தமிழர் தலைவர் ஆசிரியரால் பொதுச்செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் மானமிகு துரை.சக்கரவர்த்தி.
இவர் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் 14.1.1948 அன்று பிறந்தவர். இவரது தந்தை துரைராஜ். தாயார் ரோஜாமிர்தம் ஆவர். கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழக அமைப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவர். திராவிடர் கழகத்தில் ஒன்றியச் செயலாளர், பிரச்சாரச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் என இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு வரை வகித்தவர். 2003ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று சென்னையில் ஒரு சாலை விபத்தில் மறைவுற்றார். அவர் மறைந்தபோது தமிழர் தலைவர் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி:
“என்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டு’ ஆளாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த உறைவாளை, மரணம் சுக்கல் நூறாக சிதைத்துவிட்டபோது, இதை எப்படி என்னால் நம்மால் மீண்டும் கட்டி எழுப்ப முடியும்? கலங்காமல் இருக்க முடியும்? என் சுமையைச் சுமக்க வந்த சுமை தாங்கியை, என் பாசத்திற்குரிய கட்டுப்பாட்டின் இலக்கணத்தை, கடமையின் கொள்கலனை, கொள்கை விளக்கத்திற்கு நம் ஆசான் கொடுத்த பணியை முகம் சுளிக்காமல், முடித்துக் கொடுத்திடும் செயல் வீரனாய்த் திகழ்ந்த கழக ராஜ்யத்தின் எம் சக்ரவர்த்தி எங்கே? எங்கே?
என் அருமைச் சகோதரனே,
உங்களை கழகத்தில் வளர்த்து, படிப்படியாக பக்குவப்படுத்தி, கடமைகளை ஆற்றும் பொறுப்புணர்ச்சி கண்டு ஆயத்தமானவர் என்பதை அறிந்துதானே, கழகப் பொதுச் செயலாளராக்கி, நான் உங்களோடு ஒரு சாதாரண உறுப்பினர் பணிக்கு ஆயத்தமானனேன்!