அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (21)

ஜூன் 01-15

தீயில் மூழ்கினால் கீழ்ஜாதி

 உடல் நீங்கி, உயர்ஜாதி

உடல் கிடைக்குமா?

நந்தனார் திருப்புன்கூரில் எழுந்தருளி யிருக்கும் சிவலோக நாதருடைய திருவடிகளை மிகவும் நினைந்து பணி செய்ய விரும்பினார்; ஆத னூரினின்றும் புறப்பட்டு மிக்க காதலினால் திருப்புன் கூரை வந்தடைந்தார்; சிவ பெரு மானுடைய புகழினைத் திருக்கோயில் வாசலில் நின்றுகொண்டு பாடினார்; அப்பெருமானை நேரே கண்டு கும்பிட வேண்டும் என்ற பெருங் காதல்கொண்டு நின்றார். நந்தனாருக்கு அருள் செய்ய விரும்பிய சிவபெருமான் தமது முன்பு இருக்கும் இடபதேவரை விலகும்படி கட்டளையிட்டு நேர் காட்சி தந்தருளினார். நந்தனார் சிவபெருமானைத் தரிசித்துப் பன்முறை வணங்கித் துதித்தார்.

பின்னர் நந்தனார் அருகிலுள்ள திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று வணங்கித் திருத் தொண்டினைச் செய்து வந்தார். ஒரு நாள் அவர் தில்லைத் திருவம் பலத்தினைக் கண்டு தரிசிக்க மிக விருப்பங்கொண்டார்.

தில்லையின் எல்லையைக் கண்டதும் நந்தனார் கீழே விழுந்து வணங்கினார்; பிறகு எழுந்து திருக்கோயிலை நோக்கி நடந்தார்; தில்லைத் திருநகரின் எல்லையை இரவு பகலாக வலம் வந்து கொண்டிருந்தார்; தாம் உள்ளே செல்ல இயலாமையை நினைந்து நினைந்து வருந்தினார்; மனம் சோர்ந்தார்; “சிவபெருமானது திருவம்பலத் திருநடனத்தை எவ்வாறு நான் கும்பிடுவது?’’ என்ற நினைவிலேயே மன வருத்தத்தோடு கண் துயின்றார்.

கனவில் சிவபெருமான் தோன்றுதல்

“துன்பந்தரும் இழிந்த இப்பிறப்பே எனக்கு எம்பெருமானைத் தரிசித்ததற்கு இடையூறாக உள்ளது’’ என்று எண்ணி துயில்கின்ற நந்தனாரின் மனநிலையை அம்பலவாணர் அறிந்தார்; அத்திருத் தொண்டருடைய மனத் துயரைப் போக்கக் கருதி அவர் கனவில் புன்முறுவல்தவழத் தோன்றி, “இப்பிறவி போய் நீங்கும்படி நீ தீயினில் மூழ்கி வேதியர்களுடன் நம்மை வந்து அடைவாயாக’’ என்று அருளினார். அங்ஙனமே தில்லை வாழ் அந்தணர்கள் கனவிலும் தனித்தனியாய் எழுந்தருளித் தீயமைத்துக் கொடுக்குமாறு அருளிச் செய்து திருவம்பலத்தை அடைந்தார்.

தில்லை வாழ் அந்தணர்கள் எதிர்கொண்டழைத்தல்

நடராசப் பெருமானின் கட்டளையைக் கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் யாவரும் அம்பலவாணரது திருவாயிலின் முன்பு அச்சத்தோடு வந்துகூட, “எமது பெருமான் திருவருள் புரிந்து பணியினைச் செய்வோம்’’ என்று துதித்து அன்பரிடம் சென்று “பெருமையுடையவரே! அம்பலவாணர் உமக்கு அழல்அமைத்துத் தரும்படி அருளியதால் இப்பொழுது உம்மிடம் வந்தோம்’’ என்று கூறினார்கள். அதனைக் கேட்ட நந்தனார் “அடியேன் உய்ந்தேன்’’ என்று கூறி அவர்களைத் தொழுதனர். மறையவர்களும் தீ மூட்டிய செய்தியைத் தெரிவித்தார்கள்.

நந்தனார் தீக்குளித்தல்

நந்தனார் தீ வளர்ந்திருக்கும் தெற்கு மதிப்புறத்துத் திருவாயிலை அடைந்தார்; தீக்குழியை அணுகி இறைவன் கருணையை மனத்திற்கொண்டு வலம்வந்தார்; கைகூப்பி தொழுதார்; அருட்கூத்தாடும் பெருமான் திருவடிகளை நினைந்து தீயினில் முழுகினார். அப்பொழுது அவருடைய மாயாகாரியமாகிய பொய் உடல் மறைந்தது. நந்தனார் மார்பினில் பூணூலும் சடைமுடியுமுடைய புண்ணிய முனிவர் பெருமகனாய்த் தீயினின்றும் எழுந்தார்.

அங்ஙனம் அவர் எழும்போது செந்தாமரை மலரில் தோன்றிய சண்முகனைப்போல விளங்கினார்; ஆகாயத்தில் தேவதுந்துபியின் முழக்கம் எழுந்தது; தேவர்கள் ஆரவாரம் செய்து கற்பக மலர்களைப் பொழிந்தனர்; தில்லை மூவாயிரவரும் நந்தனாரைக் கைகூப்பித் தொழுதனர்; சிவனடியார்கள் பணிந்து மனமகிழ்ச்சி அடைந்தனர்’’ என்கிறது இந்துமதம். தீயில் மூழ்கினால் வெந்து கருகுவர் என்பதே அறிவியல். ஆனால், தீயில் மூழ்கியதும், கீழ்ஜாதி உருவம் மாறி, உயர்ஜாதி உடல் கிடைத்தது என்பது அடிமுட்டாள்தனம், அயோக்கியத்தனமான புளுகு அல்லவா?

“தில்லைவாழந்தணர்கள் உடன்வரத் நந்தனாராகிய மறைமுனிவர் பொன்னம்பலத்தில் அருட்பெருந் திருக்கூத்து ஆடுகின்ற திருவடிகளைத் தரிசிக்கும்பொருட்டு விரைந்து நகரத்தினுள் சென்று எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலின் தெற்குக் கோபுரத்தைத் தொழுது வணங்கினார்; விரைந்து உள்ளே புகுந்து நடன சபையின் எல்லையினைத் தலைப்பட்டார். அதன்பின், அவரை யாவரும் கண்டிலர்.’’ என்கிறது இந்துமதம். உயர்ஜாதி உருபெற்ற நந்தன் தில்லை நடராஜனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார் என்கிறது இந்துமதம். மனித உடல் மறையும் என்பதும், இறைவனோடு கலக்கும் என்பதும் அறிவியலுக்கு எதிரானது அல்லவா? நந்தனை படுகொலைசெய்து மறைத்ததுதானே உண்மையாக இருக்க முடியும்?

விருத்தாசலம் ஆற்றில் போட்ட பொன் திருவாரூர் குளத்தில் கிடைக்குமா?

சுந்தரமூர்த்தி நாயனார் தன் மனைவி பரவையார்க்குக் கொடுக்க பொன் தேடி திருமுதுகுன்றம் வந்தார். திருமுதுகுன்றத்தின் (விருத்தாசலம்) திருக்கோபுரத்தைக் கண்டதும் நம்பியாரூரர் கும்பிட்டுத் திருக்கோயிலை வலம்வந்து உள்ளே சென்று நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்து நின்று, “நஞ்சியிடை’’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித்தொழுது கைகூப்பிய வண்ணம் சிவபெருமானிடத்துப் பொருள் பெற விரும்பி வந்த திருவுள்ளக் குறிப்பினோடு “மெய்யை முற்றப் பொடி’’ என்று தொடங்கும் நம்பி என்ற திருப்பதிகம் பாடினார். பனிமதிச் சடையார் பன்னிரண்டாயிரம் பொன்னைக் கொடுத்தருளினார். நம்பியாரூரர் (சுந்தரர்) பெருமகிழ்ச்சி பொங்க வணங்கி அருகே சென்று நீலகண்டர் திருமுன்பு, “தேவரீர் கொடுத்தருளிய இப்பொன் முழுமையும் திருவாரூர் மக்கள் மருளவும் வியப்பவும் அங்கே வரப் பெறவேண்டும்’’ என்று விண்ணப்பித்தார். அதற்கு இறைவர், “இப்பொன்னையெல்லாம் திருமணிமுத்தா நதியிலே இட்டுத் திருவாரூர்க் கமலாலயத் திருக்குளத்தினிற் போய்ப் பெற்றுக்கொள்க’’ என்று வானிடமாக அருள்புரிந்தார்.

மணிமுத்தா நதியில் பொன்னை இடுதல்

இறைவன் தந்த இனிய திருவாக்கினைப் பெற்ற வன்றொண்டராகிய நம்பிகள் மச்சம் (சிறுபொற்றுண்டம்) வெட்டி வைத்துக் கொண்டு மணிமுத்தாற்றிலே பொற்குவியலை யெல்லாம் எடுத்துச் சென்று, “அன்று என்னை வலிய ஆட்கொண்ட திரு அருளினை இதில் அறிவேன்’’ என்று கூறி விடுத்தார்; பின்பு, தில்லை மற்றும் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாரூர் அடைந்தார்.

ஆற்றிலிட்ட பொன்னைக் குளத்தில் தேடுதல்

“திருமுதுகுன்றர் நமக்களித்த பொன்னைத் திருமணிமுத்தாற்றில் புகும்படி இட்டோம்; இப்போது அதனை இத்தலத்துத் திருக்கோயிலுக்கு மேல்பாலுள்ள கமலாலயத் திருக்குளத்தில் போய் அவருடைய அருளினாலே எடுத்துக் கொண்டு வருவோம்; எம்முடன் வருக’’ என்று அழைத்தார். அதுகேட்ட பரவையார், “இதுதான் என்ன அதிசயம்? சொல்லியவாறுதான் என்னே!’’ என்று புன்முறுவல் பூத்தார். சுந்தரமூர்த்தி நாயனார், “நன்னுதலாய்! என்னுடைய நாதன் திருவருளால் இக்குளத்திலிருந்து பொன் முழுவதும் எடுத்து உனக்கு நான் தருவேன்; இது சத்தியம் என்று கூறித் தம்முடன் பரவையாரும் வரப் பெருவிருப்பத்துடன் பூங்கோயிலினுட் சென்று புனிதராகிய வன்மீகநாதரின் திருவடிகளை வணங்கிக் கொண்டு திருமாளிகையினை வலமாக வந்து மேற்றிசையிலுள்ள திருக்குளத்தை அணைந்தருளினார். கமலாயத் திருக்குளத்தின் வட கீழ்ப்புறம் உள்ள கரையின் மேல் பரவையாரை நிறுத்திச் சிவபெருமானைத் தொழுதவண்ணம் திருக்குளத்தில்இறங்கி, அன்று இட்டு எடுப்பார்போல அங்கே தடவினார். அப்போது அருட்கூத்தப் பெருமானது திருவருளால் வந்தெழுந்த பொன் திரளையெல்லாம் நம்பியாரூரர் எடுத்து முறைப்படி கறையேற்றினார்’’ என்கிறது இந்துமதம். விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாற்றில் போட்ட பொன் காசுகள், அந்த நதியோடு எந்தத் தொடர்பும் இல்லாத திருவாரூர் குளத்தில் கிடைத்தது என்பது அறிவியலுக்கு எதிரான கருத்தல்லவா? இப்படிப்பட்ட இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *