எது வைத்தியம்

டிசம்பர் 01-15

பூவாளூர் கிராமத்துக்கே தெரிந்துவிட்டது, சந்திரனின் மனைவி திலகத்துக்கு பேய் பிடித்திருக்கென்று… மூன்று மாதமாக தனது மனைவிக்கு சந்திரன் பார்க்காத வைத்தியமே இல்லை. யார், யார் என்னென்ன வைத்தியம் சொன்னார்களோ, அதெல்லாம் செய்து பார்த்தாச்சு.. திலகத்துக்கு குணமாகவே இல்லை.

திலகத்துக்கு பேய் பிடித்ததாகச் சொல்லும் நாளிலிருந்து வீட்டில் எந்தவொரு வேலையையும் அவள் செய்வதேயில்லை. சமையல் செய்து இரண்டு குழந்தைகளையும் குளிக்க வைத்து காலை உணவைக் கொடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பது வரை எல்லாமே சந்திரனின் கைக்கு வந்துவிட்டது.

சந்திரன் பக்கத்து டவுனிலுள்ள வைத்தா டீ கடையில் டீ மாஸ்டராக வேலை பார்க்கிறான். தினசரி கூலிதான். கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை. வேறு எந்த வருமானமும் கிடையாது. வேலைக்குப் போனால்தான் கூலியும் கிடைக்கும்.

திலகம் நலமாக இருந்தால் வீட்டிலுள்ள பசு மாட்டிடம் பால் கறந்து, அக்கம் பக்கத்து வீடுகளில் விற்பனைக்குக் கொடுத்து விடுவாள். அதில் மாதம் இரண்டாயிரம் வரை கிடைத்துவிடும்.

இப்போது அந்த வேலையையும் சந்திரன்தான் செய்து வருகிறான். இந்த வருமானத்தில்தான் தற்போது சந்திரனின் குடும்பம் ஜீவனம் செய்கிறது. அங்காடியில் கிடைக்கும் இலவச அரிசியில்தான் பல குடும்பங்கள் காலத்தை ஓட்டுகின்றன.

சந்திரனுக்கு மூளையே வேலை செய்யவில்லை. மனைவி திகலகத்தை எப்படி குணப்படுத்துவது என்பதுதான் அவனுக்கு சிந்தனையாகவே இருந்தது.

கையில் போதுமான பணமும் இல்லை. பால் கொடுக்கும் செட்டியார் வீட்டில் இரண்டாயிரம் ரூபாய் கடனாகி வாங்கி இருந்தான். இது எத்தனை நாளைக்குப் போதும். மருந்து மாத்திரைக்கே போதாது.

முதலில் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு திலகத்தை அழைத்துச் போனான். அங்குள்ள டாக்டர், சந்திரனிடம் உன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துப்போய்க் காட்டு என்று சொல்லிவிட்டார்.

மனநல மருத்துவரைப் பார்க்க பக்கத்து டவுனுக்குத்தான் போகவேண்டும். அதற்குள் சந்திரனுக்குத் தெரிந்தவர், “உன் பொண்டாட்டிக்கு பேய் பிடிச்சிருக்கற மாதிரி தெரியுது… இதுக்கு நீ, பக்கத்து கிராமத்துல இருக்கற நாட்டு வைத்தியர் பொன்னுசாமி கிட்டதான் அழைச்சிட்டுப் போவணும்’’ என்று சொன்னதும் திகலகத்தை அவரிடம் அழைத்துச் சென்றான். அவர் சில மூலிகைகளை கசாயமாக கரைத்துக் கொடுத்தார்.

கசாயத்தை வாங்கிச் சாப்பிட்ட திலகம், அடுத்த நிமிடம் அவவ்ளவையும் வாந்தியாக எடுத்துவிட்டாள். இருநூறு ரூபாயை வைத்தியரிடம் கொடுத்துவிட்டு, டவுன் பஸ் பிடித்து கிராமத்திற்கு திலகத்தை அழைத்து வந்தான்.

“பள்ளி வாசலுக்குச் சென்று ஓதினால் பேய், பிசாசு எதுவாயிருந்தாலும், பறந்து போகும்’’ என்று கீழத்தெரு கோவிந்தன் சொன்னதைக் கேட்ட சந்திரன் அவனிடமே திருப்பிக் கேட்டான்.
“உனக்கு எப்படி இந்தத் தகவல் தெரியும்?’’ அதற்கு கோவிந்தன் சொன்னன். “என் தம்பி மாரி இருக்கான்ல…’’

“ஆமான்ல… கயத்தூர்லல இருக்கான்.. அவனுக்கு என்ன?’’

“அங்க வா விசயத்துக்கு. அவன் பொண்டாட்டி கிருஷ்ணவேணிக்குத்தான்; பேய் பிடிச்சிருக்குன்னு டவுன்ல இருக்கிற பள்ளிவாசலுக்கு அழைச்சிட்டு போயி மந்திரிச்சதுல குணமாயிடுச்சு.’’
“அப்படியா? எந்த கிழமையில அங்கப் போவணும்?’’

“வெள்ளிக்கிழமைதான் போவணும்னு’’ கோவிந்தன் சொன்னதும், திலகத்தை அழைச்சிகிட்டு சந்திரன் பள்ளிவாசலுக்குப் போனான்.

பள்ளி வாசலுக்கு போனதும், அங்க மோதினார் இல்ல. அவரு எங்கேயோ, டீ குடிக்க போயிட்டதா ஒரு தாடிக்காரர் சொன்னார்.

சிறிது நேரத்தில் மோதினார் வரவும், சந்திரன் எழுந்து நின்று கும்பிட்டான்.

“என்ன விசயம்? யாருக்கு உடம்பு சரியில்ல?’’

“என் பொஞ்சாதிக்குத்தான்.’’

“அழைச்சிட்டு வந்துருக்கியா?’’

“இதோ!’’ திலகத்தை மோதினாருக்கு அறிமுகப்படுத்தினான்.

“சரி. இப்படி உட்காரும்மா…’’ கையில் வைத்திருந்த மயில் தோகையால் தலையிலும், உடம்பிலும் மூன்று அடிகளை அடித்துவிட்டு ஒரு தாயத்துக் கயிற்றை சந்திரனிடம் கொடுத்தார்.
“இத, அதிகாலையில எழுந்துருச்சு கையில கட்டிவிடு’’ சௌரியமாயிடும்.

“அய்யா… இனிம ஒன்னும் பயமில்லையே?’’

“ஒரு பயமும் இல்ல. பேய் பிசாசு எல்லாம் ஓடியே போயிடும்.’’

“எவ்வளவு பணம்’’ என்று மோதினாரிடம் கேட்டான் சந்திரன்.

“அம்பது ரூபாய் கொடுப்பா!’’

அம்பது ரூபாயை எடுத்து நீட்டியதும், மோதினார், “அந்த உண்டியல்ல போடுப்பா…’’ என்று உண்டியலை நோக்கி கை காட்டினார்.

உண்டியலில் பணத்தைப் போட்டவுடன், மனைவியை அழைத்துக்கொண்டு சந்திரன் ஊருக்குத் திரும்பினான்.

ஒரு வாரம் கழிந்தது. திலகத்துக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லை. அவ்வப்போது ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள். தலையை விரித்து போட்டுக் கொண்டு அங்குமிங்கும் வீட்டுக்குள் உலாத்திக் கொண்டுமிருந்தாள்.

சந்திரனும் அவனது இரண்டு குழந்தைகளும் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

ஒரு நாள் சந்திரனைத் தேடி, பக்கத்து டவுனில் இருக்கும் டீக்கடையில் வேலைசெய்யும் நண்பன் கண்ணப்பன், சந்திரன் வீட்டுக்கே வந்துவிட்டான்.

“சந்திரா, உன்னை டவுனு பக்கமே காணும்… அய்யப்பன் டீ கடைக்கு டீ மாஸ்டர் வேணும்னு கேட்டாங்க.. ஏன் நீ டவுனுக்கே வரதில்லையா?

இன்னைக்கு எனக்கு லீவு கிடைச்சது. அதான், ஒரு எட்டு நேரிலேயே போய்ப் பார்த்து உங்கிட்ட பேசுவோம்னு வந்தன்.’’

“என்னப்பா, உனக்கு சேதியே தெரியாதா? என் பொஞ்சாதிக்கு மூனுமாசமா உடம்பு சரியில்ல. பேய் பிடிச்ச மாதிரி இருக்கா. மருந்து மாத்திரை எதிலும் குணமாகல. நாளுதான் ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கு ஒரே குழப்பமா இருக்குப்பா. இதுக்கு என்னா வைத்தியம் பண்றதுன்னு எனக்கே தெரியல. யாராரு என்ன வைத்தியம் சொன்னாங்களோ அதெல்லாம் செய்ஞ்சு பார்த்தாச்சு. அதெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகல.’’

அப்போது, சமையலறை பக்கம் ஒரு சத்தம் கேட்டது. “டேய்… எவன்டா அவன் அங்க என்னடா பண்ற? உன்ன கொல்லப் போறேன் பாருடா…’’

இப்படி சத்தம் கேட்டதும், கண்ணப்பன் வீட்டை விட்டு தெருவில் இறங்கிவிட்டான். “சந்திரா… நான் அப்புறமா வர்றேம்பா…’’ என நகரப் பார்த்தான்.

“கண்ணப்பா… இருப்பா.. சத்தம் மட்டும்தான் போடுவா… இந்தப் பக்கம் வரமாட்டா… தைரியமா இங்க வா…’’ என்று வீட்டுக்குள் அழைத்தான்.

“சந்தேகமேயில்லை… இது பேய்தான்.. உன் பொண்டாட்டிக்கு பேய்தான் பிடிச்சிருக்கு… இதுக்கு நீ மலையாள மாரிசாமியதான் பார்க்கணும்…’’

“அப்படின்னா… அது யாரு?’’

“ஏய்… என்னா இப்படி கேட்டுட்ட? அவர்தாம்பா.. மலையாளம் மாரிசாமி. பேய், பிசாசு விரட்டறதுல ஸ்பெஷலிஸ்ட். அவருகிட்ட போய் விபரத்த சொன்னா அவர் மூலமா இதுக்கு நல்ல பரிகாரம் கிடைக்கும். வேற வழியே கிடையாது.’’

“அப்படின்னா, என் பொண்டாட்டிய அங்கதான் அழைச்சிட்டு போவணுமா?’’

“அதெல்லாம் வேணாம்.. அவரே நேரா வீட்டுக்கு வந்து பூஜை செய்வாரு. நாம ரெண்டு பேரும் நேருல போயி விபரத்தைச் சொன்னா, எப்படி என்னான்னு பரிகாரம் சொல்வாரு.’’

“எப்ப போவலாம்?’’

சந்திரன் கேட்டதும், “இன்னைக்கு நான் லீவுதான் போட்டுருக்கன்… நீ சொன்னா இப்பகூட போயிட்ட வரலாம்.’’

குழந்தைகள் இருவரும் வீட்டில் இல்லை. திலகத்தை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கண்ணப்பனும், சந்திரனும் கண்ணப்பன் கொண்டு வந்திருந்த டூவீலரில் டவுனுக்குப் புறப்பட்டனர்.
சந்திரனையும், கண்ணப்பனையும் மலையாளம் மாரிசாமி வீட்டு எடுபிடி ஒருவன், வாயில் வெத்திலை பாக்-கு ஒழுக, “வாங்க.. வாங்க..’’ என்று நீட்டி முழங்கினான்.

“மந்திரவாதியப் பார்க்க வந்தோம்’’ கண்ணப்பன்தான் பேசினான். “பூசையில இருக்காரு. கொஞ்சம் இருங்க. இப்ப வந்துடுவாரு’’

அரைமணி நேரம் கழித்து, வெத்திலை பாக்கு போட்ட ஆசாமியே வந்து, இருவரையும் மந்திரவாதி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அறையில் கமகமவென, சாம்பிராணி புகைந்து கொண்டிருந்தது. மூன்றடி உயரத்தில் காளி சிலை ஒன்று இருந்தது. சிலைக்கு முன்னே ஜடாமுடி தாடியோடு ஒருவன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். இருவரையும் பார்த்து கண்ணைத் திறந்ததும், திறக்காமலேயே, “என்ன வேணும்?’’ என்றான்.

“சாமி நாங்க பக்கத்து கிராமத்துலேருந்து வர்றோம். இவரோட பொஞ்சாதிக்கு பேய் பிடிச்சிருக்கு. மூனு மாசமா வைத்தியம் எல்லாம் பார்த்தாச்சு. ஒன்னும் குணமாகலே.’’

கண்ணப்பன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட மந்திரவாதி, “இரண்டு மணி நேரம் வீட்டுக்கு வந்து பூசை செய்ஞ்சா பேய், பிசாசு எல்லாம் பறந்து போயிடும்.’’

“அதுக்கு நாங்க என்னா பண்ணணும்?’’ சந்திரனே பேசினான்.

“புதுப்பாய், புது தலையணை ரெடி பண்ணு… மத்ததெல்லாம் கருப்பன்கிட்ட கேட்டுக்க… கருப்பா…’’
“இதோ வந்துட்டேன்…’’ வெத்திலை பாக்கு போட்ட ஆசாமிதான். மந்திரவாதி கூப்பிட்டதும் எதிரே வந்து நின்றான்.

“பேயை விரட்ட பூசை சாமான் எழுதிக் கொடு.’’

“உத்தரவு சாமி. வாங்க எழுதித் தர்றன்.’’

புதுப்பாய், புது தாம்பலம் இவற்றோடு ஐயாயிரம் ரொக்கம், சாம்பிராணி, பத்திகட்டு, பழங்கள் என பட்டியலைப் போட்டுக் கொடுத்தான் கருப்பன்.

சந்திரனும், கண்ணப்பனும் டூவீலரில் ஊருக்குத் திரும்பும்போது, “அய்யாயிரம் பணத்துக்கு நான் எங்கே போவேன்’’ என்று கண்ணப்பனிடம் புலம்பினான் சந்திரன்-.

“இதபாரு… இதுக்கு யோசிக்காத… மந்திரவாதி பேயை விரட்டறதுல பலே கில்லாடி… எப்படியாவது விரட்டிப்புடுவாரு… பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணு…’’ சந்திரனை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு, கண்ணப்பன் புறப்பட்டான்.

மூன்று நாள் கழித்து, சந்திரனின் வீட்டில் ஓம்.. ரீம்.. ரீம்.. மந்திர, தந்திர காளி.. மண்ணுக்குள்ளே போனா, எல்லாமே காலி.. லும்… ரீம்… ரீம்… ரீம்…

மலையாள மாரிசாமி சந்திரனின் வீட்டில், சந்திரனின் மனைவி திலகத்தை உட்காரவைத்து, அவளுக்கு நேரே உட்கார்ந்து கொண்டு, சாம்பிராணி புகைச்சலை போட்டுக் கொண்டே, லும்.. ரீம்.. லும். ரீம்.. என்று சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தான். இதே நேரம், திலகம் ஆசையாய் வளர்த்த பசுமாடும், கன்றும் சரக்குகள் ஏற்றும் வாகனத்தில் பக்கத்து ஊருக்கு பயணித்துக் கொண்டிருந்தன.

இவைகள் இரண்டையும் ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தொகையில்தான், சந்திரன் பேய் விரட்டும் பூசையை செய்து கொண்டிருந்தான்.

பூசை நடப்பதை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த சந்திரன், தன் மனைவியிடம் சாமியார் தகாத முறையில் நடப்பதைப் பார்த்து ஆவேசமடைந்து அடைத்திருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவன், “டேய் காமவெறி பிடித்த திருட்டு நாயே! பேய் ஓட்டுவேனு பார்த்தா என் மனைவிகிட்ட தப்பா நடக்க முயற்சி பன்றியா?’’ என்று அருவாளை எடுக்க, அயோக்கிய சாமியார் ஆளைவிட்டால் போதுமென ஓட்டமெடுத்து ஓடினான். மனநலம் பாதித்த மனைவியை மருத்துவரிடம் காட்டாமல், அயோக்கிய மந்திரவாதியிடம் பலிகொடுக்கப் பார்த்தேனே என்று புலம்பியபடி மனைவியுடன் மனநல மருத்துவரை நோக்கிச் சென்றான்.

–  நன்னிலம் இளங்கோவன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *