ஆசிரியர் வீரமணி அவர்கள் ஓர் அதிசயக் குறி!

டிசம்பர் 01-15

எனக்கு வயது 56 . பாரம்பரிய திராவிடர் கழகக் குடும்பத்திலிருந்து வந்தவனும் அல்லன். ஆனாலும் ஆசிரியர் அவர்களை கடந்த 35 ஆண்டு காலமாக ஆய்வுக் கண்ணோடு பார்த்து வருகிறேன்; அவர் ஒரு வியப்புக் குறி!

1982 ஆம் ஆண்டு, பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு தமிழிலக்கியம் படிக்கின்றேன். வள்ளுவர் விழாவில் உரை நிகழ்த்த வருகிறார் தமிழர் தலைவர். அவர்தம் பொழிவைக் கேட்டேன். திருவள்ளுவரைப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டினார். முரண்பட்ட இடத்தையும் சுட்டிக் காட்டினார். கூட்டம் முடிந்தது. வழியனுப்ப முதல்வரும், தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் சூழ்ந்து வந்தனர். நல்லா பேசுறீங்க என்று சொல்ல வேண்டும் என்பதைச் சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். தலைவர் வேனில் ஏறினார். நீங்களும் ஏறுங்க! நீங்களும் ஏறுங்க! என்று தோழர்களை வாகனத்திற்கு அழைத்தார். மன்னை சு.ஞ.சாரங்கன், நீடாமங்கலம் ஆ.சுப்பிரமணியன் முதலானோர்கள் வண்டியில் ஏறினார்கள். ஒரு பெரிய தலைவர் எவ்வளவு பணிவாக இருக்கிறார் என்பதை நினைத்து நான் சொல்ல வந்த வார்த்தையை மறந்து, வியந்து நின்றேன்.

1989 ஆம் ஆண்டு. சேலம், தருமபுரி மாவட்டங்களில் கிராமப்புற பிரச்சாரத்தில் தமிழர் தலைவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றார். நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு தலைவரின் வாகனம் ஈரோடு நோக்கி விரைகின்றது. அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் தலைவர் ஓய்வு கொள்கிறார். நள்ளிரவு 12.00 மணி, சாலையில் நின்றிருந்த காவல்துறை அதிகாரி வண்டியை நிறுத்துகிறார். முன்னிருக்கையில் அமர்ந்திருந்த நான், தலைவர், வண்டியில் இருப்பதைத் தெரிவிக்கின்றேன். வண்டி நிற்பதை உணர்ந்து தலைவர் எழுகிறார். தலைவரைப் பார்த்தவுடன் காவல்துறை அதிகாரி கம்பீரமாய் சல்யூட் அடித்து போகச் சொல்கின்றார். வண்டி புறப்பட்டதை உணர்ந்த தலைவர் என்ன? என்று கேட்டு விட்டு மீண்டும் சாய்கிறார். காவல்துறை அதிகாரி விசாரித்ததையும், தலைவரைக் கண்டவுடன் சல்யூட் அடித்ததையும் தெரிவிக்கிறேன். ஓய்வுக்கு மெல்ல சாய்ந்த தமிழர் தலைவர், உடனே எழுந்து, அடடே! நான் கவனிக்கவில்லை. பதிலுக்கு வணக்கம் வைக்கவில்லையே! என்று வருந்தியது என் மனதில் ஆழப் பதிந்தது.

பெரியார் திடலில் தலைவர் அமர்ந்திருக்கின்றார். கழகப் பொறுப்பாளர்கள் தலைவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நானும் ஓரமாய் அமர்ந்திருக்கின்றேன். அப்போது மணவிழா அழைப்பிதழ் தருவதற்கு வந்திருந்த கழகத் தோழர், தட்டில் பழங்களுடன் அழைப்பிதழ் தருகிறார். – திருமணத்தைச் சிக்கனமாய் நடத்துங்க என்று ஆசிரியர் அறிவுரை சொல்கின்றார். கழகத் தோழர் உற்சாகமாய், இல்லீங்க அய்யா, பொண்ணு வீட்லதான் செலவு செய்றாங்க என்றார்.

தமிழர் தலைவர், யார் செலவு செய்தாலும் பணம் பணந்தானுங்களே, சிக்கனமாய் செலவு செய்யுங்க என்று புத்தி புகட்டினார். எல்லா நிலையிலும் கொள்கைக்காரராகவே வாழ்ந்து வருபவர், கொள்கையினை வலியுறுத்தி வருபவர் தமிழர் தலைவர்.

ஆசிரியர் வீரமணிக்கு அகவை 85. மறைமுகமாக ஒரு காரியமும் ஆற்றியதில்லை. திறந்த புத்தகம் அவர்தம் வாழ்வு. தன் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு நாளுக்கும் பதிவுகள் வைத்திருப்பவர். அவருடைய சுற்றுப்பயணம் வெளிப்படையானது; தங்கும் இடம் ஒளிவு மறைவற்றது. விடுதி அறையில் தோழர்கள்  பார்வையாளர் சந்திப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்போதும் அறைக்குள் குறைந்தது 20 பேராவது உரையாடுவர்; படம் எடுப்பர். தனிமை பட்டிருப்பது, தள்ளி நிற்பது, இடைவெளி காப்பது, போன்ற நடிப்புத் தன்மை தலைவரிடம் காணமுடியாது. திறந்த மனதோடு, அன்பு பொங்க, அனைவரும் சொந்தம் எனும் பாசத்தோடு, கூட்டுப் பணியாளர்கள் எனும் சிந்தையோடு பழகிக் களிப்பதைக் கண்டு வியந்திருக்கின்றேன்.

மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்தும் 85 வயதிலும் பயணம், பிரச்சாரம், போராட்டம், நிர்வாகம், எழுத்துப்பணி என்று பம்பரமாய்ச் சுற்றுகின்றார். இதய அறுவை சிகிச்சை பற்றி எங்கும் குறிப்பிட மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அதனை அவர் மறந்துவிட்டார் எனலாம். 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கைவலியால் அவதிபட்டார். கையைத் தூக்கமுடியவில்லை; எழுத இயலவில்லை. ஆனாலும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது தோழர்கள் ஆர்வமாய் சால்வை அணிவிக்க துன்பத்தை வெளிக்காட்டாமல் புன்சிரிப்புடன் அணிந்து கொண்டு, சால்வையை எடுத்த பின்பு கைவலிக்கு நீவி விட்டதை நேரில் கண்டு வியந்திருக்கின்றேன்.

இருபதாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு இரண்டு நூற்றாண்டுகளிலும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்தவர். கால்நடை, மிதிவண்டி, கட்டை வண்டி, கார், வேன், விமானம் அனைத்து வாகனங்களையும் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியவர்.

தலைவர் வீரமணி அவர்களுடன் வேனில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது. அஃது ஒரு சுக அனுபவம். வாகனத்தில் படுக்கை இருக்கும், அது பெரும்பாலும் தோழர்கள் அமர்வதற்கே பயன்படுகிறது. குறைந்தது 10 பேர்களுடன் வேனில் பயணிப்பார் வீரமணி. பயணத்தை கலந்துரையாடல் கூட்டமாகப் பயன்படுத்திக் கொள்வார். ஒவ்வோர் ஊரைக் கடக்கும் போதும் அவ்வூரைப் பற்றி ஏராளமான தகவல்களைச் சொல்லுவார். வானொலிச் செய்தி வரும் நேரத்தில் ரேடியோ போடும்படி ஓட்டுநருக்கு நினைவூட்டுவார். உரை நிகழ்த்தி முடித்துவிட்டு தலைவர் வண்டியில் ஏறியவுடன் கேட்கும் முதல் கேள்வி, இந்தக் கூட்டத்தில் எத்தனை ரூபாய்க்கு புத்தகம் விற்றது? என்பதுதான். தலைவர் களைப்பு, பசியினால் பிஸ்கட் சாப்பிடும்போது தனியாக சாப்பிடமாட்டார். வாகனத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி பகிர்ந்துண்பார். உல்லாச மாளிகையில் சாமியார்கள் மகிழும் நிலையில், தம் வாழ்வின் பெரும் பகுதியை ரயிலிலும் வேனிலும் கழித்த துறவியாகத் திகழ்கிறார் தலைவர் வீரமணி.

எதையும் முழு நிறைவாய்ச் செய்ய வேண்டும் என்று எண்ணி காலம் தாழ்த்தக் கூடாது. முழு நிறைவு என்பதற்கு முடிவு இல்லை என்பார்.

வீரமணி நினைவாற்றல் மிக்கவர். தந்தை பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கும் போதும், இந்திய அரசியலமைப்புச் சட்டம்,  நீதிமன்ற  தீர்ப்புகளை மேற்கோள் காட்டும் போதும், இயக்கத் தோழர்களை, தோழமைக் கட்சி நண்பர்களைப் பெயர் சொல்லி விளிக்கும்போதும், நூறாண்டு கால அரசியல் வரலாற்றை விளக்கும்போதும் அவருடைய நினைவாற்றல் நமக்கு வியப்பை விளைவிக்கும். ஒலிப்பதிவுக்காக சென்னை வானொலி நிலையத்திற்குச் செல்கின்றார். நிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார்கள். அதிலே ஒருவர் தன் பெயர் சித்தார்த்தன் என்று அறிமுகம் செய்துகொள்கிறார். தமிழர் தலைவர் கேட்கிறார். இந்தப் பெயரை தந்தை பெரியார் வைத்தாரா? என்று, ஆம் என்கிறார் சித்தார்த்தன். எந்த ஊர் என்று ஆசிரியர் கேட்க, கபிஸ்தலம் என்று சித்தார்த்தன் பதில் சொல்ல, தங்கவேலு மகனா நீ? என்று தமிழர் தலைவர் வினவ அனைவரும் ஆச்சரியத்தில் மிதந்தனர். தமிழகத்தில் கிராமங்கள், நகரங்கள், சாலைகள் யாவும் தலைவருக்கு அத்துபடி. தஞ்சையிலே, தமிழக மக்கள் எடைக்கு எடை இவருக்குத் தங்கத்தை வழங்கி மகிழ்ந்தனர். கோடிகளாக வாங்கிக் குவிக்கும் அரசியல்வாதிகள், தங்க நாணயங்களாகப் பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் இவர்களுக்கு மத்தியில் வீரமணி தங்கத்தை குண்டு மணி அளவுகூட வீட்டிற்கு கொண்டு போகாத குணக்குன்று என்பதை அங்கு கண்டேன். தங்கத்தை அப்படியே இயக்கத்திற்கு ஒப்படைத்தார். தமிழகமே வியந்து நின்றது. சமூகநீதிக்காகத் தலைவர் ஆற்றிய அரும்பணியைப் போற்றி தமிழக அரசு விருது வழங்கி அய்ந்து பவுன் பதக்கத்தை அளித்திருந்தது. மக்கள் வழங்கிய தங்கத்துடன் பதக்கத்தையும் சேர்த்து, இயக்கத்திற்கு அளித்த வீரமணி, வியப்பின் குறியீடு!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப்  பேரிடியாக வந்த 9000 ரூபாய் வருமான வரம்பாணையை ஒழித்தது திராவிடர் கழகம். மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்திட 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றிக்கு வித்திட்டது திராவிடர் கழகம். 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது 31சி சட்டத்தை உருவாக்கி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் திருத்தத்திற்கு காரணமாக இருந்தது திராவிடர் கழகம். மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் மதிநுட்பம், இடையறா உழைப்பு, ஒருங்கிணைக்கும் திறன், போராட்ட குணம், சமூக நீதியை நிலை நிறுத்தும் வெறி, கொள்கை பிடிப்பு இவையே வெற்றியை விளைவித்தது. தான் செய்ததை இயக்கம் செய்தது என்று இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கும் வீரமணி வியப்புக் குறி. 85 ஆவது ஆண்டு பிறந்த நாள் காணும் தலைவர் நூற்றாண்டு வாழ வளர்பிறை வாழ்த்துகள்.!    

– பேராசிரியர்  நம்.சீனிவாசன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *