செயலி
Duolingo
அயல்நாட்டிற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ செல்லும்போது நமக்கு பெரும் பிரச்சனையாய் இருப்பது மொழி. ஆங்கில மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கில் இருந்தாலும் நாம் சந்திக்கும் அனைவரும் அம்மொழியை அறிந்திருப்பர் என்பது உறுதியல்ல. குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களைப் பெற்றிடவாவது அம் மொழி அவசியம்தானே!
நாம் விரும்பும் மொழியை, உச்சரிப்புகள், படங்கள் மூலமாக அடிப்படையிலிருந்து கற்றிட இச் செயலி பயன்படுகிறது. இந்தி, உருது, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்றிடவும், நாம் கற்ற அயல்நாட்டு மொழிகளை நினைவுகூர்ந்து பயன்படுத்திட இச்செயலி துணை நிற்கும்.
நாம் செலவிட முடிந்த நிமிடங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் கற்பிக்கும் முறை தொடங்குகிறது. குறைந்தபட்சம் அய்ந்து நிமிடத்திலே சில வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்து, அதனை ஒரு கூற்றாக எழுதும் அளவிற்கு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 100 மில்லியன் மக்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஓர் அய்ந்து நிமிடம் ஒதுக்கி அறிந்திடாத மொழியினைப் பயின்றுதான் பாருங்களேன்.
https://www.duolingo.com/
https://play.google.com/store/apps/
details?id=com.duolingo&hl=en
–
-அரு ராமநாதன்
குறும்படம்
‘மக்கு’
வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை ‘மக்கு’ என்று வகுப்பாசிரியர் திட்டுகிறார். ஆனால், அந்த மாணவன் இந்திய துணைக்கண்ட அளவில் பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று அந்தப் பள்ளிக்கே பெருமை தேடித் தருகிறான் என்பதுதான் கதை.
பள்ளிப் படிப்பு மட்டும்தானா மாணவர்களின் திறமைக்கு அளவுகோல்? ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது.
அதைக் கண்டுகொள்ளாத ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூகமும்தான் ‘மக்கு’ என்பதுதான் இந்த 11:23 நிமிடம் ஓடக்கூடிய ‘மக்கு’ குறும்படத்தின் கதைக்கரு.
‘முகில் சமூக நல அமைப்பு’ தயாரித்து வெளியிட்டுள்ள இக்குறும்படத்தை இமான் ஜாபர் எழுதி இயக்கி இருக்கிறார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் எடுக்கும் பாடம்தான் ‘மக்கு’ குறும்படம்.
– உடுமலை