இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் இடஒதுக்கீடு சட்டமாக உள்ளது தமிழ்நாட்டில்தான். ஒரு நீதிமன்ற தீர்ப்பால் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது,அதனை பாதுகாக்க 31சி பிரிவின் கீழ் ஒரு தனிச் சட்டத்தை உருவாக்கினார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினரிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்கினார்.
அதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்து, அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. மேலும் இச்சட்டத்தின் மீதான நீதிமன்றத்தின் தலையீடுகளைத் தவிர்க்க இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் 76ஆவது திருத்தமும் கொண்டுவரச் செய்தார். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்தத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்காக சீதாராம் கேசரி, சந்திரஜித் யாதவ், வி.பிசிங் உள்ளிட்ட வடஇந்தியத் தலைவர்களைச் சந்தித்து இம்முயற்சி வெற்றிபெற கி.வீரமணி பெரும்பங்காற்றினார். இவ்வாறு 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகள், வெளியிட்ட அறிக்கைகள், விரிவாகவும் விளக்கமாகவும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ‘இடஒதுக்கீடு அளவு 50%க்கு மேல் போகக் கூடாது’ என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்த நாள் முதல் திராவிடர் கழகம் மேற்கொண்ட தொடர்பணிகளின் தொகுப்பும், தமிழ்நாடு அரசு இயற்றிய தனிச்சட்டமும் இணைக்கப்பட்டுள்ளன.