சிறுகதை

செப்டம்பர் 16-30

வீசியது தென்றல்

– மா,பால்ராசேந்திரம்

நண்பகல் வேளை தன் அறையைக் கடந்து ஒரு பெண் போவதைக் கவனித்தார் முத்தப்பன். உள்ளிருந்து வெளியே வந்தவர், விரைவாக ஆற்றுப் பாலத்தில் செல்லும் பெண்ணைக் கூவியழைத்தார். நிற்காததால் இருப்புப் பாதையில் தட்டுத்தடுமாறி ஓடிப்போய் ஆற்றுக்குள் குதிக்க எத்தனித்த பெண்ணைத் தடுத்து நிறுத்தினார்.

தவளை தண்ணீருக்கிழுக்க, ஓணான் கரைக்கிழுக்க என்பதைப்போல் இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தார். உட்கார வைத்தார். விக்கித்து அழுதாள் அப்பெண். தண்ணீர் தந்து முகம் கழுவச் செய்து, குடிக்கச் சொன்னார். ஒருவாறு நிதானத்திற்குக் கொண்டு வந்தார்.

நீ யாரம்மா? உனக்கு எந்த ஊர்? ஏன் இப்படி அநியாயமாகச் சாகத் துணிந்தாய்? என விசாரித்தார் முத்தப்பன். என் பெயர் பொன்மணி; ஊர் தாழையூர் என்றாள். நல்ல பெயர்தான். ஆனால், நிறம்தான் கொஞ்சம் கறுப்பு. வயது இருபத்தைந்து இருக்கலாம். படித்தவள் போல்தான் தெரிகிறது என மனதிற்குள் எண்ணிய முத்தப்பன், எதற்காக இப்படி? என்றார்.

நான் இந்த நகரத்து வங்கியில்தான் வேலை பார்க்கிறேன்; என்னோடு பணியாற்றும் ஒருவரை விரும்பினேன்; அவரும் என்னை விரும்பினார்; பலமுறை நாங்கள் குற்றாலம், குமரியெனச் சுற்றிக்கூட மகிழ்வாகப் பேசிப் பழகி வந்தோம். என்னையே திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியாகக் கூறி வந்தார்.

நானும் அவருக்காகவே வாழ்ந்து வருகிறேன்; ஆனால்… என நிறுத்தினாள் பொன்மணி.

என்னம்மா நடந்தது? எனக் கேட்டார் முத்தப்பன்.

இப்பொழுது என்னைப் பார்ப்பதையோ, பேசுவதையோ நிறுத்திவிட்டார். என் தோழிகளிடம் கேட்டபோது, அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருப்பதாகக் கூறினார்கள்; அதனால்தான் வாழப் பிடிக்காமல் இந்த முடிவை எடுத்தேன் என்றாள் பொன்மணி.

அதற்காக இந்த முடிவா? அவரிடம் நேரில் நீ பேசினாயா? அவர் முடிவை அறிந்தாயா? என்றார் முத்தப்பன்.

பேச முடியவில்லை; மேலும் அரசல்புரசலாக என் வீட்டாருக்கும் தெரிந்து என்னைக் கரித்துக் கொட்ட ஆரம்பித்து விட்டார்கள்; பொறுக்க முடியாமல்தான் சாகத் துணிந்தேன் என்றாள்.

வா, நானும் வருகிறேன்; அவரிடம் போய் நேரில் பேசிப் பார்ப்போம் என்றார். இதற்கிடையில் அந்த வழியாகச் சென்ற சில தொடர்வண்டிகளுக்கு அனுமதி தந்து தன் கடமையிலும் தவறாது நடந்து கொண்டார் முத்தப்பன்.

அவர் பெயரென்னம்மா? ஊர் இதுதானா? எனக் கேட்டார். பெயர் இளவரசு. ஊர் பொதியூர் என்றாள். ஓ! பக்கத்துக் கிராமமா! வா, போகலாம் எனச் சொல்லிக் கொண்டிருக்கையில் அவருக்கு மாற்றுப் பணியாள் வந்தார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு, இது என் உறவுக்காரப் பெண் என ஒப்புக்குக் கூறிவிட்டு அப்பெண்ணுடன் கிளம்பினார் முத்தப்பன்.

நேரே இருவரும் வங்கிக்குச் சென்றனர். தேடிய புதையல் தானே தலைகாட்டியதைப் போல இளவரசு வெளியே வந்தார். பொன்மணி அடையாளம் காட்டிட, இளவரசுத் தம்பி என உரிமையோடு அழைத்தார் முத்தப்பன். பொன்மணியைப் பார்த்துச் சஞ்சலப்பட்ட இளவரசு, அருகில் வந்தார்.
என்ன? எதற்கு வந்தீர்கள்? என்றார் இளவரசு. தம்பி! அதோ அந்த இருக்கையில் அமர்ந்து பேசுவோம் என வங்கிக்கு அருகிலிருந்த ஆலமரத்தடி நிழலுக்கு அழைத்துச் சென்றார் முத்தப்பன்.

நான் நேரடியாகச் செய்திக்கு வருகிறேன். நாங்களிருவரும் ஒருவரையொருவர் விரும்பியது, பழகியது, ஊர் சுற்றியது, மணமுடித்துக் கொள்வோமென உறுதி கூறியது எல்லாம் உண்மைதான். ஆனால், இப்போது எனக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அப்பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அதுதான் என் முடிவு என்று படபடவெனப் பொரிந்து தள்ளினார் இளவரசு.

சரி… இவளை ஏன் உனக்குப் பிடிக்கவில்லை என்றார் முத்தப்பன்.

பிடிக்கவில்லையென்பதல்ல. (தயங்கியவனாக)… என் பெற்றோர் எங்கள் ஜாதியில், உறவில்  மணமுடித்தால்தான் நன்றாக இருக்கும்;    பின்னாள், பிள்ளைகள் வாழ்வும் சிறப்பாக அமையும் என்கிறார்கள்; எனக்கும் அது சரியாகத்தான்படுகிறது என்றார் இளவரசு.

அப்படியென்றால் இந்தப் பெண்! என்றார் முத்தப்பன்.

நான் ஒரு ஜாதி, இவளோ எங்களைவிட மிகத் தாழ்ந்த ஜாதி; அதுதான் என்று இழுத்தார் இளவரசு.

இதுவெல்லாம் பழகும்முன் தெரியாத பாமரரா நீங்கள்? என்றார் முத்தப்பன்.
தெரியும். இருந்தாலும் இப்பொழுது என் பெற்றோர் கூறுவது நியாயமாகத்தான் தெரிகிறது. எனவே, என்னை இனிமேல் எதுவும் கேட்க வேண்டாம். வருகிறேன் எனக் கூறி நகர்ந்தார் இளவரசு.

வழக்கமாக எல்லோரும் கேட்பதைப்போல் காரசாரமான கேள்விகளைக் கேட்டார் முத்தப்பன். உங்களை மறந்துவிட வேண்டியதுதானா? என்றாள் பொன்மணி. மறந்துவிடு என்ற சொல்லோடு போய்விட்டார் இளவரசு.

எரிமலை வெடித்துச் சிதறியதுபோல் உடல் அலைக்கழிக்கப்பட்டவளாய் பொன்மணி காணப்பட்டாள். இப்படிப் பொறுப்பில்லாமல் பேசிவிட்டுப் போகிறானே. இவனெல்லாம் படித்தவனா? என வெறுப்புடன் பேசினார் முத்தப்பன். பரவாயில்லையய்யா… இவர்களிடம் கெஞ்சிக் கிடப்பதா, வாருங்கள் போகலாம் என வேதனைத் தீயைச் சற்று அணைத்தவளாய் பொன்மணி எழுந்தாள். இருவரும் நடந்தனர். நடந்துகொண்டே,

அம்மா… உன் ஆறுதலுக்காக என் குடும்பக் கதையைச் சொல்கிறேன் என ஆரம்பித்தார் முத்தப்பன். எனக்கும் திருமணம் பேசினார்கள். அழகான பெண். பார்த்த நாளிலிருந்து அவள் நினைவாகவே இருந்தேன். ஆயிரம் ஆசைகளோடு மணம் முடித்தேன். முதலிரவில் அறைக்குள் சென்றேன். அங்கே அழுகின்ற கோலத்தோடு அவள். கேள்வி கேட்டேன். ஏற்கெனவே ஒருவனை விரும்பினாளாம், அவனோடுதான் வாழ்வேன், இல்லையேல் சாவேன் என்றாள். யாரோ சம்மட்டியால் என் நெஞ்சில் அடித்தாற்போல் இருந்தது. சரி.. பரவாயில்லையம்மா… நீ சாகவேண்டாம். நானே உன்னவரோடு சேர்த்து வைக்கிறேன் என்றேன். மறுநாள் காலை நான் எழுந்தேன். ஆனால், அவளைக் காணோம். தேடவில்லை. 25 ஆண்டுகள் ஓடிவிட்டன.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்

என்பதற்கிணங்க அவளைத் தொடாவிட்டாலும், இனம்புரியாத ஒருவித அன்பால் இன்றுவரை அவளை மறக்கமுடியாது வாழ்கிறேன். எனக்கோ வயது 50 ஆகிவிட்டது என்றார் முத்தப்பன். இதற்குள் இருவரும் முத்தப்பனின் இல்லத்திற்கே வந்துவிட்டனர். குழந்தைகள் கூட்டம் அப்பாவென இவரை நோக்கி ஓடி வந்தன. யாரய்யா இவர்களெல்லாம்? என்றாள் பொன்மணி. நடுவணரசு, தொடர்வண்டித்துறை கைநிறைய சம்பளம் தருகிறது. இந்த பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பெற்று நானே பாதுகாவலராக இருந்து பாதுகாத்து வருகிறேன் அம்மா. இதில்தான் நான் என் துக்கத்தையெல்லாம் மறந்து வாழ்கிறேன் என்றார்.

ஏதோ ஒரு முடிவெடுத்தவளைப் போல, பொன்மணி போய் வருகிறேன்  எனத் தன் ஊருக்குப் புறப்பட்டாள். அம்மா! தப்பான முடிவு எதுவும் எடுத்து விடாதே என வழியனுப்பினார் முத்தப்பன்.

மறுநாள் காலை பெட்டியும் கையுமாக முற்றத்தில் பொன்மணி நிற்கக் கண்டாள் ஆயா அங்கம்மாள். சத்தங்கேட்டு முத்தப்பன் வெளியே வந்தார். வாம்மா… என அழைத்தார்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கருத்தைப் படித்தவள் என்ற முறையில், இந்தக் குழந்தைகளுக்காக நான் வாழப் போகிறேன். நீங்கள் அனுமதி தர வேண்டும் என்றாள். தாராளமாக என்றார். அருகிலிருந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு  பணியாற்றினாள்; ஊதியம் பெற்றாள், பெற்றோர் அழைத்தனர்; மறுத்தாள்; இங்கேயே தங்கிவிட்டாள்.
அய்ந்தாண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள், அதுவும் திருநாள், அம்பேத்கர் பிறந்த நாள், விடுமுறையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். பெரியவரொருவர் ஆணும், பெண்ணுமாகச் சிறு குழந்தைகள் இருவரைக் கூட்டிவந்தார்.

அய்யா! இவர்களையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார் கண்ணீருடன்.
யார் இவர்கள்? என்றார் முத்தப்பன்.

பெரியவர் சொன்னார், பொதியூரில் எங்கள் ஜாதிக்காரர் கோயில் கொடைவிழா நடந்தது. கிடாவெட்டில்  யார் கிடாவை முதலில் வெட்டுவது என்ற கவுரவப் பிரச்சினை பெரிதாகி, கலவரமாகி, அரிவாள் கம்பு எடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில், இதுகளின் அப்பன், தலை துண்டாகிச் செத்துவிட்டான். தாயோ, பொங்கலிடும் நெருப்பில் தவறி விழுந்ததில் தீக்காயமேற்பட்டு இறந்துவிட்டாள். இதுகளின் சேட்டைகளைப் பொறுக்கமாட்டாமல் யாரும் வைத்துக் கொள்ள மறுக்கிறார்கள். எங்களுக்கோ வயதாகிவிட்டதால் பார்க்க முடியவில்லை. அதுதான் இங்கே… என்றார். பொதியூர் என்றதுமே கேட்க ஆவல்கொண்ட பொன்மணி, அய்யா! இவங்க பெற்றோர்… என்றாள். அப்பா பெயர் இளவரசும்மா… வங்கி வேலை.. நான்தான் இவங்க தாத்தா என்றார் பெரியவர். மின்னல் தாக்கியதைப்போல் அதிர்ச்சிக்குள்ளானாள் பொன்மணி.

சரிங்கய்யா… விட்டுவிட்டுப் போங்க… நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்றார் முத்தப்பன். கையெடுத்துக் கும்பிட்டு, அம்மா! குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் அம்மா என்றவாறு நகர்ந்தார் பெரியவர்.

எங்கள் ஜாதி, அதுவும் உயர்ந்த ஜாதி.   அதில் ஒன்றிணைந்தால் உயர்வும், சிறப்பும் கிட்டுமென கண்மூடித்தனமாக நம்பிய இளவரசு தம்பதியினர் இன்றோ அதே ஜாதியால் மாண்டுவிட்டனர். இழிவான ஜாதியென ஒதுக்கப்பட்ட பொன்மணியின் சூறாவளிச் சுழற்சியில் இன்று வீசியது தென்றல். இறுக்கமான  உள்ளத்தோடு வாழ்ந்த அவளின் மடியில் இளவரசின் வாரிசுகள் அமுதுண்டு உறங்கிக் கிடக்கின்றன. எதிர்பாராது கிட்டிய இச்சுகத்திற்காக இன்னும் வாழ எண்ணினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *