“Remember Remember the fifth of November” என்கிற வாசகத்தை நாம் பலமுறை கேட்டிருப்போம். இந்த வாசகம், மக்கள் குறித்து கவலைப்படாமல் வல்லாதிக்கம் செலுத்தும் அரசருக்கும் நாடாளுமன்றத்துக்கும் எதிராக இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல… திராவிடர்கள் அனைவருக்கும் ஒரு வாசகம் உண்டு…Remember Remember the Month of September
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரை திராவிடர்கள் கொண்டாடலாம்… ஆனால் இவர்கள் இருவரை மட்டும் திராவிடர்களுக்கு செப்டம்பர் வழங்கவில்லை.. இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும் அம்மாதம் திராவிடர்களுக்கு வழங்கியுள்ளது.
பார்ப்பனர்கள் நிரம்பிய ஓர் இயக்கம். அதன் பெயர் ‘ஹோம் ரூல்’ இயக்கம். அன்னிபெசண்ட் தலைமையில் இயங்கி வந்தது. ‘ஹோம் ரூல் இயக்கம்’ பார்ப்பனர்களின் கூடாரமாக மாறியது. மயிலாப்பூர் வழக்கறிஞர்கள் ‘ஹோம் ரூல் இயக்க’த்தை ஆக்கிரமித்தனர். ஏற்கனவே பார்ப்பனர்களின் வல்லாதிக்கத்திற்கு எதிராக திராவிடர் சங்கத்தை நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனாருக்கு இந்த அணிவகுப்பு ஆபத்தானதாகப் பட்டது. அவர் பார்ப்பனரல்லாத முக்கியப் பிரமுகர்களைக் கொண்டு தனி இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தார். விளைவு சர். பிட்டி. தியாகராயர், டி.எம்.நாயர், திவான்பகதூர் பி.ராஜரத்தின முதலியார் ஆகியோருடன் இணைந்து ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ தொடங்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் ‘ஜஸ்டிஸ்’ என்கிற பத்திரிகையை நடத்தி வந்ததால் ‘நீதிக்கட்சி’ என்று நாளடைவில் மாறியது. இந்த நீதிக் கட்சியின் தொடக்கத்திற்கு வித்திட்டது ‘ஹோம் ரூல் இயக்கம்’. ‘ஹோம் ரூல் இயக்கம்’ தொடங்கப்பட்டது, 1916ஆம் ஆண்டு 12ஆம் தேதி. மாதம்? செப்டம்பர்!
அது மட்டுமல்ல 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திராவிட இயக்கங்களின் மூலமாகக் கருதப்படும் ‘நீதிக்கட்சி’ வெற்றிகரமாக ஆட்சி செய்து முடித்திருந்தது. காங்கிரஸில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் முதல் ஆட்சியில் பார்ப்பனர் அல்லாதோர் அதிகம்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அரசு வேலைவாய்ப்பில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 1921ஆம் ஆண்டு ஓ.தணிகாசலம் (செட்டியார்) மசோதா ஒன்றை கொண்டுவந்தார். அனைத்து சமூகத்தினருக்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது அந்த மசோதா. அதை பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் நிறைவேற்றியது ‘நீதிக்கட்சி’. அதேபோல் 1920ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் திவான்பகதூர் கிருஷ்ண நாயர் கொண்டு வந்த மசோதா மூலம் ஆண்களைப் போல பெண்களும் வாக்களிக்கலாம் என்கிற நிலையை உருவாக்கியது. அத்துடன் பஞ்சமர் என்கிற சொல்லுக்குப் பதிலாக (ஆதிதிராவிடர்) என்கிற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி அலுவலர்கள் நியமனம் செய்தது, அறநிலையத்துறை அமைத்து பார்ப்பனர்களின் கோட்டையான கோயில்களை பார்ப்பனர் அல்லாதார் கைகளுக்குக் கொண்டு வந்தது என பலவற்றை செய்த ‘நீதிக்கட்சி அரசு’ செப்டம்பரில் முடிவுற்றது.
1926ஆம் ஆண்டு ‘நீதிக்கட்சி’யின் ஆதரவு மூலம் சுப்பராயன் ஆட்சி நடத்தத் தொடங்கினார். இந்தக் காலகட்டங்களில் பெரியாரும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின்படி அவரது நீண்டகால கோரிக்கையான கம்யூனல் ஜி.ஓ.வை சுப்பராயன் அரசு கொண்டு வந்தது. இந்தச் சாதனையை செய்த சுப்பராயனின் ஆட்சிக் காலமும் 1930 செப்டம்பரில்தான் நிறைவுற்றது. இம்முறை அதே செப்டம்பர் மாதத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது ‘நீதிக்கட்சி’.
பெரியார் ஒரு வேலைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் ‘நீதிக் கட்சி’க்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோசலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத் திட்டத்தில், “மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும்’’ போன்ற திராவிடக் கருத்துகளும் இருந்தன என்பதை சொல்லத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கையில் இருந்த காங்கிரஸ் அதை நிராகரிக்க, பார்ப்பனர் அல்லாதோர் வசம் இருந்த ‘நீதிக்கட்சி’ அதனை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934ஆம் ஆண்டு 29ஆம் தேதி செப்டம்பர் மாதம்.
1938ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து இந்தி திணிப்பு எதிர்ப்பு படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி. அதே தினத்தில் சென்னை கடற்கரையில் கூடிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பேசிய பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார்.
‘நீதிக்கட்சி’ பெரியாரின் தலைமையின் கீழ் வந்திருந்தாலும், அதன் முக்கியஸ்தர்கள் பார்ப்பனர் அல்லாதோராக இருந்தாலும் ஜாதி ஒழிப்பில் ஆர்வம் காட்டாதவர்களாகவும், அரசுப் பதவி பட்டத்தின்மேல் அதிகம் நாட்டமுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களை எல்லாம் களையெடுக்க நினைத்த பெரியார் அண்ணாவைக் கொண்டு சில முற்போக்குத் தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிக் கட்சியின் தலைவர்கள் சிலர் 1944ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரை சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால், சென்னை கன்னிமாரா ஹோட்டலில் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணல் அம்பேத்கர், “பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பெரியார் போல ஒரு தலைவரும், பெரியார் முன்மொழிந்தது போன்ற தெளிவான திட்டங்களும் தேவை’’ என்று உரையாற்றினார். இந்த நிகழ்வை, “சோறு போட்டு உதை வாங்கிய கதை’’ என்று ‘குடிஅரசு’ பத்திரிகையில் கிண்டலடித்தார் பெரியார். “பெரியாரும் அவரது திராவிடக் கொள்கையுமே சீர்திருத்தத்திற்கான வழி’’ என டாக்டர் அம்பேத்கர் உறுதி செய்த தினம் 24 செப்டம்பர்.அது மட்டுமல்ல திராவிடர் கழகத்திற்கான லட்சியங்கள் வரையறுக்கப்பட்ட மாதமும் செப்டம்பர்தான். 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் கூடிய மாநாட்டில்தான் ‘திராவிட நாடு’ என்கிற கருத்தியல் முழுமை பெற்றது. தமிழகப் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருப்புச் சட்டை படையின் துவக்கமும் அத்தினமே.
சுதந்திர தினத்தைக் கொண்டாடலாமா என்பதில் பெரியார், அண்ணாவிற்கு இடையே கருத்து வேறுபாடு வந்தது. இந்த நிலையில்தான் 1947 செப்டம்பர் 14ஆம் தேதி திராவிட பிரிவினை மாநாடு ஒன்று பெரியார் தலைமையில் கூடியது. மாநாட்டில் அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கொந்தளித்த சிலர் அண்ணாவின் படங்களை கொளுத்தும் சம்பவம்கூட நடைபெற்றது. ஆனால் கருப்புச் சட்டை படைக்கு அப்போதைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி தடைவிதித்ததும் மீண்டும் பெரியாரும் அண்ணாவும் இணைந்தனர்.
பெரியார்_மணியம்மை திருமணத்தால், கொந்தளித்திருந்த அண்ணா அணியினர் 17 செப்டம்பர் 1949ஆம் ஆண்டு சென்னையில் ஓர் இல்லத்தில் கூடினர். முக்கிய நிர்வாகிகள் இணைந்து பெரியார் தலைமையில் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் கொண்டு வந்தனர். தி.மு.க உருவானது. மாநில சுயாட்சிக்கு பரிந்துரை செய்ய கலைஞர் இராஜமன்னார் குழு அமைத்ததும் 1969 செப்டம்பர் 22இல்.
தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அ.தி.மு.க. தொடங்கிய பின், பிஜு பட்நாயக் முயற்சியால், இரு கட்சியையும் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சந்திப்பு நிகழ்ந்த நாள் செப்டம்பர் 12.