சூரிய ஒளி வாகனம்
மாற்றுத் திறனாளிகளின் உபயோகத்திற்காக சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வண்டியினைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்களான ராமசேஷன், ஹரிராம், வசந்த், முத்துராமன், விவேக் ஆகிய அய்வரும்.
முதலில் மூன்று சக்கர மிதிவண்டியை வாங்கி, அதில் எந்த மோட்டாரைப் பொருத்துவது என்பது பற்றிச் சிந்தித்து, சக்கரத்தில் பொருந்தக்கூடிய ஹப் டிரைவ் மோட்டாரைப் பொருத்தியுள்ளனர். பின்பு, சூரிய ஒளி ஆற்றல் பேனல்களை இருக்கைக்கு மேல்புறம் பொருத்தியுள்ளனர். தாங்கள் உருவாக்கிய வண்டியை, தங்கள் பல்கலைக்கழகத்திலுள்ள இரண்டு மாற்றுத் திறனாளிகளை வைத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லி, அதிலுள்ள குறைகளைக் கேட்டறிந்து சரி செய்துள்ளனர்.
30. கி.மீ. வேகத்தில் ஓடினால் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சிரமம் உள்ளது என்பதால் 29 கி.மீ. வேகத்தில் ஓடும்படி அமைத்துள்ளனர். அன்றாடம், வீட்டிலிருந்து கல்வி கற்கும் இடத்துக்கோ வேலை செய்யும் இடத்துக்கோ சென்று வருவதற்கான நோக்கத்தில் மட்டுமே வண்டியை உருவாக்கியுள்ளனர்.
பகல் நேரத்தில் வண்டியை ஓட்டும்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதில் வண்டி ஓடுகிறது. அந்த நேரத்தில் பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தின் மூலம் இரவு நேரத்தில் வண்டியை ஓட்டிச் செல்லலாம். பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன், பேராசிரியர் தமிழரசன், பேராசிரியை சிறீவித்யா ஆகியோர் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமலும் எரிபொருள் செலவு இல்லாமலும் தயாரிக்கப்பட்ட இந்த வண்டியை உருவாக்கிய தங்களது முயற்சியினை முழு வடிவில் கொண்டு வர உதவி புரிந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த வண்டியைத் தயாரிக்க 32 ஆயிரம் ரூபாய் செலவானது என்றும் மொத்தத்தில் தயாரித்தால் 25 ஆயிரத்திற்கும் குறைவாகவே வரும் என்றும் கூறியுள்ளனர் இந்தச் சாதனை மாணவர்கள்.