* என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.
(‘விடுதலை’, 9.3.1956)
* எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன்.
(‘விடுதலை’, 15.1.1955)
* எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும்.
(‘குடிஅரசு’ 24.11.1940)
* நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல.
(‘விடுதலை’, 15.7.1968)
* எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
(‘விடுதலை’, 8.9.1939)
* எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை.
(‘விடுதலை’, 2.10.1967)
* நான் என் ஆயுள்வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
(‘விடுதலை’, 15.10.1967)
* நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்றுதான் நான் தொண்டாற்றுகிறேன். ஆனதாலே நம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும் சமுதாயத்தின் நலனைக் கருதியே ஆதரிக்கிறேன்.
(‘விடுதலை’, 18.7.1968)
* எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக்கின்றேன். ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது.
(‘விடுதலை’, 4.3.1968)
* என்னுடைய சக்தி சிறிது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய (மனிதாபிமான) ஆசை அளவிட முடியாததாய் இருக்கிறது. அதனாலேயே சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டப்படுகிறேன்.
(‘குடிஅரசு’, 25.8.1940)
* நான் நிரந்தரமாக ஒருத்தனை ஆதரித்து வயிறு வளர்க்க வேண்டுமென்கின்ற அவசியமில்லாதவன். எவன் நமக்கு நன்மை செய்கின்றானோ, நமது சமுதாய இழிவு நீங்கப் பாடுபடுகின்றானோ அவன் அயல்நாட்டுக்காரனாக இருந்தாலும் சரி, அவனை ஆதரிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுபவன் நான்.
(‘விடுதலை’, 20.1.1969)
* தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோயில் கட்டிக்கொடு என்றார் காந்தியார். அப்போதுநான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுப்படுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும். அவனுக்கு இழிவு நீங்க வேண்டுமென்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல என்றேன்.
(‘விடுதலை’, 9.10.1957)
* ஜாதியை ஒழிக்கிறேன் என்றால் அது மேல்ஜாதிக்காரன் மேல் துவேசம் என்றும், வகுப்புவாதம் என்றும் சொல்கிறான். நாங்கள் ஏன் வகுப்புவாதி? எந்த ஒரு அக்கிரகாரத்துக்காவது தீ வைத்து, எந்த ஒரு பார்ப்பனருக்காவது தீங்கு விளைத்திருக்கிறோமா? ஜாதி இருக்கக்கூடாது என்று கூறினால் வகுப்புத் துவேசமா?
(‘விடுதலை’, 25.10.1961)
* இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள். மற்றவனுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கின்ற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்.
(‘விடுதலை’, 4.11.1961)
* யாவரும் கடைசியில் சாகத்தான் செய்வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா? எனக்கு உயிர் வாழ்வதற்குச் சிறிதளவு பொருளிருந்தால் போதும். மற்றப் பொருளையெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன்.
(‘விடுதலை’, 27.7.1958)
* எப்போதும் என்னிடம் என் பணம் என்று ஒன்றுமில்லை. நான் பொதுப் பணிக்கு வந்தபோது என்னிடமிருந்த பணத்தை-சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால், இயக்கப் பணத்தில்தான் நான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும். நீங்கள் கொடுத்த பணத்தைத்தான் கல்லூரிக்கும்-மருத்துவமனைக்கும் வழங்கினேனே தவிர, என் பணம் எதுவும் இல்லை. எது பொது நன்மைக்கானது என்று பார்த்து, (பொது) இயக்கப் பணத்தை அதற்காகச் செலவிட்டேன்.
(‘விடுதலை’, 8.8.1968)
* நான் துறவி. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். எனக்கு வேந்தன் மாத்திரம் துரும்பல்ல; கடவுளும் துரும்பு, வேத சாத்திரங்கள் துரும்பு, ஜாதி துரும்பு, அரசியலும் துரும்பு. துரும்பு மாத்திரமல்ல; அவைகளை, எல்லா யோக்கியக் குறைவையும் காய்ச்சிச் சுண்டவைத்துப் பிழிந்தெடுத்த சத்து என்று சொல்லுவேன்.
(‘விடுதலை’, 15.10.1967)
* எனக்கு 60 வயதுக்குமேல் ஆகியும் இளைஞர் சகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை. ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க, எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே நான் கருதுகிறேன்.
(‘குடிஅரசு’, 19.1.1936)
* மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.
(‘குடிஅரசு’, 7.8.1938)
* என் தொண்டெல்லாம் நம் மக்கள் உலக மக்களைப்போல் சரிசமமாக வாழவேண்டும்-அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்குத்தான்.
(‘விடுதலை’, 24.7.1968)