ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 16-30

கேள்வி : கடவுள் இல்லையென்று மறுப்பதால் இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், இல்லாத கடவுளை, இருக்கிறது என்று சொல்லும்போது எங்கள் மனம் புண்படுகிறது என்று நாத்திகர்கள் சொல்லலாமா?

உ.கோ. சீனிவாசன், திருப்பயற்றங்குடி

பதில்: மனம் புண்படுகிறது என்பது அர்த்தமற்ற ஒரு கற்பனை – கொள்கைகளை விவாதிக்கும்போது! பிறக்காத கடவுள் பிறந்தார், இல்லாத கடவுள் இருக்கிறார், பொல்லாத கடவுளாகவும் அவதாரம் எடுக்கிறார் ! என்றெல்லாம் கூறி, அசுரர்களை (திராவிடர்களை) அழிக்கிறார் என்றால் எவருக்கும் வருத்தம் வேதனை ஏற்படுவது பற்றிய கவலையைவிட உண்மையைப் பரப்புகிறோம் என்ற ஆறுதலே முக்கியம்.

கேள்வி : நாடாளுமன்றம் நடைபெற ஒரு நிமிடத்திற்கு மக்கள் பணம் ரூ. 20,000 செலவாகும் நிலையில் அதை முடக்கும் பா.ஜ.க. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : எதிர்க்கட்சியாகக்கூட இருக்கும் தகுதியை அக்கட்சி கோருவதில் இனி அர்த்தமிருக்கவே முடியாது என்பதுதான் அதன் நியாயம்.

கேள்வி : 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நள்ளிரவு 12 மணியளவில் டில்லியில் நடைபெற்ற விடுதலைத் திருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் காந்தியார் ஏன் புறக்கணித்தார்? இந்தியா விடுதலை பெற்ற நாளை தந்தை பெரியார் ஏன் துக்க நாளாக அறிவித்தார்? – கு.நா. இராமண்ணா, சென்னை – 62

பதில்: காந்தியாருக்கும் மனநிறைவு ஏற்படவில்லை. தந்தை பெரியாருக்கும் எஜமானன் மாற்ற நாளாகவே அது தென்பட்டது. உண்மைதானே அந்நிலை_?

கேள்வி : புதிய தலைமைச் செயலகத்தை இப்போது முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையாகப் பயன்படுத்துவது சரியா? – அ. தமிழ்க்குமரன், ஈரோடு

பதில்: சரியாகக் கட்டப்படவில்லை என்றார், முன்பு. இப்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பெட்டல் _ மெடிக்கல் காலேஜ் வரும் என்கிறார்! கட்டடம் பலமாக உள்ளது.  முதல் அமைச்சர் முதலில் சொன்ன வாதங்கள்தான் பலவீனம் என்பது எவருக்கும் புரியுமே!

கேள்வி : பத்மநாபசுவாமி ஆலய கேரள மக்களின் பல லட்சம் கோடி  பொதுச்சொத்து. அய்யப்ப சுவாமியிடம் தமிழர்கள் வீசியுள்ள பல ஆயிரம் கோடி, திருப்பதி வெங்கடாசலபதியிடம் திருட்டுப் பணக்காரர்கள் கொண்டு கொட்டியிருக்கும் கோடிகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, குமரிமுதல் காஷ்மீர் வரைக்கும் உள்ள வீடற்றவர்களுக்கெல்லாம் வீடுகட்டிக் கொடுக்கவும் வீதியில் கிடப்பவர்களுக் கெல்லாம் வாழ்வாதாரம் கொடுக்கவும் இந்த நிதிக்குவியல்களைப் பயன்படுத்தினால் இந்த மூன்று சாமிகளும் சிரிக்குமா? வீதியில் இறங்கி ஓவென அழுமா?

– இயற்கைதாசன், கொட்டாகுளம்

பதில்: நல்ல கேள்வி. `மில்லியன் டாலர்` கேள்விதான்! கேள்வி : 1-_15 பிப்ரவரி 2011 குமுதம் ஹெல்த் இதழில் சூப்பர் பிரெயின் வேணுமா? என்னும் தலைப்பில் கட்டுரை படித்தேன். அறிவியலோடு புராணத்தைக் கலந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பிள்ளையார் முன்புதான் யோகாசனம் செய்ய வேண்டும் என்று கூறுவது சரியா? வேறு இடத்தில் யோகாசனம் செய்தால் அதனால் பயன் ஏற்படாதா? – மு. இராஜாராம், எர்ரம்பட்டி

பதில்: பச்சைப் பார்ப்பனப் புத்தி இது!

கேள்வி: வெட்டவெளிதனை மெய்யென்றிருப் போருக்கு பட்டாடை ஏதுக்கடி குதம்பாய் என்று குதம்பைத் சித்தர் பாடினார். இன்று பாபா சாமியாருக்கு, பட்டுப்புடவை, தங்கம், வெள்ளி கிலோ கணக்கில், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டு, செண்டு, மாளிகை சொத்து இருப்பது –ஏன்? எதற்காக?
ச.நா. சாமிசம்மாரன், வேலூர்

பதில் : அவருக்கு அது எப்படியோ பயன்பட்டிருக்கிறது என்பது உண்மை! ஆராய்ச்சி செய்தால் அசிங்கமே மிஞ்சும்.

கேள்வி : தற்போதைய (தமிழ்நாட்டில்) ஆட்சி வரவேற்க வேண்டிய ஆட்சியா? அல்லது வர வர வெறுக்க வேண்டிய ஆட்சியாக மாறுமா? அன்பான பதில் என்ன?
எம்.கே.கலைச்செல்வன், சிங்கிபுரம்

பதில் : மக்கள் உணர்வுகள் போகப்போகப் புரியும் –  புரிய வைப்பார்கள். மக்களை நோக்கிய கேள்வி இது!

கேள்வி : கடவுளின் பெயரால் சேர்க்கப்படும் சொத்துக்களுக்கு வரிப் போட சட்டத்தில் வழி உண்டா? – கல்மடுகன், கல்மடுகு

பதில்: துணிவிருந்தால் வழியுண்டு.

கேள்வி : சென்னை உயர் நீதிமன்றம், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவைக் (வழக்குரைஞர் படுகொலையில் தேடப்பட்ட குற்றவாளி) கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையிலும் இந்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? – அ. முகில், ஊற்றங்கரை

பதில்: இதற்கென இனி ஒரு தனிக் கிளர்ச்சியைச் செய்ய வேண்டும். அப்போதுதான் இரட்டை வேடம் அம்பலமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *