ஒக்கிப் புயல் ஓரு பேரழிவு ! மத்திய அரசின் மவுனம் ஏன்?

டிசம்பர் 16-31

சமா.இளவரசன்

ஜான் டேவிட்சனின் வீட்டெதிரே விரிந்துகிடக்கிறது கடல். அது தான் அவருடைய வாழ்க்கை. அவருடையது மட்டுமல்ல.. கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் 80000 பேரின் வாழ்க்கையும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் வாழ்க்கையும் அந்தக் கடலில்தான் இருக்கிறது. வங்காள விரிகுடா கடலை முதன்மை எல்லையாகக் கொண்ட தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் சற்று வித்தியாசமானது. குமரிக்கு வங்காள விரிகுடாவுடன் அரபிக் கடலும் கணக்கில் உண்டு.  குமரி முனையிலிருந்து கேரள எல்லை வரையிலான தமிழக மீனவர் பகுதிகள் அரபிக் கடற்கரைப் பகுதிகள். கடலோர மீன்பிடிப்பு மட்டுமல்லாமல் அலைகடல் தாண்டி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் சிறப்பு குமரி மாவட்டத்து பாரம்பரிய மீனவர்களுக்குண்டு. ஏறத்தாழ 40000 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்போர். செல்வத்தை அள்ளித் தரும் அந்தக் கடல் தான் சில நேரங்களில் அவர்களையும் வாரிக் கொள்ளும். ஒக்கி புயல் அப்படித்தான் நூற்றுக் கணக்கான மீனவர்களை வாரிக் கொண்டு விட்டதா என்னும் அச்சம் குமரி மாவட்டத்து குடும்பங்களைக் குடைந்தெடுக்கிறது.

மீன்பிடித் தொழில் மீனவர்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமல்ல, ரூ.60000 கோடி அந்நியச் செலாவணியை அள்ளித் தந்து இந்தியப் பொருளாதாரத்தினையும் தூக்கிப் பிடிக்கிறது. இருந்தும் என்ன? அவர்களின் உயிர் என்றால் அரசுகளுக்கு இளக்காரம் தான். எல்லை தாண்டி வந்தார்கள் என்று இலங்கை அரசு சுடும். எல்லைக்குள்ளேயே இருந்தாலும் இந்திய அரசு சுடும்.

இந்த முறை எந்த அரசும் சுடவில்லை. மாறாக தங்கள் அலட்சியத்தால் ஆயிரக்கணக் கானோர் உயிரைப் பணயம் வைத்திருக்கின்றன. வளர்ந்திருக்கும் அறிவியலின் துணைகொண்டும், செயற்கைக் கோள்களின் உதவியுடனும் நொடிக்கு நொடி கால நிலை மாற்றத்தை அறிந்து சொல்ல, தனியார் வானிலை ஆய்வாளர்களால் கூட முடிகிறது. அப்படி அவர்களில் சிலர் சரியாகச் சொல்லிவிட்டால், தங்களை மீறிச் சொல்வதாக முறுக்காக மிரட்டலையும் விடுக்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

காலநிலை தெரியாமல் எப்போதும் கடலுக்குள் போவதில்லை மீனவர்கள். அவர்களுக்கு முறையாக அறிவிப்பதற்கென்றே புயல் எச்சரிக்கைக் கூண்டுகளும், வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் அறிவிக்கும் நடைமுறைகளும் இருக்கின்றன. புயல் எச்சரிக்கையை மீறி, தங்கள் உயிரை அவர்கள் பணயம் வைக்கமாட்டார்கள். நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மட்டும் நீடிப்பதாகச் சொல்லி வந்த வானிலை ஆய்வுத் துறை, திடீரென ஒக்கி புயல் அறிவிப்பை வெளியிடுகிறது. இது குறித்த தகவல் தெரிவிக்கப்படாமையால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் புயலில் அகப்பட்டு அலைக்கழிக்கப் பட்டுள்ளனர்; நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்; அடித்துச் செல்லப்பட்டு குஜராத்தில் படகோடு உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு கரையொதுங்கியுள்ளனர்; சிலர் பிணமாகக் கரையொதுங்கியுள்ளனர்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் புயலால் பாதிப்பைச் சந்திக்கின்றன. இவற்றுக்கான முறையான திட்டமிடலோ, முன்னோக்கு நடவடிக்கைகளோ இன்றி மந்தமாகவே இருக்கிறது மாநில அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெய்த கடும் மழையை, வெள்ளமாக மாற்றியவர்களும் இதே ஆட்சியாளர்கள் தான். அப்போது சென்னைக்கு வந்த நிவாரணப் பொருட்களைப் பிடுங்கி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அரசு இயந்திரம், குமரி மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் நிலை என்னாயிற்று என்று தெரியாத நிலையிலும், கோலாகலமாக கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. கொதித்துக் கிடக்கிறார்கள் குமரி மக்கள். மத்திய அரசுக்கோ எதிலும் பாரபட்சம். தமிழகத்தைத் தங்கள் வலையில் வீழ்த்துவதற்கு பதவித் தூண்டில் வீசி பினாமி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா. தமிழ்நாட்டில் தங்களுக்கு ஒன்றே ஒன்றென நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த குமரி மாவட்டத்து மக்கள் உயிர் போகும் வேதனையில் தவிக்கும்போது, உச்சகட்ட மெத்தனத்தால் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க! அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனைக் காணாமல் போனோர் பட்டியலில் இணைத்துத் தேடச் சொல்கிறார்கள் குமரி மக்கள்.

இத்தகைய சூழலில்தான் பரிதவித்துக் கிடக்கும் மக்களின் உண்மை நிலையை அறிந்து, அதை உரியவகையில் அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்று அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் ஏற்கப்படும் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, கன்னியாகுமரிக்கு தன் இரண்டுநாள் பயணத் திட்டத்தை அறிவித்தார். கலவரச் சூழல், இயற்கைப் பேரிடர்கள், தமிழகத்தின் இயல்புக்கு மாறான எதுவென்றாலும் உடனடியாக களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து, அங்கு தேவையானவற்றை, தேவையானவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் மனிதநேயப் பணி திராவிடர் கழகத்தின் வரலாற்றில் தொடர்ந்து இடம்பெறும் செய்தி. தனுஷ்கோடி புயலில் ராமேஸ்வரம் தீவு துண்டாகிக் கிடந்தபோது, தள்ளாத வயதிலும் மக்களைச் சென்று பார்த்தே தீருவேன் என்று காற்று பலமாய் இருப்பதாக அரசின் எச்சரிக்கையையும் தாண்டி, படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துவந்த தலைவர் தந்தை பெரியாரின் மனிதநேயப் பதைப்பு, அவரின் அடிச்சுவட்டில் நடக்கும் ஆசிரியர் கி.வீரமணிக்கும் இயல்பானது. சென்னை வெள்ளத்தால் தத்தளித்தபோது, லட்சக்கணக்கான மக்களுக்குத் தேடித் தேடிச் சென்று உணவளித்தது பெரியார் திடல். கடலூரிலும், சென்னையிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்தியது பெரியார் மருத்துவக் குழுமம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட சமயத்திலும், புயல் வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட சூழலிலும் திருவாரூர், -நாகை மாவட்டங்களுக்கு விரையும் கால்கள் அவருடையது. கடந்த நவம்பர் மாதத்தில் அப்படி ஒரு சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இரு மாவட்டங்களிலும் வாடும் விவசாயப் பெருங்குடி மக்களைச் சந்தித்து, அவர்தம் குறைகளைக் கேட்டு, ஆறுதல் கூறி வந்தார் ஆசிரியர். இந்த நிலையில் தான் ஒக்கி புயல் குமரி மாவட்டத்தைக் கடுமையாகப் பாதித்த செய்தியும், அதில் அரசுகளில் அலட்சியமும் அவர் பயணத்துக்குக் காரணமாயின.

டிசம்பர் 6-ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி 7-ஆம் தேதி காலை திருச்சி வந்து சேர்ந்த அவர், காரைக்குடியில் முன்பே ஒப்புக் கொண்டிருந்த திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்துவிட்டு, உடனடியாகக் கிளம்பி சாலை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விரைந்தார். வழியெங்கும் திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்துகொள்ள, அன்று மாலை ஆரல்வாய்மொழி தொடங்கி, வரிசையாக புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார் ஆசிரியர் கி.வீரமணி. குலை தள்ளிய வாழைமரங்களை அடியோடு சாய்த்துத் தள்ளிய ஒக்கி புயல் விவசாயிகளுக்குப் பேரிழப்பை உருவாக்கியிருந்தது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அழிவுற்றதைக் குறித்து அறியவும், விவசாயிகளைச் சந்திக்கவும் தோவாளை ஒன்றியம், தெரிசனந்தோப்பு , சிறமடம் பகுதியில் சென்றிருந்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், பலன் தரும் வகையில் குலைதள்ளியிருந்த நிலையில், ஒக்கி புயலால் ஒட்டு மொத்தமாகச் சரிந்து கிடந்தன. சிறமடம் பகுதிக்குள் நுழையத் தொடங்கியபோதே இருமருங்கிலும், வாழைமரங்கள் சரிந்துகிடக்கும் காட்சி விவரிப்புகள் தேவையின்றி விவசாயிகளின் துயரைச் சொன்னது. வண்டிகள் செல்லாத பாதைகளிலும், பின்னர் வாழை பயிரிடப்பட்டிருந்த நிலத்திற்குள்ளும் இறங்கி நடந்தார் ஆசிரியர். அவர் வந்திருக்கும் செய்தி அறிந்து கூடிய குறு விவசாயிகள், பணியாட்கள், குத்தகைக்கு பயிரிட்டிருந்த விவசாயிகள் என்று பலதரப்பட்டவர்களும் தங்கள் துயரினைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ஆசிரியர், மேலும் விவரங்களைக் கேட்டு, தன் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார். வாழை பயிரிட ஆன செலவு, அது சரியாக அறுவடையாகி விற்பனைக்கு வந்திருந்தால் கிடைக்கக் கூடிய வருவாய், இப்போது ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு, அதற்கு நட்ட ஈடு என்ற பெயரில் அரசு தரும் கொசுறுப் பணம், அது ஏன் போதுமானதாக இருக்காது என்பன போன்ற விவரங்களை எடுத்து விளக்கினர்.

அடுத்து நீண்டகால நோக்கில் செய்யப்பட வேண்டியன குறித்து அவர்களுடன் கலந்துரை யாடினார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீனவர்கள், விவசாயிகள் என கலந்துள்ள இம்மாவட்டத்தின் நிலையை உரிய வகையில் அரசுகள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், தேசியப் பேரிடராக இதனை அறிவித்து, அதற்குரிய நிதி ஒதுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.  அங்கிருந்து தோமையார்புரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்கள் புயல்காற்றால் முறிந்து விழுந்துள்ள இடங்களைச் சென்று பார்வையிட்டார். இரவு கவிந்த சூழலிலும் சகதிகளுக்கு மத்தியில் நடந்துசென்று பார்த்து, அவை குறித்த செய்திகளைக் கேட்டறிந்தார். வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து சாமிக்குச்சி, பாராமலை, பாலமூர், இஞ்சிக்கடவு, கரும்பாறை போன்ற இடங்களில் உள்ள கிராம்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள் மலைப் பகுதிகளிலேயே சிக்குண்டு இருப்பதாகவும், அவர்களைச் சென்றடைய ஒரு வாரம் கழித்து இப்போது தான் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும், மலைப்பாதைகளில் விழுந்துள்ள மரங்களை வெட்டி ஒழுங்குபடுத்தி, அவர்களைச் சென்று சேர இன்னுமொரு வாரம் தேவைப்படும் என்பதால், ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் குமரி மாவட்டப் பெருமக்களும், மக்கள் பிரதிநிதிகளும்.

அடுத்து தடிக்காரன்கோணம் பகுதியில் இடிந்துபோன 55 வீடுகளைப் பார்வையிடச் சென்றார். மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டு முழுமையாகச் சீர் செய்யப்படாமல் இருந்ததால் பல்வேறு ஊர்களிலுமிருந்து மின் துறைப் பணியாளர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஒரு லாரியில் மொத்தமாக ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த அவர்கள், இடிந்த வீடுகளைக் காண நடந்து கொண்டிருந்த ஆசிரியரை வழியில் பார்த்தனர். ”நீண்டகாலமாக தற்காலிகப் பணியிலேயே வைத்து வேலை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். எங்களை நிரந்தரமாக்க அய்யா கோரிக்கை வைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, சாலையிலிருந்தபடி இடிந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தவர், அவ்வீட்டின் உரிமையாளரான மூதாட்டி ஒருவரின் நிலையைப் பார்த்துவிட்டு, கூரை இடிந்து தொங்கிக் கொண்டிருந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அடுத்தடுத்த வீடுகளைச் சேர்ந்த பெண்களும் கூடி திராவிடர் கழகத் தலைவரிடம் ‘மண்டபத்தில் எத்தனை நாள் நாங்கள் தங்குவது? எங்களுக்கு நிரந்தர மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். அடுத்து அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, அவர்களிடம் விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டபடியே பயணத்தைத் தொடர்ந்தார் ஆசிரியர்.

மறுநாள் காலை மீனவர் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடவேண்டும் என்று கருதி, மத்திய – மாநில அரசுகளின் மீட்புப் பணியிலும், நிவாரணப் பணியிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கி விரைந்தது ஆசிரியரின் வாகனம். வழியில் குளச்சல் பகுதி பங்குத் தந்தை ஆர்.எட்வின் அவர்களைச் சந்தித்தபோது, மீனவ மக்களின் துயர்துடைக்க மேற்கொள்ளப்படவேண்டிய அவசர மற்றும்  நீண்டகால நடவடிக்கைகள் குறித்த மனுவினை ஆசிரியரிடம் தந்து, அது குறித்தச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். ஹெலிகாப்டர் தளமும், கடலோர காவற்படைக் கப்பலும், அதில் அனைத்துப் பாதுகாப்புக் கருவிகளும், மீனவர் படகுகளுக்கு நவீன தொலைத் தொடர்பு வசதிகளும் செய்துதரப்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதையொட்டியிருந்த கிறிஸ்துவ தேவாலயத்தில் புயலில் சிக்கி மாண்ட ஜான் டேவிட்சனின் தாயார் இருப்பதை அறிந்து அவரைச் சென்று சந்தித்தார் ஆசிரியர்.

மகனை இழந்து தவித்துக் கொண்டிருந்த தாயின் கண்ணீர் திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட உடன் சென்றிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்தது ஜான் டேவிட்சனின் வீடு. இளம்வயதில் இணையரை இழந்துவிட்ட ஜான் டேவிட்சனின் மனைவியைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விரும்பியவர், பகுதி மக்கள் வழிகாட்ட, கழகத் தோழர்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார். சாலையிலிருந்து வளைந்து நெளிந்து, மேடு பள்ளங்களுடன் குறுகிச் சென்ற சந்துகளின் வழியே ஜான் டேவிட்சனின் வீட்டைச் சென்றடைந்தார். வீட்டின் அமைதி, அழுதுஓய்ந்த ஒலிகளை எதிரொலிக்கும் உணர்வைத் தந்தது. அறையின் மூலையில் விரக்தியோடு அமர்ந்திருந்த டேவிட்சனின் மனைவிக்குப் பேச நா எழவில்லை. உடனிருந்தோர் அரசின் அலட்சியம் குறித்து கொட்டித் தீர்த்தனர். இந்த அரசு மிச்சமிருப்பவர்களையாவது மீட்க வேண்டும் என்று மன்றாடினர்.

இது ஒரு ஜான் டேவிட்சனுக்கு நிகழ்ந்த துயர் மட்டுமல்ல… எத்தனைப் பேர் என்று கணக்கே தெரியாத நிலையிலிருக்கின்றன அரசுகள். காணாமல் போனவர்கள் மீண்டு வரவில்லையென்றால் 7 ஆண்டுகள் கழித்துத் தான் அவர்கள் இறந்துபோனதாக அரசு அறிவிக்கும். அந்த அறிவிப்பை விரைவாகச் செய்ய வேண்டும் என்ற விசித்திரமான வேண்டுகோள் அங்கிருந்து எழுகிறது. காரணம் தெளிவானது, இன்னும் சில நாட்களில் கரை சேராதவர்களை எங்கோ கரை ஒதுங்கியவர்களாகத் தானே கணக்கிலெடுக்க வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு நிலையற்றது தங்களின் வாழ்க்கை என்ற அளவுக்கு வாழ்க்கை மீதான புரிதல் மீனவர்களுக்கு இருக்கிறது. மீனவர்கள் வாழ்க்கை குறித்த தெளிவு தான் அரசுகளுக்கு இல்லை. நிவாரண உதவிகள் என்ற பெயரில் அரசின் சில்லறை உதவிகள் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. போர்வையும், பாயும், அரிசி-பருப்பு, வேட்டியும் தருவதற்கு அரசுகள் எதற்கு? அதனைத் தொண்டுள்ளம் கொண்ட எவரும் செய்வர். தங்கள் தொழிலின் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து காப்பதற்கான நிரந்தர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்பதே அறிவார்ந்த அம் மக்களின் வேண்டுகோளும், தேவையும்.

ஆறுதல் தர நிறைய வார்த்தைகளின்றி, அவர்களின் உணர்வுகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர், டேவிட்சனின் உறவினர்களிடமிருந்து விடைபெற்று வீட்டை விட்டு வெளியில் வந்தார். அலைகடலின் இரைச்சலும், காற்றும் காதுகளைத் தீண்டின. தோழர்களோடு இறங்கி மணலில் நடந்தார். வாசலிலிருந்து கண்ணைத் திறந்தாலே, கடல் விரிந்து கிடக்கும் காட்சி தான் தெரியும் என்றால், எத்தனைத் தேறுதல் தந்தாலும் அந்தக் கடலில் மாண்ட தன் இணையர் ஜான் டேவிட்சனின் நினைவுகள் அந்த இளம்பெண்ணை வாட்டுமே என்று எண்ணியபடி நடந்தாரோ, என்னவோ! ஒரு மேட்டில் ஏறியபடி கடலையும், அந்த வீட்டையும் பார்த்தார். தோழர்களிடமும் அமைதி. அவருடைய பார்வையும், அது எங்கு சென்றிருக்கும் என்ற எண்ணமும் தந்த உணர்வு எழுத்தில் வடிக்கமுடியாதது. சொல்லி விளக்க முடியாதது.

கடலோர மாவட்ட மக்கள் இயற்கைப் பேரிடரால் படும் அவதிகளுக்கு அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலாவது உரிய தீர்வை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.     

மத்திய-மாநில அரசுகள் மாறி மாறி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன

தமிழக அரசு, இதுவரையில் இரண்டு மீனவர்கள்தான் மரணமடைந்து இருக்கிறார்கள் என்று கொடுத்த புள்ளிவிவரம் சரியில்லை. இதில், மத்திய- மாநில அரசுகள் மாறி மாறி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவுக்கு நிதியை அறிவித்திருக்கிறார் என்றாலும், அது வழக்கமாக அறிவிக்கக்கூடிய ஒரு நிதி நிவாரணம்தான். ஆனால், நிதியைவிட, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். மும்பை போன்ற கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கு வசதிகள் இல்லை என்று சில நாள்களுக்குமுன் செய்திகள் வெளியாயின.
(குமரி மாவட்டத்தில் டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்)

மாற்றாந்தாய் மனப்பான்மை

செய்தியாளர்:   புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்களே? இதில் எப்படி நிவாரணங்களை சரியாகச் செய்ய முடியும்?

தமிழர் தலைவர்: நிதி ஆதாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அதற்குத் தாராளமாக நிதியை ஒதுக்கவேண்டும் என்பதற்காகத்தான் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிறோம். இந்நேரம் மத்தியக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்திருக்க வேண்டும். வட மாநிலங்கள் மற்ற பகுதிகளுக்கெல்லாம் வேகவேகமாக மத்தியக் குழுவினர் போகிறார்கள். தமிழ்நாடு என்றால், மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கிறது. இங்கே இருக்கிற ஓர் ஆட்சி காட்சியாக இருக்கிறதே தவிர, ஆட்சியாக இல்லை.

(குமரி மாவட்டத்தில் டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்)

மாநில அரசின்மீது பழியைப் போட்டு மத்திய அரசு தப்பித்துக் கொள்ளக்கூடாது!

மாநில அரசு எங்களுக்குச் சரியான தகவல் களைக் கொடுக்கவில்லை என்று சொல்லி,  பழியை மாநில அரசின்மீது போட்டு மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது.

பல நேரங்களில், மத்திய அரசுக்கு இருக்கின்ற வசதிகள், மாநில அரசுக்கு இருப்பதில்லை. என்றாலும், மாநில அரசு தன்னுடைய கடமைகளில் இருந்து தவறக்கூடாது.

(குமரி மாவட்டத்தில் டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்)

கருஞ்சட்டைக்கு மட்டும் திறந்த சாலைத் தடுப்புகள்:

ஆசிரியரின் முதல் நாள் சுற்றுப் பயணத்தின் போது சின்னத்துறைப் பகுதியில் தொடங்கியிருந்த மீனவர்கள் போராட்டம் அம்மாவட்டம் முழுவதும் இரண்டாம் நாள் கொழுந்துவிட்டெரிந்தது. வழியெங்கும் சாலை மறியல். மரங்களை இழுத்துப் போட்டும், நூற்றுக் கணக்கில் தெருவில் திரண்டும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் மீனவக் குடும்பத்தினரும், ஊர்மக்களும்! அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முதல் யாரும் அந்த மக்களின் போராட்ட உணர்வுக்கு மத்தியில் முகங்கொடுக்க முடியாத நிலையில், தங்களைச் சந்திக்க வந்த திராவிடர் கழகத்தினரும், அதன் தலைவர் வீரமணியும் தான் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து, கருஞ்சட்டையினரின் வாகனங்களுக்கு மட்டும் மக்களே மனமுவந்து பாதை அமைத்துக் கொடுத்தனர். ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட, தன்னலம் கருதாத தந்தை பெரியாரின் கருஞ்சட்டைச் சேனை இது என்பதைத் தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.

(குமரி மாவட்டத்தில் டிசம்பர் 7, 8ஆம் தேதிகளில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *