Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரின் பேரியக்கத்தை பெரிய அளவில் வளர்ப்பவர்!

 

 

 

விடுதலையின் பொறுப்பைத் தன் நம்பிக்கைக்குரிய சீடரான தோழர் வீரமணியிடம் ஒப்படைத்தார் பெரியார். படிப்படியாகத் திராவிட இயக்கக் கழகப் பொறுப்புகள் முழுவதையும் அவரிடமே ஒப்படைத்தார் பெரியார். அந்த நம்பிக்கைக்கு கொஞ்சம் கூடப் பங்கம் வராமல் இன்று வரை விடுதலை இதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் தோழர் கி.வீரமணி. பாராட்டுக்குரிய சாதனை இது.

வீரமணிக்கு இப்போது வயது எண்பத்தி ஐந்து. தந்தை பெரியார் போலவே ஓய்வு ஒழிச்சல் இன்றி நாடெங்கும் சுற்றி அலைந்து எந்தப் பதவிக்கும் ஆசைப் படாமல் தொண்டிலேயே வாழ்வை வளர்த்து வரும் திராவிடக் கழகத் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்து ஊக்கமளித்து வருகிறார். அவர்களுடைய இல்லங்களில் நடக்கும் மகிழ்ச்சியானவைகளுக்கும் துயர் நிறைந்தவைகளுக்கும் குடும்பத்தில் ஒருவராக ஓடிப்போய் கலந்து கொள்கிறார். எத்தனை அரசியல் கட்சிக்கு இப்படிப்பட்ட தியாக மனம் கொண்ட தொண்டர்கள் பெருவாரியாக இருக்க முடியும்?

நாடு பூராவும் பரவிக்கிடக்கும் தன் கிளைகள் வழியாக ஆங்கங்கே நடக்கும் பகுத்தறிவுக்கு உகந்தச் செயல்பாடுகளையும் வைதீகத்துக்கு எதிரானச் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறார். பகுத்தறிவுக்கு ஒவ்வாதச் செயல்பாடுகளை உடனுடன் கறாராகக் கண்டிக்கிறார். தேவைப்படும்போது கண்டன ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்துகிறார். தோழர்களைத் தூண்டுகிறார். அவரே முன்நின்று செயல்படுகிறார். செயல்படும் தோழர்களைத் தட்டிக்கொடுக்கிறார். எந்தப் பதவி ஆசையும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கானத் தோழர்கள் தோழியர்கள் அவர் பின்னால் படை திரண்டு நிற்பது ஆச்சரியமே.

தமிழ்நாட்டினுள் இன்றும் வைதீகம் காலை ஊன்ற முடியாமல் திணறுகிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம் தந்தை பெரியார்தான். அவரைத் தொடர்ந்து, பெரியார் மறைவுக்குப் பின் இவ்வளவு காலமும் பகுத்தறிவு, இன உணர்வு என்னும் பெரு நெருப்பைத் தொடர்ந்து தூண்டி வளர்த்து விரிவுபடுத்தி வரும் கி.வீரமணி அவர்களின் சாதனைகளும் அவற்றின் தொடர்ச்சியாக உள்ளன. குறிப்பிட்டத் தலைவர்கள் சில காலத்தில் ஓகோ என்று வளர்ந்தனர், பரவினர், சாதித்தனர். ஆனால் அத்தனிப்பட்டத் தலைவர்களின் காலத்துக்கு பின் அவரும் மங்கிவிட்டார். அவர் செயல்களும் மங்கிவிட்டன. மங்காமல் தொடர்ந்து இயங்குவது மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருப்பதும் பெரியாரின் பேரியக்கமே. அதற்குத் தன் அறிவையும் உணர்வையும் ஆற்றல் முழுவதையும் தருவதோடு நாட்டில் இருக்கும் பல்லாயிரக்கணக்காகத் தோழர்களையும் தோழிகளையும் தட்டிக்கொடுத்து ஈடுபட வைப்பது பெரியார் பேரியக்கத்தின் இன்றைய தலைவர் வீரமணியாரே.

அன்பு நெஞ்சங்களே மிகவும் நெருக்கடியானக் காலம் இது. தமிழகத்தின் உள்ளே காலூன்றி வளர்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாடு பாரதிய ஜனதா கட்சி எல்லா விதமான ஆள் பிடிக்கும் மற்றும் குழிபறிக்கும் வேலைகளிலும் இறங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான காலத்தில் தமிழகம் காக்கப்பட வேண்டும் என்றால் பெரியாரியம் வளர்க்கப்பட வேண்டும். வீரமணியின் கை வலுவாக்கப்பட வேண்டும். விடுதலையின் வாசகர் எண்ணிக்கை பல மடங்காக உயர்த்தப்பட வேண்டும். பகுத்தறிவும் சமூக வளர்ச்சியும் விரும்பும் ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும். வேண்டியவர்களின் திருமணத்துக்குப் போகும்போது திருமணப் பரிசாக ஓராண்டு அல்லது அரையாண்டு விடுதலை இதழ் சந்தாவை வழங்கலாம். இரண்டு தோழர்கள் மூன்று தோழர்கள் சேர்ந்து விடுதலை சந்தாவைத் தன் வட்டாரத்தில் உள்ள பொது நூலகத்துக்கு வழங்கலாம்.

தோழர்களே நண்பர்களே விடுதலை என்பது வெறும் நாளிதழ் அல்ல. அது ஒரு கருத்தாயுதம். பெரியாரின் என்றும் தேவைப்படும் கருத்துக்களைத் திரும்பத் திரும்ப மக்களிடம் கொண்டுசென்று நிலைப்படுத்தும் ஆயுதம். இன்று தேவைப்படும் புத்தம் புதியக் கருத்துகள் யார் வாயிலிருந்து வந்தாலும் அவற்றை எடுத்துச்சொல்லி மக்களிடம் பரப்புகின்ற பரப்புரை ஆயுதம் அது.

எங்கெங்கு தவறுகள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் உண்மையைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிவுப்படுத்துகின்ற ஆயுதம் அது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இப்படி ஒரு இதழ் ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்று தெளிவாகச் சொல்லலாம். பெரியாரின் செய்திகளை உலகம் முழுவதும் பரப்பவும் உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களை ஒன்று திரட்டிப் பெரியாரின் செய்திகள் மூலம் அவர்களை உத்வேகப்படுத்தவும் உலக நாடுகள் முழுவதும் அலைந்து திரிந்து பணி செய்துக்கொண்டிருக்கிறார் தோழர் வீரமணி.

அவர் கைகளைப் பலப்படுத்துவோம். அவருடைய விடுதலை என்னும் பேராயுதத்தைக் கூர்மைப்படுத்துவோம். அவருடைய கருத்துகளை  நம் வட்டாரத்தில் முடிந்த அளவுக்கு பிரச்சாரம் செய்வோம். புதிய செக்குலர் இந்தியாவைக் கனவு கண்ட மாமனிதர்களின் உயர் எண்ணங்களை நடைமுறைப்படுத்துவோம்.

வணக்கம்.