தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டமும், தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியும், 11.4.1982 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு நடைபெற்ற தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா தமிழர்களின் வாழ்த்தொலியோடு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். விழாவிற்கு நான் தலைமை வகித்தேன். விழாக்குழு தலைவரும் மேலத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமாகிய மன்னை ஆர்.பி.சாரங்கன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
தந்தை பெரியாருடைய திருவுருவச் சிலையை திறந்துவைத்துப் பேசிய கலைஞர், தந்தை பெரியார் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும், ஏதோ அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி ஒரு அரசியல் நடத்த வேண்டும் _ ஒரு இயக்கத்தை நடத்த வேண்டும் என்கின்ற நிலையில் உள்ளவர்கள் திராவிடர் கழகத்திலேயும் இல்லை; திராவிட முன்னேற்றக் கழகத்திலேயும் இல்லை.
நாங்கள் பெரியார் என்று உச்சரிக்கும்போது அண்ணா என்று சொல்லும்போது அந்த உருவங்களை அல்ல. அந்த உருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் எந்த உன்னதமான கொள்கைகளை, இந்த நாடு -_ இந்தச் சமுதாயம் உய்ய வேண்டும் என்பதற்காக எடுத்துச் சொன்னார்களோ அந்தக் கொள்கைகளைத்தான் அந்தச் சொற்களை நாங்கள் உச்சரிக்கின்ற நேரத்திலே உணர்கிறோம். அந்தக் கொள்கைகளைத்தான் எங்களால் காண முடிகிறது என்று கூறினார்.
அய்யா சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நான் தலைமையுரை ஆற்றும்போது, தந்தை பெரியார் சிலை தயாராகி 8 ஆண்டுகள் ஆகியும் அரசின் போக்கால் சிலை வைக்க முடியாத இழிநிலை!
தந்தை பெரியார் சிலையை திறக்கிறவர்கள் பெரியார் கொள்கை என்னவென்று புரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதுதான் அதற்குரிய அடிப்படையான தகுதியாகும்.
இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து இந்த இடத்திலே நின்று “இவர்தான் மானம் இழந்த சமுதாயத்திற்கு மானப் பிச்சையளித்த மாமனிதர்’’ என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
இங்கே தந்தை பெரியார் தோன்றியதைப் போல, வடநாட்டிலே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தோன்றினார்கள். அவர் இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகத்திற்கு அறிவாளியாகத் திகழ்ந்தார்கள்.
“பார்ப்பனர் அல்லாதவர்கள் படிக்கக் கூடாது. கேரளாவில் முன்பு பார்ப்பனர் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொண்டால் முதலிரவை ஒரு நம்பூதிரிப் பார்ப்பனன்தான் நடத்துவான்.
கல்கத்தாவில் பார்ப்பனர் காலைக் கழுவி பார்ப்பனர் அல்லாதவர் குடிக்க வேண்டும்.
“இதுதான் இந்து தர்மம்’’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இது கல்கத்தாவில் இருந்த நிலை. இப்படி பல்வேறு வரலாற்று சம்பவங்களை எடுத்துரைத்தேன்.
சுமார் 4லு ஆண்டுகளாக மன்னையில் தந்தை பெரியார் சிலை திறப்பு அரசின் அனுமதிக்குக் காத்துக் கிடந்தது என்றாலும் அதன் ஏக்கம் முற்றிலும் நிறைவு பெற்ற நிறைவு விழாவாகவே மன்னை சிலை திறப்பு விழா நடைபெற்றது. அவ்வூரிலும் ஒரு புதிய சரித்திரம் படைத்தது.
இந்த மாநாட்டிற்கு உழைத்த, ஆற்றலும் அடக்கமும் ஒருங்கே இணைந்த மாவட்டக் கழகத் தலைவர் அய்யா ஆர்.பி.சாரங்கன், மாவட்டச் செயலாளர் ராஜகிரி தங்கராசு மற்றும் துணைத் தலைவர் ஆர்.சண்முகம், எடமேலையூர் செயலாளர் இராசையன், எடைமேலையூர் துணைச் செயலாளர் ஆ.சுப்பிரமணியன், நீடாமங்கலம் ஆர்.அழகேசன், விக்கரபாண்டியம் பொருளாளர் ஆர்.புருஷோத்தமன், முல்லைவாசல் உறுப்பினர்கள்: மு.சுந்தரராசன், சு.பக்கிரிசாமி, உ.சிவானந்தம், சா.மகாலிங்கம், பி.கோபாலகிருஷ்ணன், கே.ராஜகோபால், எம்.அழகர்சாமி, ஆர்.கோவிந்தராசு, அ.முருகையன், து.தூமக்கண்ணு, கே.கோவிந்தராசு, எம்.கிருஷ்ணன், எம்.பாலசுப்பிரமணியன், எம்.எஸ்.ரஜாக், கோ.அப்பராசு, என்.நாராயணசாமி ஆகியோரது உழைப்பு மிகவும் பாராட்டத்தக்க வகையில் பயன் அளித்து, மன்னை நமது கழகப் பண்ணை என்பதை நிரூபித்துக் காட்டியது அன்று.
முன்னாள் பீகார் முதல்வரும் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவராக இருந்து செயல்பட்டவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாய வளர்ச்சியில் பெரும் ஆர்வம் கொண்டவருமான பி.பி.மண்டல் தமது 64ஆம் வயதில் 13.04.1982 அன்று காலமானார்.
பாட்னா _ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாரடைப்பால் அவர் காலமானதைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மண்டல் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தேன். அதில், சமூகநீதிக்காக துணிவுடன் போராடிய வீரர், அவரது இழப்பு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும். அவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் செய்திகள் அனுப்பியிருந்தேன்.
தமிழகத்திற்கு அறிவு தந்த ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாடும், அன்று இரவு மாநாட்டு விளக்க பொதுக்கூட்டமும் 14.04.1982 அன்று நடைபெற்றது. மாநாடு துவக்கத்திலேயே மன்றம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அலங்கரிக்கப்பட்ட ‘டெம்போ காரில்’ என்னை அமர்த்தி அழைத்து வந்தனர். கழகத் தோழர்கள், மறைந்த மாவீரன் சஞ்சீவி நினைவுக் கல்வெட்டினை எம்.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையிலும், அசோகபுரம் பெரியண்ணன் முன்னிலையிலும் நான் திறந்துவைத்து உரையாற்றினேன். அப்போது நம்முடைய நாட்டில் தர்மம் என்பதுகூட “திமீமீபீவீஸீரீ ஙிக்ஷீணீலீனீவீஸீs” ‘பார்ப்பானுக்கு சோறு போடு’ என்பதுதான். “திமீமீபீவீஸீரீ ஜீஷீஷீக்ஷீ” கூட கிடையாது. இப்போதுதான் கொஞ்சம் உணர்ச்சி வந்திருக்கிறது என்று கூறினேன்.
மாநாட்டில் பாளை. சுப.சீதாராமன் அவர்கள் இந்திய துணைக் கண்டமே இன்றைய தினம் நமது தமிழின தளபதி வீரமணி அவர்களை மிகக் கூர்மையாக உற்று நோக்குகிறது என்றும் இன்றைய தினம் மாநில அரசில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிலும் அது அளிக்கப்பட வேண்டும் என்பது நம் நிலை என்று கூறினார்.
சென்னை ப.க. தலைவர் என்.பகீரதன் அவர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது, “தந்தை பெரியாரை தமிழர்கள் அறிந்ததைவிட பார்ப்பனர்கள் நன்றாக அறிவார்கள். 3000 ஆண்டுகளுக்கு மேலாக கடவுள் என்ற பெயராலும் அதன் அடித்தளத்திலும் ஏற்படுத்திய பார்ப்பனீய அடித்தளங்களான வேதங்கள், உபநிஷத்துகள், மனுஸ்மிருதிகள், ராமாயணம், பாரத புராணங்கள், இதிகாசங்கள் என்ற கற்பனைகளை நிலைநிறுத்த இந்த நாட்டு சொந்தக்காரர்களான தமிழர்களை சூத்திரர்களாக்கி வைத்து தங்களைக் கடவுளின் நேர் பிரதிநிதிகள்; கடவுள் அம்சங்கள் என்று பல்வேறு சமுதாய அமைப்பில் சுகவாழ்வு வாழ்ந்துகொண்டு வந்த, வருகிற பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை பகுத்தறிவு என்ற ஹைட்ரஜன் குண்டினால் தகர்த்து அதை நிர்மூலமாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். பகுத்தறிவோடு சிந்தித்தால் மதக் கோட்பாடுகளின் புரட்டு நன்றாகவே விளங்கிவிடும் என்று விளக்கிப் பேசினார். விழாவில், பெரியார் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.நடேசனார் விழாவிற்குத் தலைமை ஏற்றார்.
மாணவர் பெருமன்றத் தோழர் ஸ்டாலின் குணசேகரன், தாழ்த்தப்பட்டோர் நலஉரிமைக் கழகப் பொதுச் செயலாளர் தாராபுரம் துரைராஜ், பகுத்தறிவு இளைஞர் மன்றம் கோ.செல்வராஜ், மதுரை துரை எழில் விழியன், அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை, சேலம் மாவட்டச் செயலாளர் கொளத்தூர் டி.எஸ்.மணி, சேலம் அருள்மொழி, திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் தி.அ.சண்முகசுந்தரம் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோருடன் கழகத் தோழர்கள், தோழியர்கள் பலரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தில்லை நடராசன் கோயிலை மட்டும் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்படாமல் விதிவிலக்கு தரப்பட்டிருப்பது ஏன்? என்று விளக்கிட திராவிடர் கழகத்தின் சார்பில் 15.04.1982 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற சிறப்புமிக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அபபோது, இந்தச் சிதம்பரம் கோயில் எங்களுக்கே சொந்தமானது என்று தீட்சதர்கள் சொல்லுகிறார்கள். இதுவரையில் எந்தக் கோயிலையாவது பார்ப்பான் கட்டியிருக்கிறானா?
தமிழன்தான் கோயில் கட்டுவான். நம்முடைய முட்டாள் ராஜாக்கள்தான் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நம்முடைய சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் இவர்களுக்கெல்லாம் கோயில் கட்டிக் கொடுப்பதுதானே வேலை?
கோயிலைக் கட்டிக் கொடுத்தவன் எங்கேயிருக்கிறான் என்றே தெரிவில்லையே! நம்ம ராஜராஜசோழன் கோயில் கட்டினானே சிறிய கோயில் அல்ல அது “பெரிய கோயில்!’’
சிதம்பரம் கோயில் தீட்சதர்கள் சொத்து அல்ல. பார்ப்பன நீதிபதிகள் தந்த தீர்ப்பு குறித்தும் விளக்கிப் பேசினேன். அதில் சில பகுதிகள் மட்டும் எடுத்தக்காட்டுகிறேன். (இந்த பேச்சு ‘விடுதலை’யில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விரிவாக வெளிவந்திருக்கிறது.
இந்தத் தில்லையிலே இருக்கிற கோயில் ஒரு நீண்ட சரித்திரம் படைத்த கோயில் என்பதும் அது தமிழ்நாட்டு மன்னர்களால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டது! அது மாத்திரமல்ல, மன்னாலே கட்டப்பட்டது. தமிழர்களுக்கு உரியது என்ற கூற்றையே மாற்றி ஏதோ பார்ப்பனர்களுடைய தனிப் பண்ணை என நினைத்துக்கொண்டு மற்றர்களுக்கு அதிலே உரிமை கிடையாது தமிழக இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை வரக் கூடாது; எட்டிப் பார்ப்பதற்கு அரசாங்கத்திற்குக் கூட உரிமை கிடையாது என்ற அளவிலே இன்றைய நடப்பு இங்கே நடைபெறுகிற நிகழ்ச்சி தவறானது.
சிலபேர் கேட்கிறார்கள், “இந்து அறநிலையத்துறை, கோயிலைப் பற்றி திராவிடர் கழகத்துக்காரர்கள் பேசுகிறார்களே, இவர்கள்தான் ‘சாமியில்லை, கடவுள் இல்லை’ என்று சொல்கிறவர்களாயிற்றே இவர்களுக்கு யார் எடுத்துக் கொண்டு இருந்தால் என்ன?’’ என்று கேட்கிறார்கள்.
இப்படிக் கேட்டால் அதற்கு என்ன அர்த்தம்? இப்போது நம்முடைய திராவிடர் கழகக் கூட்டம் நடக்கிறது. இங்கே ஒரு விபூதிப் பட்டை அல்லது நாமம் போட்டவரை இன்னொருவர் அடித்துக்கொண்டே இருந்தார் என்றால் _ எங்கள் கூட்டத்திற்கு முன்னால் _ நான் என்ன ‘நாமம் போட்டவர்தானே நல்லா அடி வாங்கட்டும். அப்படியென்றா நினைத்துக் கொண்டிருப்பேன்? மனிதாபிமானமுள்ள யாராவது அப்படி நினைத்துக் கொண்டிருக்க முடியுமா?
அவர் நாமம் போட்டிருந்தால் என்ன அவரும் நம்ம சகோதரர்தானே. மனிதர்தானே, நம்ம சகோதரர் வேண்டாம்; ஒரு தீட்சதரையே அடிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் வாதத்திற்காக.
அடிக்கக் கூடாது அடித்தால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமே! ஒரு தீட்சதரை அடித்தால் கூட பார்த்துக் கொண்டிருக்க மாட்டோமே! “எதற்காக அவரைஅடிக்கிறாய்? இந்தப் பக்கம் வா!’’ என்று சொல்லி அவரையும் காப்பாற்றக் கூடிய மனிதாபிமானம் பொறுப்பு எங்களுக்கு உண்டாயிற்றே!
அது மாதிரி, இந்த நாட்டில் சுரண்டல் கூடாதென்று சொல்லுகின்றோம். இங்கே கோயில் இருக்கிறது. இதை சுரண்டிக் கொண்டிருக்கிறான். சுரண்டாதே என்று மனிதாபிமான அடிப்படையில், நியாய அடிப்படையில் சொல்லுகின்றோம்.
இந்தக் கேள்வியை கேட்கிறவர்கள், அடிப்படையாக ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். Hindu Religious Endowment Board Actஎன்று வரக்கூடிய இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை சட்டத்தைக் கொண்டு வந்ததே எங்களுடைய இயக்கம் நீதிக்கட்சி. பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த போதுதான் நீதிக்கட்சி ஆண்டபோது தான், அதற்கு முன்னாலே கைவைக்கத் துணியாத, பார்ப்பனர்கள் மிரட்டியதை யெல்லாம் பொருட்படுத்தாது அவர் துணிந்து கை வைத்தார்.
முதன் முதலாக 1922லே இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் வந்தது _ எதற்காக? கோயில் பெருச்சாளிகளையெல்லாம் ஒழுங்கு படுத்துவதற்காக வந்தது. ரொம்பப் பேர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்.
‘பகவத் கைங்கர்யம்’ ‘பகவத் கைங்கர்யம்’ என்று ஏப்பம் விட்டுக்கொண்டே இருந்தான்.
பனகல் அரசர் வேறொன்றும் சொல்லவில்லை. நீ எவ்வளவு ஏப்பம் விட்டிருக்கிறாய் என்பதைக் கணக்கு பார்க்கலாமே! என்று சொன்னார். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. “ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு’’ என்று. எனவே, இந்த அடிப்படையில் ரொம்பவும் தெளிவாகச் சொன்னார்கள்.
இந்தச் சட்ட 1922இல் நீதிக்கட்சி என்று சொல்லக் கூடிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் சட்ட மன்றத்தில் மசோதாவாகக் கொண்டு வந்து, பலத்த எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றியபோது, அய்யா அவர்கள் காங்கிரசில் இருந்தார்.
அய்யா அவர்கள் காங்கிரசில் இருந்துகொண்டே அந்தச் சட்டத்தை வரவேற்றுப் பாராட்டினார்! காங்கிரசில் இருந்த மற்றவர்கள், பார்ப்பனர்கள். சத்தியமூர்த்தி போன்றவர்கள் எதிர்த்தனர். அய்யா அவர்கள் பனகல் அரசருக்குப் பாராட்டுத் தந்தி கொடுத்தார்.
இந்தக் கோயிலை இப்ப எடுக்கணும் என்ற நெருக்கடி ஏன் அவ்வளவு அவசியம் வந்தது. அது பார்ப்பனர் சத்திரமாக நடந்துகொண்டே போகிறது எல்லாக் கோயில்களுக்கும் உரிய முறைதானே இங்கும் இருக்க வேண்டும்? இதற்கு மட்டும் ஏன் தனி நடைமுறை? 1925ஆம் ஆண்டு அறநிலையச் சட்டம் அமலுக்கு வந்தபோது, அச்சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று சொன்னவர்கள் தீட்சதர்கள்.
“தில்லை நடராஜர் கோயில் சொத்துகளை, வருமானங்களை, நகைகளை பாதுகாக்க, நிர்வாக அதிகாரங்களை கவனிக்க தமிழக அரசு முன் வந்ததற்கு நன்றி’’ என்று இவர்களெல்லாம் கையெழுத்து போட்டு அனுப்பியிருக்கிறார்கள். தோழர்களே தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் எப்படிப் பட்ட நிலை ஏற்படுகிறது என்று சொன்னால், ‘பாண்டியநாயகம் அம்பாள் கழுத்தில் கிடந்த பவுன் தாலி களவுபோய்விட்டது’ அம்பாள் கழுத்திலிருந்த தாலியே போய்விட்டது.
அம்பாள் தாலியில்லாமல் இருக்கிறாள். அதுதான் மிக முக்கியம். அம்பாளுக்கு அடுத்தபடியாக யார் தாலி கட்டினார்கள் என்று ஒன்றுமே தெரியவில்லையே.
தாலியில்லாமல் இருந்தால் பக்தர்களுக்குத் தெரிய வேண்டாமா? எங்களுக்குப் பரவாயில்லை. நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பக்தகோடிகள் கொடுப்பதை இப்படி பக்த கேடிகள் எடுத்துக் கொண்டு போவதா?
அது மட்டுமல்ல, சிதம்பரம் கோயிலில் தமிழ் கூடாது என்கிறார்கள். திருவாசகம் பாடிய தில்லையில், தமிழ் கூடாது என்பது எப்படி நியாயம்? என்று பல செய்திகளைப் பேசிய பின் ஆர்.எஸ்.எஸ். வன்முறைகள் பற்றியும் விரிவாகப் பேசினேன்.
இந்துமத வெறியர் -_ திலகர் எப்படி பார்ப்பன வெறியராக இருந்தார் என்பதை தஞ்சையில் 16.04.1982 அன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் நான் பல்வேறு ஆதாரத்தோடு விளக்கினேன்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் மிரட்டல் பயிற்சிகளை இந்த அரசு ஒரு மாத்திற்குள் தடை செய்யாவிட்டால் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் பாசறைகள் அமைக்க நேரிடும் என்று மன்னை அய்யா சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேசினார். இதைப்பற்றி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் 21.04.1982 அன்று ‘தினத்தந்தி’க்கு பேட்டி அளித்தபோது, அவரது கருத்தை வெளியிட்டிருந்தார். அதனை ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். இது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நானும் என்னுடைய கருத்தை 22.04.1982 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் “முதல்வர் பேட்டியும் நமது அய்யமும்’’ என்ற தலைப்பில் விளக்கி அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
24.04.1982 அன்று இரவு, கடலூர் முதுநகரில் சஞ்சீவராயன் கோயில் தெருவில் பகுத்தறிவாளர் கழக பொதுக்கூட்டம் ப.க.தலைவர் என்.ஜி.ஜி.ஓ. சங்க மாவட்டத் தலைவருமான சு.அறிவுக்கரசு தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். பகுத்தறிவாளர் கழகம் என்பது மனிதன் அறிவைப் பயன்படுத்தி எது செய்யலாம், எது செய்யக் கூடாது என்பதை சிந்தித்து எடுப்பதே. அய்யா சொன்னார், பகுத்தறிவாளன் என்பவன் மனிதனை மதிக்கத் தெரிந்தவன் என்பது பொருளாகும்.
மனிதன் சிந்திக்க வேண்டும், அதுவும் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும், அப்படிச் சிந்தித்ததால்தான் பூமி உருண்டை என்பதைக் கண்டுபிடித்தான். மேலே இருந்து பழம் கீழே ஏன் விழுகிறது என்பதை சிந்தித்ததால்தான் புவிஈர்ப்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பகுத்தறிவைப் பயன்படுத்தியதால்தான் ஆகாய விமானம், கப்பல், இங்கே இருக்கும் ஒலிபெருக்கி, குழல் விளக்கு ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன. சாணியை மிதித்துவிட்டால் உடனே கழுவ வேண்டும் என்று எண்ணுகிறவன், பார்ப்பான் மாட்டு மூத்திரத்தைக் கலந்து பஞ்ச கவ்வயம் என்று கொடுத்தால் வாங்கி பவ்வியமாக குடிக்கிறானே இதை என்ன என்று சொல்லுவது? எருமை சாணியிலே புரளுகிறது. அதைப் போய் ஏன் சாணியிலே புரளுகிறாய் என்று கேட்பது இல்லை. ஆனால், மனிதன் அவ்வாறு செய்தால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்பதுதான் பகுத்தறிவு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கழுதை எப்படி உதைத்ததோ அப்படியேதான் இன்றும் உதைத்துக்கொண்டிருக்கிறது. அதுபோல்தான் கடவுள், மத விஷயத்திலும் மனிதன் நடந்துகொண்டிருக்கிறான் என்று இப்படி பல்வேறு மேற்கோள்களைக் கொண்டு கூட்டத்தில் விளக்கவுரையாற்றினேன்.
கடலூர் ப.க. செயலாளர் இரா.சித்தன், பெரியார்தாசன் எம்.ஏ., நகர தி.க. செயலாளர் இரா.வெங்கடேசன், கடலூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.சவுந்தரராசன், நடராசன், இரா.தேசிங்கு, நகர தலைவர் பத்மநாபன், மண்டல இளைஞரணிச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தி.க. தலைவர் வை.குப்புசாமி, தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட இணைச் செயலர் விசயா முத்துவண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் வெள்ளம்போல் கூடியிருந்தார்கள்.
(நினைவுகள் நீளூம்)