக்கள், எருமைகளையும், ‘கஷா’ என்பவள் யக்ஷராக்ஷசர்களையும் ‘முனி’ என்பவள் அப்சரஸ்ஸுகளையும் பெற்றனர்.’’ என்கிறது இந்துமதம்! விலங்குகளும் பறவைகளும் மனிதர்க்குப் பிறந்தன என்னும் மதந்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
அது மட்டுமல்ல, கலைக்கோட்டு ரிஷி -_ மானுக்கும், கவுசிகர் _ குசத்திற்கும், ஜம்புகர் _ நரிக்கும், கவுதமர் _ மாட்டிற்கும், அகஸ்தியர் _ குடத்திற்கும், மாண்டவியர் _ தவளைக்கும், காங்கேயர் _ கழுதைக்கும், சவுனகர் _ நாய்க்கும், கணாதர் _ கோட்டானுக்கும், சுகர் _ கிளிக்கும், ஜம்புவந்தர் _ கரடிக்கும், அஸ்வத்தாமன் _ குதிரைக்கும் பிறந்தனர் என்கிறது இந்துமதம். இப்படிக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(தரவு: ஞானசூரியன்)
கங்கையில் மூழ்கினால் பாம்பு மனிதனாக மாறுமா?
பிரதிஷ்டானபுரம் என்ற நகரில் சூரேஸ்வரன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். ஒருநாள் பிரார்த்தனைக்குப் பிறகு அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது ஒரு பாம்பாக இருப்பதைக் கண்டு மன்னனும், அவள் மனைவியும் துயரக் கடலில் ஆழ்ந்தனர். எனவே, அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் இரகசியமாய் வளர்த்து வந்தனர். சில மாதங்களில் இளவரசனாகிய அந்தப் பாம்பு ஒரு மனிதக் குழந்தையைப் போல பேச ஆரம்பித்தது. அதற்கு வேதங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய அதுவும் கற்று முடித்தது. அப்போது அந்த நாகக் குழந்தை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும், தனக்கொரு புத்திரன் இல்லாவிடில் நரகமே வாய்க்கும் என்றும் அந்த நாகம் கூறிற்று. இதைக் கேட்டு வியப்புற்ற மன்னன் எந்த இளவரசி பாம்பை மணக்கச் சம்மதிப்பாள் என்று கேட்டான். அதற்கு அது, அதெல்லாம் தெரியாது தனக்குத் திருமணம் செய்து வைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதாக கூறிற்று. அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஓர் இளவரசியைக் கடத்தி வந்து மணம் செய்விக்கலாம் என்றது.
செய்வதறியாமல் மன்னன் அமைச்சர்களிடம், இளவரசன் தக்க வயது அடைந்து கல்வி கேள்விகளில் சிறந்துள்ளான். தைரியசாலிகளில் அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்குத் திருமணம் செய்வித்து, தான் வனம் சென்று தவம் செய்யப் போவதாகக் கூறினான்.
ஆனால், நாகேசுவரன் ‘ஒரு பாம்பு’ என்ற விஷயம் அமைச்சர்களுக்குத் தெரியாது. சூரசேனனுக்கு அறிவுமிக்க, மூத்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர், “நாட்டின் கிழக்கில் விஜயன் என்றொரு மன்னன் ஆண்டு வருகிறான் என்றும், அவனுக்கு எட்டு புத்திரர்களும், போகவதி என்ற ஒரு புத்திரியும் இருக்கிறாள், அவள் சிறந்த அழகி. அவள் நாகேசுவரனுக்குத் தக்க மனைவி ஆவாள்’’ என்றார்.
அந்த அமைச்சர் மன்னன் விஜயனிடம் தூதாக அனுப்பப்பட்டார். ஓர் இளவரசி ஒருவனை நேரில் பார்த்துத்தான் விவாகம் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவள், வாளுக்கோ (அ) எந்த ஆயுதத்துக்கோ மாலையிட்டு மணம் செய்து கொள்ளலாம்.
அமைச்சர் மன்னன் விஜயனிடம் சில முக்கிய காரணங்களால் இளவரசன் நேரில் வரமுடியாத சூழ்நிலை. எனவே, இளவரசன் வாளுக்கு மாலையிட்டு மணம் செய்யலாம் என்று கூற, மன்னனும் அதற்கு இசைந்தான். எனவே, இளவரசியுடன் அனைவரும் பிதிஷ்டானபுரம் வந்தடைந்தனர்.
அப்போது நாகேசுவரனின் தாயார் ஒரு பணிப் பெண்ணை அனுப்பி மணமகள் இளவரசியிடம், “அவள் கணவன் ஒரு பாம்பு என்று கூறி, அதற்கு அவளுடைய பிரதிக்கிரியை எப்படி இருக்கிறது’’ என்று அறிய முற்பட்டாள்.
அவ்வாறே பணிப்பெண் சென்று இளவரசியிடம் கூற, “இளவரசி, அது தான் செய்த பாக்கியம், பெண்கள் சாதாரணமாக ஆண்களை மணப்பர். தான் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் நாக தேவதையை மணக்கிறேன்’’ என்று கூறினாள்.
இவ்வாறு இளவரசி கூற, அவளை நாகேசுவரன் முன் கொண்டுவர போகவதியைக் கண்டவுடன் நாகேசுவரனுக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. தான் முன் ஜன்மத்தில் சிவனுடன் தோழனாக இருந்ததும், அப்போது போகவதி தன் மனைவியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது.
ஒரு சமயம் பரமன் பார்வதியிடம் ஒரு வேடிக்கை செய்ய, அங்கிருந்த அவனும் சிரிக்க, சிவனார் அவனை ஒரு மனிதனுக்குக் குழந்தையாக, பாம்பு வடிவில் பிறக்கச் சாபமிட்டார். அதேசமயம் போகவதிக்கும் தன் முற்பிறவி செய்திகள் நினைவுக்கு வந்தன. இருவரும் கௌதம கங்கை ஆற்றை அடைந்து புனித நீராடினர். நாகேசுவரன் ஓர் அழகிய ஆண் வடிவம் பெற்றான் என்று இந்துமதம் கூறுகிறது. இப்படி முட்டாள்தனமாய் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்…)
– சிகரம்